===================
மிஷனெரி வரலாறு
வாய் வாய் இனத்தின் எல்கா - Elka of Wai Wais
=====================
மண்ணில் : 1933
ஊர் : கனாஷென்
நாடு : கயானா
தரிசன பூமி : கயானா மற்றும் பிரேசில்
வாய் வாய் என்றழைக்கப்படும் ஒரு மூர்க்கமான அமேசானிய பழங்குடியினரின் தலைவராக இருந்த எல்கா என்பவர், பிரேசில் காடுகளில் உள்ள அநேகமான பழங்குடியினரை கிறிஸ்துவண்டை வழிநடத்தியதற்காக அறியப்படுவார். வாய் வாய் மக்கள் மூடநம்பிக்கை உடையவர்களானபடியால், காட்டு ஆவிகளுக்கு அஞ்சினர். ஒரு பெலசாலியாகவும் கெம்பீரமான தோற்றமுடைய புருஷனாக எல்கா திகழ்ந்தபடியால், தனது 20 வயதிலேயே அப்பழங்குடியினத்தின் தலைவரானார். இருப்பினும், அவர் அந்த ஆவிகள் தன்னை ஒரு பில் லிசூனிய வைத்தியர் ஆக அழைக்கிறது என்று அவர் உறுதியாய் நம்பினார். காட்டின் முறைமைகளைக் கற்று, ஆவிகளை ஏவி வரவழைத்து எப்படியோ தந்திரமாக நோய்வாய்ப்பட்டவர்களைக் குணப்படுத்தினார். எனினும், மரணம் குறித்த தனது சொந்த பயத்தை அவரால் குணப்படுத்த கூடாமல் போயிற்று.
எல்கா வெள்ளைத்தோல் கொண்ட வெளிநாட்டினரை வெறுத்தார். எல்கா அவர்களை புன்னகையுடன் வரவேற்று, அவர்களின் பானங்களில் விஷம் கலந்து, அவர்களைத் தடியால் அடித்தே கொன்றார். இப்படி இருக்கையில், ஒரு நாள் நீல் மற்றும் பாப் ஹாக்கின்ஸ் ஆகிய மிஷனரிகள் வெகுமதிகளுடன் அங்கு வந்தனர். இயேசு வாய் வாய் மக்களை நேசிக்கிறார் என்றும், இயேசு அவர்களுக்காக மரித்தார் என்றும் அம்மிஷனரிகள் பறைசாற்றினர். கைமாறாக எதையாவது எதிர்பார்த்தே அன்பு பாராட்டிய வாய் வாய் மக்களுக்கு, இயேசுவின் இந்த நேசம் புதிதாய் காணப்பட்டது. துவக்கத்தில் எல்கா அவர்களைக் கண்டு நகைத்தாலும், மரணத்திற்குப் பிறகு ஆனந்த பாக்கியம் உண்டு என்பதை அறிந்துமகிழ்வுற்றார்.
வெகுமதிகளுக்கு கைமாறாக வேதாகமத்தை தனது உள்ளூர் மொழியில் மொழிபெயர்க்க உதவ எல்கா ஏற்றுக்கொண்டார். ஒரு நாள் அவர் 1 யோவான் 4:18,19 "அன்பிலே பயமில்லை; பூரண அன்பு பயத்தைப் புறம்பே தள்ளும்;... அவர் முந்தி நம்மிடத்தில் அன்புகூர்ந்தபடியால் நாமும் அவரிடத்தில் அன்புகூருகிறோம்." என்ற வசனத்தை மழிபெயர்க்கும்போது, அவ்வார்த்தைகள் அவரது இருதயத்தை கிளர்ச்சித்தது. அவர் தனது பாவங்களை அறிக்கைசெய்து, தன்னை ஒரு புதிய சிருஷ்டியாக மாற்றும்படி தேவனிடம் வேண்டினார். அவரது மனமாற்றம் குறித்து அவரது குடும்பத்தினர் அவரை கேலி செய்து நிந்தித்தனர். ஆனால், அவர்கள் விரைவில் எல்காவின் வாழ்க்கையில் மாற்றங்களை கண்டனர். பின்பு, முழு பழங்குடியினரும் தங்கள் தலைவரின் அடிச்சுவடுகளைப் பின்பற்றி, இயேசுவை தங்கள் சொந்த இரட்சகராக ஏற்றுக்கொண்டனர்.
ஹாக்கின்ஸ் சகோதரர்களில் ஒருவர் தனது குரல் இழந்தபோது, எல்கா அவருக்குப் பதிலாக பிரசங்கிக்கத் துவங்கினார். சீக்கிரத்தில், இயேசுவை மற்ற பழங்குடியினருடன் பகிர்ந்து கொள்ள வேண்டிய பாரத்தை அவர் உணர்ந்தார். அவர் கயானாவில் உள்ள அண்டை காடுகளுக்குச் சென்று தனது எதிரி பழங்குடியினருக்கும் நற்செய்தியை அறிவித்தார். கிறிஸ்துவின் நற்செய்தி ஒரு பில்லிசூனிய வைத்தியரை ஒரு மிஷனரியாக மாற்றியது மட்டுமல்லாமல், அவர் மூலமாய் அநேக பழங்குடியினரின் வாழ்க்கையையும் மாற்றியது.
பிரியமானவர்களே, மரணத்திற்குப் பிறகு ஆனந்த பாக்கியத்தின் நம்பிக்கை உங்களுக்கு உண்டா?
“கர்த்தாவே, கிறிஸ்துவில் ஆனந்த பாக்கியத்தின் நம்பிக்கைக்குள் மற்றவர்களை வழிநடத்த எனக்கு பாரத்தைத் தாரும். ஆமென்!"
Benjamin For Christ +91 9842513842
V. வீர சுவாமிதாஸ்
======================
மிஷனெரி வரலாறு
ஹென்றி வாட்சன் ஃபாக்ஸ் - Henry Watson Fox
======================
மண்ணில் : 01.10.1817
விண்ணில் : 14.10.1848
ஊர் : வெஸ்டோ , டர்ஹாம்
நாடு : இங்கிலாந்து
தரிசன பூமி : தெலுகு மக்கள், இந்தியா
ஹென்றி வாட்சன் ஃபாக்ஸ் என்பவர் இங்கிலாந்தின் வெஸ்டோவில் 1817 ஆம் ஆண்டு பிறந்தார். அவர் டர்ஹாம் க்ராம்மர் ஸ்கூல்இல் (டர்ஹாம் இலக்கணப் பள்ளி) பயின்றார். பின்பு தனது வாலிப பருவத்தில், ரக்பி பள்ளிக்குச் சென்றார். ரக்பி பள்ளியில் அவர் படித்த நாட்களில், அவரது துளிர் விடும் கிறிஸ்தவ நம்பிக்கை பலப்படுத்தப்பட்டது. பள்ளியின் சிற்றாலயத்தில் டாக்டர் அர்னால்ட் வழங்கிய எளிய கிறிஸ்தவ அறிவுரைகள், ஹென்றியின் உள்ளத்தில் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தியது. மேலும் அவர் தங்கியிருந்த வீட்டின் உரிமையாளரான போனமி பிரைஸ் என்பவர் ஆற்றிய சொற்பொழிவு அவரது கிறிஸ்தவ விசுவாசத்தை ஸ்திரப்படுத்தியது. ஆக்ஸ்போர்டில் உள்ள வாட்ஹாம் கல்லூரியில் தனது படிப்பை முடித்த பிறகு, அவர் 1840ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் உதவி ஆயராக நியமிக்கப்பட்டார். 1841ஆம் ஆண்டு சபை ஊழியர் சமூகம் (சர்ச் மிஷனரி சொசைட்டி) அவரை இந்தியாவின் மெட்ராஸ் பிரசிடென்சியில் வசித்துவந்த தெலுங்கு மக்களுக்கு மிஷனரியாக நியமித்தது.
ஹென்றி தனது மனைவி எலிசபெத் மற்றும் மற்றொரு மிஷனரி ஆர்.டி. நோபல் ஆகியோருடன் 1841ஆம் ஆண்டு ஜூலை மாதம் சென்னையை வந்தடைந்தார். நோபல் மசூலிபடத்தில் (மச்சிலிப்பட்டினம்) ஒரு பள்ளியை நிர்வகித்து, உயர் சாதி மக்களின்மேல் கவனம் செலுத்தினார் ஆனால் ஹென்றியோ பிரசங்க ஊழியத்தைச் செய்து தாழ்த்தப்பட்ட மக்களின்மேல் கவனம் செலுத்தினார். அவர் ஒரு பயண ஊழியத்தை ஆரம்பித்து கிராமம் கிராமமாக சென்றார். அவர் மச்சிலிப்பட்டினம் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் மட்டுமின்றி, கிழக்கு கோதாவரி மண்டலம் மற்றும் மேற்கு கிருஷ்ணா மாவட்டத்தின் தொலைதூர இடங்களிலும் நற்செய்தியைப் பிரசங்கித்து வந்தார்.
ஹென்றியின் மிஷனரி பணிகள் வெறும் ஏழு ஆண்டுகள் மட்டுமே நீடித்தது. அந்த குறுகிய காலமும் கூட பல்வேறு காரணங்களால் பலமுறை இடையூறு செய்யப்பட்டது. அவரது உடல்நலக்குறைவினால், 1843-44 ஆண்டுகளுக்கு இடையில், சில காலம் நீலகிரி மலையில் வசிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. 1845ஆம் ஆண்டு, அவரது மனைவி நோய்வாய்ப்பட்டதால் அவர் இங்கிலாந்துக்குத் திரும்பும் கட்டாயத்திற்குள்ளானார். ஆனால் மெட்ராஸில் பயணம் மேற்கொண்டதும் ஹென்றி தன் மனைவியை இழக்க நேரிட்டது. அவர் மீண்டும் இந்தியாவுக்குத் திரும்பிய போதிலும், தன் உடல்நலக்குறைவு அவரை 1848ஆம் ஆண்டு, மீண்டும் இங்கிலாந்துக்குத் திரும்பச்செய்தது. இறுதியாக, தன் முடிவு பரியந்தம் கர்த்தருக்கு ஊழியம் செய்ய பாடுபட்ட இந்த உண்மையுள்ள தேவ ஊழியர், 1848 ஆம் ஆண்டு அக்டோபர் 14 ஆம் தேதி தனது இறுதி மூச்சை விட்டார். அவரது ஊழியம் ஒரு குறுகிய கால அளவு மட்டுமே நீடித்து. அதுவும் மீண்டும் மீண்டும் குறுக்கிடப்பட்டாலும், அவர் ஒரே குறிக்கோளுடன் இருந்து தான் அழைக்கப்பட்ட இலக்கிலிருந்து தனது கவனத்தை சிதறவிடாமல் திகழ்ந்தார்.
பிரியமானவர்களே, என்ன வந்தாலும், ஒரே மனதுடன் ஒரே குறிக்கோளுடன் இருப்பீர்களா?
“கர்த்தாவே, என் மாம்சமும் என் இருதயமும் மாண்டுபோகிறது; நீரே என்றென்றைக்கும் என் இருதயத்தின் கன்மலையும் என் பங்குமாயிருக்கிறீர். ஆமென்!"
Benjamin For Christ +91 9842513842
V. வீர சுவாமிதாஸ்
====================
மிஷனெரி வரலாறு
ஜோஹன் ஆல்ஃபிரட் ரினெல் - Johan Alfred Rinell
======================
மண்ணில் : 27.11.1866
விண்ணில் : 03.07.1941
ஊர் : ஆஸ்டெர்கோட்லாண்ட்
நாடு : சுவீடன்
தரிசன பூமி : சீனா
ஜோஹன் ஆல்ஃபிரட் சுவீடன் நாட்டிலிருந்து சீனா தேசத்துற்கு சென்ற ஒரு பாப்டிஸ்ட் மிஷனரி. 1866 ஆம் ஆண்டில் பிறந்த அவர் தனது பத்தொன்பதாம் வயதில் பிரசங்கிக்கத் தொடங்கினார். பின்னர் அவர் ஸ்டாக்ஹோமில் உள்ள பெத்தேல் வேதாகம கல்லூரியில் பயின்றார். ஒரு முறை அங்கு வந்த ஆங்கில மிஷனரியான ஹட்சன் டெய்லருடைய பிரசங்கத்தின் காரணமாக மிஷனரி சேவை செய்ய ஆல்ஃபிரட் ஈர்க்கப்பட்டார்.
கல்லூரியில் படிப்பை முடித்த பிறகு, நார்வேயின் ஃபிரடெரிக்ஷால்ட் என்ற இடத்தில் போதகராக பணியாற்றினார். அங்கு அவர் மிஷனரி சேவை செய்ய வாஞ்சை கொண்டிருந்த ஹெட்விக்கை மணந்தார். ஆனால் பின்பு அவர்கள் எதிர்பாராத விதமாக மிஷனரிகளாக சீனா செல்ல அழைப்பு வந்தபோது அவர்கள் தங்கள் வீட்டையும், சொந்த மக்களையும் விட்டு வெளியேற வேண்டுமா, தங்கள் திருச்சபையின் எதிர்காலம் என்ன, பெற்றோர்கள் என்ன சொல்லுவாங்களோ என்ற யோசனைகள் அவர்களுக்கு தடையாயிருந்தன. மிகுந்த போராட்டத்திற்கும் ஜெபத்திற்கும் பிறகு, ஒரு மிஷனரியாக வேண்டும் என்ற முந்தைய விருப்பத்தை நினைவில் கொண்டு, ஆண்டவரின் சித்தத்தைச் செய்ய தங்களை அர்ப்பணித்துகொண்டார்கள்.
இருவரும் 1894 ஆம் ஆண்டில் சீனா வந்து, ஷாண்டாங் மாகாணத்தில் உள்ள கியோஹ்சீனில் (தற்போது ஜியாஜோ) குடியேறினர். அங்கு அவர்கள் மிகுந்த சிரமத்துடன் கடினமான சீன மொழியைக் கற்றுக்கொண்டநர். 45 ஆண்டுகளுக்கும் மேலான அவர்களின் மிஷனரி பணியில், அவர்கள் சக மிஷனரிகளுடன் சேர்ந்து, கியோஹ்சீன் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் மருத்துவமனைகள், பள்ளிகள் மற்றும் கிறிஸ்தவ சபைகளை நிறுவினர். அதுமட்டுமல்லாமல் ஜொஹான் ஆல்ஃபிரட் பட்டியலில் கியோஹ்சீனில் முதல் தபால் நிலையத்தை நிறுவுதல் மற்றும் பேரழிவு நிவாரணத்திற்கு உதவுவது போன்ற பாராட்டத்தக்க பணிகளும் அடங்கும்.
சீனாவில் இந்த மிஷனரி தம்பதியினர் போர்க்காலம், இயற்கை பேரழிவுகள், தங்கள் உயிர்களுக்காக தப்பி ஓடுவது, அவர்கள் இல்லாத நிலையில் சொந்த நாட்டில் உள்ள அன்பானவர்களை இழப்பது, உடல் நிலை சரியில்லாத நேரங்கள் போன்ற பல கடினமான அனுபவங்கள் வழியாய் சென்றனர். எல்லாவற்றிற்கும் மேலாக கிறிஸ்தவர்களை வெறுப்பதும் துன்புறுத்துவதும் அங்கு ஒரு தீவிர நிலையை எட்டியுள்ளது. சீனாவில் 1899-1901 வரை வெளிநாட்டு எதிர்ப்பு மற்றும் கிறிஸ்தவ எதிர்ப்பு இயக்கமான "பாக்சர்ஸ் ரிபெல்லியன்" (பாக்சர்ஸ் கிளர்ச்சி) எண்ணற்ற மிஷனரிகளையும், சீனாவின் கிறிஸ்தவர்களையும் படுகொலை செய்தது. பல துன்பங்கள் மற்றும் ஆபத்துகள் இருந்தபோதிலும், அந்த மிஷனரி தம்பதியினர் தங்கள் மிஷனரி வேலையைத் தொடர்ந்து, கர்த்தருக்கு உண்மையுள்ள ஊழியர்களாக சேவை செய்தனர்.
தனது வாழ்நாளின் பெரும்பகுதியை சீனாவில் கழித்து, பல ஆண்டுகள் அங்கு பணியாற்றிய ஆல்ஃபிரட் அவர்களை அங்குள்ள சபையின் உறுப்பினர்களான சீனாவின் மக்கள் ‘தி ஓல்ட் பாஸ்டர்' (பழைய போதகர்) என்று அன்பாக அழைத்தனர். பல புத்தகங்களை எழுதிய ஆல்ஃபிரட், 'பாக்சர்ஸ் ரிபெல்லியன்' மற்றும் சீனாவில் கிறிஸ்தவர்களை துன்புறுத்துவது பற்றியும் ஒரு புத்தகத்தை எழுதினார். 1941 ஆம் ஆண்டில் அவருடைய மரணத்திற்கு பிறகு சீன கிறிஸ்தவர்கள் ஜோஹன் ஆல்ஃபிரட் அவர்களுக்காக ஒரு நினைவு கல்லை அமைத்தனர்.
பிரியமானவர்களே, எல்லாவற்றையும் விட்டுவிட்டு, கர்த்தர் உங்களை வழிநடத்தும் தொலைதூர நாடுகளுக்குச் செல்ல நீங்கள் ஆயத்தமா?
“கர்த்தாவே, எந்த தயக்கமும் இல்லாமல் உமது அழைப்பிற்கு கீழ்ப்படிந்து
அர்ப்பணிப்புடன் இதோ, நான் முன் வருகிறேன். ஆமென்!"
Benjamin For Christ +91 9842513842
V. வீர சுவாமிதாஸ்
======================
மிஷனெரி வரலாறு
பிஷப் டேனியல் கோரி - Bishop Daniel Corrie
====================
மண்ணில் : 10.04.1777
விண்ணில் : 05.02.1837
நாடு : இங்கிலாந்து
தரிசன பூமி : இந்தியா
டேனியல் கோரி ஒரு ஆங்கில ஆங்கிலிகன் ஆயராகவும், பேராயராகவும் விளங்கியவர். அவர் 1802ஆம் ஆண்டு லிங்கன் மறைமாவட்டத்தின் டீக்கனாகவும், 1804ஆம் ஆண்டு ஆயராகவும் நியமிக்கப்பட்டார். பின்னர், அவர் 1806ஆம் ஆண்டு இந்தியாவின் வங்காளத்தில் ஒரு குருவர்க்கத்தில் பணியமர்த்தப்பட்டார். அவர் 1823ஆம் ஆண்டு "கல்கத்தாவின் பிரதான டீகன்" ஆனார், பின்னர் 1835ஆம் ஆண்டு மெட்ராஸின் பேராயராக அர்ப்பணம் செய்யப்பட்டார்.
இந்துஸ்தானி மொழியைக் கற்றுக்கொண்ட அவர் உத்தரபிரதேச மாநிலத்தில் சுனார் பகுதி மக்களிடையே பணியாற்றினார். அவர் அந்த பகுதியில், மற்றும் வாரணாசி வரை சுற்றியுள்ள பகுதிகளில் சுவிசேஷத்தைப் பிரசங்கித்துக்கொண்டு, பள்ளிகளையும், கிறிஸ்தவ சபைகளையும் நிறுவினார். 1810 ஆம் ஆண்டில், அவர் கான்பூருக்கு சென்று, அங்கு தனது நெருங்கிய நண்பரான ஹென்றி மார்ட்டினுடன் சிறிது காலம் ஊழியம் செய்தார். அங்கு சேவை செய்யம்போது அவர் மிகுந்த நோய்வாய்ப்பட்டதினால் கான்பூரிலிருந்து கல்கத்தாவுக்கு உடல்நிலை குணமடைவதற்க்காக புறப்பட்டார். இருப்பினும், அவர் கர்த்தரை சேவிப்பதில் ஒருபோதும் பின் நோக்கி பார்த்ததில்லை. கோரி உள்ளூர் முஸ்லீம் மக்களிடையே கூட ஊழியம் செய்து, அவர்களை கிறிஸ்துவிற்குள் வழி நடத்தினார்.
அவர் 1812 ஆம் ஆண்டில் எலிசபெத் என்பவரை மணந்தார். எலிசபெத்துடைய ஆவிக்குரிய உறுதியும், மெய்யான பாசமும், ஏற்றத் தாழ்வுகள் இருந்தபோதிலும் ஆண்டவரின் சேவையில் முன்னேற அவருக்கு பெரிதும் உதவியது. அவர்கள் இருவரும் ஆக்ராவுக்குச் சென்று, இரண்டு ஆண்டுகள் ஊழியம் செய்தனர். அங்கு கர்த்தரின் வார்த்தை மிகவும் பலனளித்ததினால் உள்ளூர் மக்களுடன் கிறிஸ்தவ சபைகள் நிறுவப்பட்டன. அவரது கல்லீரல் நோய் மோசமடைந்ததால் மருத்துவ சிகிச்சைக்காக அவர் சொந்த தேசத்திற்கு திரும்ப வேண்டியிருந்தது. இருப்பினும், இந்துஸ்தானி சகோதரர்களுக்காக அவருக்கு இருந்த வைராக்கியத்தினால் அவர் இந்தியாவுக்குத் திரும்பி வந்து, கல்கத்தா, பனாரஸ் (வாரணாசி), பக்சர் மற்றும் சுனார் இடங்களில் தனது ஊழியத்தைத் தொடங்கினார்.
பின்னர் அவர் 1835 ஆம் ஆண்டில் தமிழ்நாட்டின் மெட்ராஸ் பிஷப்பாக நியமிக்கப்பட்டார். அவரது மரணம் வரை அவர் அங்கே பணியாற்றினார். அக்காலகட்டத்தில் தஞ்சாவூர் மற்றும் தின்னல்வேலியில் (திருநெல்வேலி) உள்ள கிறிஸ்தவ சபைகளில் இருந்த பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கும், சமாதானம் ஏற்படுத்துவதற்கும் அவர் கடுமையாக உழைத்தார். மேலும், பல பள்ளிகளையும், கிறிஸ்தவ சபைகளையும் நிறுவிய கோரி, பல இளைஞர்களுக்கு கர்த்தரை சேவிப்பதில் பயிற்சி அளித்தார். இரக்கமுள்ள இதயத்துடன், சாந்த குணமுடன், மற்றும் மனத்தாழ்மையுடன் 24 ஆண்டுகளுக்கும் மேலாக இந்தியாவில் ஊழியம் செய்த பிஷப் டேனியல் கோரி, 1837ஆம் ஆண்டு இவ்வுலகத்தில் தன் ஓட்டத்தை முடித்தார்.
பிரியமானவர்களே, பல மிஷனரிகள் தங்கள் நாடுகளை விட்டு விட்டு வந்து உங்கள் நாட்டைக் காப்பாற்ற பாடுபட்டார்கள். உங்கள் சொந்த நாட்டிற்காகவும் உங்கள் சொந்த ஜனத்திற்காகவும் நீங்கள் பாரப்படுகிறீர்களா?
”கர்த்தாவே, நம் நாட்டில் இரட்சிப்பின் ஒளியைப் பரப்புவதற்கு என்னை ஒரு கருவியாய் எடுத்து பயன்படுத்தும். ஆமென்!"
Benjamin For Christ +91 9842513842
V. வீர சுவாமிதாஸ்
====================
மிஷனெரி வரலாறு
ஆர்ச்சிபால்ட் ரீக்கி - Archibald Reekie
====================
மண்ணில் : 1862
விண்ணில் : 1942
ஊர் : ஆர்மோவ்
நாடு : கனடா
தரிசன பூமி : பொலிவியா
ஆர்ச்சிபால்ட் ரீக்கி என்பவர் பொலிவியா நாட்டில் தனது ஊழியத்திற்காக அறியப்பட்ட ஒரு முன்னோடி கனேடிய மிஷனரியாவார். ஏழ்மையான குடும்பத்தில் பிறந்த ஆர்ச்சிபால்ட், சரீர பிரகாரமாய் பலவீனமாக இருந்ததால், அவரது இளமை பருவத்தில் ஒரு காய்ச்சலினால் கிட்டத்தட்ட சாவின் விளிம்பிற்கே சென்றுவிட்டார். இருப்பினும், நம் பெலவீனத்தில் தம் பெலனை பூரணமாக்கும் நமது தேவன், கடினமான சுற்றுச்சூழல் சூழ்நிலைகளில் ஆர்ச்சிபால்டை தமது சேவைக்காக பயன்படுத்தினார்.
அவரது திருச்சபை போதகரின் இறுதிச் சடங்கின் போது, ஆர்ச்சிபால்ட் மிஷனரி சேவைக்கான தனது அழைப்பை உணர்ந்தார். அவர் இறையியல் படிப்பிற்காக டொரொண்ட்டோவில் உள்ள மெக்மாஸ்டர் யுனிவர்சிட்டிக்குச் (ஹ்மெக்மாஸ்டர் பல்கலைக்கழகம்) சென்றார். அங்கு பொலிவியா நாட்டில் மிஷனரி பணியின் அவசியத்தைப் பற்றி அவர் கேள்விப்பட்டார். அவரிடம் நிதி உதவி இல்லை என்றபோதிலும், தன் கோடை விடுமுறையின் போது பொலிவியாவிற்கு செல்ல முடிவு செய்தார். 1896 ஆம் ஆண்டு, அவர் கடல் மார்க்கமாய் பயணித்து, பனாமாவின்பயங்கரமான வெப்பத்தை எதிர்கொண்டு, பெருவில் பனி போர்த்திய மலைகளைக் கடந்து, இறுதியில் லா பாஸ் என்ற ஊரை சென்றடைந்தார். அவர் ஸ்பானிஷ் மொழியை அறியாத போதிலும், துண்டுப்பிரதிகளை விநியோகித்து, வேதாகமங்களை விற்பனை செய்தார். இந்தப் பயணத்தில் அவர் தப்பிப் பிழைத்ததே ஒரு பெரும் அதிசயம் என்பதால், பொலிவியாவில் மிஷனரி பணிக்கான அழைப்பை உறுதிப்படுத்த ஆர்ச்சிபால்டுக்கு வேறு எந்த அறிகுறியும் தேவைப்படவில்லை.
விரைவில், லா பாஸில் அவரது குறுகிய அனுபவம், மெக்மாஸ்டர் பல்கலைக்கழகத்தில் அநேக மாணவர்களுக்கு ஒரு உத்வேகமாக மாறியது. ஒரு தீவிரமான ஊக்கப்பரிந்துரைக்குப் பிறகு, 1897ஆம் ஆண்டு பாப்ட்டிஸ்ட் கன்வென்ஷன் ஆஃப் ஒன்ட்டாரியோ (ஒன்ட்டாரியோவின் பாப்ட்டிஸ்ட் மாநாடு) ஆர்ச்சிபால்டின் பொலிவியா பணிக்கு ஆதரவளிப்பதாக அவரிடம் உறுதியளித்தது. -1898ஆம் ஆண்டு, ஆர்ச்சிபால்ட் ஒருரோ என்ற ஊரை சென்றடைந்து, அங்கு மிஷன் நிலையம் ஒன்றை ஸ்தாபித்தார். அவர் புலம்பெயர்ந்த கட்டுமானத் தொழிலாளர்களிடையே பணியாற்றத் துவங்கி, பள்ளி ஒன்றையும் நிறுவினார். விரைவில் அவர் கிறிஸ்துவுக்காக சில ஆத்துமாக்களை ஆதாயம் செய்ய முடிந்தது. மேலும், அவரது துணிச்சலான வாழ்க்கை , அநேக பாப்ட்டிஸ்ட் மிஷனரிகளை பொலிவியாவிற்கு செல்ல நெருக்கி ஏவியது. ஊழியம் செழித்தோங்கியது.
ஆர்ச்சிபால்ட் தனது ஊழியத்தை விசுவாசத்தின் அடிப்படையிலேயே செய்தார். ஊழியம் வெற்றிகரமாய் விளங்கினாலும், நிதி நிலை பெருகினாலும், அவர் ஒரு தாழ்மையான மண் தரை குடிசையிலேயே தங்க விரும்பினார். ஊழியத்தின் போது, அவர் தனது மூத்தப் பிள்ளையை டிப்தீரியா என்ற நோயினால் இழந்தார். மேலும் அவர் தனது மனைவியுடன் கடுமையான வானிலை காரணத்தினால் அநேகதரம் நோய்வாய்ப்பட்டார். ஆனாலும், அவர் விடாமுயற்சியுடன் நிலைத்திருந்தார். கடுமையான நோய் காரணமாக 1916ஆம் ஆண்டு கனடா தேசத்திற்கு திரும்ப வேண்டியதாயிற்று. அங்கு அவர் ஒன்ட்டாரியோவில் 1942ஆம் ஆண்டு மரிக்கும் நாள்வரை அநேக கிராம திருச்சபைகளில் போதகராக பணிபுரிந்தார்.
பிரியமானவர்களே, உங்கள் பெலவீன நேரங்களில், தேவனுடைய பெலன் பூரணப்படுத்தப்படுவதை நீங்கள் உணருகிறீர்களா?
"கர்த்தாவே, உமது பெலத்தால், உமக்காகவும் உமது மகிமைக்காகவும்
யாவற்றையும் செய்துமுடிக்க எனக்கு உதவியருளும். ஆமென்!"
Benjamin For Christ +91 9842513842
V. வீர சுவாமிதாஸ்
=======================
மிஷனெரி வரலாறு
அவுன் எமிலி ஹைனி - Aune Emily Hyny
=====================
மண்ணில் : 19.05.1914
விண்ணில் : 28.05.2004
நாடு : நெதர்லாந்து
தரிசன பூமி : மச்சிலிப்பட்டினம், ஆந்திரப் பிரதேசம், இந்தியா
அவுன் எமிலி ஹைனி என்பவர், மச்சிலிப்பட்டினத்தில் தன்னலமற்ற ஊழியத்திற்காக அறியப்பட்ட ஒரு டச்சு மிஷனரியாவார். எமிலி, ஒரு கிறிஸ்தவராக இருந்தபோதிலும், அவருடைய இளமைப் பருவத்தில் அவர் தெய்வ பயமற்று வாழ்ந்து வந்தார். அவர் செவிலியராக பணிபுரிந்தபோது, பயிற்றுவிக்கப்பட்ட விளையாட்டு வீரராகவும், திறமையான பியானோ வாசிப்பாளராகவும் விளங்கினார். அவர் பெற்ற பேரும் புகழுக்கு மத்தியில், அவருக்கு தேவனை தேட நேரம் இல்லாமல்போயிற்று.
ஒரு முறை அவளரது தோழி அவரை புஹாயார்வ்இல் நடந்த சால்வேஷன் ஆர்மி கூட்டத்திற்கு அழைத்துச் சென்றாள். அங்கு ஒரு பெண்மணி எமிலியிடம், "மீண்டும் பிறந்தாயா?" என்று கேட்டார். "இதையெல்லாம் எனது வயதான காலத்தில் அதைப் பற்றி யோசிப்பேன்" என்று எரிச்சலுடன் பதிலளித்தார் எமிலி. இதற்கு அந்த பெண், "வயதான காலத்தில் மீண்டும் பிறக்க திட்டமிட்ட அநேகர் ஏற்கனவே இறந்து நரகத்தில் வாடுகின்றனர்" என்று பதிலளித்தார். அந்த பதில் எமிலியை கலக்கமடையச் செய்தது. அன்றைய பிரசங்கமும் அவர் உள்ளத்தில் ஆழமாக கிரியை செய்தது. இறுதியாக, எமிலி தன்னைத் தாழ்த்தி, தன் வாழ்க்கையை கர்த்தரிடம் ஒப்புக்கொடுத்தார்.
இப்போது தேவனின் புதிய சிருஷ்டியான எமிலி, தனது மற்ற கடமைகளுடன் சுவிசேஷ ஊழியத்தையும் தொடங்கினார். ஒரு நற்செய்தி பிரச்சாரத்தில், முழுநேர ஊழியத்திற்கான அழைப்பை அவர் வலுவாக உணர்ந்தார். அதற்குப் பதிலாகத் தன் முழுப் பணத்தையும் தருவதாகக் கர்த்தரிடம் மன்றாடினார். ஆனால் தேவனுக்கோ எமிலி மாத்திரம் தான் தேவை, அவருடைய பணம் அல்ல, என்பதில் அவரது அழைப்பு தெளிவாய் இருந்தது. எனவே கீழ்ப்படிதலுடன் 1947ஆம் ஆண்டு லண்டனுக்குச் சென்று இன்டர்நேஷனல் பைபிள் ட்ரெய்னிங் காலேஜ் இல் (சர்வதேச பைபிள் பயிற்சிக் கல்லூரி] மிஷனரி பயிற்சி பெற்றார். - எமிலி 1951ஆம் ஆண்டு மச்சிலிப்பட்டினத்தை வந்தடைந்து, இந்திய கிறிஸ்தவ சபைகளின் அனாதை இல்லம் ஒன்றை பொறுப்பேற்று நடத்தினார். 1958ஆம் ஆண்டு வரை, அவர் கிருஷ்ணா மற்றும் குண்டூர் மாவட்டங்களில் சுவிசேஷ ஊழியத்தை மேற்கொள்வதற்காக விரிவாய்ப் பயணம் செய்தார். 1959ஆம் ஆண்டு தனது தாய்நாட்டிற்கு ஒரு குறுகிய பயணத்திற்குப் பிறகு, எமிலி எட்டு குழந்தைகளுடன் வர்ரெகுடெம் என்ற ஊரில் ஒரு அனாதை இல்லத்தை நிறுவினார். அவர் யாரிடமும் நிதி தேடாமல், எல்லா தேவைகளுக்கும் ஜெபங்களை மட்டுமே சார்ந்திருந்தார். அவர் தனது சொந்த மூதாதையர் சொத்துக்களை விற்று பள்ளிகள், அனாதை இல்லங்கள், வேதாகமப் பள்ளிகள் மற்றும் திருச்சபைகளைக் ஸ்தாபித்தார். அவர் கட்டிய பலவற்றில், மச்சிலிப்பட்டினத்தில் உள்ள ஹைனி உயர்நிலைப் பள்ளி இன்றும் அவரது ஊழியத்திற்கு ஒரு சான்றாக நிற்கிறது.
மச்சிலிப்பட்டினத்தில் 50 ஆண்டுகளுக்கும் மேலான ஊழியத்திற்குப் பிறகு, "ஹைனி அம்மாகாரு" என்று அன்புடன் அழைக்கப்பட்ட எமிலி, 2004ஆம் ஆண்டு தனது இறுதி மூச்சைவிட்டார்.
பிரியமானவர்களே, கடவுள் விரும்புவது உங்கள் பணத்தை அல்ல, எனவே நீங்கள்! அவருக்கு சேவை செய்ய உங்களை ஒப்புக்கொடுக்க நீங்கள் தயாராக இருக்கிறீர்களா?
“கர்த்தாவே, நீங்கள் எனக்குக் கொடுக்கும் புகழுக்கு மத்தியில், உமக்கும் உமது பணிக்கும் முக்கியத்துவம் அளிக்க எனக்கு உதவிபுரியும். ஆமென்!"
Benjamin For Christ +91 9842513842
V. வீர சுவாமிதாஸ்
===================
மிஷனெரி வரலாறு
சென் டெயோங் - Chen Dayong
=====================
விண்ணில் : 05.06.1900
ஊர் : பெய்ஜிங்
நாடு : சீனா
தரிசன பூமி : சீனா
சென் டெயோங் என்பவர் ஒரு சீன மெதடிஸ்ட் நற்செய்தியாளராகவும், சீனப் பெருஞ்சுவருக்கு அப்பால் உள்ள மக்களுக்கு ஒரு மிஷனரியாகவும் விளங்கினார். இளமைப் பருவத்தில் புத்தகங்கள் படிப்பதில் அதிக ஆர்வம் கொண்டிருந்த அவர், ஒரு நாள் ஒரு கிறிஸ்தவப் புத்தகத்தைக் கண்டார். அப்புத்தகம் அவருக்கு ஆர்வமூட்டுவதாக இருந்தது. லண்டன் மிஷனரி சொசைட்டி (எல்.எம்.எஸ்) தேவாலயத்தின் ஞாயிற்றுக்கிழமை ஆராதனையில் கலந்துகொள்ளும் அளவிற்கு அந்த புத்தகம் அவரை மெய்மறக்கச் செய்தது. சில மாதங்களுக்குப் பிறகு, அவர் தனது குடும்பத்தினரின் விருப்பத்திற்கு எதிராக ஞானஸ்நானம் பெற்றார்.
அந்நேரத்தில், சென் தனது பெற்றோரால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு பெண்ணை மணமுடிக்க நியமிக்கப்பட்டிருந்தார். அவரது திருமணத்தை விரைவில் நடத்த முயற்சிப்பதன் மூலம் அவரது குடும்பம் அவரது புதிய நம்பிக்கையிலிருந்து அவரை திசைதிருப்ப முயன்றது. ஆனால், கிறிஸ்தவ விதிமுறைபடி திருமணம் நடந்தால் தான் திருமணம் செய்து கொள்வேன் என்று சென் கூறினார். அவரது குடும்பத்தினர் மிகவும் கோபமடைந்து அவரை முற்றிலுமாக நிராகரித்து கைவிட்டனர். இருப்பினும், அந்தப் பெண்மணி சென்னின் விசுவாசத்தில் உண்மையைக் கவனித்தாள். கடைசியில், தன் குடும்பத்தாரின் எதிர்ப்பையும் மீறி சென்னைத் திருமணம் செய்துகொண்டாள்.
ஆனால் இந்த புதிய கிறிஸ்தவத் தம்பதியருக்கு திருச்சபையைத் தவிர உலகில் வேறு யாரும் இல்லை . சென் எல்.எம்.எஸ் (LMS) தேவாலயத்தில் காவலாளியாக பணிபுரியத் துவங்கினார். மேலும் தெருக்களில் நற்செய்தியைப் பகிர்ந்து கொள்ள இந்த வாய்ப்பைப் பயன்படுத்தினார். இறுதியில், சீனப்பெருஞ்சுவருக்கு அப்பால் உள்ள மக்களை குறித்த பாரத்துடன், அவர் பெய்ஜிங்கை விட்டு வெளியேறி அம்மக்கள் மத்தியில் ஊழியம் செய்யத் தொடங்கினார்.
கிறிஸ்தவர்கள் இரக்கமே இல்லாமல் படுகொலை செய்யப்பட்ட, பாக்சர் கலகம் உச்சத்தில் இருந்த சமயம் அது. நகரவாசிகள் சென்னிடம் மலைகளுக்கு தப்பிச் செல்லுமாறு கேட்டுக் கொண்டனர், ஆனால் அவர் தனது பிரியமான மந்தையை தனியாக விட்டுவிட மறுத்துவிட்டார். அவர் தனது தேவாலயத்தின் விசுவாசிகளின் பாதுகாப்பிற்கான ஏற்பாடுகளைச் செய்த பிறகு, கிளர்ச்சியின் தீவிரம் குறையும் வரை யாங்கிங் மலைகளில் ஒலித்துக்கொள்ள பயணத்தை தொடங்கினார். -ஆனால் சில பாக்சர் கிளர்ச்சியாளர்கள், பயணித்துக்கொண்டிருந்த சென் குடும்பத்தை விரைவாக முந்தினர். தனது மனைவி மற்றும் குழந்தைகள் முன்னிலையில் சென்னின் தலை துண்டிக்கப்பட்டது. சென்னின் இளைய மகள் தன் தாயின் பின்னால் ஒளிந்துகொண்டு “அம்மா, நாம் என்ன செய்வது?” என்று கண்ணீருடன் கேட்டபோது, அசைக்க முடியாத நம்பிக்கையுடன், துணிச்சலான தாய், “நாம் அனைவரும் ஒன்றாக நம் பரலோகப் பிதாவிடம் செல்வோம்!" என்று தன் பிள்ளைக்கு ஆறுதல் கூறினார். இந்த வார்த்தைகளை அவள் சொன்னவுடன், தாயும் குழந்தைகளும் துண்டு துண்டாக வெட்டப்பட்டனர்.
பிரியமானவர்களே, கிறிஸ்துவுக்காக உங்கள் முன்னுரிமைகள், இன்பங்கள், குடும்பம் மற்றும் நண்பர்கள் யாவற்றையும் தியாகம் செய்ய நீங்கள் ஆயத்தமா?
“கர்த்தாவே, இன்று என் சரீரத்தை ஜீவ பலியாக உமக்கு ஒப்புக்கொடுக்கிறேன். என் வாழ்க்கை, நேரம், பணம், லட்சியங்கள், திட்டங்கள், நம்பிக்கைகள் மற்றும் ஆசைகள் யாவையும் உம்மிடம் ஒப்படைக்கிறேன். ஆமென்!"
Benjamin For Christ +91 9842513842
V. வீர சுவாமிதாஸ்
=================
மிஷனெரி வரலாறு
ஹார்வி கோன் - Harvie Conn
=================
மண்ணில் : 07.04.1933
விண்ணில் : 28.08.1999
ஊர் : ரெஜினா
நாடு : கனடா
தரிசன பூமி : கொரியா மற்றும் அமெரிக்க ஐக்கிய நாடுகள்
ஹார்வி மெய்ட்லேண்ட் கோன் என்பவர், கொரியா மற்றும் அமெரிக்கா தேசங்களில் தனது ஊழியத்திற்காக அறியப்பட்ட ஒரு கனேடிய மிஷனரியாவார். சிறுவயதில் தெய்வ பயமற்ற அவர், பிரசங்கத்தின் போது போதகரின் படங்களை வரைந்ததுண்டு. ஆனால் மிஷிகனில் உள்ள கால்வின் கல்லூரியில் படிக்கும் போது கர்த்தர் அவருக்கு தாழ்மையைக் கற்றுக்கொடுத்தார். ஊழியத்திற்கான தேவனுடைய அழைப்பிற்கு அவர் கீழ்ப்படிந்து, பிலடெல்ஃபியாவில் உள்ள வெஸ்ட்மின்ஸ்டர் தியாலஜிக்கல் செமினரியில் (வெஸ்ட்மின்ஸ்டர் இறையியல் கல்விக்கழம்) சேர்ந்தார்.
அவர் வெஸ்ட்மின்ஸ்டரில் இருந்த காலத்தில், ஆர்த்தடாக்ஸ் பிரஸ்பிட்டேரியன் திருச்சபையின் புதிய கூடுகை ஒன்றை துவக்கினார். அங்கு அவருக்கு மிஷனரி பணிகளைக் குறித்த ஆர்வம் வளர்ந்தது. இறுதியில், ஜெர்மன் சீர்திருத்தத் திருச்சபை மூலம் கொரியாவில் ஊழியம் செய்ய அவருக்கு வாய்ப்பு கிடைத்தது. அங்கு ஹார்வி, செவிலியரான தனது மனைவி டாரத்தி டையெட்ரிச் உடன், 1960ஆம் ஆண்டு தென் கொரியாவை சென்றடைந்தார்.
அக்காலங்களில், கொரியா போரினால் சிதைந்து மற்றும் அமெரிக்க ராணுவத்தின் அடக்குமுறையால் அல்லல்பட்டுக் கொண்டிருந்தது. நாடு வறுமையின் கோரப்பிடியில் சிக்கித் தவித்தது, எல்லா இடங்களிலும் அரசியல் எதிர்ப்புகள் வெடித்தன. மொழிப் பயிற்சிக்குப் பிறகு, ஹார்வி பெரும் கூட்டத்தாரைச் சென்றடைவதை நோக்கமாகக் கொண்டு வானொலி ஒலிபரப்புகள் மூலம் பிரசங்கிக்கத் துவங்கினார். துண்டு பிரசுரங்களை அச்சிட்டு விநியோகித்தார்.
ஹார்வியும் டாரத்தியும் விபச்சார தொழிலில் இருந்தவர்களைப் பற்றி குறிப்பாக அக்கறை கொண்டிருந்தனர். மற்றும் விபச்சார விடுதிகளில் வேதாகம கல்வியை ஆரம்பித்தனர். அவர்கள் இளம் பெண்களின் கஷ்டங்களை பொறுமையுடன் செவிமடுத்துக் கேட்டு, கிறிஸ்துவின் நல்வாழ்க்கையைப் பற்றி அவர்களுக்குக் கற்பித்தனர். படிப்படியாய், அநேகப் பெண்களின் வாழ்க்கையில் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் ஏற்பட்டன. இதனால் கோபமடைந்த விபச்சார விடுதிகளை நிர்வாகம் செய்த விபச்சார தரகர் குழுவினர் ஹார்வியை பலமுறை அடித்து உதைத்தனர். ஆனால் கிறிஸ்துவுக்காக அவர்களையும் சம்பாதிக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் அவர் எப்போதும் தனது மறுகன்னத்தை அவர்களுக்கு காட்டினார். ஹார்வி பிச்சைக்காரக் குழந்தைகளிடையேயும் ஊழியம்புரிந்து, அவர்களில் அநேகரை கிறிஸ்துவிடம் கூட்டிசேர்த்தார்.
கொரியாவில் 13 வருடங்கள் கனி தந்த ஊழியத்தின் போது பல சோதனைகளைச் சந்தித்த பிறகு, ஹார்வி பிலடெல்ஃபியாவிற்குத் திரும்பிசென்று, வெஸ்ட்மின்ஸ்டர் இறையியல் செமினரியில் கற்பிக்கத் துவங்கினார். விரைவில், முழு நகரமும் அவரது வகுப்பறையானது. நகர்ப்புற புள்ளியியல் தரவுகளை வேதக் கோட்பாடுகளுடன் இணைத்து புதிய தலைமுறையை திறம்பட நம்பச்செய்தார்.
- 1998ஆம் ஆண்டில், முதிர்வயதினிமித்தம் அவரது பார்வை மங்கத் தொடங்கியது. அது அவருக்கு பயணம்செய்வதைக் கடினமாக்கியது. இதனால் அவர் செய்துகொண்டிருந்த ஊழியத்திலிருந்து ஓய்வு பெற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. அவர் 1999ஆம் ஆண்டு சிறிது காலம் புற்றுநோயுடன் போராடிய பிறகு இயேசு பாதம் சென்றடைந்தார்.
பிரியமானவர்களே, உங்களை அவமானப் படுத்தியதற்காகத்திற்காக நீங்களும் பிறரை அவமானப்படுத்துகிறீர்களா
அல்லது கிறிஸ்துவின் நிமித்தம் உங்கள் மறு கன்னத்தைக் காட்ட விரும்புகிறீர்களா?
“கர்த்தாவே, பழிவாங்குவதை விட்டுவிட்டு, எல்லா சூழ்நிலைகளிலும் கிறிஸ்துவின் அன்பைப் பிரதிபலிக்க எனக்கு உதவியருளும். ஆமென்!
Benjamin For Christ +91 9842513842
V. வீர சுவாமிதாஸ்
=====================
மிஷனெரி வரலாறு
கேட்டி டேவிஸ் மேஜர்ஸ் - Katie Davis Maiors
====================
மண்ணில் : 01.11.1989
ஊர் : நாஷ்வில்
நாடு : அமெரிக்க ஐக்கிய நாடுகள்
தரிசன பூமி : உகாண்டா
கேட்டி டேவிஸ் மேஜர்ஸ் என்பவர், உகாண்டா நாட்டின் வறுமையில் வாடும் மக்களுக்கு கிறிஸ்துவின் அன்பைக் காட்ட, தனது செல்வந்த வாழ்க்கையைத் துறந்த, ஒரு இளம் அமெரிக்க மிஷனரியாவார். சிறு வயதிலிருந்தே கேட்டி, உலகம் முழுவதும் நிலவும் வறுமையைப் பற்றி அறிந்திருந்தார். ஆகவே, தனது ஆசீர்வதிக்கப்பட்ட வாழ்க்கைக்காக கர்த்தருக்கு நன்றியுள்ளவராய் விளங்கினார். வருடங்கள் உருண்டோட, மானுடத்தின் வறுமையின் பாரமும் அவரது உள்ளத்தில் மல்கியது. இயேசுவின் அன்பு அவரை தன் கனவுகளை விட்டுவிட்டு, கிறிஸ்து என்ன செய்திருப்பாரோ அதையேச் செய்யும்படி நெருக்கி ஏவியது.
தனது 18ஆம் வயதில், உகாண்டா தேசத்தில், மழலையர் பள்ளி ஆசிரியையாக பணிபுரியும் வாய்ப்பைக் கண்டறிந்தார். அவரது வயதுடைய பெண்கள் உலக சிற்றின்பங்களைத் தேடி, வெற்றியார்ந்த தொழில் விருப்பத்தேர்வுகள்த் தேடிக்கொண்டிருந்த அதே வேளையில், கேட்டி உகாண்டா செல்ல தீர்மானித்தார். அவர் தனது தாயாருடன் 2006ஆம் ஆண்டு உகாண்டாவில் வாந்திறங்கினார். அங்கு, வறுமைக்கு வழிவகுக்கும் கல்வியறிவின்மையின் கொடுஞ்சூழற்சியையும், அது இறுதியில், இளம் குற்றவாளிகளைப் பிறப்பிப்பதையும் அவர் கண்டார். யாரிடமும் நீதி தேடாமல், சமுதாய அடிநிலை வகுப்பிலுள்ள 10 குழந்தைகளுக்கு, கல்வி வழங்குவதற்காக முதலில், தான் சேமித்து வைத்திருந்ததை விட்டுக்கொடுத்து ஒரு முன்மாதிரியாய் திகழ்ந்தார் கேட்டி. அவரது இந்த உதாரணம், அவரது நண்பர்கள் மற்றும் உறவினர்கள் பலரை கொடுக்க ஊக்கப்படுத்தி, 150 குழந்தைகளுக்கு போதுமான நிதி திரட்ட வழிவகுத்தது.
ஒரு வருட ஊழியத்திற்குப் பிறகு, அவர் தனது பட்டப்படிப்பை முடிக்க அமெரிக்கா திரும்பினார். உகாண்டாவிற்குத் திரும்பிச் செல்ல அவர் எடுத்த முடிவு அவருடைய குடும்பத்தினரின் எதிர்ப்பைச் சந்திக்கச் செய்தது. ஆனால் அவரோ, பூமிக்குரிய தகப்பனை விட பரலோகப் பிதாவைப் பிரியப்படுத்தத் தீர்மானித்து, 2007ஆம் ஆண்டு உகாண்டா நாட்டில், ஜின்ஜா என்ற பட்டணத்திற்குத் திரும்பினார். அங்கு கேட்டி, உகாண்டா மக்களை கிறிஸ்துவுக்கு அறிமுகப்படுத்துவதன் மூலம் அவர்களின் வாழ்க்கையை உருமாற்றும் நோக்கத்துடன், அமாசிமா ஊழியங்களைத் நிறுவினார். அவர் கிறிஸ்துவை மையமாகக் கொண்டு இயங்கிவரும் ஒரு பள்ளியை நடத்தி வருகிறார். மேலும் அதன் மூலம் ஜின்ஜாவில் உள்ள பல குடும்பங்களை ஆத்தும ரீதியாகவும் உடல் ரீதியாகவும் உருமாற்றியுள்ளார்.
அவரது கணவர் பென்ஜி மேஜர்ஸின் ஆதரவுடன், கேட்டி, எய்ட்ஸ் நோயால் பெற்றோரை இழந்த 13 குழந்தைகளை தத்தெடுத்தார். ஊழியத்தில் பல சவால்கள் இருந்தபோதிலும், அவள் சிரித்தபடி கூறியது, “தேவனுடைய மகத்தான அன்புடன் எல்லா சிறிய விஷயங்களையும் நீங்கள் செய்யும்போது - நீங்கள் உங்கள் வாழ்க்கையில் பெரிய காரியத்தைச் செய்கிறீர்கள். நீங்கள் ஒரு நபரின் உலகத்தை மாற்றும்போது - நீங்கள் உலகத்தையே மாற்றுகிறீர்கள். கிறிஸ்துவைப் போல நேசிக்கும் வாய்ப்புகளை நீங்கள் இழக்காதபோது - உங்கள் சிறந்த வாழ்க்கையை நீங்கள் இழக்கவே இல்லை.
" பிரியமானவர்களே, உங்கள் இளமைப் பருவம் கிறிஸ்துவின் அன்பின் ஊடகமாய் விளங்குகிறதா?
”கர்த்தாவே, சின்னஞ்சிறிய காரியங்களையும் உமது பெரிதான அன்புடன்
செய்ய, நீரே எனக்கு உதவியருளும். ஆமென்!"
Benjamin For Christ +91 9842513842
V. வீர சுவாமிதாஸ்
===================
மிஷனெரி வரலாறு
அலெக்சாண்டர் ஹோட்டோவிட்ஸ்கி - Alexander Hotovitsky
====================
மண்ணில் : 11.02.1872
விண்ணில் : 19.08.1937
ஊர் : கிரெமனெட்ஸ்
நாடு : வோல்ஹினியா (தற்போதைய உக்ரைன்)
தரிசன பூமி : வட அமெரிக்கா மற்றும் ரஷ்யா
அலெக்சாண்டர் ஹோட்டோவிட்ஸ்கி என்பவர் அமெரிக்காவிற்கு ஆர்த்தடாக்ஸ் திருச்சபை மிஷனரியாகவும், ரஷ்யாவில் போல்ஷவிக் ஒடுக்குமுறையின் போது இரத்தசாட்சியாகவும் திகழ்ந்தவர். ஒரு பக்தியுள்ள குடும்பத்தில் பிறந்த அலெக்சாண்டர், தனக்கு திருச்சபை மற்றும் ஊழியத்தின் மீது ஆர்வத்தை ஊட்டிய பெற்றோரிடமிருந்து, ஒரு நல்ல கிறிஸ்தவ வளர்ப்பைப் பெற்றார்.
அலெக்சாண்டர், தனது பட்டப்படிப்பை முடித்தவுடன், அமெரிக்காவின் நியூயார்க் நகரத்தில் புதிதாக நிறுவப்பட்ட செயின்ட் நிக்கோலஸ் ஆர்த்தடாக்ஸ் தேவாலயத்தில் பணியாற்ற நியமிக்கப்பட்டார். அவரது மனைவி மரியா ஷெர்புஹினாவுடன், அலெக்சாண்டர் 1896ஆம் ஆண்டு நியூயார்க்கை வந்தடைந்தார். குறிப்பாக அமெரிக்காவில் உள்ள ஆப்பிரிக்க மற்றும் ரஷ்ய நாடுகளிலிருந்து குடியேறியவர்கள் மத்தியில் அவர் தனது ஊழியத்தில் கவனம் செலுத்தினார். அவர் தனது தேவாலயத்தில் ஒரு வசதியான வாழ்க்கையை அமைத்துக்கொள்ளாமல், வட அமெரிக்கா முழுவதும் பயணம் செய்து, பிலடெல்பியா, யான்க்கர்ஸ் மற்றும் பாஸாயிக் உள்ளிட்ட பல நகரங்களில் திருச்சபைகளை நிறுவினார். நியூயார்க்கில் உள்ள கட்டிடக்கலை ரீதியாக குறிப்பிடத்தக்க மற்றும் கம்பீரமான செயிண்ட் நிக்கோலஸ் கதீட்ரல் இன்றும் அவரது முயற்சிகளுக்கு சான்றாக உள்ளது.
அவர் மேற்கொண்ட மிஷனரி பயணங்கள் சுலபமானவைகள் அல்ல. ஒருமுறை, ஞாயிற்றுக்கிழமைகளில் தங்கள் ஊழியர்களை ஆராதனையில் கலந்துகொள்ள அனுமதிக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தியதற்காக அவர் தொழிலதிபர்களால் தாக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். மற்றொரு முறை, அவர் ஒரு கூட்டத்தில் கலந்து கொள்ளவிருந்தபோது, வெறியார்ந்த ஒருவர் அவரை தடியால் தாக்கி கடுமையாக காயப்படுத்தினார். ஆயினும்கூட, வலியுடனே அவர் கூட்டத்திற்குச் சென்று, வல்லமையாய் ஊழியம் செய்தார்.
அமெரிக்காவில் 18 ஆண்டுகள் பணியாற்றிய பிறகு, அலெக்சாண்டர் 1914ஆம் ஆண்டு பின்லாந்து தேசத்திற்கு அனுப்பப்பட்டார். தேவாலயத்தில் மறைந்து வரும் ஆர்த்தடாக்ஸ் தத்துவக்கோட்பாடுகளைப் பாதுகாக்க, அங்கு அவர் கடினமாய் உழைத்தார். அங்கிருந்து அவர் 1917ஆம் ஆண்டு உள்நாட்டுப் போரில் தத்தளித்துக்கொண்டிருந்த மாஸ்கோ நகரத்திற்கு மாற்றப்பட்டார். அங்கு அவர் கட்டிட பிரகாரமாகவும் ஆத்தும பிரகாரமாகவும் கிரைஸ்ட் தி சேவியர் கதீட்ரலை ('கிறிஸ்து இரட்சகர் திருச்சபை') மீண்டும் கட்டியெழுப்பும் உத்தரவாதத்தை தாங்கினார்.
அரசாங்க அதிகாரிகளிடமிருந்து திருச்சபையை பிரிக்க அலெக்சாண்டரின் முயற்சிகள், அவருக்கு அநேக எதிரிகளை சம்பாதித்தன. அவர் அநேக தரம் கைது செய்யப்பட்டு, 1924ஆம் ஆண்டு சைபீரியாவிற்கு நாடு கடத்தப்பட்டார். 1937ஆம் ஆண்டு, அலெக்சாண்டர் ரஷ்யாவில் புரட்சிக்கு உதவுகிறார் என்ற
போலிக்காரணத்திற்காக, அவர் மீண்டும் கைது செய்யப்பட்டு ஆகஸ்ட் 19, 1937ஆம் ஆண்டு அன்று மரண தண்டனை விதிக்கப்பட்டு, துப்பாக்கி படையால் சுட்டு கொல்லப்பட்டார்.
பிரியமானவர்களே, கிறிஸ்துவின் மீதான உங்கள் அன்பு, உங்கள் சொகுசு வட்டத்திற்கு வெளியே பணிபுரிய உங்களைத் உந்துவிக்கிறதா?
“கர்த்தாவே, என் பெலத்தின் மற்றும் சுகத்தின் வரம்புகளை தாண்டி சுவிசேஷத்தை எடுத்துச் செல்ல நீரே எனக்கு உதவிபுரியும். ஆமென்!"
Benjamin For Christ +91 9842513842
V. வீர சுவாமிதாஸ்









