==============
ஓர் குட்டிக் கதை
ஆராய்ந்து பாருங்கள்
==============
விசய நகரப் பேரரசு தென்னாடு முழுவதும் பரவி இருந்தது. விசய நகர அரசர்களுள் புகழ் பெற்ற வர் கிருஷ்ண தேவராயர். இவர் நீதி தவறாமல் நல்லாட்சி செய்தார். இவர் ஆட்சியில் மக்கள் குறைகள் இல்லாமல் இன்பமாக வாழ்ந்தார்கள்.
கிருஷ்ண தேவராயருடைய முதல் அமைச்சர் பெயர் அப்பாஜி. அப்பாஜி கூர்மையான நுண்ணறிவு மிகுந்தவர்.
ஒரு நாள் அரசரும் அமைச்சருமாக மாறுவேடம் அணிந்து தங்கள் ஆட்சிக்கு உட்பட்ட இடங்களைச் சுற்றிப் பார்த்துக் கொண்டு வந்தார்கள். அந்தக் காலத்தில் அரசர்கள் தங்கள் குடிமக்களின் நிலைமையை நேரில் கண்டறிவதற்காக இவ்வாறு சுற்றுப்பயணம் செய்வது வழக்கம்.
அரசரும் அமைச்சரும் பம்பை ஆற்றங்கரை ஓரமாக நடந்து சென்றனர். அந்த ஆற்றங்கரையை ஒட்டியிருந்த வயல்கள் எல்லாம் – நன்றாக விளைந்து பச்சைப்பசேல் என்றிருந்தன. அவற்றுள் அறுவடை ஆகிக் காய்ந்து கிடந்த ஒரு வயலை உழவன் ஒருவன் உழுது கொண்டிருந்தான்.
அவ்வழியே மூன்று பெண்கள் இடுப்பில் நீர் நிறைந்த குடங்களுடன் சென்று கொண்டிருந்தனர். அவர்கள் உழவன் உழுது கொண்டிருந்த நிலத்தைப் பார்த்துக் கொண்டே போனார்கள். அவர்களுள் ஒருத்தி, “நீலா, உழவன். உழுகின்றானே, இந்த நிலம் முகத்துக்கு ஆகும்” என்று கூறினாள்.
“தவறு தவறு கமலா. இந்த நிலம் வாய்க்கு ஆகும்” என்று நீலா கூறினாள். மூன்றாவது பெண்ணாகிய சுந்தரி, “ அல்ல அல்ல. இந்த நிலம் பிள்ளைக்குத்தான் ஆகும். – நீங்கள் இருவரும் கூறியது சரி அல்ல” என்றாள்.
இவ்வாறு அவர்கள் மூவரும் அந்த நிலத்தைப் பற்றிப் பேசிக் கொண்டே சென்றனர். அவர்கள் மூவரும் கூறியவைகளை அரசரும் அமைச்சரும் கேட்ட வண்ணம் அவர்களுக்குப் பின்னால் வந்து கொண்டிருந்தனர்.
அந்தப் பெண்கள் கூறியவை, அரசருக்கு விளங்கவில்லை. அரசர் அமைச்சரைப் பார்த்து, “அமைச்சரே, இந்தப் பெண்கள் ஒரு நிலத்தை முகத்துக்காகும், வாய்க்காகும், பிள்ளைக்காகும் என்று கூறிக் கொண்டு போகிறார்களே, இவர்கள் கூறியதன் பொருள் என்ன?” என்று கேட்டார்.
அமைச்சர் அரசரைப் பார்த்து, “அரசே, முகத்துக்கு ஆகும் என்று கூறினளே ஒருத்தி, அதன் பொருள் என்ன வென்றால், முகத்தில் பூசும் மஞ்சள் பயிரிடுவதற்குத் தகுதியான நிலம் என்பதாகும். மற்றொருத்தி வாய்க்கு ஆகும் என்றாளே, அதன் பொருள் வெற்றிலைக் கொடி பயிரிடுவதற்குத் தகுதியான நிலம் என்பதாகும். இன்னொருத்தி பிள்ளைக்கு ஆகும் என்றாளே, அதன் பொருள் தென்னம் பிள்ளை வைத்து வளர்ப்பதற்கு ஏற்ற நிலம் என்பதாகும்” என்று கூறினார்.
இந்த விளக்கத்தைக் கேட்ட அரசர் பெரும் வியப்பு அடைந்தார்; தம் அமைச்சர் கூறியது சரி தானா என்று தெரிந்து கொள்ள விரும்பினார் ; தமக்கு முன்னால் சென்று கொண்டிருந்த பெண்களை நிறுத்தி, அவர்கள் கூறியதற்கு விளக்கம் கூறுமாறு கேட்டார். அவர்கள், அமைச்சர் சொன்னதைப் போலவே கூறினர். அரசர் தம் அமைச்சரின் கூர்மையான அறிவைப் புகழ்ந்து பாராட்டினார்.
என் அன்பு வாசகர்களே,
எந்தவொரு காரியத்தையும் உய்த்து ஆராய்ந்து அதன் பின்னரே இறுதி முடிவு எடுக்க வேண்டும். மாத்திரமல்ல இரண்டு அல்லது மூன்று நபர்களிடமிருந்து ஒரே பதில் கிடைக்கப்படுமாயின் அது தான் உண்மையான காரியம்.
இன்றைய கதையில் அரசரும் அதைதான் செய்தார். தான் அறிந்துக்கொண்ட காரியம் உண்மைதானா என்பதை அவன் உறுதிப்படுத்திக்கொண்டான். ஆம் நாமும் அதைப்போல நாம் கேள்விப்படுகின்ற காரியங்களின் உண்மைத்தன்மையை உணர்ந்த பின்னரே அதை நம்ப வேண்டும்.
வேதாகமத்தில் சிம்சோனின் வரலாறு நாம் நன்றாய் அறிந்ததே. பெலிஸ்தியர் அவனின் பெல்ம் எதிலிருக்கிறது என்று அறிய விரும்பினர். அதனால் சிம்சோன் சொன்ன ஒவ்வொரு காரியத்தையும் அவர்கள் தளராது செய்தார்கள். ஏனெனில் அவன் சொல்வது உண்மைதானா?? என்பதை அறிய விரும்பினர். இறுதியில் அவனின் உண்மையான பெலத்தை கண்டுபிடித்த பின்னர்தான் அவனை அவர்களால் மேற்கொள்ள முடிந்தது.
பெலிஸ்தியர்கள் சிம்சோன் சொன்ன முதாலாம் காரியத்தை இரண்டு அல்லது மூன்று நபர்களிடம் சென்று விசாரித்து உறுதிபடுத்தியிருந்தால், முதல் முறையே பெலிஸ்தியர்களால் சிம்சோனை மேற்கொண்டிருக்க முடியும். ஆனால் அவர்களோ, அவனை பிடித்தாக வேண்டும் என்ற முனைப்போடு இருந்ததால் விசாரிக்க தவறி விட்டனர். அதன் விளைவாக அநேக காரியங்களை பெலிஸ்தியர்கள் இழந்தனர்.
To Get Daily Story in what's app Contact +918148663456
நாமோ அப்படியல்ல நமக்கு சொல்லப்படுகின்ற காரியத்தின் உண்மைத்தன்மையை அறிந்த பின்னரே அதை உறுதிப்படுத்த வேண்டும். வேதமும் அதைதான் சொல்கிறது,
2 கொரிந்தியர் 13:1
இந்த மூன்றாந்தரம் நான் உங்களிடத்திற்கு வருகிறேன்; *சகல காரியங்களும் இரண்டுமூன்று சாட்சிகளுடைய வாக்கினால் நிலைவரப்படும்.
உலகப்பிரகாரமான காரியம் மட்டுமல்ல ஆவிக்குரிய காரியமும் இரண்டு அல்லது மூன்று நபர்களிடம் விசாரித்த பின்னரே நாம் உறுதிசெய்ய வேண்டும். அப்பொழுது தான் எந்தவொரு காரியத்திலும் நாம் வெற்றி பெற முடியும்.
செப்பனியா 2:2
நீங்கள் உங்களை உய்த்து ஆராய்ந்து சோதியுங்கள்.
எனவே எல்லாவற்றையும் உய்த்து ஆராய்ந்து சோதித்து அறிந்து ஜெயமான வாழ்க்கை வாழ்வோம், பிறரையும் ஜெயமான வாழ்க்கை வாழ வழிவகுப்போம்.
நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்!!!!
===========
ஓர் குட்டிக் கதை
==========
கர்த்தருடைய பெரிதான நாமம் மகிமைப்படுவதாக..
ஆண்டவரும் உலக இரட்சகருமாகிய இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் அன்பு நண்பா்கள் அனைவருக்கும், அன்புடன் இனிய காலை வணக்கம் !! இந்தநாள் உங்களுக்கு நல்ல நாளாய் அமைவதாக!!!
சிந்திக்க வைக்கும் குட்டிக்கதையுடன் உங்களை சந்திப்பதில் மகிழ்ச்சியடைகிறேன்.!!!
அரண்மனை
===========
தலை குனிந்து எதையோ ஆழமாய் சிந்தித்து கொண்டிருந்த விஸ்வகர்மா தயானந்தன் டக்..டக்…என குதிரை அருகே வந்து நின்ற சத்தம் கேட்டு தலை நிமிர்ந்தார். குதிரையில் இருந்து இறங்கிய வீரன் அவரை வணங்கி விட்டு நமது அரசர் இன்று மாலை உங்களை சந்திக்க வருகிறார்.அப்படியே நீங்கள் கட்டி முடிக்கவுள்ள அரண்மனையையும் பார்க்க விரும்புகிறார். சொல்லி விட்டு நிறுத்தியவனை நல்லது நீ போகலாம்..அடுத்த நிமிடம் அந்த வீரன் குதிரை ஏறி காற்றாய் பறக்க ஆரம்பித்தான்.
தயானந்த் தன் பின்புறம் அழகோவியமாய் முடிக்கும் தறுவாயில் இருந்த அந்த அரண்மனையை புன்னகையுடன் பார்த்தார்.”அற்புத மாளிகையே என் திறமையை இந்த உலகுக்கு பறைசாற்ற வந்திருக்கிறாய், என்பதை வரும் மன்னன் வாயால் கேட்கப்போகிறேன்.
அப்பொழுது நீ வெட்கப்பட்டு நிற்கப்போகிறாய்.வாய் விட்டு சொன்னவர் மீண்டும் தன் அருகில் யாரோ நிற்பதை உணர்ந்தவர் திரும்பி பார்த்தார். அவரது உதவியாளன் சச்சிதான்ந்தன் நின்று கொண்டிருந்தான்.
ஐயா மன்னர் வரப்போகிறாராரா?
ஆம்.சச்ச்சிதான்ந்த்..இன்று மாலை வருவதாக சொல்லி அனுப்பி இருக்கிறார்.வந்து அரண்மனையை பார்வையிடப்போகிறாராம்.
அவர் நிச்சயம் நீங்கள் உருவாக்கிய இந்த அரண்மனையை கண்டு பிரமித்து விடப்போகிறார்.
நிச்சயமாய்.. அனேகமாக அடுத்த மாதம் முடிவதற்குள் அவர் குடி புக நினைத்தாலும் நினைப்பார். சரி நீ என்ன செய்கிறாய் என்றால் உள்ளே சென்று நமது ஆட்களிடம் இந்த விவரத்தை தெரிவித்து விடு. முடிக்க வேண்டி இருக்கும் வேலைகளை முடித்து விட சொல்.
அவர் வரும்போது எந்த வேலைகளையும் செய்து கொண்டிருக்க வேண்டாம். புரிந்த்தா?
அப்படியே செய்கிறேன் ஐயா. அங்கிருந்து நகர்ந்தான் சச்சிதான்ந்த்.
மாலை மன்னர் பூபதி மகராஜ் வந்தவர் அரண்மனை வாயிலில் நின்றவர் தன் கண்களையே நம்ப முடியாமல் பார்த்துக்கொண்டிருந்தார்..
அற்புதம் அற்புதம் தயான்ந்த., உங்களின் கை வண்ண்மே வண்ணம். இந்த பூவுலகிலே இது வரை யாரும் பார்த்திருக்காக சிருஷ்டியை உருவாக்கி இருக்கிறீர்கள். இந்த மாளிகையின்
வனப்பு என்னை மதி மயங்க செய்கிறது. இனி எந்த நாட்டு மன்னர்களும், விருந்தினர்களும் வந்தாலும் இந்த மாளிகையில்தான் தங்குவர். அவர்கள் எல்லோரும் மதிமயங்கட்டும் இந்த மாளிகையை பார்த்து. சொல்லி விட்டு ஆன்ந்தமாய் சிரித்தார் மகராஜா.
நன்றி மன்னா, நீங்கள் அடுத்த மாத இறுதிக்குள் இங்கு குடி வந்து விடலாம்.
நீங்கள் எப்பொழுது சொன்னாலும் ஓடி வந்து விடுவேன்.உங்களுக்கு என்ன கைமாறு செய்வேன் என்று யோசனை செய்து கொண்டுள்ளேன்.
மன்னா உங்களது அன்பு ஒன்றே போதும்.
இல்லை விஸ்வகர்மா, நான் ஒத்துக்கொள்ள மாட்டேன். ஒரு நிமிடம் உன் கண்களில் இந்த மாளிகையை பார்க்காமல் என்ன்னை போல சாதாரண மக்களின் கண்களாக நினைத்து இந்த மாளிகையை பார்..
வாயிலில் உயிரோடு நிற்பது போல் தோற்ற்மளிக்கும் இரு யானைகளும், அதனை ஒட்டி பளிங்கு போல தோற்றமளிக்கும் முகப்புக்களும் உள்ளே பார்த்தால் இயற்கை அன்னை வந்து உள்ளே வந்து விட்டாளோ என்ற அமைப்புடன் இருக்கும் சுவர்களும், என்னால் இந்த அழகின் வேதனையை அனுபவிக்க அனுபவிக்க ஆசை அடங்கவில்லை.
மன்னா உங்கள் ரசனை என்னை மெய்சிலிர்க்க வைக்கிறது. போதும் மன்னா நான் ஒரு கலைஞன், உங்களின் அன்பு என்னை உணர்ச்சிக்கடலில் ஆழ்த்தி விடுகிறது. சர் விஸ்வகர்மா..நான் விடை பெறுகிறேன். அடுத்த முறை இங்கு குடிவருவது போலத்தான் வருவேன். அது மட்டுமல்ல இந்த அரண்மனையை சுற்றித்தான் இனி நம் அனைத்து அலுவல்களும் நடைபெற வேண்டும் என்று உத்தரவு போடுகிறேன்.
நல்லது மன்னா..விடை பெற்றார் மகராஜா.
மன்னர் வந்து சென்ற பின் இரண்டு நாட்கள் கழித்து வந்த மந்திரியார், தயான்ந்த் உடன் இந்த அரண்மனையை சுற்றிப்பார்த்து, அற்புதமாக உருவாக்கியுள்ளீர்கள். என் கண்களையே நம்ப முடியவில்லை.இப்படி ஒரு மாளிகையை எழுப்ப இனி அடுத்த விஸ்வகர்மா எப்பொழுது தோன்றுவாரோ?
மந்திரியாரே உங்கள் அன்புக்கு நன்றி..
நான் ஒரு யோசனை சொல்லட்டுமா விஸ்வகர்மா அவர்களே
சொல்லுங்கள் மந்திரியாரே..
நீங்கள் வெளியூர்களுக்கு எல்லாம் செல்ல வேண்டும், உங்கள் பெயர் உலகம் முழுக்க பரவ வேண்டும் என்று விரும்புகிறேன்.
நன்றி மந்திரியாரே ! நான் இதை பற்றி ஆலோசிக்கிறேன்.
மந்திரியார் விடை பெற்று சென்றவுடன், யோசனையுடன் நின்று கொண்டிருந்தார் விஸ்வகர்மா.
அன்று அரண்மனை முழுவதும் அன்று மலர்ந்த மலர்களால் அலங்கரிக்கப்பட்டு கோலாகலாமாய் இருந்தது. வந்திருந்த அனைவரும் அந்த அரண்மனையின் அழகில மயங்கி நின்று விட்டனர்.
பூபதி மகராஜா தன் பரிவாரங்களுடன் வந்தவர்களை வரவேற்று உபசரித்து கொண்டிருந்தார். தன் தளபதியின் காதில் ஏதோ சொல்ல அவரும் தலையாட்டி விட்டு வாசலுக்கு சென்று நின்று கொண்டார்.
வாசலில் தன் உதவியாளனுடன் வந்த விஸ்வகர்மா தயான்ந்துவை இரு கரம் கூப்பி வரவேற்றான் தளபதி. வரவேற்பை ஏற்றுக்கொண்டு தலை குனிந்த விஸ்வகர்மா தயான்ந்த்,
நிமிர்ந்து தான் கட்டி முடித்த அரண்மனையை கண் குளிர கண்டார். அதன் வரவேற்புக்காக அவர் அமைத்திருந்த யானை சிலையை தடவி பார்த்தார்.இரு யானை சிலைகளையும் ஆசை தீர தடவிக்கொண்டிருந்தவரை தளபதி தங்களை மன்னர் மரியாதையுடன் அழைத்து வர சொல்லி இருக்கிறார். நல்லது வாருங்கள் உள்ளே செல்லுமுன் உதவியாளரிடம் திரும்பி நான்
நமது இல்லத்தின் அருகில் இருந்த கோயிலில் நமது பொருட்களை வைத்து விட்டு வந்து விட்டேன்.நீ தயவு செய்து அதை எடுத்து வந்து விடு என்று உத்தரவு இட்டார்.
தளபதி நீங்கள் செல்ல வேண்டாம் என் வீர்ர்களை அனுப்புகிறேன், எங்கு என்று மட்டும் சொல்லுங்கள்.
இல்லை தளபதியாரே, பூஜை செய்த அந்த பொருட்களை இன்னொரு விஸ்வகர்மாதான் தொட வேண்டும். ஆகவே அவர் செல்ல அனுமதி கொடுங்கள்.
சரி சீக்கிரமாய் சென்று எடுத்து வாருங்கள் தளபதி சொல்லி தயான்ந்தை மட்டும் உள்ளே அழைத்து சென்றான்.
வாருங்கள் விஸ்வகர்மா அவர்களே, பூஜைக்கு நேரமாகி விட்டது. அந்த அறையை பூஜைக்கு தேர்ந்தெடுத்து உள்ளோம். நீங்கள் சென்று முதல் ஆரத்தியை காட்டுங்கள், தளபதியாரே அவரை அழைத்து செல்லுங்கள்.
அந்த அறைக்குள் நுழைந்து அங்கு வைத்திருந்த சிலையை குனிந்து வணங்கிக்கொண்டிருந்த விஸ்வகர்மாவை அருகில் இருந்த தளபதி தனது வாளால் அவர்து தலையை சீவினான்.
விஸ்வகர்மாவின் தலை தனியாக சென்று உருண்டது. உடலில் இருந்து இரத்தம் பீச்சியடித்து
அந்த அறை முழுவதும் வழிந்தது.
சிறிது நேரம் அவர் உடல் துடிப்பதை பார்த்துக்கொண்டிருந்த தளபதி மன்னர் அருகில் சென்று அவரது காதில் சொல்ல அவர் முகம் மெல்ல புன்னகை புரிந்தது. நல்ல காரியம் செய்தாய்,
இனி அவன் இது போல எந்த காலத்திலும் இப்படிப்பட்ட அரண்மனையை கட்டக்கூடாது.
சொல்லி விட்டு சிரித்தான்.
அதன் பின் கோலாகலமாக அந்த விழா நடந்து கொண்டிருந்தது. நான்கு மணி நேரம் கழிந்து அந்த அரண்மனை அப்படியே சரிந்து விழுந்து மன்னர் உட்பட அங்கிருந்த அத்தனை பேரும் மண்ணோடு மண்ணாக சமாதியாகிவிட்டனர்.
ஓரிரு நாட்கள் கழிந்தபின் மந்திரியாரிடம் சொல்லிக்கொண்டிருந்தான் உதவியாளன். ஐயா அவருக்கு தளபதியே தன்னை வரவேற்க நின்று கொண்டிருப்பதை கண்டவுடன் சந்தேகம் தோன்றி விட்டது. தான் எப்படியும் உயிர் பிழைக்க முடியாது என்பதை உணர்ந்தவர் என்னை காப்பாற்ற அங்கிருந்து அப்புறப்படுத்தி விட்டார்.
அது சரி, மாளிகை எப்படி தரை மட்டமானது.
ஐயா, நாங்கள் கலைஞர்கள்தான், ஆனால் சூட்சும்மானவர்கள். அன்று நீங்கள் ஒரு வார்த்தை அவரிடம் சொன்னது அவர் மனதில் பொறி பறந்தது, அதாவது வெளியூர் சென்று விடு என்று சொன்னதும் அவருக்கு சந்தேகம் வந்து விட்டது.
நாங்கள் எப்பொழுதும் ஒரு கட்டிடத்தை முடிக்கும்பொழுது அதனுடைய முடிச்சாய் ஒரு இடத்தை தேர்ந்தெடுத்து அதனுள் அமைத்து விடுவோம். எவ்வளவு பெரிய கட்டிடமாய் இருந்தாலும் அங்கிருந்த ஒரு கல்லை மாற்றி வைத்தால் அந்த கட்டிடமே காணாமல் போய் விடும்.அதனை வாயிலில் நின்றிருந்த இரு யானைகளிலும் வைத்திருந்தோம். இவர் உள்ளே செல்லுமுன் அந்த யானைகளை தடவுவதாக தளபதி நினைத்தான். இல்லை, அந்த சூட்சுமத்தை அவர் செய்து கொண்டிருந்தார்.
அதாவது அந்த இரு யானைகளும் இத்தனை நாழிகைக்குள் அவரே திரும்பி வந்து அந்த சூட்சுமத்தை சரி செய்து விட வேண்டும். இல்லாவிட்டால் அது அந்த அரண்மனையின் முடிச்சுக்களை அவிழ்க்க ஆரம்பித்து விடும்.
அவரைத்தான் அங்கேயே சமாதி ஆக்கி விட்டார்களே,எப்படி வந்து சரி செய்திருக்க முடியும். அந்த யானை சிலைகள் தன்னுடைய வேலையை காண்பித்து விட்டது.
மந்திரி “எனக்கு இவர்கள் திட்டம் புரிந்ததனால் விஸ்வகர்மாவிடம் சொல்லாமல் சொன்னேண். ஆனால் விதி யாரை விட்டது என பெருமூச்சு விட்டார்.
என் அன்பு வாசகர்களே,
இந்த ராஜாவைப் போலத்தான் அநேகர் இன்று வாழ்ந்து வருகின்றனர். தற்பெருமை உடையவர்களாய் வாழ்ந்து இறுதியில் தங்கள் வாழ்க்கையை தாங்களே கெடுத்துக் கொள்கிறார்கள்.
To Get Daily Story Contact +917904957814
மற்றவர்களால் எவ்வளவு புகழ், பணம் சம்பாதிக்க முடியுமோ சம்பாதித்து விட்டு அவர்களின் தேவை முடிந்ததும் குழம்பிலிருந்து கறிவேப்பிலையை தூக்கி வீசுவதை போல வெளியே வீசி எறிகின்றனர். பிறரின் உழைப்பை உதாசீனப்படுத்தி நாம் நன்றாக வாழ வேண்டும் என்று நினைத்தால் ரொம்ப நாட்கள் அவ்வாறு வாழ முடியாது. பிறரின் உழைப்பிற்கேற்ற ஊதியத்தை கொடுத்து அவர்களை சந்தோஷப்படுத்தினால் தான் நாமும் சந்தோஷமாய் வாழ முடியும்.
எசேக்கியா ராஜா தன் நாமம் விளங்க வேண்டும் அரண்மனையையும், பொக்கிஷ சாலை என எல்லாவற்றையும் பாபிலோனின் ராஜாவுக்கு காண்பித்தான். ஆனால் அதற்கு கிடைத்த பிரதிபலன் என்ன என்பதை வேதம் இவ்வாறு கூறுகிறது,
2 இராஜாக்கள் 20:17,18
17. இதோ நாட்கள் வரும், அப்பொழுது உமது வீட்டில் உள்ளதிலும், உமது பிதாக்கள் இந்நாள்வரைக்கும் சேர்த்ததிலும் ஒன்றும் மீதியாக வைக்கப்படாமல் எல்லாம் பாபிலோனுக்குக் கொண்டுபோகப்படும்.
18. நீர் பெறப்போகிற உமது சந்தானமாகிய உமது குமாரர்களிலும் சிலர் பாபிலோன் அரமனையிலே அரமனை வேலைக்காரராயிருப்பார்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார் என்றான்.
எனவே நாம் உழைப்பதாயிருந்தாலும், நமக்காக மற்றவர்கள் உழைப்பதாயிருந்தாலும் ஒருபோதும் விருதவாய் போகாதபடி காத்துக்கொண்டால் எந்நாளும் ஆசீர்வதிக்கப்பட்ட சந்ததியாயிருப்போம்.
ஏசாயா 65:23
அவர்கள் விருதாவாக உழைப்பதில்லை, அவர்கள் துன்பமுண்டாகப் பிள்ளைகளைப் பெறுவதுமில்லை, அவர்களும், அவர்களோடேகூட அவர்கள் சந்தானமும் கர்த்தராலே ஆசீர்வதிக்கப்பட்ட சந்ததியாயிருப்பார்கள்.
நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்!!!
=============
ஓர் குட்டிக் கதை
கோழைத்தனம்
============
வேலைக்கு புறப்படும் சமயம் .வெளியே ஒருவர் வந்து நின்றார் .சார் ..சார் வெளியே வந்து பார்த்தேன் பக்கத்து தெரு சதாசிவம் .
வாங்க வாங்க சார் என்ன காலங்காத்தால .
ஒன்னுமில்ல நம்ம வீட்டு பக்கத்துல இருக்கும் ரங்கசாமி ராத்திரி ரெண்டு மணி சுமாருக்கு போயிட்டாரு .அதான் சொல்லலாம்னு வந்தேன்.
சரி முன்னால போங்க .இதோ வந்துடுறேன் என்று சொல்லி விட்டு வீட்டில் போட்டுக்கொடுத்த காப்பி தண்ணியை வாயில் ஊற்றிக் கொண்டு வெளியே வந்து செருப்பை மாட்டிக் கொண்டு புறப்பட்டேன் .
ரங்கசாமி அவ்வளவு ஒன்றும் பழக்கமில்லை. ஏதோ மில்லில் வேலை செய்பவர் என்று நினைக்கிறேன் .கோயில் நன்கொடை குடிசை நன்கொடை என்று வருவார் .இரண்டொரு முறை பார்த்திருக்கிறேன். எனது தெருவிற்கு அடுத்தத்தெருவில் இருக்கிறார்.
வீட்டுக்கு முன் ஷாமியானா போடப்பட்டிருந்தது .ஒரு சிலர் உட்கார்ந்து இருந்தார்கள் .சிலர் ஆங்காங்கே சிறு குழுவாக நின்று கொண்டிருந்தார்கள். வீட்டுக்கு முன்னாள் இருந்தவரிடம் துக்கம் விசாரித்தேன் . ரங்கசாமியின் தம்பியாக இருக்கலாம் .பக்கத்தில் 12 வயது மதிக்கத்தக்க பையன் நின்று அழுது கொண்டிருந்தான் .
இவன்... இவன்.. இவனை நான் பார்த்திருக்கிறேன். எங்கே ?எப்போது? மனம் கேள்வி கேட்ட வண்ணம் இருந்தது. போடப்பட்டுஇருந்த நாற்காலியில் வந்து அமர்ந்தேன். சதாசிவம் பக்கத்தில் வந்து அமர்ந்தார். என்ன ஆச்சு சார் என்றேன்.
ஏதோ காய்ச்சல் என்று படுத்தாராம் .நேற்று சாயந்திரம் பையன் மெடிக்கல் ஸ்டோரில் டாக்டர் சீட்டு காட்டி மருந்து வாங்கி வந்து கொடுத்து இருக்கான் . ரெண்டு மூன்று முறை சாப்பிட்டு இருக்கிறார். ராத்திரி ரெண்டு மணி வாக்கில் நெஞ்சி எரியுது வயிறு எரியுது என்று காத்திருக்கிறார் .ஆஸ்பத்திரி போறதுக்குள்ள போயிடுச்சு.
சே பாவம் என்று வாய் சொன்னாலும் நேற்று நடந்தது என் நினைவுக்கு வந்தது. என்ன தவறு செய்து விட்டோம். என்னுடைய கோழைத் தனத்தால் சுயகௌரவத்தால் போலிகௌரவத்தால் ஒரு உயிர் போய்விட்டது .பாவம் இந்த சிறிய பாலகன் பரிதவித்து நிற்கிறான் .நினைத்துப் பார்த்தேன்.
நேற்று மாலை நானும் மெடிக்கல் ஸ்டோரில் மருந்து வாங்க போயிருந்தேன். இதோ அழுதுகொண்டு நிற்கும் இந்த பையன் மருந்து வாங்கிக் கொண்டு இருந்தான். இவன் யார் என்பதெல்லாம் எனக்குத் தெரியாது .மருந்து பாட்டிலை எடுத்து தயாரித்த தேதி முடிந்த தேதி பார்த்தேன் .அந்த மருந்து காலாவதியாகி மூன்று மாதம் ஆகியிருந்தது. தூக்கி வீச வேண்டிய மருந்தை கொடுக்கிறானே என்று நினைத்து "ஏம்பா இது எக்ஸ்பைரி ஆகிடுச்சு என்றேன்". அடுத்த வினாடி இடி இடித்தது .
மருந்து கொடுக்கும் கடைக்காரன் யோவ் உனக்கு என்ன வேணுமோ அத வாங்கிட்டு போ... அதிகப்பிரசங்கித்தனம் உனகெதுக்கு . நீ வந்த வேலைய பாத்துக்கிட்டு போவியா தேதி கண்டுபிடிக்க வந்துட்டான் என்று சத்தமிட்டான்.
எனக்கு சங்கடமாக போய்விட்டது. எல்லோரும் என்னையே பார்ப்பது போல் ஒரு கூச்சம். என்னை எல்லோரும் என்ன நினைப்பார்கள் என்று ஒரு ஈகோ என் நெஞ்சிலே தோன்றியது.
அதேசமயம் எனக்கு ஏன் இந்த வீண் வம்பு என்று தோன்ற மருந்து வாங்காமலேயே வந்துவிட்டேன் .
இதோ ஒரு உயிர் போய்விட்டது .அப்போதே அங்கேயே பையனை நிறுத்தி கடைக்காரனிடம் பேசி சுய கவுரவம் பார்க்காமல் மருந்தை மாற்றியிருந்தால் இந்த உயிர் பிழைத்திருக்கும் .
ஆம் எனது கோழைத்தனம் ஒரு உயிரை பலிவாங்கி விட்டது.
ஒன்று புரிந்தது எல்லோரும் நாணயமானவர்கள் இல்லை .இனி நமக்குத் தேவையானது எதுவாக இருந்தாலும் நல்ல பொருள் தானா சரியான தேதிதானா என பார்த்து வாங்க வேண்டும் .மற்றவர்களுக்கும் சொல்ல வேண்டும் நாம் இனி கோழைத்தனமாக இருந்து விடக்கூடாது என்று முடிவு செய்துகொண்டேன். தவறு நடக்கிறது என்று தெரிகிறது .ஆனாலும் தன்மானம் அதிலிருந்து தப்பிக்க சொல்லுகிறது. மாற வேண்டும் நான் மட்டுமல்ல எல்லோரும் மாற வேண்டும்.
என் அன்பு வாசகர்களே,
எத்தனை பேர் காலாவதி நாள் பார்த்து பொருள் எடுக்கிறோம். அநேகருக்கு காலாவதி தியதி என்றால் என்ன?? அதை ஏன் பார்த்து வாங்க வேண்டும்??? அதனால் என்ன பிரயோஜனம்??? என்ற விழிப்புணர்வு இல்லை.
சிறு குறு நகரங்களில் வாழ்பவர்களுக்கு இதை குறித்து சிறிதளவும் தெரிவதில்லை. நகரஙகளில் வாழ்பவர்களில் அநேகர் இதை நன்றாக தெரிந்து வைத்துள்ளனர்.
To Get Daily Story in What's App Contact +917904957814
காலாவதி தியதி (Expiry Date) என்பது ஒவ்வொரு பொருளுக்கும் அதை தயாரிக்கும் நிறுவனம் அந்த பொருளை உபயோகப்படுத்த கொடுக்கும் நாட்கள் அல்லது வருடங்கள் என்பதே. அதை பொருட்களின் விலை பதியப்பட்டிருக்கும் இடத்தில் குறிப்பிட்டிருப்பார்கள். காலாவதியான எந்த பொருளும் அது விலைமதிப்பற்ற மருந்தாயினும் அது மனித உயிரையே பறித்து விடும்.
நாம் எடுக்கின்ற பொருள் தரமானதா என்றும் அதை உபயோகப்படுத்த கால அவகாசம் என்ன என்பதையும் பார்த்துதான் வாங்க வேண்டும். அல்லாமலும் நாம் தெளிவோடு எல்லாவற்றையும் பார்த்து வாங்கும்போது அதை பற்றி விழிப்புணர்வு இல்லாதவர்கள் விலை குறைவாய் கிடைக்கிறது என்று வாங்க நிற்கும் பட்சத்தில் அவர்களிடம் அதை குறித்து எடுத்துரைத்து அவர்களையும் சுகமாய் வாழ வழிவகை செய்ய வேண்டும்.
நான் விழிப்புணர்வு இல்லாத அநேக காரியங்களில் அநேகர் எனக்கு அதைக்குறித்து விழிப்புணர்வு தந்து என்னை நடத்தியிருக்கிறார்கள். நானும் அநேகருக்கு இதைப்போன்று உதவியிருக்கிறேன். அநேகர் நமக்கு எதற்கு வம்பு என்றும் தான் சொன்னால் ஏற்றுக்கொள்வார்களோ என்று காழ்ப்புணர்வு கொண்டு அதை செய்வதில்லை.
இன்றைய கதையில் இவ்வாறு சிந்தித்ததால் ஒரு ஜீவன் இல்லை அவர் குடும்பம் நிற்கதியாய் நிற்கிறது. அப்போஸ்தலனாகிய பவுல் கொரிந்திய சபைக்கு இவ்வாறு கூறுகிறார்,
1 கொரிந்தியர் 7:35
இதை நான் உங்களைக் கண்ணியில் அகப்படுத்தவேண்டுமென்று சொல்லாமல், உங்களுக்குத் தகுதியாயிருக்குமென்றும், நீங்கள் கவலையில்லாமல் கர்த்தரைப் பற்றிக்கொண்டிருக்கவேண்டுமென்றும், உங்கள் சுயபிரயோஜனத்துக்காகவே சொல்லுகிறேன்.
இந்த அதிகாரத்தில் அநேக காரியங்களை பவுல் சொல்லி இறுதியாக இவ்வாறு சொல்கிறார். நாம் நம்முடைய பிரயோஜனம் மட்டுமல்ல மற்றவர்களுக்காகவும் கவலைப்பட வேண்டும் என்கிற தகுதி நமக்கு இருக்க வேண்டும். நம்மை போலவே பிறரையும் நேசிக்க வேண்டும். அப்பொழுது நம் மூலம் அவர் நாமம் மகிமைப்படும்.
நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்!!!