=================
கிறிஸ்தவர்கள் சினிமா பார்க்கலாமா?
================
வாலிபர்கள் மற்றும் இளம் வாலிபர்கள் கூட்டங்களில் உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் சிறுதாளில் எழுதிக் கொடுக்கலாம் என்று சொல்வது வழக்கம். அப்படி எல்லா கூட்டங்களிலும், வாடிக்கையாக வரும் ஒரே கேள்வி: கிறிஸ்தவர்கள் சினிமா பார்க்கலாமா? பரிசுத்த வேதாகமத்தில் சினிமா பார்க்கக்கூடாது என்று எங்கே எழுதியிருக்கிறது என்று கேட்பார்கள். இந்த கட்டுரையை வாசித்தபின் பார்க்கலாமா, வேண்டாமா என்பதை நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள்.
நாம் வீட்டிற்கு தேவையான சில பொருட்களை வாங்க கடைத்தெருவிற்குச் செல்கிறோம். நடந்து போகும் போது, நம்முடைய செருப்பு அறுந்துவிட்டால், உடனே ஒரு செருப்பு கடைக்குள் சென்று புதிய செருப்பை வாங்குவோம். அங்கு போன பின்பு அழகான வண்ணமிட்ட பெட்டிக்குள் அடுக்கி வைத்திருக்கும் தரம் உயர்ந்த அநேக கம்பெனி செருப்புகளை அப்படியே நோட்டமிடுவோம். அதில் அநேக கம்பெனிகளில் செருப்புகள் இருந்தாலும் நம் விரல்கள் நாம் T.V விளம்பரங்களில் பார்த்த கம்பெனி செருப்பையே எடுத்துதரச் சொல்ல கேட்கும். இந்த தெரிந்தெடுப்பை எதை அடிப்படையாக வைத்து செய்கிறோம்? நாம் பார்த்த விளம்பரத்தை அடிப்படையாக கொண்டே நம் தெரிந்தெடுப்புகள் உள்ளன. நான் என்றைக்காவது இன்று நான் 50 விளம்பரங்களை பார்க்க போகிறேன் என்று திட்டமிட்டு தொலைக்காட்சிப் பெட்டி முன்பு உட்கார்ந்திருப்போமா? இல்லை விளம்பரம் வரும்போது வேற சேனலை மாற்றுகிறோம். இடைப்பட்ட சூழ்நிலையில் நாம் பாத்த விளம்பரங்கள் நம்மை இவ்வளவாய் பாதிக்கும் போது, நாம் வேண்டும் என்றே 3 மணி நேரம் பார்க்கும் சினிமா படம் நம் வாழ்வில் எத்தனை பெரிய பாதிப்பை உண்டுபண்ணும்? இதில் நாம் தெரிந்துகொள்ள வேண்டிய காரியம் நாம் பார்க்கும் ஒவ்வொன்றும் நம்முடைய ஆழ்மனதில் (Subsconsious Mind) பதிந்து விடுகிறது. நமக்கு வாய்ப்பு வரும் போது, விரைவாக அவைகள் நம் மனக்கண்களுக்கு முன்பாக வந்து அதைச் சார்ந்தே நம்மை முடிவுகளை எடுக்க செய்கிறது.
சினிமாவை எடுத்துக் கொண்டால், சிறுவர் முதல் பெரியவர்கள் வரை ஏதோ ஒரு பாதிப்பை ஏற்ப்படுத்துகிறது. சிறிய அளவில் நன்மையான காரியங்களை கற்றுக் கொடுத்தாலும் பெரிய அளவில் அழிவிற்கு நேராய் நடத்தும் செய்திகளையே அமைதியாகக் கற்றுக் கொடுக்கிறது. உன் ஆழ் மனதில் (Subsconsious Mind) அமைதியாக பதிந்து இருக்கும் பாடல்கள், காட்சிகள், நகைச்சுவைகள் உனக்கு வாய்ப்பு கிடைக்காமல் இருக்கும் வரை அமைதியாக இருக்கும். ஆனால் வாய்ப்புக் கிடைக்கும் போது, நீ கண்ட காட்சிகள் உன் வாழ்வில் நடத்திப் பார்க்க அதிகமாய் தூண்டுவிக்கும், உதாரணத்திற்கு உன் பள்ளியிலோ கல்லூரியிலோ உன்னை விரும்புகிறேன் என்று ஒரு பையனோ அல்லது பொண்ணோ சொல்லும் போது, நீ கண்ட சினிமாவில் அணிந்த உடையோடு, நீ கண்ட இடத்தில் அந்த நபரோடு அதே சீனை அவர்கள் சூழ்நிலைக்கு மாற்றி பாடவோ, ஆடவோ மற்ற செயல்களில் ஈடுபடவோ தூண்டுகிறது. படிக்கும் நாட்களிலே பள்ளி அல்லது கல்லூரிக்கு செல்லாமல், ஆசிரியர்களுக்கும் பெற்றோர்களுக்கும் தெரியாமல் ஊர் சுற்ற, பிறரை கேலி கிண்டல் செய்து மனம் மடிய வைத்தல், காதல் தோல்வி அடைந்தால் தற்கொலையை செய்தல் அல்லது கொலை செய்தல், சிகரெட் மற்றும் குடி பழக்கத்தையும், இன்னும் பல வன்முறைகளையும் நம் இதயத்தில் அமைதியாக விதைக்கிறது சினிமா என்ற உண்மையை உணர்ந்து கொள். தமிழில் ஒரு பழமொழி உண்டு, சட்டியில் உள்ளது தான் அகப்பையில் வரும். அதாவது உனக்கு பிரச்சனை வரும் போது, உன் மனதில் எது இருக்கிறதோ அது தான் உன் பதிலாக வருகிறது.
நீ ஒரு வேலை கேட்கலாம். இவ்வளவு நாட்களாய் நான் பார்த்த சினிமாக்கள் என் ஆள் மனதில் உள்ளன. பல வேளைகளில் அதில் பார்த்த காட்சிகளையும் பாடல்களையும் என் மனதில் அசை போடுகிறேன், இதில் இருந்து எப்படி வருவது? தேவையற்ற காரியங்களை வெளியே அகற்ற வேண்டும் என்றால் சிறந்த காரியங்களால் அதை நிரப்ப வேண்டும். நீ வேத வசனங்களை மனப்பாடம் செய்யலாம். இதனால் இரண்டு நன்மைகள் உண்டு. ஒன்று உன் ஆழ்மனதில் தங்கியுள்ள தேவையற்ற காரியங்கள், வசனங்களால் நிரம்ப நிரம்ப அவைகள் சிறிது சிறியதாய் வெளியேறும், மற்றொன்று உனக்கு பிரச்சனைகள் வரும்போது, உன் முடிவுகளை வசனத்தின் அடிப்படையில் நீ தீர்மானங்களை எடுப்பாய் (ஏசாயா 30:21), (ஏசாயா 58:11), யோவான் 16:13), (சங்கீதம் 32:8). இந்த வசனங்கள் தேவனுடைய வார்த்தை நம்மை எப்படியெல்லாம் வழிநடத்துகிறது என்று உணர்த்துகிறது. எனவே அவப்போது வருகிற நூலாம்படை (ஒட்டடை)-யை அகற்றுவதைக் காட்டிலும் அதை கட்டுகிற சிலந்தியை கண்டு அதை கொன்று போட்டால் நிரந்தர தீர்வு காணலாம். அதை போல் படிப்பில் கவனம் இல்லை. எதிர்பாலரை பார்க்கும் போது இச்சையோடு பார்ப்பது, இன்னும் நம் உடை, நடை பாவனைகள், நம் பேச்சு, நாம் பார்த்து ரசிக்கும் ரசிகர்கள் (Hero Or Heroine) மாதிரி மாறுகிறது போன்ற பிரச்சனைக்கு நம் சிந்தைக்குள் செல்லும் படங்கள் மற்றும் பாடல்களை பார்ப்பது மற்றும் கேட்பதே என்பதை உணர்ந்து சிலந்தியை போன்ற அதை கொல்ல வேண்டும். சினிமாவும் வேண்டும் பரிசுத்த வாழ்வும் வாழ வேண்டும் என்று வாழ்வது கூடாத காரியம். பரிசுத்த வாழ்வு வாழ நினைக்கும் நீ இனி இந்த சினிமா வேணுமா, வேண்டாமா என்று தீர்மானித்துக் கொள்.