============================
ஏமி வில்சன் கார்மைக்கேல் (1867-1951)
==============================
ஏமி வில்சன் கார்மைக்கேல் அவர்கள் அயர்லாந்து தேசத்தில் பக்தியிலும் ஒழுக்கத்திலும் சிறந்து விளங்கிய கிறிஸ்தவ குடும்பத்தில் 1867 ம் ஆண்டு பிறந்தார். தன்னுடைய 15 ம் வயதில் இயேசுவை சொந்த இரட்சகராக ஏற்றுக்கொண்டு அவருடைய நாமமகிமைக்காய் தன்னை அற்பணித்துக்கொண்டார்கள்.
இந்நிலையில் 16 ம் வயதில் திடீரென அவர் தந்தை மரித்துப்போனார். ஆகிலும் சோர்ந்து போகாமல் 1880 ம் ஆண்டு அங்கிருந்த ஜவுளி மில் தொழிற்சாலைகளில் பணிபுரிந்த தாய்மார்களின் சிறுபிள்ளைகளுக்கு என்று ஞாயிறு பள்ளி ஆரம்பித்தார்கள். இதன் மூலமாக சுமார் 500 பிள்ளைகளுக்கும் அதிகமான சிறு பிள்ளைகள் ஆண்டவரை அறிந்து கொண்டனர்.
அந்த சமயத்தில் 1893 ம் ஆண்டு அயர்லாந்து பகுதிக்கு ஒழுங்கு செய்யப்பட்டிருந்த மிஷனெரி கூடுகையிலே சீனாவிற்கு சென்ற முதல் மிஷனெரி ஹட்சன் டெயிலர் தேவ செய்தி கொடுத்து வாலிபர்களுக்கு மிஷனெரி அறைகூவல் விடுத்தார். இதில் பங்குபெற்றிருந்த ஏமி கார்மைக்கேல் ஆண்டவர் தன்னை மிஷனெரி சேவைக்கு அழைப்பதை உணர்ந்தார்கள். ஆகவே தான் பொறுப்பாய் நடத்திக்கொண்டிருந்த ஓய்வுநாள் பள்ளியை மற்றவர்களிடம் ஒப்படைத்துவிட்டு தன்னை மிஷனெரியாக அற்பணித்தார்.
அயர்லாந்து மிஷனெரி ஸ்தாபனம் மூலம் முதலாவது ஜப்பான் தேசத்திற்கு மிஷனெரியாக அனுப்பப்பட்டார்கள். அங்கு 15 மாதங்களாய் ஊழியம் செய்துகொண்டு இருக்கும்போது நோயினால் சரீரம் மிகவும் பலவீனப்பட்டது. ஆகவே அயர்லாந்து திரும்பினார். பின்னர் இலங்கைக்கு மிஷனெரியாக அனுப்பப்பட்டார். அங்கு சிலமாதங்கள் பணி செய்துவிட்டு இந்தியாவில் 1895 -ம் ஆண்டு சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்கள். பின்னர் கார்மைக்கேல் அம்மையார் 1898 ம் ஆண்டு திருநெல்வேலி மாவட்டத்தில் டோனாவூர் பகுதிக்கு மிஷனெரிபணி செய்ய செய்ய அனுப்பப்பட்டார்கள்.
இந்நிலையில் 1901 ம் ஆண்டு கார்மைக்கேல் அம்மையாரின் வாழ்க்கையில் சந்தித்த சவால்கள் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது.
தமிழ்நாட்டில் இந்து மதத்தில் பல இளம் பெண்கள் தேவதாசிகளாய் இருப்பதையும், அவர்களையும் இன்னும் அநேக இளம் விதவைகளையும் அங்கிருந்த இந்துமத பூசாரிகள் கட்டாய விபச்சாரத்தில் கொடுமைபடுத்தப்படுவதையும் கண்டு நெஞ்சம் பதறினார். ஆகவே அவர்களுக்கு வாழ்வு கொடுக்கும்படி 1901 ல் சிறு பிள்ளைகள் மறுவாழ்வு மையம் ஆரம்பித்தார்.
முதலில் ஏழு வயது நிரம்பிய குழந்தை அவளுடைய தாயின் மூலம் தேவதாசியாய் இந்து கோவிலில் விற்கப்பட்ட ப்ரீனா குழந்தை அங்கிருந்து தப்பி வந்து கார்மைக்கேல் அம்மையாரிடம் தஞ்சம் அடைந்தது.
இப்படியாக அநேக பெண் குழந்தைகள், தேவதாசிகளாய் விற்கப்பட்டவர்கள் அங்கிருந்து தப்பிவந்து ஏமி கார்மைக்கேல் அம்மையாரிடம் தஞ்சம் புகுந்தனர். இவர்களுக்கு என்று டோனாவூர் ஐக்கியம் என்ற விடுதியை 1902 ல் ஏற்படுத்தினார்கள்.
இப்படியாக தங்கள் வாழ்வில் துன்பத்தை மட்டுமே அனுபவத்த பல குழந்தைகள், இளம் பெண்கள், தேவதாசிகள் என்று நூற்றுக்கணக்கானோருக்கு இந்த விடுதியில் அடைகலம் கொடுக்கப்பட்டது.
கார்மைக்கேல் அம்மையார் ஊழியத்தில் இந்திய கலாச்சாரத்தை மதித்து, அமைப்பின் உறுப்பினர்கள் இந்திய உடையை அணிந்து மீட்கப்பட்ட குழந்தைகளுக்கு இந்திய பெயர்களையே கொடுத்தார்.
இந்த டோனாவூர் ஐக்கிய விடுதிக்கு எதிராக இந்து பூஜாரிகள் பல போராட்டம் நடத்தினார்கள் மேலும் வன்முறையிலும் ஈடுபட்டார்கள். 1918 ம் ஆண்டு ஏமி கார்மைக்கேல் அம்மையார் இந்து கோவில்களில் கொத்தடிமைகளாக விற்கப்பட்டிருந்த பல ஆண் குழந்தைகள் மற்றும் தேவதாசிமார்களின் குழந்தைகளின் மறுவாழ்வுக்கு என்று ஒரு விடுதியை ஏற்படுத்தி அவர்கள் கல்வி கற்றுகொள்ளும்படி கல்விகூடத்தை ஏற்படுத்தினார்.
இதை இந்துமத கோவில் பூசாரிகள் வண்மையாக கண்டித்தார்கள். ஆகவே இந்த டோனாவூர் ஐக்கியத்திற்கு எதிராக இந்து பூசாரிகள் நீதிமன்றத்தில் ஏமி கார்மைக்கேல் குழந்தைகளை கடத்தி வெளிநாட்டிற்கு விற்கின்றார்கள் என்று பொய் வழக்கு தொடர்ந்தார்கள். ஆனால் எதையும் இவர்களால் நிருபிக்க முடியாமல்போனதால் 1914 ல் வழக்கு தள்ளுபடி ஆயிற்று.
இந்த சூழ்நிலையில் சுமார் ஆயிரத்திற்கும் அதிகமான சிறுவர்கள், சிறுமியர்கள், இளம் விதவைகள், தேவதாசிகள் ஏமி கார்மைக்கேல் அம்மையாரின் டோனாவூர் ஐக்கியத்தில் அடைக்கலம் புகுந்தனர். இதில் பெரும்பாலான பிள்ளைகளுக்கு உண்மையான அப்பா, அம்மா யார் என்றே தெரியாது.
இந்த டோனாவூர் ஐக்கியத்தை நடத்துவதற்கு அநேக பொருளாதார தேவைகள் இருந்தது. ஆயினும் தேவன் அற்புதமாக தேவைகளை சந்தித்தார்.
ஏமி கார்மைக்கேல் அம்மையார் இந்திய துணியை உடுத்தியவர்களாய், இருண்ட காபியால் தோலுக்கு சாயம் பூசி வெயிலிலும், தெரு ஒரங்களிலும் புழுதிகளிலும் நடந்தே சென்று எந்த ஒரு குழந்தையும் பாடு அனுபவித்துவிட கூடாது என்று தேடி, தேடி தன்னுடன் சேர்த்துக்கொண்டார்கள்.
கார்மைக்கேல் அம்மையார் தாய் இல்லாத நூற்றுக்கணக்கான இந்திய குழந்தைகளுக்கு தாயாக இருந்து பராமரித்தமையால் எல்லோரும் பாசமாக அம்மா என்று அழைத்தார்கள்.
ஏமி கார்மைக்கேல் அம்மையாரின் சமுதாய உணர்வினை புரிந்து கொண்டு அம்மையாரின் சேவையை பாராட்டிய இங்கிலாந்து இளவரசி Queen Mary டோனாவூர் ஐக்கியத்திற்கு என்று ஒரு மருத்துவமனையும் கட்டிக்கொடுத்தார்கள்.
இளம் விதவைகள், தேவதாசிகள், அநாதை குழந்தைகள் மற்றும் ஆதரவற்றற பெண்கள் மேம்பாட்டிற்கு மறுவாழ்வு மையங்கள் அமைத்து அவர்களுக்கு கைத்தொழில்கள் பல கற்றுக்கொடுத்து அவர்கள் பொருளாதாரத்தை உயர்த்தினார்.
ஏமி கால்மைக்கேல் அம்மையார் இடைப்பட்ட நேரங்களில் 36 புத்தகங்களை எழுதினார். இவைகள் இன்றும் ஆயிரக்கணக்கானவர்களுக்கு ஆசீர்வாதமாக இருக்கிறது.
இந்தியாவின் பிள்ளைகளின் வாழ்வுக்கு என்று தன்னை அற்பணித்த ஏமி கார்மைக்கேல் அம்மையார் இறுதிவரை திருமணம் செய்யாமலும் தன்னுடைய சொந்த ஊருக்கு திரும்பி செல்லாமலும் 55 ஆண்டுகள் தமிழ்நாட்டின் டோனாவூர் பகுதி மக்களுக்கு இறுதிவரை சேவை செய்து 1951 ம் ஆண்டு தன்னுடைய 83 ம் வயதில் நித்திய இளைப்பாறுதலுக்குள் பிரவேசித்தார். தனக்கு யாரும் கல்லரை கட்டக்கூடாது என்று முன்பே கார்மைக்கேல் அம்மையார் அன்பு கட்டளை பிறப்பித்திருந்தார்கள். ஆயினும் அவரால் வளர்க்கப்பட்ட பிள்ளைகள், அவர் அடக்கம் பண்ணப்பட்ட இடத்தில் ஒரு நீருற்றை ஏற்படுத்தி அதில் பறவைகள் குளிப்பதுபோல் கல்லில் அமைத்தார்கள். குளியல் தொட்டியில் மீது அம்மா என்ற வாசகத்தை எழுதியுள்ளார்கள்.
ஏமி கார்மைக்கேல் அம்மையாரின் உலகப்புகழ் பெற்ற வாசகம் ஒருவர் அன்பு செலுத்தாமல் எதையும் கொடுக்கலாம்; ஆனால் கொடுக்காமல் அன்பு செலுத்த முடியாது. இருபதாம் நூற்றாண்டின் ஒரு சிறந்த மிஷனெரியாக கார்மைக்கேல் அம்மையாரின் பணி இருந்தது.
ஏமி கார்மைக்கேல் அம்மையாரின் இடைவிடாத முயற்ச்சியினால் இந்திய அரசாங்கம் 1948 ம் ஆண்டு தேவதாசி முறையை தடை செய்தது. ஏமி கார்மைக்கேல் அம்மையார் செய்த பணியை இன்றும் இந்தியா நன்றி பெருக்கோ டுபார்க்கிறது.. இந்த ஐக்கியத்தில் இருந்து பல செவிலியர்கள், ஆசிரியர்கள், தொழில் அதிபர்கள், பொறியாளர்கள், மருந்துவர்கள், விஞ்ஞானிகள், மிஷனெரிகள், குருவானவர்கள், வேதாகம கல்லூரி ஆசிரியர்கள் மற்றும் பேராயர்களாக உலகின் பலகுதிகளில் வாழ்ந்துகொண்டுஆண்டவர் அவர்களுக்கு கொடுத்த ஏமி கார்மைகக்கேல் அம்மையாருக்கு நன்றி செலுத்துகின்றார்கள். இன்றும் இந்த டோனாவூர் ஐக்கியத்தின் மூலமாக 2500 க்கும் அதிகமான சிறுவர், சிறுமியர், அநாதைகள், பெற்றோரால் கைவிடப்பட்டவர்களை பராமரிக்க செவிலியர்கள், மருத்துவமனைள், கல்வி பாடசாலைகள் இயங்கிக்கொண்டு இருக்கின்றது.
இதை வாசிக்கிற அன்பு சகோதரிகளே, நம்முடைய ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து சிலுவையில் தொங்கிக்கொண்டு இருந்தபோது, எல்லா ஆண்களும் அவரைவிட்டுவிட்டு ஓடிப்போனார்கள். ஆகவே உயித்தெழுந்த இயேசு கிறிஸ்து முதன் முதலில் ஆண்களுக்கு தன்னை வெளிப்படுத்தாமல், ஒரு பெண்ணுக்கு தம்மை வெளிப்படுத்தி, அவள் மூலமாக கிறிஸ்துவின் உயிர்த்தெழுதல் செய்தி ஆண்களுக்கும் மற்ற எல்லோருக்கும் அறிவிக்கப்பட்டது. இயேசுவானவர் தன்னை முதன் முதலில் மேசியா என்று ஒரு பெண்ணுக்குத்தான் வெளிப்படுத்தினார். ஆதி திருச்சபையில் முதல் 500 ஆண்டுகளுக்குள் பல பெண்கள் இறையியலாளர்களாக (Theologians), சுவிசேஷகர்களாக (Evangelists), அப்போஸ்தலர்களாக (Apostles), தீர்க்கதரிசிகளாக (Prophetess), உதவி ஆயர்களாக (Deaconess), ஆயர்களாக (Presbyters) மற்றும் பேராயர்களாக (Bishops) கிறிஸ்துவுக்கு சிறந்த சேனாதிபதிகளாக தங்களை அற்பணித்து எங்கோ ஒரு மூலையில் எருசலேமுக்குள் இருந்த கிறிஸ்தவத்தை உலக மதமாக மாற்றினார்கள். இதில் பெண்களின் பங்கு மகத்தானது, அளவிடப்பபட முடியாது.
பிற்காலத்தில் கிபி 5 ஆம் நூற்றாண்டில் கிறிஸ்தவம், ரோமானிய மதமாக அங்கிகரிக்கப்பட்டதால், ஆணாதிக்கம் நிறைந்த ரோம கலாச்சாரம் கிறிஸ் தவத்தில் ஊடுருவி, 1 கொரி 14:34-36, 1 தீமோ 2:11-15, 1 கொரி 11:3, எபே 5: 22-24 ஆகிய வசனங்களுக்கு தவறான வியாக்கியானங்களை கொடுத்து திருச்சபையில் 50% இருக்கும் பெண்களையும், பெண்களின் திறமைகளையும் வெளியே கொண்டுவரவிடாமல், பெண்களின் வாயை கடந்த 1500 ஆண்டுகளாக அடைத்துவிட்டது.
21 ம் நூற்றாண்டில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கும் இந்த உலகம் எவ்வளவோ மாறிக்கொண்டு இருக்கிறது. ஆனால் ஆணாதிக்கம் நிறைந்த இன்றைய கிறிஸ்தவ திருச்சபை தலைமைத்துவம் பெண்களை உதவி ஆயர்களாக, ஆயர்களாக மற்றும் பேராயர்களாக அங்கிகரிக்க மறுக்கிறது. கடவுளின் சாயலில் சமமாக படைக்கப்பட்ட பெண்களை ஏற்றுக்கொள்வை மறுக்கிறது. இது கடவுளுக்கு எதிர்த்து நிற்பதற்கு சமம் என்பதை உணராமல் இருக்கிறது.
ஆகவே பெண்களே, ஆண்கள் ஆதிக்கம் செலுத்தும் கட்டிடமாகிய திருச்சபை உங்களை அங்கிகரிக்க மறுக்கலாம். ஆனால் திருச்சபை என்பது கட்டிடம் அல்ல, இது விசுவாசிகளின் கூடுகை என்பதை மறந்து போகாதேயுங்கள். இதற்கு என்று தனி கட்டிடம் தேவையில்லை. ஆகவே உங்கள் வீடுகளே திருச்சபையாக மாறட்டும். நீங்கள் படிக்கிற பள்ளிகள் மற்றும் கல்லூரி நண்பர்களின் ஐக்கியமே திருச்சபையாக மாறட்டும். நீங்கள் வேலைசெய்யும் இடங்களில் இருக்கும் நண்பர்களின் ஐக்கியமே திருச்சபையாக மாறட்டும்.
இந்தியாவில் சுமார் 6,75,982 கிராமங்கள் உண்டு. இதில் சுமார் 1,12,345 கிராமங்களில் மாத்திரம் ஆலயங்கள் இருக்கிறது. தெபோராளாகிய நீ எழும்புமளவும், இந்திய கிராமங்கள் பாழாய் போய்க்கொண்டுதான் இருக்கபோகிறது (நியா 5:7) . ஆகவே பெண்களின் வாழ்கையை ஒளியேற்றுவதற்காக தன்னையே கொடுத்த இயேசு கிறிஸ்துவுக்கு ஏதாவது வகையில் நற்செய்திபணி செய். உன் மூலமாக இயேசு கிறிஸ்துவின் இராஜியம் நீ இருக்கும் இடத்தில் கட்டப்படுவதாக. ஆமென்.

