கிறிஸ்தவர்களின் வாழ்க்கையில் பரிசுத்த வேதாகமம் எவ்வளவு முக்கியத்துவம் பெறுகிறதோ அதுபோல கிறிஸ்தவ பாமாலைகளும், கீர்த்தனைகளும் முக்கியத்துவம் பெற்று, திருச்சபையின் இதயதுடிப்பாக இருந்துகொண்டு இருக்கிறது. ஆங்கிலம் மற்றும் ஜெர்மானியம் போன்ற மொழிகளில் மேல் நாட்டவரால் எழுதப்பட்டு, மேல்நாட்டு இசையுடன் திருச்சபையில் பாடி வந்த பக்தி பாடல்களை தமிழில் மொழிபெயர்த்து, பாமாலைகள் என்றும் கர்நாடக இராகம், தாளம் ஆகியவற்றை அடிப்படையாக கொண்டு, தமிழில் இயற்றப்பட்ட பக்தி பாடல்கள் கீர்த்தனைகள் என்று அழைக்கப்படுகிறது.
பாடல் பிறந்த கதை:
பாடல்:
பிளவுண்ட மலையே, புகலிடம் ஈயுமே...
ஆசிரியர்:
August M. Toplady (1740-1778)
இசை
Thomas Hastings (1784-1872)
வேதபகுதி:
யாத் 33:22,
சங் 18:2, 61:2,
1 கொரி 10:4
பாமாலை பாடல்
1. பிளவுண்ட மலையே புகலிடம் ஈயுமே,
பக்கம் பட்ட காயமும் பாய்ந்த செந்நீர் வெள்ளமும்
பாவதோஷம் யாவையும் நீக்கும்படி அருளும்.
2. எந்தக் கிரியை செய்துமே உந்தன் நீதி கிட்டாதே,
கண்ணீர் நித்தம் சொரிந்தும் கஷ்ட தவம் புரிந்தும்
பாவம் நீங்க மாட்டாதே நீரே மீட்பர் இயேசுவே.
3. யாதுமற்ற ஏழை நான், நாதியற்ற நீசன் தான்,
உம் சிலுவை தஞ்சமே, உந்தன் நீதி ஆடையே
தூய ஊற்றை அண்டினேன் தூய்மையாக்கேல் மாளுவேன்.
4. நிழல் போன்ற வாழ்விலே கண்ணை மூடும் சாவிலே
கண்ணுக்கெட்டா லோகத்தில், நடுத்தீர்வை தினத்தில்,
பிளவுண்ட மலையே, புகலிடம் ஈயுமே.
பாடல் பிறந்த கதை
அகஸ்டஸ் மான்டேகு டாப்லடி என்பவர் இங்கிலாந்திலுள்ள பார்ன்ஹாமில் 04/11/1740 ஆண்டு பிறந்தார். இவருடைய தந்தை இங்கிலாந்து ராணுவத்தில் மேஜர் ரிச்சர்டு டாப்லடி, அகஸ்டஸ் சிறு குழந்தையாக இருக்கும் போதே யுத்தத்தில் மரணமடைந்தார்.
ஆகவே சிறுவயதில் இருந்தே பலவீனமாக இருந்த அகஸ்டஸை அவரது தாயார் இங்கிலாந்தில் புகழ்பெற்ற வெஸ்ட்மினிஸ்டர் பள்ளியில் சேர்த்தார். அங்கு கடினமான சூழ்நிலையை மத்தியிலும் முழு முயற்சியுடன் படித்த டாப்லடி, தனது 11 வது வயதிலேயே கிறிஸ்தவ மதத்தில் வைராக்கியம் உள்ளவராகவே விளங்கினார். இந்நிலையில் 14 வயதிலேயே பாடல்களை எழுத ஆரம்பித்தார். பின்னர் போதக ஊழியம் செய்வதற்காக டப்ளின் உள்ள திரித்துவ வேதாகம கல்லூரியில் இறையியல் கல்வி பயில ஆரம்பித்தார்.
இந்நிலையில் டாப்லடி 1862ஆம் ஆண்டு இங்கிலாந்தில் ஆங்கிலிக்கன் திருச்சபையில் சாமர்செட் பகுதியில் பிளாக்டன் என்னுமிடத்தில் குருவானவராக நியமிக்கப்பட்ட நாள் முதற்கொண்டு, பல திருச்சபைகளில் வல்லமை நிறைந்த, நற்செய்தி போதகராக ஊழியம் செய்தார்.
இந்நிலையில் ஒருநாள் அவர் ஊழியம் செய்த ஊரிலிருந்து இரண்டு அல்லது மூன்று மைல் தூரத்தில் பசும் புல்லால் மூடப்பட்டு, ஆங்காங்கு புதர்களும் பாறைகளும் உள்ள ரம்யமான இடம் ஒன்று இருந்தது.
ஒரு நாள் மாலை வேளையில் குருவானவர் டாப்லடி அந்த இடத்திற்கு அங்கு உலாவ சென்றிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக மழையும், காற்றும், புயலும் அடித்தன. அதற்கு தப்பி ஒதுங்குவதற்கு ஒரு வீடாவது, யாதொரு கட்டிடமாவது, குடிசையாவது அங்கில்லை; ஆனால் அங்கு செங்குத்தான பாறை ஒன்று இருந்தது. அதில் தரை மட்டத்தில் பெரும் பாறை ஒன்றில் ஒரு பிளவு காணப்பட்டது. ஆகவே அதனுள் அவர் புகுந்து புயல்காற்று நிற்கும் வரைக்கும் அதைத் தமக்கு புகலிடமாகக் கொண்டார்.
குருவானவர் டாப்லடி, கனம் ஒரு சிறந்த கிறிஸ்தவ பக்தன் ஆகையால், புயல் காற்றுக்கு தப்பி, ஒரு பாறையின் பிளவை புகலிடமாக தெரிந்து கொண்ட இந்த நிகழ்ச்சி, இவ்வுலகத்தில் நேரிடும் துன்பங்களுக்கு தப்பி ஒதுங்க, நம் ஆண்டவர் ஒரு பிளவுண்ட மலையாக விளங்கினார் என்ற சிந்தனை அவருடைய உள்ளத்தில் எழும்பிற்று. ஆகவே பக்தி உணர்ச்சி மேலிட வராய், அதைகுறித்து குறித்து சிந்திக்கலானார். அப்பொழுதுதான் *பிளவுண்ட மலையே, புகழிடம் ஈயுமே* என்னும் பாடல் அவர் என் மனதில் உருவாயிற்று. உடனே தம்முடைய காலடியில் கிடந்த ஒரு ஆட்டம் ஆடும் சீட்டை (Playing Card), தமது கையில் எடுத்து அதில் சிறு எழுத்துக்களால் அப்பாடலை எழுதினார். இப்பொழுதும் அந்த சீட்டு அமெரிக்க ஐக்கிய நாட்டில் பத்திரமாக வைக்கப்பட்டு இருக்கிறது.
இதற்கு இடையே குருவானவர் டாப்லெட் அவர்களின் சரீரத்தை எலும்புருக்கி நோய் தாக்கியது. இதனால் டாப்லெடி தன்னுடைய மரண நேரத்தில் என் இதயம் நாளுக்கு நாள் மகிமையை நோக்கி துரிதமாய் துடிக்கிறது. ஆகவே சுகவீனமோ, வேதனையோ, மரணமோ என்னை சிறிதும் பாதிக்க முடியாது. என்னுடைய ஜெபங்கள் எல்லாம் இப்போது துதியின் சத்தமாக மாறிவிட்டன என்று கூறினார். இந்நிலையில் 1788ஆம் ஆண்டு தனது 38 வயதில் குருவானவர் டாப்லேட் மரணமடைந்தார்.
பிளவுண்ட மலையே, புகழிடம் ஈயுமே எனும் அவரது பாடல், காலத்தால் அழியாமல் இன்றும் நமக்கு ஆசீர்வாதமாக இருக்கிறது.
இப்பாடலுக்கு 1830 ஆம் ஆண்டு அமெரிக்க திருச்சபை இசை மேதையான தாமஸ் ஹேஸ்டிங் டாப்லெடி என்ற தலைப்பிலேயே ராகம் அமைத்தார். இப்பாடல் கடந்த பல நூறு ஆண்டுகளாக அநேக விசுவாசிகளின் ஆவிக்குரிய முன்னேற்றத்திற்கும் ஆசீர்வாதத்திற்கு ஊன்றுகோலாய் இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இங்கிலாந்தின் பிரதமர் கிளாஸ்டன் அவர்களின் விருப்பப் பாடலாக அவரது அடக்க ஆராதனையில் இப் பாடல் பாடப்பட்டது.
இங்கிலாந்தின் விக்டோரியா மகாராணியின் கணவரான ஆல்பர்ட் இப்பாடலை பெரிதும் பாராட்டி, இது தன் உள்ளத்தை கவரும் ஞானப்பாட்டு என்று கூறினார்.
இவர் மரணபடுக்கையில் இருக்கும்போது இப்பாடலை திரும்ப திரும்ப பாடி தமக்கு மிகவும் ஆறுதல் கொடுத்தது என்று கூறியுள்ளார்.
அதிக கௌரவமும் சம்பத்தும் இருந்த பொழுது அவைகளின் பேரில் மட்டும் நம்பிக்கை வைக்கிறவனாக ஒருவன் வாழ்ந்து வந்தானாகில், அவன் நிச்சயமாகவே ஒரு பரிதபிக்கக்கூடிய நிலையில் உள்ளவன் என்று சொல்லி இப்பாடலை அவர் தன்னுடைய மரணப்படுக்கையில் பாடி மெய் சாந்தி அடைந்தார் என்று இவரைக் குறித்து சொல்லப்பட்டிருக்கிறது.
நூற்றுக்கணக்கான மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்ட இப்பாடலானது, கிறிஸ்தவ மக்கள் கூடும் இடம் எல்லாம் பாடப்பட்டு வருகின்றது. கிறிஸ்துவே தஞ்சம் என்று அவரை அண்டி கொண்டு தூய்மையான வாழ்க்கை நடத்தி அவரை புகலிடமாக கொண்ட மக்கள் இப்பாடலை கருத்தூன்றிப் பாடும்பொழுது புத்துணர்ச்சி பெருகின்றார்கள். நம்முடைய நியாய தீர்ப்பு நாள் வரைக்கும் இப்பாடலானது *கிறிஸ்து நம்முடைய புகலிடமான ஆண்டவர்* என்று எடுத்துரைக்கும் என்பதற்கு ஐயமில்லை.
இந்த பாமாலைகள் மற்றும் கீர்த்தனைகளை அதன் பொருளை உணர்ந்து நாம் பாடும்போது நம்முடைய இதயங்கள் ஒருமுகப்படுத்தப்பட்டு உள்ளம் உருகுகிறது, பக்தி உணர்வு பெருகி ஆழ்ந்த இறை உணர்வு பெறுவதற்கும் துணை செய்கிறது. இந்த பாடல்கள் நம்முடைய ஆவிக்குறிய வாழ்க்கையில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதில் சந்தேகமில்லை. ஆகவே இந்த குழுவின் இணைப்பை உங்கள் நண்பர்கள், உற்றார், உறவினர்கள் மற்றும் திருச்சபை மக்களுக்கும் அனுப்பி வையுங்கள். கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக.