முன்னோடி மிஷனெரிகளின் வாழ்க்கை சரிதை:
சாமுவேல் பவுல் ஐயர் Samuel Paul Iyer
=================================
மண்ணில்: 15-06-1844
விண்ணில்: 11-03-1900
ஊர்: மெஞ்ஞானபுரம்
நாடு: இந்தியா
தரிசன பூமி: இந்தியா
ராவ் சாஹிப். இது ஓர் கௌரவப் பட்டம், பொது நலத்தொண்டை பாராட்டி அரசு வழங்கும் பட்டம்.1899ம் ஆண்டு சாமுவேல் பவுல் ஐயருக்கு வழங்கப்பட்டது. அப்படி என்னச் செய்தார்?
சிவகாசி. அங்கே இனக்கலவரம், பிரச்சனைகள் தலைவிரித்தாடியது. தலைவர்கள் தலைகீழாய் நின்றனர். தலைநிமிரச் செய்தார் பவுல் ஐயர். கைகள் கோர்க்கப்பட்டன, சமரசம் ஆனது. சமாதானம் வந்தது.
சாமுவேல் பவுல் ஐயர், சர்ஜென்ட் ஐயரிடம் வேத சாஸ்திரங்கள் கற்றவர், குரு அபிஷேகம் பெற்று உதகையில் ஒன்பது ஆண்டுகள் பணி செய்தார். மத வேறுபாடின்றி அனைவரையும் அழைத்து ஒன்றாக உட்காரவைத்து கிறிஸ்துவின் அன்பை எடுத்துரைத்தார்.
சந்தைகளிலும் சத்தியத்தை சாதாரண மொழி நடையில் கூறினார். சிறைக் கைதிகளைச் சந்தித்து அவர்களுக்கு நல்லொழுக்கங்களைக் கற்பித்தார். மாதம் ஒருமுறை கதாகாலட்சேபமும் நடத்தினார்.
சென்னையில் நான்கு வருடங்கள் பணி செய்தபின் சிவகாசி அருகேயுள்ள சாட்சியாபுரத்தில் தலைமைக் குருவாகப் பணியாற்றினார். நல்ல இசைக் கருவிகளுடன் கூடிய பாடகர் வரிசையை ஏற்படுத்தி, சபையிலே பெரும் எழுப்புதலை உண்டுபண்ணினார். இப்பொழுது சபைகளில் கொண்டாடப்படும் தவச உற்சவ பண்டிகையை முதன் முதலில் ஆரம்பித்தவர் இவரே.
1890ம் ஆண்டு ஒரு நற்போதக பத்திரிக்கைக்கு ஆசிரியராகவும், பேராயரின் உதவி குருவாகவும் பணியாற்றியவர்.42 நூல்கள் எழுதிய பெருமைக்குரியவர்.'ஆத்தும நேசரின் அங்க மகத்துவம்' என்ற அவரது நூல் ஆத்துமாவை அசையச் செய்வதாகும்.'ஜான் பன்யனின் 'மோட்ச பிரயாணம்' என்ற நாவலை தமிழில் தந்த சிறப்புக்குரிய இவர், மார்ச் 11,1900ஆம் ஆண்டு கர்த்தருக்குள் நித்திரையானார்.