பெர்ப்பெச்சுவா | பொன் ஏணி | தியோடோரா - திதிமு | திமோத்தி - மௌரா | பெஸில் & போட்டமியானா | போலிகார்ப் (சிமிர்னா சபைப் போதகர்)
=======================
ஆரம்ப கால இரத்தசாட்சிகள்
Chapter 21
பெர்ப்பெச்சுவா
======================
கிபி 200..
மன்னன் செவரஸ்..
ஐந்தாம் உபத்திரவக் காலம்
இதற்குள்ளாக..உபத்திரவம்
ரோமர்களின் காலனியாய் மாறியிருந்த
வட ஆப்பிரிக்கா வரை பரவிவிட்டிருந்தது..
அநேகர் அங்கு கொல்லப்பட்டனர்..
அதில் பெர்ப்பெச்சுவா என்ற 26 வயது இளம் பெண்ணும் ஒருவர்..
அவள் கைகளில் பால் குடிக்கும் குழந்தை..
மினுஷியஸ் என்ற நீதிபதியின் முன் நிறுத்தப்படுகிறாள் பெர்ப்பெச்சுவா..
கைகளிலிருந்து கைக்குழந்தை பறிக்கப்பட..
காவல் கிடங்கில் தூக்கி எறியப்படுகிறாள்
அவள்..
வழக்கு விசாரணைக்கு வந்த போது..பெர்ப்பெச்சுவாவின் முறை வருகிறது..
திடீரென்று அவளது தகப்பன் குழந்தையோடு வந்து கெஞ்சுகிறார்..
"மகளே..வயதான என்னைப்பார்..
நீ பெற்ற இந்த சிசுவைப்
பார்,இயேசுவை விட்டு விடு"
ஸ்திரமாக மறுத்து விடுகிறாள் பெர்ப்பெச்சுவா..
நீதிபதி கேட்கிறார்..
"நீ ஒரு கிறிஸ்தவளா?"
ஆம்..நான் கிறிஸ்துவை விசுவாசிக்கும் ஒரு விசுவாசி.."
பதிலளிக்கிறாள்..
தீர்ப்பு எழுதப்படுகிறது..
"அடுத்த விடுமுறை நாளில் காட்டு விலங்குகளுக்கு இவள் இரையாக்கப்படட்டும்.."
விடுமுறை வருகிறது..
வழக்கம் போல் மக்கள் கூட்டம்..
வெற்றியின் பாடலோடு வருகிறாள் பெர்ப்பெச்சுவா..
முதலில் அவளும் அவள் சிநேசிதி ஃபெலிசிட்டாஸ்..
இருவரும் வலையில் கட்டப்பட்டு உடலில் ஆடையின்றி மைதானத்தில் இறக்கி விடப்படுகிறார்கள்..
ஆனால் கூட்டம் அதை எதிர்க்கவே..உள்ளே கொண்டு செல்லப்பட்டு மீண்டும் ஆடையோடு கொண்டு வரப்படுகிறாள்..
சீவிய கொம்புகளோடு பைத்தியம் பிடித்த காளை ஒன்று அவிழ்த்து விடப்படுகிறது..
முதலில் பெர்ப்பெச்சுவாவை சிறிது காயப்படுத்தின காளை..ஃபெலிசிட்டாசை தன் கொம்புகளால் குத்தி வீசுகிறது..
பலத்த காயம் பட்ட அவளைத் தன் மடியில் கிடத்திக் கொள்கிறாள் பெர்ப்பெச்சுவா..
மடியிலேயே பெலிசிட்டா மரித்துப் போக இருவரையும் தொடாமல் ஓடிவிடுகிறது காளை..
ஏமாந்து போன கூட்டம் கூச்சலிடுகிறது..
இதற்குள் gladiators என்று சொல்லப்படும் ஒருவரோடொருவர் சண்டையிட்டுக் குத்திக் கொல்லும் அடிமைகளில் ஒருவன் பெர்ப்பெச்சுவாவைக் கொல்ல அனுப்பப் படுகிறான்..
அனுபவமற்ற அவன் பல முறை தன் வாளால் அவளைக் குத்துகிறான்..
கடைசியில் பெர்ப்பெச்சுவா தானே அவனுக்கு உதவ..அங்கேயே விழுந்து மடிகிறாள் பெர்ப்பெச்சுவா..
=======================
ஆரம்ப கால இரத்தசாட்சிகள்
பொன் ஏணி
======================
தானும் தன் நான்கு நண்பர்களான ஃபெலிஸிட்டஸ்,
ரெவோக்கட்டஸ், ஸேச்சுரஸ் மற்றும் ஸெக்கண்டுலாஸ்
ஆகியோரோடு சிறையில் இருந்த நாட்களில் பெர்ப்பெச்சுவா எழுதி வைத்த அனுபவங்கள்..
---------------------------------------------
நாங்கள் சிறையில் அடைக்கப்பட்டிருந்த நாட்களில் என் தகப்பனார்..
நான் கிறிஸ்துவை மறுதலிக்கும்படி என்னை மிகவும் வற்புறுத்தினார்..
அது அவர் என் மேல் வைத்த அன்பினால் மட்டுமல்ல..பிசாசு என்னை விசுவாசத்திலிருந்து விலக வைக்கச் செய்யும் முயற்சி என்று நன்கு அறிந்திருந்தேன்..
அந்த நாட்களில் ஒரு நாள் ஜெயிலுக்கு வந்தவர் என் மேல் கோபமாய் எரிந்தார்..
அவரது வேதனையைக் காண விரும்பாத நான் சில நாட்கள் அவரை சந்திக்க விரும்பவில்லை..
சில நாட்களில் எங்கள் சபையைச் சேர்ந்த சிலர் எங்களைச் சந்திக்க ஜெயிலுக்கு வந்து அங்கேயே எங்களுக்கு ஞானஸ்நானம் கொடுத்தனர்..
அந்த நாட்களில் ஆவியானவர் என்னிடம் பேசியதெல்லாம்..
"சரீரத்தில் நீ படப்போகும் பாடுகளை சந்திக்கக் கர்த்தரிடத்தில் கிருபையைக் கேள்"
என்பதே..
அதன்பின் நாங்கள் அங்கிருந்து, இருண்ட டஞ்சனான பாதாள அறைக்கு மாற்றப்பட்டோம்..
சில மாதங்களே ஆன பால் மறவா என் மகனை என்னோடு அந்த டஞ்சனில் வைத்துக் கொள்ள நான் அனுமதிக்கப் பட்டேன்..
இருண்டு நாற்றம் எடுத்த அந்தப் பாதாள அறையின் நிலையை விவரிக்க முடியாது..
ஆனாலும் தேவ பிரசன்னத்தால் நிறைந்த அந்த இடம் எனக்குப் பரலோகமாய் இருந்தது..
ஒரு நாள் என் சகோதரன் என்னைச் சந்திக்க வந்தான்..
அதிக உணர்ச்சிவசப்பட்ட அவன் சொன்னான்..
"பெர்ப்பெச்சுவா..
கர்த்தரிடத்தில் ஒரு தரிசனத்தைக் கேள்..
மரணம் தான் இந்த சிறைவாசத்தின் முடிவா?"
அன்று இரவு நான் ஜெபத்தில் போராடினேன்..
கர்த்தர் சொப்பனத்தின் மூலம் பதில் கொடுத்தார்..
ஒரு மிகப் பெரிய ஏணி..பொன்னால் ஆனது..தரையிலிருந்து வானம் எட்ட..
அதின் இரண்டு பக்கங்களிலும் வாள்,முள்,மற்றும் கூரிய கம்பிகள் போன்ற பயங்கர இரும்பு ஆயுதங்கள் மாட்டி வைக்கப்பட்டிருக்கின்றன..
மனம் போனபடி இரு பக்கங்களையும் கவனிக்காமல் ஏறுபவர்கள் அவைகளால் வெட்டப்பட்டு கிழிக்கப்பட்டு கீழே விழுகிறார்கள்..
ஏணியின் கீழே ஏறும் முனையில் ஒரு பெரிய வலுசர்ப்பம் தன் வாலைச் சுழற்றி தன் வாயைத் திறந்து ஏணியில் ஏறுபவர்களை விழுங்க முயற்சிக்கிறது..
திடீரென்று என் நண்பன் ஸேச்சுரஸ் என்னைத் தாண்டி அந்த ஏணியில் ஏறுகிறான்..
பின்னோக்கிப் பாராமல் மிக வேகமாக ஏணியில் ஏறினவன் மேலே போய் சேர்ந்து விட்டான்..
மேலிருந்து என்னை நோக்கிச் சொல்கிறான்..
"பெர்ப்பெச்சுவா..நான் உனக்காகக் காத்திருக்கிறேன்..ஏறி வா..
ஆனா அந்த வலுசர்ப்பம் கடிச்சிராம பாத்துக்க.."
"ஸேச்சுரஸ்..இயேசுவின் நாமத்தினால நான் எதுக்கும் பயப்பட மாட்டேன்"என்றேன்..
இயேசுவின் நாமத்தினால நான் அந்தப் பாம்பை ஒரு மிதி மிதிக்க..அது சுருண்டு விழுந்தது..
மேலே ஏறிய நான் ஒரு அழகான தோட்டத்தை அடைந்தேன்..
அங்கே ஒரு மனிதன் சாதாரண மேய்ப்பனின் உடையில் நிற்கிறான்..
அவனைச் சுற்றி அநேகர் வெண் உடையில் நிற்கிறார்கள்..
ஆட்டின் வெண்ணையை என்னிடம் தந்த அந்த மேய்ப்பன்
"வா மகளே "என்கிறான்..
அந்த வெண்ணையை நான் என் வாயில் வைத்ததும்..
நின்று கொண்டிருந்த யாவரும் "ஆமென்"
என்கிறார்கள்..
இதற்குள் கனவு கலைந்து கண் விழித்துவிட்ட நான் என் வாய் முழுவதும்..
சொல்ல முடியாத இனிப்பை ருசிக்கிறேன்..
எனக்குப் புரிந்தது..இந்த உலகத்தில் என் நாட்கள் எண்ணப்பட்டு விட்டதென்று..
இதைத்தவிர இன்னும் வெளிப்படுத்தப்பட்ட மூன்று தரிசனங்கள் மூலம் பெர்ப்பெச்சுவா மற்றும் நண்பர்களின் முடிவு உறுதியாகிறது..
சிறையில் அவர்கள் வைக்கப்பட்டிருந்த மிக மோசமான நிலையில் ஸெக்கண்டுலாஸ்..இரத்த சாட்சியின் மகிமையான மரணம் எனக்குக் கிடைக்க வில்லையே என்ற
வருத்தத்தோடு பாதாளக் கிடங்குகளில் உயிரை விடுகிறான்..
ஸேச்சுரஸும் ரெவோக்கட்டசும் காட்டுப்புலியினால் கொல்லப்பட விட்டுவிடப்படுகிறார்கள்..
புலியால் தாக்கப்பட்ட ஸேச்சுரஸ்..தன்னை நடத்தி வந்த சிப்பாயைப் பார்த்து
"நான் உனக்கு ஏற்கனவே சொன்ன வார்த்தைகளையும் என் மரணத்தையும் மறந்து விடாதே"என்று சொல்லி விட்டு..
"உன் கையில் உள்ள மோதிரத்தைக் கழற்றிக் கொடு"என்று கேட்கிறான்..
தன் இரத்தம் தோய்ந்த விரல்களில் அந்த மோதிரத்தைப் போட்டு இரத்தம் தோய அதைக் கழற்றிக் கொடுத்தவன்..
"இதை என் நினைவாக வைத்துக் கொள்..என் ஜீவனின் முடிவு உன் ஜீவனின் துவக்கமாய் இருக்கட்டும்"என்று சொல்லி விட்டு அங்கேயே விழுந்து மரிக்கிறான்..
அடுத்து பெர்ப்பெச்சுவாவின் முறை வருகிறது..
கூடவே அவள் கண்ட கனவு அவள் கண்முன்னே வருகிறது..
ஸேச்சுரஸ் தனக்கு முன்னே பொன் ஏணியில் ஏறி பரலோகத்தில் சேர்ந்ததை நினைவு கூறுகிறாள்..
-----------------------------
தகப்பனே..
"கிறிஸ்துவின் அன்பின் அகலமும் நீளமும் ஆழமும் உயரமும் இன்னதென்று உணர்ந்து அறிவுக்கு எட்டாத அந்த அன்பை உணர்ந்து கொள்ள வல்லவர்களாக அனுக்கிரகம் பண்ணும்" என்று பவுல் வேண்டிக் கொண்டாரே..
அது இது தானோ?
எங்கள் புத்திக்கு எட்டாத அந்த அன்பு ஒரு மனிதனை இவ்வளவு தூரம் நெருக்கி ஏவுமோ?
ஆதி சபையின் இப்படிப்பட்ட பெர்ப்பெச்சுவா போன்ற சாட்சிகளின் அளவினால் இன்றைய எங்கள் சபைகள் அளக்கப்படுமானால்..
நிறுக்கப்படுமானால்..
நாங்கள் எங்கே நிற்போம் ஆண்டவரே?
பதில் இல்லை ஐயா!
மன்னியும்..மனமிரங்கும்..
ஆமென்.
அடைபட்ட அக்கினி
Pr. S. Romilton
9810646981
=======================
ஆரம்ப கால இரத்தசாட்சிகள்
Chapter 22
தியோடோரா - திதிமு
======================
அந்தியோக்கியா பட்டணம்..
நகரின் உயர்ந்த குடும்பத்தில் பிறந்த தியோடோரா..
வயது பதினாறு..
இயற்கையிலே மிக அழகான தியோடோரா..
விவாகம் செய்து கொள்ளாமல் கற்புள்ள கன்னிகையாக கிறிஸ்து என்னும் ஒரே புருஷனுக்காகத் தன்னையே நியமித்துக் கொள்கிறாள்..
அவளது தோற்றமும் சாட்சியும் வாழ்க்கையும் அவளைப் போன்ற அநேக வாலிபப் பெண்களை கிறிஸ்துவிடம் ஈர்க்கிறது..
இப்போது கிபி 304..
டயோக்ளீஷியன் மன்னனின் ஆட்சி..
அலெக்ஸாண்ட்ரியாவில் கண்ட இடமெல்லாம் ரோம தேவதைகளின் சிலைகள்..
நகரத்தில் சிலைக்கு வணங்காத சிலர் கைதாகின்றனர்..அதில் இளம் தியோடோராவும் அடக்கம்..ஜட்ஜ் ப்ரோக்குலஸ் முன் நிறுத்தப்படுகின்றனர்..
உயர் ஜாதியான தியோடோராவின் மனதை மாற்ற எவ்வளவோ முயற்சி செய்கிறான் அந்த ஜட்ஜ்..
முடியாமல் போகவே..
கடைசியாக சொல்கிறான்..
"மூன்று நாட்கள் தவணை..
முடிவை மாற்றிக் கொள்..இல்லாவிட்டால் விபச்சார விடுதியில் அடைக்கப்படுவாய்.."
தியோடோரா சொன்னாள்.."என் தேவன் அப்படிப்பட்ட இடத்திலிருந்தும் என்னைத் தப்புவிக்க வல்லவர்.."
மூன்று நாட்களுக்குப் பின் மீண்டும் கோர்ட்டுக்குக் கொண்டு வரப்படுகிறாள் தியோடோரா..
தன் மனதை மாற்றிக் கொள்ளாத அவளைக் கண்ட ஜட்ஜ் ப்ரோக்குலஸ்
அவளை விபச்சார விடுதியில் அடைக்கிறான்..
அன்றிரவு அந்த இடத்துக்கு மூன்று பேர் தீயநோக்கத்தோடு அவளுக்காகவே வருகின்றனர்..
மூவருக்குள்ளும் போட்டி..முதலில் நீயா..நானா?
இதற்குள் ரோமப் போர் வீர வாலிபன் ஒருவன் அவள் இருந்த அறைக்குள் நுழைகிறான்..அவனைக் கண்ட மூவரும் ஓடிவிடுகின்றனர்..
ரோமப் போர் வீரனைக் கண்ட தியோடோரா அறையின் மூலையில் நடுங்கிப் பதுங்குகிறாள்..
உள்ளே வந்தவன் சொல்கிறான்..
"தியோடோரா..பயப்படாதே என் பெயர் திதிமு..நானும் உன்னைப் போல விசுவாசி தான்..உன்னைக் காப்பாற்ற வந்தேன்..
ஒன்று செய்..என் யூனிஃபார்மை நீ போட்டுக் கொள்..உன் உடைகளை எனக்குக் கொடு..உனக்குப் பதிலாக நான் இங்கிருப்பேன்..நீ தப்பித்துக் கொள்.."
முதலில் தயங்கிய தியோடோரா..
யூனிஃபார்மில் ரோம வீரனாய் மாறி விபச்சார விடுதியிலிருந்து தப்பித்து விடுகிறாள்..
சற்று நேரத்தில் தெரிந்து விடுகிறது..திதிமு யாரென்று..
பிடிபட்ட திதிமுவின் தலை துண்டிக்கப்பட ஆணை பிறப்பிக்கப்படுகிறது..
கொலைக்களத்துக்கு கொண்டு செல்லப்படுகிறான் திதிமு..கேள்விப்பட்ட தியோடோரா ஓடி வருகிறாள்..
"நீயல்ல..உன் இடத்தில் நான் சாக வேண்டும்..என் சரீரத்தைக் கற்போடு பாதுகாக்க என் தேவன் உன்னை அனுப்பியது உண்மை தான்..
ஆனால் நான் உயிர் தப்பி ஓடவில்லை..என் இரத்த சாட்சி கிரீடத்தை நீ எடுத்துக் கொள்ள முடியாது திதிமு.."
ஜட்ஜ் பார்க்கிறான்..
தியோடோரா-திதிமு இருவரும் ஒரே இடத்தில் ஒரே நேரத்தில் தலை துண்டிக்கப் படப்படுகிறார்கள்..
--------------------------
தகப்பனே..
"உங்களைக் கற்புள்ள கன்னிகையாக கிறிஸ்து என்னும் ஒரே புருஷனுக்கு நியமித்தேன் "என்று பவுல் சொன்னாரே..
உலகத்தால் கறை படாதபடி தங்கள் உடலையும் உள்ளத்தையும் காத்துக் கொண்டு..
தங்களை பரிசுத்தமும் தேவனுக்குப் பிரியமுமான ஜீவ பலியாக ஒப்புக் கொடுத்த தியோடோராவும் திதிமுவும் எங்கள் சபைகளின் வாலிப உள்ளங்களுக்கு முன்மாதிரிகளாய் அமைவார்களாக!
காதலும் உலக அன்பும் அல்ல..
பரிசுத்த ஆவியினாலே தேவ அன்பு எங்கள் பிள்ளைகளின் இதயங்களில் ஊற்றப்படுவதாக!
எங்கள் பிள்ளைகளின் மேற்கத்திய கலாச்சாரத்துக்காகவும் சிகை..உடை அலங்காரங்களுக்காகவும் துக்கிக்கிறோம்..
கல்வாரி சிலுவை மறக்கப்பட்டுப் போயிற்றே!
சிலுவையைத் தாங்கள் கழுத்தில் அணியும் செயினில் அல்ல..தோளில் சுமக்கக் கிருபை தாரும்.. இரங்குவீராக!
ஆமென்.
=======================
ஆரம்ப கால இரத்தசாட்சிகள்
Chapter 23
திமோத்தி - மௌரா
==============================
ரோம காலனியான மௌரிஷியானா..
திமோத்தி அந்த நகரின் சபையின் இளம் போதகர்..
மௌராவும் திமோத்தியும் திருமணமாகி சில வாரங்களே ஆகியிருந்தன..
அதற்குள் மௌரிஷியானாவில் கிறிஸ்தவர்களுக்கு எதிரான உபத்திரவம் வெடிக்க..திமோத்தியும் மௌராவும் கைது செய்யப்படுகின்றனர்..
அந்த நகரின் கவர்னர் அரியேனுஸ் முன்பு நிறுத்தப்படுகிறான் திமோத்தி..
கவர்னர்:
"உன் வேத புத்தகங்களையும் நீ வைத்திருக்கும் எல்லாப் புத்தகங்களையும் எனக்கு முன் கொண்டு வந்து கொளுத்திப் போடு.."
திமோத்தி:
"இன்று எனக்குப் பிள்ளைகள் இருந்திருந்தால் அவர்களை உமக்கு முன் நிறுத்தி உயிரோடு கொளுத்திவிட ஒப்புக்கொடுப்பேனே தவிர என் வேதப்புத்தகங்களைக் கொளுத்த விட மாட்டேன் என்பதைப் புரிந்து கொள்ளும்!"
கோபம் கனலாய் எரிய.."இவனது இரண்டு கண்களையும் காய்ச்சப்பட்ட இரும்புக் கம்பிகளால் குத்திக் குருடாக்குங்கள்..
இவன் தன் புத்தகங்களை எப்படிப் படிக்கிறான் பார்ப்போம்" என்று அந்தக் கவர்னர் கட்டளையிட..
திமோத்தியின் இரு கண்களும் பழுக்கக் காய்ச்சப்பட்ட கம்பிகளால் குத்திக் குருடாக்கப் படுகின்றன..
சொல்ல முடியாத தன் வேதனையிலும் தன் உறுதியை விடாத திமோத்தியைக் கண்ட கவர்னர்..
அவனைக் கழுத்தில் கல்லைக் கட்டி தலை கீழாய்த் தொங்க விட்டு..வாயைத் துணியால் அடைத்து விடுகிறான்..
அப்படியாவது அவன் தன் முடிவை மாற்றிக் கொள்வான் என்று..
இந்தச் சித்ரவதைகளை எல்லாம் கண்கூடாய்க் காண வலுக்கட்டாயப் படுத்தப்படுகிறாள் மௌரா..
தன் கணவன் படும் பாடுகளைக் காண சகிக்காத அவள்
"உன் முடிவை மாற்றிக் கொள் திமோத்தி"என்று கெஞ்சுகிறாள்..
அவன் என்ன சொல்வான் என்று பார்க்க அவன் வாயில் அடைக்கப்பட்டிருந்த துணி எடுக்கப்பட்ட போது திமோத்தி சொல்கிறான்..
"மௌரா! நான் உன்னை நேசித்தது தவறோ என்று சந்தேகிக்கிறேன்..
என் நேசர் இயேசுவுக்காக ஜீவனைக் கொடுப்பதிலிருந்து என்னைப் பின்வாங்க வைக்க நீ முயற்சிக்காதே.."
அவனது தீர்மானம் அவளை உடைக்க..
அவள் தன்னையும் மனப்பூர்வமாய் கிறிஸ்துவுக்குக் கையளிக்கிறாள்..
அவளது முடிவைக் கண்ட கவர்னர் அரியேனுஸ்..ஒரு பெண் எப்படியெல்லாம் சித்ரவதை செய்யப்படக் கூடாதோ அப்படிப்பட்ட சித்ரவதைகளுக்கு அவளை ஆளாக்குகிறான்..
கடைசியாக
திமோத்தி-மௌரா இருவரும் ஒன்றாக அருகருகே சிலுவையில் அறையப்படுகின்றனர்..
-------------------------
தகப்பனே!
எங்களால் நம்ப முடியவில்லை ஐயா!
திமோத்தி-மௌரா போன்றவர்கள் கைகளைக் கடந்து வந்த கிறிஸ்தவம் அல்லவா இன்று எங்கள் கரங்களில் உள்ள சுவிசேஷம்?
இன்றைய இளம் தம்பதிகள் இவர்களை நம்ப மறுப்பார்களோ?
வாயடைத்து விக்கித்துப் போகிறோம் ஐயா!
இதைப் படிக்கிற, கேட்கிற இளம் சந்ததி..
தன்னை எதற்கும் தயார் படுத்திக் கொள்ள பக்குவப் படுத்திவிடுவீராக!
"இன்னும் அநேகக்காரியங்களை நான் உங்களுக்குச் சொல்ல வேண்டியதாயிருக்கிறது..
அவைகளை நீங்கள் இப்பொழுது தாங்க மாட்டீர்கள்" என்று இப்படிப்பட்ட காரியங்களைக் குறித்து தான் சொன்னீரோ?
(யோவான் 16:12)
எங்கள் சிந்தனைகள் இவைகளைப் போன்ற மிகத் தீவிரமான ஆவிக்குரிய காரியங்களிலிருந்து விலக்கும் லௌகீக கவலைகளிலும் நாட்டங்களிலும் அவைகள் சிக்கிக் கொள்ளாதபடிக் காத்துக் கொள்வீராக!
தலை தாழ்த்துகிறோம்!
ஆமென்
அடைபட்ட அக்கினி
Pr. S. Romilton
9810646981
=======================
ஆரம்ப கால இரத்தசாட்சிகள்
Chapter 24
பெஸில் & போட்டமியானா
======================
அலெக்ஸாண்ட்ரியாவில் அந்த நாட்களில் இருந்த பைபிள் காலேஜ் மாணவன் பெசில்..
தன் படிப்பை முடித்தவன் ரோம இராணுவத்தில் சேர்ந்தான்..
அலெக்ஸாண்ட்ரியாவின் கோர்ட் வளாகத்தையும் கோர்ட்டுக்குக் கொண்டு வரப்படுகிறவர்களையும் பாதுகாக்கும் வேலை அவனுக்கும் அவனது காவலர்களுக்கும் கொடுக்கப்பட்டிருந்தது..
அவனோடு இருந்தவர்களுக்கு எந்த உணர்ச்சியும் இல்லாதிருந்தும்..பெசிலுக்கோ..அங்கே கொண்டு வரப்படும் கிறிஸ்தவக் கைதிகளும் அவர்கள் படும் சித்ரவதைகளும் தாங்க முடியாததாய் இருந்தது..
ஒரு நாள் ஒரு தாயும் மகளும் கோர்ட்டுக்குக் கொண்டு வரப்படுகிறார்கள்..
தாய்:மார்சிலா
மகள்: போட்டமியானா
தாயைக் காட்டிலும் இளவயது மகள் மிக அதிகமான சித்ரவதைக்கு ஆளாக்கப்பட்டிருந்தாள்..
கோர்ட்டில் அவளுக்கு முன்பாக இரண்டு வாய்ப்புகள் கொடுக்கப்படுகிறது..
ஒன்று.. கிறிஸ்துவை மறுதலி அல்லது க்ளேடியேட்டர்ஸ் என்ற சண்டையிடும் அடிமைகள் கையில் கற்பு அழிக்கப்பட
கையளிக்கப்படுவாய்..
இரண்டிலிருந்தும் தப்பிக்க ஒரே வழி தான் அவளுக்குத் தென்பட்டது..
அவள் ஜட்ஜைப் பார்த்துச் சொன்னாள்.."இயேசுவை அல்ல..உன்னைப் போன்றவர்களை பிசாசாய் ஆக்கி வைத்திருக்கும் உன் செத்த தெய்வங்களை சபிப்பேன்.."
அங்கே நின்ற பெசிலைப் பார்த்து..
"கொண்டு போ இவளை..எரியும் தீக்குழியில் தூக்கிப்
போடு உடனே..!" என்றான் ஜட்ஜ்..
செய்வது அறியாமல் ஒரு நிமிடம் திகைத்து நின்ற பெசில்..அங்கிருந்த சூழ்நிலையைக் கண்டு அவளைக் கைத்தாங்கலாகப்
பரிவோடு..கூட்டத்தைத் தள்ளி விட்டு வெளியே நடத்திச் செல்கிறான்..
அவனது கரிசனையைக் கண்ட போட்டமியானா..
"உன் அன்புக்கு நன்றி! உன் தைரியத்தைக் கண்டு மெச்சுகிறேன்" என்கிறாள்.
"நானல்ல..உன் தைரியம் தான் என்னை அசைத்துவிட்டது.."என்ற பெசிலின் கண்களில் கண்ணீர் ததும்புகிறது..
போகும் வழியிலேயே போட்டமியானா சொல்கிறாள்..
"இன்று நான் என் நேசரோடு பரலோகத்தில் இளைப்பாறுவேன்..
என்னால் உன் அன்புக்கு ஈடாக எதுவும் செய்ய இயலாது.."
"இந்த சிறியரில் ஒருவனுக்கு எதைச் செய்கிறீர்களோ அதை எனக்கே செய்தீர்கள்" என்றாரே..அவரிடம் இன்று உனக்காக ஜெபிப்பேன்..
சிறிது நேரத்தில் போட்டமியானா
மரித்து விட..சற்று நேரத்தில் அவள் தாயும் கொலைக் களத்துக்குக் கொண்டு வரப்படுகிறாள்..
சில நாட்களுக்குப் பின்..பெசிலும் அவன் காவலர்களும் ஒரு உறுதிமொழி எடுத்துக் கொள்ளக் கட்டளையிடப் படுகிறார்கள்..
பெசில் மறுத்து விடுகிறான்..
கோர்ட்டில் ஆஜர் படுத்தப்பட்ட பெசில் அங்கு துணிந்து இயேசுவுக்காக சாட்சி சொல்கிறான்..
வாளால் வெட்டப்பட தீர்ப்பாகிறது..
தன் தண்டனையின் நாளுக்காக சிறையில் காத்திருந்த பெசிலை சந்திக்க உள்ளூர் சபையினர் சிலர் இரகசியமாக வருகின்றனர்..
அவன் சொல்கிறான்..
"போட்டமியானா இறந்து மூன்று நாட்கள் சென்று என் கனவில் நான் அவளைப் பார்க்கிறேன்..
அவள் கையில் ஒரு கிரீடம்..என் தலையில் அதை வைத்து..அவள் சொல்கிறாள்..
"பெசில்..நான் உனக்காக இயேசுவிடம் ஜெபித்தேன்..
நீயும் சீக்கிரமே இங்கு வருவாய் என்று உன்னைக்குறித்து அவர் எனக்குச் சொல்லியிருக்கிறார்..
நான் உனக்காக எதிர்பார்த்திருக்கிறேன்.."
இதைக் கேட்டு அவன் விசுவாசத்தைக் கண்ட மூப்பர்கள் அவனுக்கு அங்கு சிறையிலேயே ஞானஸ்நானம் கொடுக்கின்றனர்..
அடுத்த நாள் கொலைக் களத்தில் இயேசுவை மகிமைப்படுத்தினவனாய் தலை வெட்டப்படத் தன்னை மகிழ்ச்சியாய் ஒப்புக் கொடுக்கிறான் பெசில்..
------------------------------
தகப்பனே !
சிறு பிள்ளையைப் போல எங்களை அமரப் பண்ணி.. உமக்காக உயிர் விட்ட ஒவ்வொருவரையும் பற்றி ஒவ்வொரு நாளும் சொல்லிக் கொடுக்க நீர் எவ்வளவு கவனமாய் இருக்கிறீர் ஐயா!
இதை நாங்கள் தெரிந்துகொள்ள வேண்டுமென்பதில் நீர் எவ்வளவு அக்கறை உள்ளவராய் இருக்கிறீர்!
எங்கள் பிஸியான ஷெட்யூல்களுக்கு மத்தியிலும் இவைகளை வாசித்து, தியானித்து இதன் மூலம் உம் இருதயத்தைப் புரிந்து கொள்ளவும்..நீர் எங்களோடு பேச விரும்புவதைக் கேட்கவும் கிருபை தாரும்!
ஆமென்..
=======================
ஆரம்ப கால இரத்தசாட்சிகள்
Chapter 25
போலிகார்ப் (சிமிர்னா சபைப் போதகர்)
==========================
கி.பி.161..
மர்க்குஸ் அவுரேலியஸ் மன்னனின் நாட்கள்..
சிமிர்னா சபை..
அப்போஸ்தலன் யோவானால் அந்தச் சபைக்கு ஏற்கனவே வெளிப்படுத்தப்பட்ட வார்த்தைகள்..
"நீ படப் போகிற பாடுகளைக்குறித்து எவ்வளவும் பயப்படாதே..
பிசாசானவன் உங்களில் சிலரைக் காவலில் போடுவான்..பத்து நாள் உபத்திரவப் படுவீர்கள்..மரணபரியந்தம் உண்மையாயிரு.."
(வெளிப்படுத்தல் 2:10)
அந்தச் சபை படப் போகிற பாடுகளைக் குறித்த எவ்வளவு துல்லியமான தீர்க்கதரிசனம்!
சபை அசுர வேகத்தில் வளர்ச்சி கண்டு கொண்டிருந்த நேரம்..
உள்ளூர் பெருந்தலைகள்
நிம்மதி இழந்தனர்..
அப்போது சபையின் போதகர் போலிகார்ப்..
அப்.யோவானிடம் வளர்ந்தவர்..
ஒருநாள் சிமிர்னா கொதித்தது..சபையை நசுக்கத் தன் முழு அதிகாரத்தையும் அந்நகரின் கவர்னரே திருப்பிவிட..
போலீஸ்..போதகர் போலிகார்ப்பைத் தேட ஆரம்பித்தது..
தான் பிடிபடுவதற்கு மூன்று நாட்கள் முன்பு போலிகார்ப் ஒரு கனவு கண்டார்..
"தூங்கிக் கொண்டிருக்கும் போது அவரது தலையணை தீப்பற்றி எரிவது போல.."
விழித்தெழுந்தவர்..
தன்னோடு இருந்தவர்களிடம் சொன்னார்..
"கிறிஸ்துவுக்காக நான் உயிரோடு கொளுத்தப்படப் போகும் நாள் வந்து விட்டது.."
ஒருநாள் மாலை அவரது வாசல் கதவு தட்டப்படுகிறது..போலீசை வரவேற்க எழுந்து செல்கிறார் போலிகார்ப்..
அவர்களை அமர வைத்து உணவு பரிமாறச் செய்கிறார்..அவர் கேட்டுக் கொண்டபடியே அவருக்குத் தனிமையில் ஜெபிக்க ஒருமணி நேரம் கிடைக்கிறது..
ஜெபித்து முடித்ததும் தன்னைக் கைது செய்ய வந்தவர்களுடன் மிகுந்த மகிழ்ச்சியுடன் எழுந்து செல்கிறார்..வந்தவர்கள் தங்களுக்காக ஜெபித்த
வயதான தேவ மனிதரை
வேதனையுடன் கொண்டு செல்கின்றனர்..
அவர் காவலர்களுடன் ஸ்டேடியத்தை அடைந்ததும்..
வானத்திலிருந்து ஒரு குரல் கேட்கிறது..
"போலிகார்ப்..
புருஷனைப் போல் இடைக்கட்டிக் கொள்..
தைரியமாய் நில்..
கலங்காதே.."
ஒருவரையும் காணாவிட்டாலும் அந்தக் குரலை அநேகர் கேட்டனர்..
நீதிபதிக்கு முன் கொண்டு வரப்பட்ட போலிகார்ப்பைப் பார்த்து நீதிபதி சொன்னார்
"உன் வயதைப் பார்..
கிறிஸ்துவை மறுதலி..நீ ஏன் எரிக்கப்பட வேண்டும்?"
தேவமனிதன் பதிலளித்தார்
"இதோ..86 வருடங்கள்
என் ஆண்டவரை நான் சேவித்திருக்கிறேன்..
ஒரு நாளும் அவர் எனக்கு நன்மையே அன்றி தீமை செய்ததே இல்லை..என்னை இரட்சித்த ராஜனை நான் சபித்து மறுதலிப்பது எப்படி?"
காட்டு மிருகங்களாலும் எரியும் அக்கினியினாலும் மிரட்டப்பட்ட போலிகார்ப் சொன்னார்..
"சிறிது நேரம் எரிந்து அணைந்து போகும் அக்கினியைக் காட்டி நீங்கள் என்னை மிரட்டலாம்..
ஆனால் நித்திய நித்தியமாய் எரியும் அவியாத நியாயத்தீர்ப்பின் அக்கினிக்கு முன்பாக என்ன செய்வீர்கள்?"
எடுத்துச் செல்லுங்கள் என்னை..தாமதிக்காமல்..என்றார்..
கட்டப்பட்ட போலிகார்ப்பைச் சுற்றிக் கட்டைகள் அடுக்கப்பட்டு நெருப்பு மூட்டப்பட்டது..பற்றிய நெருப்பு அவரைத் தொடவில்லை..
அவரைச் சுற்றி நெருப்பு வளையம் நின்றதே அன்றி
அக்கினி ஜூவாலை அவரைப் பற்றவில்லை..
எரிச்சலடைந்த கூட்டம் அருகில் நின்ற காவலனைப் பார்த்துச் சொன்னது..
"வாளை உருவிக் கொன்று போடு அவனை.."
வாளை ஓங்கி அவன் குத்த..பீறிட்டு வந்த இரத்தத்தால் நெருப்பு அணைந்து போனது என்கிறது வரலாறு..
ஆத்திரம் அடைந்த கும்பல் அவர் மேல் கட்டைகளைப் போட்டு எரித்து சாம்பலாக்கியது..
ஆனால் வயதான போதகரின் மரணம்..நகரில் ஒரு பெரிய அசைவை உண்டாக்க..அதோடு நின்று போனது உபத்திரவம்..
சிமிர்னா சபை மீண்டும் வளர ஆரம்பிக்கிறது..
-----------------------------
கர்த்தராகிய இயேசுவே..
சரீரத்தைக் கொலை செய்கிறவர்களுக்கு அல்ல..அதற்குப் பின்பு நரகத்தில் தள்ள வல்லமையுள்ளவருக்கே பயப்படுங்கள்" என்றீரே..
தகப்பனே..உமக்குப் பயப்படும் பயத்தோடு வாழவும்..எங்களை எதிர்க்கும் சக்திகளை பயமின்றி நேருக்கு நேர் எதிர் கொள்ளவும் கிருபை தாரும்..
ஆமென்.
அடைபட்ட அக்கினி
Pr. S. Romilton
9810646981