தினம்------ஓர் குட்டிக் கதை - 808
கர்த்தருடைய பெரிதான நாமம் மகிமைப்படுவதாக..
ஆண்டவரும் உலக இரட்சகருமாகிய இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் அன்பு நண்பா்கள் அனைவருக்கும், அன்புடன் இனிய காலை வணக்கம் !! இந்தநாள் உங்களுக்கு நல்ல நாளாய் அமைவதாக!!!
சிந்திக்க வைக்கும் குட்டிக்கதையுடன் உங்களை சந்திப்பதில் மகிழ்ச்சியடைகிறேன்.!!!
யார் அழகு?
💯💯💯💯
ஓரிடத்தில் இருந்த எலி, முயல், குரங்கு, வெட்டுக்கிளி ஆகியவை ஒன்றுடன் ஒன்று நன்றாகப் பழகி வந்தன. ஆனாலும் அவைகளுக்குள் அழகு குறித்து அடிக்கடி விவாதங்கள் எழும். ஒவ்வொன்றும் தன் பெருமையைப் பறைசாற்றும் விதத்தில் பேசும். முயல் மட்டும் மவுனமாக இருக்கும். “நம் நால்வரில் நான் தான் மிக அழகு! மனிதர்கள் கூட எங்கள் இனத்திலிருந்துதான் தோன்றியதாகச் சொல்வார்கள்!'' குதித்துத் குதித்து நடனமாடியபடி சொல்லியது குரங்கு.
“நாங்கள் மனிதர்களின் வீட்டுக்குள்ளே புத்திசாலித்தனமாக ஒளிந்தும் வாழ்கிறோம்! எங்களிடம் அழகும் அறிவும் இருக்கிறது. எனவே
நான்தான் அழகு தேவதை !'' என்றது எலி. “மனிதர்கள் திட்டும் போது குரங்கு முகம், எலி முகம் என்று கூட உங்களைப் பற்றிக் கூறுவார்கள்! நான் சிறிய உருவமாக இருந்தாலும் கிளியின் நிறத்தில் அதைப் போன்றே அழகாக இருக்கிறேன்!'' பெருமிதம் பொங்கக் கூறியது வெட்டுக்கிளி.
“நான் இந்த அழகுப் போட்டிக்கே வரவில்லை!'' முயல் சொல்ல, மூன்றும் சேர்ந்து சிரித்தன. முயல் மெதுவாக அவ்விடத்தை விட்டு அகன்றது.
“என்ன இருந்தாலும் வெள்ளை வெளேரென்று முயல் ஓடி வரும் அழகே தனிதான்!'' குரங்கு சொல்லியது. “ஆமாம்... ஆமாம்...!'' ஒப்புக் கொண்டது வெட்டுக்கிளி.
“நிறமும் அழகும் மட்டும் இருந்தால் போதுமா? அறிவு,
புத்திசாலித்தனம் எல்லாம் இருக்க வேண்டும். அப்பொழுதுதான் அழகியாக ஏற்றுக் கொள்ள முடியும்'' என்றது எலி. “எனக்கொரு யோசனை தோன்றுகிறது! நமக்குள்ளே ஓர் அழகிப்
போட்டி நடத்தினால் என்ன?'' கேட்டது வெட்டுக்கிளி.
“போட்டி நடத்தலாம். ஆனால் நடுவர் யார்?'' சந்தேகம் எழுப்பியது எலி.
“நடுவராக நானிருக்கிறேன்!'' என்று திடீரென்று ஒரு சப்தம் கேட்டது. அனைத்தும் மேலே பார்க்க, மரத்தின் மீது ஒரு காகம் இருந்தது. “நீங்கள் எப்படி?'' ஆச்சரியப்பட்டது குரங்கு. “நீங்கள் மூவரும் பேசிக் கொண்டிருந்ததை நான் கேட்டேன். முயலையும் அழைத்துக் கொண்டு நாளை என் இருப்பிடம் தேடி வாருங்கள். ஆனால் நான் தேர்ந்தெடுப்பவரை அழகு ராணியாக அனைவரும் ஒருமனதாக ஏற்றுக் கொள்ள வேண்டும்!'' என்று காகம் தன் முகவரி கூறியது.
“அப்படியே செய்கிறோம்..'' அனைத்தும் சேர்ந்து குரல் கொடுத்தன. மறுநாள் அனைத்தும் அழகிய அழகுராணி கனவில் மிதந்து காகத்தை தேடி போய்க் கொண்டு இருந்தன. அப்பொழுது குருவி ஒன்று வலியால் துடித்துக் கொண்டிருந்தது. அதன்
கால்களில் காயம் தெரிந்தது.
“எனக்கு யாராவது ஒருவர் உதவி செய்யுங்களேன். ஒரு சிறுவன் கல்லெடுத்து எறிந்து காலில் காயப்படுத்தி விட்டான்!'' குருவி பலகீனமாக உதவி கேட்டது. “நாங்கள் அழகிப் போட்டிக்குப் போய்க் கொண்டு இருக்கிறோம். அபசகுனமாக பேசாதே!'' கடுமையாக கூறியது குரங்கு.
குருவியைப் பார்த்த எலியும், வெட்டுக்கிளியும் முகம் திருப்பி சென்று விட்டன. முயல் குருவி அருகே தயங்கி நின்றது. பின்னர் அவசர அவசரமாக மருந்து தேடிக் காலில் வைத்துத் விட்டு அழகிப்போட்டிக்கு
சென்றது. அழகிப் போட்டி தொடங்கியது. குறித்த நேரத்திற்கு முயல் மட்டும் செல்லவில்லை. மீதி மூன்றும் மனசுக்குள் மகிழத் தொடங்கின.
“அழகுக்கும் அறிவுக்கும் மதிப்பெண் போட்டு விட்டேன். இனி உங்கள் நல்ல குணம் பார்த்து மதிப்பெண்கள் கொடுப்பேன்! இதற்குத்தான்
அதிக மதிப்பெண்கள் ஒதுக்கி இருக்கிறேன்!'' காகம் கூறியதும் குருவிக்கு உதவாத மூன்றும் ஒன்றையொன்று பார்த்துக் கொண்டன.
அப்பொழுது அரக்கப் பரக்க முயல் ஓடி வந்தது.
To Get Daily Story Contact +917904957814
உடனே காகம் “முயல்தான் அழகு ராணி! இதை அழகுராணியாகத் தேர்வு செய்வதற்காக நான் பெருமைப் படுகிறேன்! குருவி என் நண்பன்தான்!
ஒரு ஆபத்திலிருந்து முயல் காப்பாற்றியதாக சற்று முன்பு தான் குருவி கூறியது. அப்பொழுது மூவரும் உதவாமல் சென்றது பற்றியும் சொல்லி
வருத்தப்பட்டது! உதவும் நல்ல மனசு உள்ளவர்கள்தான் உண்மையில் அழகானவர்கள்!'' காகம் கூறியதும் எலி, வெட்டுக்கிளி, குரங்கு
ஆகியவற்றின் முகங்கள் அஷ்டகோணலாகின.
என் அன்பு வாசகர்களே,
ஒரு மனிதன் எந்த நிறத்தில் இருக்கிறான் என்பதை பொருத்து அழகை கணக்கிட கூடாது. மாறாக எப்படி மற்றவர்களுக்கு உதவுகிறான் என்பதை பொருத்து தான் அவனின் அழகு தீர்மானிக்கப்படுகிறது. காரணம் வயது செல்ல செல்ல வெளித்தோற்றத்தால் உண்டாகிற அழகு குறைந்துக்கொண்டே போகும். ஆனால் மனதில் உண்டாகுகிற அழகு எத்தனை வயதானாலும் மெருகேறிக்கொண்டே தான் இருக்கும்.
தீர்க்கதரிசியாகிய ஏசாயா இயேசு கிறிஸ்துவைக்குறித்து இவ்வாறு கூறுகிறார்,
2 இளங்கிளையைப்போலவும், வறண்ட நிலத்திலிருந்து துளிர்க்கிற வேரைப்போலவும் அவனுக்கு முன்பாக எழும்புகிறார்; *அவருக்கு அழகுமில்லை, சௌந்தரியமும் இல்லை; அவரைப் பார்க்கும்போது, நாம் அவரை விரும்பத்தக்க ரூபம் அவருக்கு இல்லாதிருந்தது.
ஏசாயா 53:2*
சிலுவையில் தொங்கும்போது அழகற்றவராய் இருந்த இயேசு கிறிஸ்து, இன்றளவும் அவரைப்போல அழகுள்ளவரை யாராலும் காண முடியாது. காரணம் இந்த உலக இரட்சிப்பிற்காய் அநேக பாடுகள் பட்டு, தன் ஜீவனை கொடுத்ததால் உலகத்தில் இன்றுவரை அவரை கொண்டாடுகிறோம். ஒருவேளை பாடுபட்டு மரிக்கவில்லை என்றால் யாரும் அவரை அறிந்திருக்க வாய்ப்பில்லை.
எனவே சரீர பிரகாரமான அழகை மெருகேற்றுவதை விட்டு, அகத்திலிருக்கும் அழகை வெளிக்கொணர முயற்சிப்போம், அநேகருக்கு ஆசீர்வாதமாய் வாழ்வோம்.
நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்!!!!!
