ஓர் குட்டிக் கதை
எறும்பின் வேலை
ஒரு காட்டில் வாழ்நாள் முழுக்க வேட்டையாடி அலுத்துப்போன புலி ஒன்னு ஒரு தொழிற்சாலை ஆரம்பிச்சுது.
அங்கே ஒரு எறும்பு வேலை செஞ்சுது. அதுபாட்டுக்கு வரும் சுறுசுறுப்பா எல்லா வேலைகளையும் செஞ்சு முடிச்சிட்டு சாயந்திரம் ஆனா வீட்டுக்கு போயிடும். புலியாருக்கு ஏக சந்தோசம் கணிசமான லாபமும் கிடைச்சுது.
நல்லாத்தான் போய்கிட்டிருந்தது, நம்ம ஆட்சியாளர்களுக்கு தோனுற மாதிரி நடு ராத்திரியில் திடீர்ன்னு புலியாருக்கு ஒரு ஐடியா தோனுச்சு. எறும்பு தனியாவே வேலை செய்யுதே அதை கண்காணிக்கற அளவுக்கு நமக்கும் போதுமான அறிவு இல்லை, நாம எறும்பை கண்காணிக்கவும் ஆலோசனை சொல்லவும் ஒரு உற்பத்தி மேலாளரை (production manager) நியமித்தால் உற்பத்தி அதிகமாகும்னு ஒரு தேனியை கொண்டு வந்தது.
அந்த தேனியும் வேலையில் ஒரு புலிதான். பல கம்பெனிகளில் வேலை செய்த பழுத்த அனுபவசாலி (இப்போ அந்த கம்பெனியெல்லாம் இருக்குதான்னு கேக்காதிங்க). அந்த தேனி சொல்லுச்சு, "பாஸ் எறும்பை அதன் போக்குல விட முடியாது, அதுக்கு முறையான ஒர்க் ஷெட்யூல் போட்டுக் கொடுத்தால் இன்னும் கூடுதலா வேலை வாங்கலாம். அதுக்கு நிறைய வேலை இருக்கு எனக்கு ஒரு செக்ரட்ரி வேணும்"னுது.
புலிக்கு ஏக சந்தோஷம் இந்த தேனி என்னமா யோசிக்குது நமக்கு இவ்வளவுநாளா இது தோனலையேன்னு ஒரு முயலை செக்ரட்டரியாக்குச்சு. அத்தோட புலியார் நமக்கும் கொஞ்சம் தெரியும்னு காட்டிக்க, "ஆள் போட்டாச்சு இனிமே எனக்கு தினமும் வேலை முன்னேற்றம் குறித்து ரிப்போர்ட் வரைபடமாவும் அட்டவனையாவும் கொடுக்கனும்"னுது.
"ஓகே பாஸ் அதுக்கென்ன, பிரமாதமா செஞ்சிடலாம் அதுக்கு ஒரு கம்ப்யூட்டர், பிரின்டர், புராஜக்டர் எல்லாம் வேணுமே"ன்னது, அப்படியே வாங்கிகிச்சு ஒரு கம்ப்யூட்டர் டிபார்ட்மெண்டும் பூனை ஒன்றின் தலைமையில் அமைச்சாச்சு.
இப்போ ஏகப்பட்ட கெடுபிடி நெருக்கடிகளால் விரக்தியடைந்த அந்த எறும்போட வேலையில் ஒரு தொய்வு வந்துச்சு. உற்பத்தி குறைந்தது. புலி நினைச்சுது, எல்லாம் சரியா இருந்தும் ஏனிப்படி? தேனியோட ஐடியாக்களை எறும்புக்கு விளக்கமா எடுத்துச்சொல்ல ஒரு தொழில்நுட்ப ஆலோசகரை போடுவோம்னு ஒரு குரங்குக்கு அந்த வேலையை கொடுத்தது. ஏற்கனவே டல்லான எறும்பை இப்போது குரங்கும் அதன் பங்குக்கு குழப்ப அன்றய தினத்துக்காக திட்டமிடப்பட்ட வேலைகளை அன்றைக்கே முடிக்காமல் போனது எறும்பு. மேலும் உற்பத்தி குறைவு நஷ்டத்தில் இயங்கியது ஃபேக்டரி.
'எதைத்தான் தின்னா பித்தம் தெளியும்' என்ற மனநிலைக்கு ஆளான புலியார் நஷ்டத்தை சரி செய்ய என்ன செய்லாம்னு ஆராய ஆந்தையை நியமிச்சது. ஆந்தை மூன்று மாத ஆராய்ச்சிக்கு பின் கடைசியா இப்படி சொன்னது. "தொழிற்சாலையில் தேவைக்கு அதிகமா ஆள் இருப்பதே காரணம் யாரையாவது வேலையை விட்டு எடுத்துட்டா நிலைமை ஓரளவு சீராகும்"
"யாரை எடுக்கலாம் அதையும் நீயே சொல்லிடு" என்றது புலி. "அதிலென்ன சந்தேகம் சரியாக வேலை செய்யாத அந்த எறும்பைதான" அதிரடியாக சொன்னது ஆந்தை.
இப்படித்தான் உலகெங்கும் பொதுத்துறை மற்றும் தனியார்துறைகளில் எதுவும் செய்யாமலே படம் காட்டுபவன் பிழைத்துக் கொள்கிறான். வேறெதுவும் தெரியாது வேலையை மட்டுமே செய்பவன் பாதிப்புக்கு உள்ளாகிறான்.
To Get Daily Story in what's app Contact +917904957814
என் அன்பு வாசகர்களே,
உங்களிடம் வேலை செய்கிறவர்களோ, அல்லது உங்களின் கீழ் வேலை செய்கிறவர்களோ என யாராக இருந்தாலும் உங்கள் வருமானம் தடையில்லாமல் சரியாக வருகிறது என்றால் அவர்களை நெருக்காதீர்கள். ஏனெனில் அவர்கள் தங்கள் கடமையை சரியாக செய்துகொண்டிருக்கிறார்கள்.
மாறாக இன்றைய கதையில் வருவது போல் அவர்களை நெருக்கினால் உங்கள் வருமானமும் போகும், நல்ல வேலையாட்களையும் இழந்து விடுவீர்கள். ஒரு மனிதனுக்கு அவனுடைய திராணிக்கு தக்க வேலையை மட்டுமே கொடுக்க வேண்டும் அப்போதுதான் அந்த வேலையில் ஒரு முழுமையை பெற முடியும். அதைவிடுத்து எல்லா பணிசுமையையும் ஒரே மனிதனிடத்தில் திணித்தால் இருப்பதும் போய் நஷ்டத்தில் இயங்க நேரிடும்.
அது மாத்திரமல்ல வேலைக்காரன் கூலிக்கு பாத்திரனாய் இருக்கிறான் எனவே அவன் செய்த வேலைக்கு ஏற்ற கூலியை நிச்சயம் கொடுக்க வேண்டும். சரியான கூலி கொடுக்கவில்லை என்றாலும் வேலையில் தொய்வு ஏற்படும்.
வேதம் சொல்கிறது,
நீதிமொழிகள் 30:10
எஜமானிடத்தில் அவனுடைய வேலைக்காரன்மேல் குற்றஞ்சுமத்தாதே, அவன் உன்னைச் சபிப்பான், நீ குற்றவாளியாகக் காணப்படுவாய்.
இந்த வசனத்தை போலத்தான் அநேகர் தங்களோடு வேலை செய்கிறவர்களை குறித்து தவறாக சொல்லி அதன்மூலம் நற்பெயர் பெற்று அவர்களின் வாழ்வாதாரத்தை கெடுக்கிறார்கள். ஒன்றை மாத்திரம் நன்றாய் புரிந்துக் கொள்ளுங்கள் எல்லாருக்கும் குடும்பம் இருக்கிறது என்று.
வேலை செய்கிறவர்களும் தங்கள் முழு பெலத்தோடும் தங்களால் இயன்ற மட்டும் உழைக்க வேண்டும். மாறாக நேரத்தை கடத்தி செல்வதால் எந்த பயனும் இல்லை. இறுதிவரை தொழிலாளியாகத்தான் இருக்க நேரிடும்.
நீதிமொழிகள் 22:29
தன் வேலையில் ஜாக்கிரதையாயிருக்கிறவனை நீ கண்டால், அவன் நீசருக்கு முன்பாக நில்லாமல், ராஜாக்களுக்கு முன்பாக நிற்பான்.
எனவே உண்மையாயும், ஜாக்கிரதையாயும் வேலை செய்யுங்கள் உங்களுக்கேற்ற பிரதிபலன் நிச்சயம் கிடைக்கும்.
நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்!!!!!
Tamil Christian Bible Quiz |
===============
ஓர் குட்டிக் கதை
சகோதர சிநேகம்
==============
சகோதர அன்பு எல்லாவற்றிலும் மேலான அன்பு ஏனெனில் நம்மையும் நமது குடும்ப சூழ்நிலையையும் நன்றாய் அறிந்த ஒரு உறவு என்றால் அது சகோதரன் மட்டுமே. சகோதரனால் மட்டுமே இடுக்கண் நேரத்தில் உதவ முடியும்.
ஆனால் இன்றைய காலக்கட்டத்தில் சகோதர அன்பு சற்றே குறைந்துவிட்டது அதற்கு அநேக காரணங்களுண்டு அதில் பிரதான காரியமாய் நிற்பது பணம், சொத்து தான். இதன் முகாந்திரம் அநேக குடும்பங்கள் தங்கள் பெற்றோரை, சகோதர சகோதரிகளை பகைத்து தனியாய் பிரிந்து செல்கின்றனர். அவ்வாறு பிரிந்து சென்ற பிறகு தான் சகோதர அன்பின் அருமைமை உணர்கின்றனர்.
சகோதரர்கள் என்றால் எப்படி இருக்க வேண்டும், இடுக்கண்ணில் எவ்வாறு உதவ வேண்டும் என்பதை இக்கதையின் மூலம் காண்போம்.
நான் சாகமாட்டேன்!
==============
பண்டைக் காலத்தில் சீன நாட்டில் ஒரு மூதாட்டி வாழ்ந்து வந்தாள். அவளுக்கு ஐந்து மகன்கள் இருந்தனர். ஐவரும் ஒரே மாதிரியாக இருப்பர். உடல் தோற்றத்தை கொண்டு அவர்களை அடையாளம் கண்டு கொள்வது கடினமே. ஆனால், அவர்களின் ஆற்றலில் வேறுபாடு இருந்தது. முதல் மகன் கடலையே குடித்து விடுவான். இரண்டாம் மகனுடைய கழுத்து இரும்பைப் போல் வலுவானது.
அடுத்தவனின் ஆற்றல் என்ன தெரியுமா? அவசியம் ஏற்பட்டால் அவன் தன் கால்களின் நீளத்தை அதிகப்படுத்தி கொள்வான். அந்த நீளத்திற்கு வரம்பே கிடையாது. அதற்கும் அடுத்தவனைத் தீ நெருங்கவே நெருங்காது. ஐந்தாமவனால் மூச்சு விடாமல் உயிர் வாழ முடியும். இப்படிப்பட்ட அபூர்வ ஆற்றல் பெற்றிருந்தாலும் அவர்கள் அதை வெளிக்காட்டிக் கொள்வதில்லை.
மூத்த மகன் மீன் பிடிப்பதில் வல்லவன். நாள்தோறும்t கடலுக்குச் சென்று ஏராளமான மீன்களைப் பிடித்து வருவான். இதைப் பார்த்த அக்கம் பக்கத்தார், “”நீ காலையில் மீன் பிடிக்கப் போகும் போது எங்கள் வீட்டு பிள்ளைகளையும் அழைத்துக் கொண்டு போ… தயவு செய்து அவர்களுக்கு மீன் பிடிக்கும் வித்தையை கற்றுக் கொடு,” என்று கெஞ்சி கேட்டுக் கொண்டனர்.
ஒரு நாள் அவன் கடற்கரைக்குச் சென்ற போது பையன்கள் பலரும் கூடப் போயினர். எல்லாரும் கரை மீது நின்றனர். மூத்த மகன் வாயை வைத்து கடல் நீரை குடித்தான். குடித்துக் கொண்டே இருந்தான். கடல் நீர் வற்றிக் கொண்டே போனது. கடைசியில் கட்டாந்தரைபோல் ஆகிவிட்டது. மீன்கள் எல்லாம் துடித்துக் கொண்டு தரையில் கிடந்து தவித்தன. கூட வந்த பையன்கள் உள்ளே இறங்கி அங்கிருந்த மீன்களையும், நண்டு முதலியவற்றையும் பார்த்து ரசித்த வண்ணமாய் இருந்தனர்.
“”உங்களுக்கு வேண்டிய மீன்களை அள்ளிக் கொண்டு வாருங்கள். நேரமாயிற்று. வீட்டுக்கு திரும்ப வேண்டுமல்லவா?” என்று கத்தினான் மூத்த மகன். அவன் கூறியதை அந்த சிறுவர்கள் காதில் போட்டுக் கொண்டால்தானே? அவர்கள் வரவில்லை. எவ்வளவு நேரத்திற்குத் தான் அந்த மூத்தமகன் தன் குடலுக்குள் கடல் நீர் முழுவதையும் வைத்திருக்க முடியும்? கடைசியாய் ஓர் எச்சரிக்கை விடுத்தான்.
“”வந்து விடுங்கள்! விரைவில் கரைக்கு வந்து விடுங்கள். இனியும் என்னால் கடல் நீரை வயிற்றுக்குள் வைத்துக் கொண்டிருக்க முடியாது,” என்றான்.
சிறுவர்கள் அவன் சொற்களைக் கொஞ்சம் கூட செவி மடுத்ததாகத் தெரியவில்லை. அவனாலோ அதற்கு மேலும் தண்ணீரை வயிற்றுக்குள் நிறுத்தி வைத்திருக்க முடியவில்லை. வேறு வழியின்றி தண்ணீர் முழுவதையும் உமிழ்ந்து விட்டான். அத்தனை பேரும் நீரில் மூழ்கி இறந்து போயினர்.
மிகுந்த வருத்தத்துடன் வீடு திரும்பினான். அந்த சிறுவர்களுடைய பெற்றோர் அவனிடம் வந்து, “”எங்கள் பிள்ளைகளுக்கு மீன் பிடிக்கும் வித்தையைக் கற்று கொடுத்தாயா? அவர்கள் எவ்வளவு மீன் பிடித்தனர்…” என்றெல்லாம் ஆசை மிகுந்த ஆர்வத் துடிப்புடன் கேள்விகளை அடுக்கி கொண்டே போயினர். மூத்த மகனின் நெஞ்சு சஞ்சலப்பட்டது. உண்மையில் நடந்ததை எடுத்து சொன்னான்.
“”அவர்களுக்கு நான் எத்தனையோ முறை எச்சரிக்கை செய்தேன், அவர்கள் கேட்கவில்லை. என்னால் கடல் நீரை வயிற்றுக்குள் அடக்கிக் கொள்ள முடியாத நிலை வந்தது,” என்றான்.
பிள்ளைகளை இழந்த பெற்றோர் நிம்மதி அடையவில்லை. வழக்கு தொடுத்தனர். விசாரணை நடந்தது. நீதிபதி அவன் கழுத்தை வெட்டிக் கொல்லுமாறு தீர்ப்பு வழங்கினர்.
தண்டனை நிறைவேற்றப்படும் முன்பு குற்றவாளி நீதிபதியைப் பார்த்து “”மாட்சிமை தங்கிய கருணை உள்ளம் வாய்ந்த நீதிபதி அவர்களே! நான் சாகும் முன் என் அருமைத் தாயைப் பார்த்து வர எனக்கு அனுமதி வழங்க வேண்டும்,” என்று வேண்டினான். நீதிபதியும் அனுமதி கொடுத்தார்.
அந்த மூத்தவன் தன் வீட்டை அடைந்தான். தாயிடமும், சகோதரர்களிடமும் தனக்கு நேர்ந்த கதியை எடுத்துக் கூறினான். அப்பொழுது இரண்டாம் மகன், “”உனக்குப் பதிலாக நான் போகிறேன். சகோதரர்களாகிய நாம் எல்லாரும் ஒருவரைபோல் ஒருவர் இருப்பதால் யாராலும் ஆள் மாறாட்டத்தைக் கண்டு கொள்ள முடியாது,” என்றான்.
ஆகவே, மூத்த மகனுக்குப் பதிலாக இரண்டாம் மகன் நீதிமன்றத்தை அடைந்தான். தண்டனையை நிறைவேற்ற ஆயத்தம் செய்யப்பட்டது. அவன் கழுத்து ஒரு கட்டையின் மீது இருக்குமாறு வைக்கப்பட்டது. வாள் ஓங்கி அவன் கழுத்தில் வீசப்பட்டது. அந்த வாள் இரும்புக் கழுத்துக்குள் பாய முடியுமா? முனை மழுங்கிப் போயிற்று. அவ்வாளைத் தீட்டினர். மீண்டும் வாள் வீசப்பட்டது. வாள் தெறித்துஓடியது. எனவே, அதிகாரி நீதிபதியிடம் முறையிட்டார்.
“”இவன் கழுத்து இரும்புக் கழுத்து என்று நினைக்கிறேன். யாராலும் இவனை வாள் கொண்டு கொல்லவே முடியாது,” என்றான்.
நீதிபதி தம் தீர்ப்பை சற்றே மாற்ற வேண்டியதாயிற்று.
“”நீரில் மூழ்க வைத்து இவனை சாகடியுங்கள்,” என்றார். தீர்ப்பு நிறைவேற்றப்படும் முன் குற்றவாளி அவரைப் பார்த்து தன் வீட்டுக்குப் போய் தன் தாயைப் பார்த்து வர அனுமதி கேட்டான். இம்முறையும் அவனுக்கு அனுமதி கொடுக்கப்பட்டது.
வீட்டிற்கு போய் நடந்ததை சொன்னான் அந்த இரண்டாம் மகன். அப்போது மூன்றாம் மகன், “”உனக்காக நான் போகிறேன்,” என்றான்.
அதிகாரிகள் அவனைப் படகில் ஏற்றிச் சென்று கடலில் தள்ளினர். அவன் தண்ணீருக்குள் விழுந்தான். அவன் கால்கள் விடுவிடு என்று வளர்ந்தன. அவன் தலை தண்ணீருக்கு மேலேயே இருந்தது. அவன் மூழ்கிப் போய் விடவில்லை. அதிகாரிகள் ஆச்சர்யப்பட்டனர். அவனை இன்னும் ஆழமான இடத்திற்கு கொண்டு சென்று தள்ளினர். அந்த இடத்திலும் அவன் தலையும், கழுத்தும் தண்ணீருக்கு மேலேயே இருந்தன. அந்த அளவுக்கு அவன் கால்கள் நீண்டன.
To get Dailt story in what's app Contact +917904957814
இதைக் கேள்விப்பட்ட நீதிபதி தம் தீர்ப்பில் மீண்டும் ஒரு மாற்றம் செய்தார். கொதிக்கும் எண்ணெயில் இவனை தள்ளி விடுங்கள் என்றார். முன்போலவே குற்றவாளி தன் தாயாரைப் பார்க்க அனுமதிக்கப்பட்டான்.
வீடு சென்றவன், குடும்பத்தில் உள்ளவர்களிடம் பேசிக் கொண்டிருந்த போது அவனுக்கு நேர் இளையவன் போய் தண்டனையை ஏற்றுக் கொள்வதாகச் சொல்லிவிட்டு சென்றான்.
அதிகாரிகள் ஒரு கொப்பறையில் எண்ணையைக் கொதிக்க வைத்து அதனுள் அவனை இறக்கினர். ஆனால், அவனோ அதனுள் நீச்சலடிக்கத் தொடங்கி விட்டான். தீயை மேலும் அதிகப் படுத்தினர். என்ன தான் செய்தாலும் அவனை நெருப்பில் வேக வைக்க முடியவில்லை. அதிகாரிகளுக்கும் என்ன செய்வதென்றே தெரியவில்லை.
அப்போது ஊரார் அங்கு வந்தனர். “இவனைக் கொல்வது எப்படி?” என்று எங்களுக்குத் தெரியும். அதை நாங்கள் செய்திட கட்டளை இடுங்கள்!’ என்று வேண்டினர். நீதிபதியும் இசைவு தந்தார்.
ஆழக்குழி நோண்டி அதற்குள் அவனை நிக்க வைத்து மண்ணைப் போட்டு மூடினர்.
ஆனால் நடந்தது என்ன? அவனுக்குத் தான் நாட்கணக்கில் மூச்சை அடக்கி உயிருடன் இருக்கத் தெரியுமே! ஓரிரு நாட்கள் சென்றதும் யாரும் அங்கு இல்லாத பொழுது, மண்ணை தோண்டி தள்ளிக் கொண்டு வெளியே வந்தான். வீடு திரும்பிய அவன் தாயிடமும் சகோதரர்களிடமும் தன் அனுபவத்தைச் சொன்னான். அதன் பிறகு வெகுகாலம் அச்சகோதரர்கள் தங்கள் தாயுடன் மகிழ்ச்சியாய் வாழ்ந்தனர்.
என் அன்பு வாசகரே,
நண்பர்கள் எல்லா காலத்திலும் நம்மை நேசித்து நமக்கு உதவி செய்வார்கள். ஆனால் இடுக்கண் நேரத்தில் நமது நிலைமை அறிந்து உதவுவது சகோதரர்கள் என்பதை இக்கதையின் மூலம் அறிந்து கொண்டோம்.
நம் உடன் பிறந்த உடன் பிறவா சகோதரர்கள் நமது ஆலய சகோதரர்கள் என பல்வேறு சகோதரர்கள் இருக்கின்றனர். அவர்களை ஒருபோதும் நாம் நெகிழ்ந்து விடாமல் அவர்கள் சிநேகத்தை பற்றிக்கொள்வோம். அதன் மூலம் அநேக ஆசீர்வாதங்களை பெற்றுக்கொள்வோம்.
நீதிமொழிகள் 17:17
சிநேகிதன் எல்லாக் காலத்திலும் சிநேகிப்பான்: இடுக்கணில் உதவவே சகோதரன் பிறந்திருக்கிறான்.
சங்கீதம் 133:1
இதோ, சகோதரர் ஒருமித்து வாசம்பண்ணுகிறது எத்தனை நன்மையும் எத்தனை இன்பமுமானது?
நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்!!!!
============
தேவதை கடாட்சம்!
============
முன்னொரு காலத்தில் மாமுனிவர் ஒருவர் காட்டில் தவம்செய்து வந்தார். சிறு வயதிலிருந்தே தவக்கோலம் பூண்டு இறைவனை தொழுது வந்ததால், அந்த காட்டில் வசித்த கொடிய மிருகங்கள் கூட அவரிடம் குழந்தைகளை போல நடந்து கொண்டன. ஒரு நாள் அவர் முன் அழகிய பெண் ஒருத்தி தோன்றினாள். அவளது பேரழகு பிரமிக்க வைத்தது. இருப்பினும் மனம் சலனப்படாமல் அந்த அழகியை பார்த்து, “அம்மா நீங்கள் யார்? உங்களுக்கு என்ன வேண்டும்?'' என்றார்.
“நான் தான் வனதேவதை; என்னுடைய விதி பயனால் சில நாட்கள் உங்களுடன் வசிக்க வந்துள்ளேன். நீங்கள் என்னை உதறி தள்ளினாலும் உங்களை விட்டு நான் போகமாட்டேன். இறைவன் கட்டளைப்படி நான் உங்களுடன் இருந்தாக வேண்டும்,'' என்றாள். தேவதை போகமாட்டாள் என்பதை அறிந்த முனிவர் அந்த ஒப்பந்தத்திற்கு சம்மதித்தார்.
“அம்மா நீங்கள் வரும் பொழுது என்னிடம் சொல்லி கொண்டு வந்தது போல போகும் போது சொல்லி கொண்டே போக வேண்டும்,'' என்றார். தேவதையும் சம்மதித்தாள். அன்றிலிருந்து தன் மீது தேவதையின் அருள் பூரணமாக இருப்பதை அறிந்தார். அதை சோதித்துத் பார்க்க விரும்பினார் முனிவர். எனவே, காட்டை விட்டு பொற்குன்றம் என்ற மாநகரை அடைந்தார். அந்த அரண்மனையின் அரசரும் மந்திரிகளும் அமர்ந்திருந்தனர்.
வேகமாக சென்ற முனிவர் தனது இடது காலை துக்கி மன்னனது கிரீடத்தை ஒரு உதை விட்டார். மறுநிமிடம், “அடி! உதை அவனை பிடி!'' என்றபடியே ஆயிரம் சேவகர்கள் முனிவரை சூழ்ந்து கொண்டனர். உடனே அரசன், “முனிவரை ஒன்றும் செய்யாதீர்கள். அவர் திரிகாலமும் உணர்ந்த ஞானி. என் கிரீடத்தை பாருங்கள்,'' என்றான். கிரீடத்தில் விஷநாகம் ஒன்று படமெடுத்து கொண்டிருந்தது. உடனே எல்லாரும் மகாபுருஷரை திட்டிவிட்டோமே என்று நினைத்து வருந்தினர். அதற்குள் விஷநாகம் ஓடி மறைந்தது. உண்மையில் அது விஷ நாகமல்ல; தேவதைதான் நாக உருவெடுத்து முனிவரை காப்பாற்றினாள்.
அன்றிலிருந்து அரசன் மாமுனிவருக்கு மந்திரி பதவி கொடுத்து சர்வ அதிகாரமும் கொடுத்தான். முனிவருக்கு தேவதையின் கடாட்சம் இருந்ததால் அவர் செய்ததெல்லாம் பலித்தது. முனிவரும் நாட்டை நல்ல முறையில் ஆண்டார்.
இரண்டு வருடங்கள் ஓடின. மீண்டும் ஒரு நாள் தன்னுடன் தேவதை இருக்கிறாளா என்பதை அறிய விரும்பினார் முனிவர். அன்றிரவு அரசனும், அரசியும் துங்கிக் கொண்டிருந்த பள்ளியறைக்கு சென்றார். இருவரையும் துக்கிக் கொண்டு வெளியே வந்தார். கண் விழித்த மன்னன் அந்த கிழவனின் தலையை வெட்டினால் என்ன என்று நினைத்து ஆத்திரம் கொண்டார். அதற்குள் பள்ளியறை கட்டிடம் இடிந்து விழுந்தது. அதை பார்த்த அரசனுக்கு மாமுனிவர் மேல் அளவிடாத பாசம் வந்தது. “முனிவரே! நீர் இல்லாவிட்டால் நாங்கள் இருவரும் இறந்திருப்போம்!'' என்றான்.
இந்த விஷயத்தை அறிந்த நாட்டு மக்கள், முனிவரை தெய்வமாகவே பாவித்தனர். ஒரு நாள் அரசன் தன்னுடைய முக்கிய பரிவாரங்களுடன் காட்டுக்கு வேட்டையாட சென்றான். ஒரு மானை துரத்தி கொண்டு ஓடினார் மன்னன். அவன் பின்னாலே சென்றார் முனிவர். மான் தப்பிவிட்டது. களைத்து போன மன்னனும், முனிவரும் ஒரு மரத்தடியில் அமர்ந்தனர். முனிவரது மடியில் சற்று நேரம் இளைப்பாற விரும்பினார் மன்னர். முனிவரும் சம்மதித்தார். அப்பொழுது மேலே பார்த்தார் முனிவர். அந்த மரத்தின் கிளை மேல் கருடன் ஒன்று பெரிய நாகத்தை துக்கி வந்து தின்பதற்காக உட்கார்ந்திருந்தது. அந்த மரத்தின் கிளை அரசனுடைய மூக்குக்கு நேராக இருந்தது.
மாமுனிவருக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. எழுந்து கருடனை விரட்டினால் மன்னனது தூக்கம் கெட்டுவிடும். நாகத்தினால் அரசனுக்கு தீங்கில்லை என நினைத்து விட்டுவிட்டார். கருடன் பாம்பை கொத்தியது. பாம்பு தன் விஷத்தை கக்கவே அது மன்னனின் கழுத்தில் வந்து விழுந்தது. கால சர்பத்தின் விஷம் என்ன பண்ணுமோ என பயந்த முனிவர், தன் கத்தியால் அதை வழிக்க நினைத்தார். அப்பொழுது தேவதை, “நான் தங்கள் விட்டு போக வேண்டிய நேரம் வந்துவிட்டது; செல்கிறேன்,'' என்று சொல்லிவிட்டு மறைந்துவிட்டாள்.
கத்தியை எடுத்து அரசரின் கழுத்தில் வைத்தார் முனிவர். உடனே கண் விழித்தான் அரசன், “இப்படிப்பட்ட பாதக செயலை நீங்கள் செய்வீர்கள் என்று நான் சிறிதும் நினைக்கவில்லை,'' என்று கோபப்பட்டான். முனிவரோ, “மன்னா நான் உன்னை கொல்லவேண்டுமென்றால் எப்பொழுதோ கொன்றிருக்கலாம். சற்று தலையை துக்கிப் பாருங்கள். கருடன் வாயிலிருக்கும் பாம்பின் வாயிலிருந்து ஒரு துளி விஷம் உங்கள் கழுத்தில் விழுந்துவிட்டது. அதை எடுக்கவே இப்படி செய்தேன். இனி நான் உங்களுடன் இருக்கமாட்டேன். தேவதையின் கடாட்சம் என்னை விட்டு போய்விட்டது,'' என்றார். மன்னன் மிகவும் மன்னிப்பு கேட்டான். தாங்கள் என்னை விட்டு செல்லக்கூடாது என கூறினான்.
நடந்தவைகளை எல்லாம் கூறிய முனிவர், “எனக்கு என்ன இருக்கிறது. நான் ஒரு முனிவர். தேவதை என்னுடன் இருந்தவரையில் எனக்கு ஆபத்து இல்லை. இனி நான் தங்களுடன் இருப்பதில் பயனில்லை. விடை கொடுங்கள் நான் காட்டிற்கு செல்கிறேன்,'' என்றார். மன்னன் எவ்வளவோ கெஞ்சியும் முனிவர் அவருடன் இருக்க சம்மதிக்கவில்லை. தன்னை விட்டு தேவதை போன பிறகு மன்னனுடன் இருப்பது தனக்கு மிகுந்த ஆபத்தை தரும் என்பதை உணர்ந்து அரசனிடம் விடைபெற்று காட்டிற்கு சென்றார் முனிவர்.
To Get Daily Story in what's app Contact +917904957814
என் அன்பு வாசகர்களே,
தேவதையின் அருள் இருக்கும் வரையில் அந்த முனிவர் செய்த காரியம் எல்லாம் பலித்தது. தேவதை அவரை விட்டுசென்ற அடுத்த வினாடியே காரியங்கள் தலைகீழாய் மாற ஆரம்பித்துவிட்டது.
கிறிஸ்தவர்களின் அன்றாட வாழ்வில் தேவனை சார்ந்து வாஜ பழகிக் கொள்ள வேண்டும். ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து உயிர்த்தெழுந்து பரலோகம் செல்லும்போது, தேற்றரவாளனாகிய பரிசுத்த ஆவியை கொடுத்து சென்றார். அந்த பரிசுத்த ஆவியை பெற்றுக் கொண்டவர்கள் செந்த எல்லா காரியமும் வாய்த்தது.
இன்றைய கதையின் இறுதியில் அந்த முனிவரை விட்டு தேவதை சென்றுவிட்டது. ஆனால் இன்றோ நாம் தான் தேவனை விட்டு பின்வாங்கி செல்கின்றோம். வேதம் சொல்கிறது,
*8 இயேசுகிறிஸ்து நேற்றும் இன்றும் என்றும் மாறாதவராயிருக்கிறார்.
எபிரேயர் 13:8*
*27 நீரோ மாறாதவராயிருக்கிறீர்; உமது ஆண்டுகள் முடிந்துபோவதில்லை.
சங்கீதம் 102:27*
நாம் பிரிந்து சென்றாலும் நம்மைவிட்டு பிரியாது, நம்மை கண்மனியைப் போல காக்கின்றவர் நம் தேவன் மாத்திரமே. எனவே அவர் மாறாதவராய், நம்மோடு இருந்து நம்மை ஆசீர்வதிக்க விரும்புகிறார். நாமும் அனுதினமும் அவரோடு இணைந்து வாழ்வோம் மேன்மையானதை சுதந்தரிப்போம்.
நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்!!!!
Bible Question & Answer in Tamil |
=============
பெரியதை எடு!
============
உழவன் ஒருவன் வீட்டில் வெள்ளாடும் செம்மறி ஆடும் இருந்தன. அவை இரண்டும் நெருங்கிய நண்பர்களாக இருந்தன. எங்கே சென்றாலும் ஒன்றாகவே சென்றன.
தோட்டத்தில் விளையும் செடிகளை எல்லாம் அவை கடித்து நாசம் செய்தன. கோபம் கொண்ட உழவன், நீங்கள் இனிமேல் இங்கே இருக்கக் கூடாது. இருந்தால் உங்களைக் கொன்று விடுவேன். எங்காவது போய் விடுங்கள், என்று விரட்டினான்.
இரண்டு ஆடுகளும் தங்கள் பொருள்களை ஒரு சாக்குப் பையில் போட்டன. அந்தப் பையைத் தூக்கிக் கொண்டு புறப்பட்டன.
செம்மறி ஆடு வலிமை உள்ளதாக இருந்தது. ஆனால் கோழையாக இருந்தது. மாறாக வெள்ளாடோ வீரத்துடன் விளங்கியது. ஆனால் வலிமை இல்லாமல் இருந்தது. சிறிது தூரம் நடந்த இரண்டும் ஒரு வயலை அடைந்தன. அங்கே இறந்து போன ஓநாய் ஒன்றின் தலை கிடந்தது. அந்த ஓநாயின் தலையை எடுத்துக் கொள். நீதான் வலிமையுடன் இருக்கிறாய், என்றது வெள்ளாடு.
என்னால் முடியாது நீதான் வீரன். நீயே எடு, என்றது செம்மறி ஆடு. இரண்டும் சேர்ந்து அந்த ஓநாயின் தலையைச் சாக்கிற்குள் போட்டன. சாக்கைத் தூக்கிக் கொண்டு இரண்டும் நடந்தன. சிறிது தொலைவில் நெருப்பு வெளிச்சத்தை அவை பார்த்தன. அந்த நெருப்பு எரிகின்ற இடத்திற்குப் போவோம். குளிருக்கு இதமாக இருக்கும். ஓநாய்களிடம் இருந்தும் நாம் தப்பித்துக் கொள்ளலாம், என்றது வெள்ளாடு.
இரண்டும் நெருப்பு இருந்த இடத்தை நோக்கி நடந்தன. அருகில் சென்றதும் அவை அதிர்ச்சி அடைந்தன. அங்கே மூன்று ஓநாய்கள் உணவு சமைத்துக் கொண்டிருந்தன.
ஓநாய்கள் தங்களைப் பார்த்து விட்டன. தப்பிக்க வழியில்லை, என்பதை உயர்ந்தன ஆடுகள்.
நண்பர்களே! நீங்கள் நலந்தானே என்று தைரியத்துடன் கேட்டது வெள்ளாடு.
அச்சத்தால் செம்மறி ஆட்டின் கால்கள் நடுங்கின.
நண்பர்களா நாய்கள்? எங்கள் உணவு தயார் ஆகட்டும். அதன் பிறகு உங்களைக் கவனிக்கிறோம். எங்கே ஓடிவிடப் போகிறீர்கள்? என்றது ஒரு ஓநாய்.
இவற்றிடம் இருந்து எப்படித் தப்பிப்பது என்று சிந்தித்தது வெள்ளாடு. செம்மறி ஆடே! இன்று நாம் கொன்றோமே ஓநாய்கள். அவற்றில் ஒன்றின் தலையை எடுத்து இவர்களிடம் காட்டு. நாம் யார் என்பது புரியும்? என்று உரத்த குரலில் சொன்னது அது. செம்மறி ஆட்டிற்கு அதன் திட்டம் புரிந்தது. சாக்கிற்குள் கையை விட்டு ஓநாயின் தலையை எடுத்தது.
ஏ! முட்டாள் ஆடே! பெரிய ஓநாயின் தலையை எடுத்துக் காட்டு என்றேன். நீ சிறிய தலையை எடுத்துக் காட்டுகிறாயே, பெரியதை எடு, என்று கத்தியது வெள்ளாடு. அந்தத் தலையைச் சாக்கிற்குள் போட்டது செம்மறி ஆடு. மீண்டும் அதே தலையை வெளியே எடுத்துக் காட்டியது.
கோபம் கொண்டது போல் நடித்தது வெள்ளாடு.
இருக்கின்ற ஓநாய்த் தலைகளில் பெரியதை எடு. மீண்டும் நீ சிறிய தலைகளையே எடுத்துக் காட்டுகிறாய். இதைப் போட்டுவிட்டு பெரிய தலையாக எடு, என்று கத்தியது.
அந்தத் தலையைப் போட்டுவிட்டு அதே தலையை மீண்டும் வெளியே எடுத்தது செம்மறி ஆடு.
இதைப் பார்த்த மூன்று ஓநாய்களும் நடுங்கின.
இவை சாதாரண ஆடுகள் அல்ல. நீ அவற்றைக் கேலி செய்திருக்கக் கூடாது. சாக்கிற்குள் இருந்து ஒவ்வொரு ஓநாய்த் தலையாக எடுக்கின்றன, என்றது ஒரு ஓநாய். மூன்றும் சிறிது நேரம் அமைதியாக இருந்தன.
ஆடுகளைப் பார்த்து ஓநாய் ஒன்று, உங்களைச் சந்தித்ததில் மிக்க மகிழ்ச்சி, குழம்பு நன்றாகக் கொதிக்கிறது, இன்னும் சிறிது தண்ணீர் ஊற்ற வேண்டும், நான் சென்று தண்ணீர் கொண்டு வருகிறேன், என்று புறப்பட்டது.
சிறிது நேரம் சென்றது. இரண்டாவது ஓநாய், அந்த ஓநாயிற்கு நம் அவசரமே தெரியாது. போய் எவ்வளவு நேரம் ஆகிறது? நான் சென்று அதை அழைத்துக் கொண்டு தண்ணீருடன் வருகிறேன், என்று புறப்பட்டது.
பரபரப்புடன் இருந்த மூன்றாவது ஓநாய், இருவரும் எங்கே தொலைந்தார்கள்? நான் சென்று அவர்களை அழைத்து வருகிறேன் என்று புறப்பட்டது. தப்பித்தோம் என்ற மகிழ்ச்சியில் ஓட்டம் பிடித்தது
செம்மறி ஆடே! நம் திட்டம் வெற்றி பெற்று விட்டது. ஓநாய்களிடம் இருந்து தப்பித்து விட்டோம். விரைவாகச் சாப்பிட்டுவிட்டு இங்கிருந்து புறப்படுவோம். உண்மை தெரிந்து மீண்டும் அவை இங்கே வரும், என்றது வெள்ளாடு. இரண்டும் அங்கிருந்த உணவை வயிறு முட்ட உண்டன. மகிழ்ச்சியுடன் ஏப்பம் விட்டுக் கொண்டே புறப்பட்டன.
ஓடிய மூன்று ஓநாய்களும் வழியில் சந்தித்தன.
ஆடுகளுக்குப் பயந்தா நாம் ஓடி வருவது? என்று கேட்டது ஒரு ஓநாய். நம்மை அவை ஏமாற்றி இருக்கின்றன. நாமும் ஏமாந்து விட்டோம், என்றது இன்னொரு ஓநாய்.
மூன்றாவது ஓநாய், நாம் உடனே அங்கு செல்வோம், அவற்றைக் கொன்று தின்போம், என்றது.
மூன்று ஓநாய்களும் அங்கு வந்தன. உணவை உண்டு விட்டு இரண்டு ஆடுகளும் ஓடி விட்டதை அறிந்தன.
ஏமாந்து போன ஓநாய்கள் பற்களை நறநறவென்று கடித்தன. பாவம் அவற்றால் வேறு என்ன செய்ய முடியும்?
என் அன்பு வாசகர்களே,
ஏமாறுகிறவர்கள் இருக்கின்றவரை ஏமாற்றுகிறவர்கள் இருக்கத்தான் செய்வார்கள் என்பதே இக்கதையின் கருத்து.
To Get Daily Story in What's app Contact +917904957814
நாம் ஏமாற்றுகிறவர்களாகவோ, ஏமாறுகிறவர்களாகவோ இருக்க கூடாது எப்போதும் நேர்மையாய் வாழ வேண்டும். நேர்மையாய் வாழும்போது தேவன் நம்மோடு கூட இருந்து நமக்கு தேவையான எல்லாவற்றையும் பார்த்துக்கொள்வார்.
வேதத்தில் ஆமான், எஸ்தர் ராஜாத்தியையும் மொர்தேகாயையும் ஏமாற்றி தான் ராஜ பதவியை அடைய தீர்மானித்தான் ஆனால் நடந்ததோ ஏமாற்ற நினைத்து முடிவில் அவனே ஏமாந்து தன் ஜீவனையும் நஷ்டப்படுத்திக்கொண்டான்.
ஏசாயா 33:15
நீதியாய் நடந்து, செம்மையானவைகளைப் பேசி, இடுக்கண் செய்வதால் வரும் ஆதாயத்தை வெறுத்து, பரிதானங்களை வாங்காதபடிக்குத் தன் கைகளை உதறி, இரத்தஞ்சிந்துவதற்கான யோசனைகளைக் கேளாதபடிக்குத் தன் செவியை அடைத்து, பொல்லாப்பைக் காணாதபடிக்குத் தன் கண்களை மூடுகிறவனெவனோ,
ஏசாயா 33:16
அவன் உயர்ந்த இடங்களில் வாசம்பண்ணுவான், கன்மலைகளின் அரண்கள் அவனுடைய உயர்ந்த அடைக்கலமாகும், அவன் அப்பம் அவனுக்குக் கொடுக்கப்படும், அவன் தண்ணீர் அவனுக்கு நிச்சயமாய்க் கிடைக்கும்.
ஆகவே நாமும் நீதியாய் நடந்து, செம்மையானவைகளை பேசுவோம் உயர்ந்த இடங்களில் வாசம் பண்ணுவோம்.
நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்!!