அப்போஸ்தலனாகிய பவுல் | ஓ தீமோத்தேயுவே | ஒநேசிமு | எப்பாப்பிரா | தங்கள் கழுத்தைக் கொடுத்த ஆக்கில்லா பிரிஸ்கில்லா
=======================
ஆரம்ப கால இரத்தசாட்சிகள்
Chapter 16
பவுல்
=====================
கிறிஸ்து இயேசுவினிமித்தம்கட்டப்பட்டவனாகிய "பவுல்"
(பிலோமோன் 1)
இந்த..
அப்போஸ்தலருக்கு அப்போஸ்தலனும்..
பரிசுத்தவான்களுக்கு பரிசுத்தவானும்..
தன் எழுத்துக்களாலே எழுப்புதலை எழுப்பினவனும்..
கிறிஸ்துவின் அச்சு அசலுமான..பவுலைப்பற்றி நாலு வரி எழுதத் துணிய பேனாமுனை நகர மறுக்கிறது..
"இவன் ஒரு கொள்ளை நோய்..இவன் பூச்சக்கரத்தின் கலகம்..இவன் உலகத்தைக் கலக்குகிறவன்.."
தடுக்க முடியாத அவனது வேகம் கண்டு.. அவன் எதிரிகளின் தாங்க முடியாத எரிச்சல் இது..
"இயேசுவையும் அறிவேன் பவுலையும் அறிவேன்.."
- அவனால் கலங்கடிக்கப்பட்ட அசுத்த ஆவிகளின் கதறல் இது..
"அவன் புறஜாதிகளுக்கும் ராஜாக்களுக்கும் இஸ்ரவேல் புத்திரருக்கும் என்னுடைய நாமத்தை அறிவிக்கிறதற்காக நான் தெரிந்து கொண்ட பாத்திரம்..அவன் என் நாமத்தினிமித்தம் எவ்வளவாய்ப் பாடுபட வேண்டுமென்பதை நான் அவனுக்குக் காண்பிப்பேன்"(அப்போஸ்தலர் 9:15,16)
- அவன் மேல் வைத்த நம்பிக்கையில் கர்த்தராகிய இயேசு கிறிஸ்து தாமே தந்த சாட்சி இது..
தம்மைப் பற்றித் தாழ்மையாய் இந்தப் பவுலே சொன்ன அவரது சொந்த வார்த்தைகளினூடே அவரைப் பார்ப்பதே அவருக்கு மரியாதையும் நமக்குப் பாதுகாப்புமாம்..
சொல்கிறார்...
"நான் பாவிகளில் பிரதான பாவி..
அப்போஸ்தலர் எல்லாரிலும் சிறியவன்..
அப்போஸ்தலன் என்று பேர் பெறுவதற்கு பாத்திரன் அல்ல.."
"மரணத்துக்குக் குறிக்கப்பட்டவன்..
உலகத்துக்கு வேடிக்கையானவன்..
கிறிஸ்துவினிமித்தம் பைத்தியக்காரன்.."
பசியுள்ளவன்..
தாகமுள்ளவன்..
நிர்வாணி..குட்டுண்டவன்..தங்க இடமில்லாதவன்..
உலகத்தின் குப்பையும்
துடைத்துப் போடுகிற அழுக்கைப் போன்றவன்..
ஆனாலும் தான் பட்ட பாடுகளையும் தன் கடிதத்தில் இப்படித்தான்
பதிந்து வைத்தான்..
"நான் அதிகமாய்ப் பிரயாசப்பட்டவன்..
அதிகமாய் அடிபட்டவன்..அதிகமாய் காவல்களில் வைக்கப்பட்டவன்.."
"அநேகந்தரம் மரண அவியில் அகப்பட்டவன்..
39 அடியாக 5 முறை அடிபட்டவன்..
3 முறை மிலாறுகளால்
அடிபட்டவன்.."
"ஒரு முறை கல்லெறியப்பட்டவன்..
மூன்று முறை கப்பல் சேதத்தில் மாட்டிக் கொண்டவன்.."
"அநேகந்தரம் பிரயாணம் பண்ணினவன்..
ஆறுகளால்..கள்ளரால்..
சுயஜனங்களால்..அந்நிய ஜனங்களால் என்னென்ன
மோசம் உண்டோ எல்லாம் ஆனுபவித்துத் தீர்ந்தவன்..
2 கொரிந்தியர் 11:23-29ல்
இன்னும் நீண்டு கொண்டே போகும் பட்டியலில் அவன் இன்னும் படாத பாடு என்ன?
வெவ்வேறு கோணங்களில் வெவ்வேறு காலங்களில்..
வெவ்வேறு தேவ மனிதர்கள் இவன் வாழ்க்கையை வரைந்து வைத்திருந்தாலும்..
"எழுப்புதல் தாமதிப்பது ஏன்"என்று எழுப்புதலுக்கு இலக்கணம் எழுதிய லியானோர்ட் ரேவன்ஹில் சொல்கிறார்..
"பவுல் கிறிஸ்துவின் BRAND.
பாடுகளே-அவன் அடையாளம்.."
"ரோமர் எட்டாம் அதிகாரத்தை சற்று புரட்டிப் பாருங்கள்..
பஞ்சம்..நாசமோசம்..
நிர்வாணம்..பட்டயம்..
உபத்திரவம்..துன்பம்..
வியாகுலம்!
இத்தனை பாடுகளையும் இவன் எப்படித் தான் சகித்தானோ பாவம் !
தேவனோடும் மனிதனோடும் முழு யுத்தத்தில் இறங்கிய பாதாளத்தின் வல்லமைக்கு மாறு கொண்டு வீறு கொண்டான்..
இந்தத் தலை சாய்க்க இடமில்லா நாடோடி..
பிசாசை நேர் கொண்டு எதிர் நின்றான்..இந்தப் பிரசங்க மன்னன்..
சட்டமில்லா மல்யுத்தம்..
பவுலை சற்று உற்றுப் பாருங்கள்..
இதோ வாடி..வதங்கி..
வெளுத்த முகம்..
காயத் தழும்பில்
கறுத்திட்ட சரீரம்..
கொல்லும் பசியில்
கூனிட்ட உடல்..
உபவாசம் போட்டு ஒடுங்கிய உருவம்..
ரோமைச் சவுக்குகளின் ஓங்கிய அடிகளில்
வீங்கிய சதைகள்..
கல்லெறி பட்டு
கசங்கிய சிற்றுடல்..
பட்டினி போட்டு
ஒட்டிய வயிறு..
முப்பத்தாறு மணிநேரம் மத்திய தரைக்கடலில் ஊறிச் சுருங்கி உருக்குலைந்த தோல்..
இத்தனையும் இணைத்துப் பாருங்கள்..
அடுத்து வந்த ஆபத்துகள் எத்தனை!
தனிமையின் துயரம்..
கூட்டிக் கொள்ளுங்கள்!
195 அடிகளையும்..
மும்முறை பெற்ற மிலாறு அடிகளையும்..கப்பல் சேதங்களையும்..
கல்லெறிதலையும்..
பெற்ற சிறை வாசங்களையும்..
நேரிட்ட மரண அவதிகளையும் கூட்டிப்பார்த்தால்..அப்பப்பா
மூளை குழம்புகிறது..
ஆனால் பவுல் இதைக்குறித்து சொல்வதைக் கேளுங்கள்:
"அதி சீக்கிரத்தில் நீங்கும் நம்முடைய இலேசான உபத்திரவம்.."
ஆம் அவனுக்கு அவைகள் அனைத்தும் இலேசானது தான் !
துன்பத்தைத் துச்சமென்பது இது தான்-மனமிருந்தால் ஒப்புக் கொள்ளுங்கள் !
"நான் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் அச்சடையாளங்களை என் சரீரத்தில் தரித்துக் கொண்டிருக்கிறேன்"
(கலாத்தியர் 6:17)
பவுலின் மீது கிறிஸ்துவுக்கிருந்த உரிமையை உறுதிப்படுத்தும் வார்த்தைகளே இவை..
அவனது ஆவி..ஆத்துமா..
சரீரம் அனைத்துமே கிறிஸ்துவினுடையதாகி விட்டன.."
தொடர்கிறார் ரேவன்ஹில்..
"பவுல்" - நரகமும் அவனை நன்கு அறியும்..
"இயேசுவை அறிவேன்
பவுலையும் அறிவேன்..
நீங்கள் யார் ?"
- பாதாளமும் பூலோகமும் சூட்டும் மிகப்பெரிய புகழாரம் இதுவே..
"இயேசுவும் பவுலும்" -என்ன ஒரு அற்புதமான இணைப்பு..
எதிரியே கூறும் நற்சாட்சி இது..
பவுல் இந்த சாட்சியைப் பெற்றது எப்படி?
பிசாசுகள் பவுலை அறிந்து வைத்தது எப்படி?
அவைகள் இவனைக் காயப்படுத்தினதா அல்லது இவன் அவைகளை அடித்து விரட்டினானா?
இந்த மனிதன் எப்படிப்பட்டவன் என்று சற்று பார்க்கலாமே!
தேவனும் பவுலும் இணைபிரியாதவர்கள்..
தேவ வெளிப்பாடு இவனது வாடிக்கை..
தூதர் கூட்டம் இவனது பணிவிடையாளர்கள்..
இவனது சுண்டு விரல் அசைந்தால் பூகம்பம் தான்..
இவன் கட்டளையிட..
குறி சொல்லும் ஆவி பதறிக் கொண்டு ஓடும்..
கொரிந்து பட்டணத்தின் கோர அசுத்தங்களை அழுக்கறக் கழுவி..
சாத்தானின் கோட்டை வாசலிலே சபையை நிறுவியவன்..
கொடூரமான ராயனின் குடும்பத்தில் நுழைந்து அங்கிருந்தும் ஆத்துமாக்களைக் கொள்ளை கொண்ட அசுரன்..
அரசர்களின் முன் நிற்பதில்
ஐயமில்லாதவன்..
ஏனெனில்..
"அகிரிப்பா ராஜாவே!
நான் இன்றைக்கு உமக்கு முன்பாக உத்தரவு சொல்லப் போகிற படியினாலே என்னை பாக்கியவான் என்று எண்ணுகிறேன்.."
என்றவனல்லவா அவன்!
உலகின் ஒப்பற்ற அறிவுக் களஞ்சியமாம் மார்ஸ் மேடை நோக்கி உயிர்த்தெழுதலின் உண்மையைப் புயலென வீசி..அறிஞரின் அறிவினை
தவிடு பொடியாக்கினவன்!
சுருங்கச் சொன்னால்..
பவுல் உயிரோடு இருந்ததுவரை பாதாளத்துக்கு நிம்மதியே இல்லை..பாவம்!
பவுல் சொல்கிறான்..
"பிழைத்திருக்கிறேன்..
இனி நானல்ல கிறிஸ்துவே" என்று..
வாழ்நாளெல்லாம் அவன் சாத்தானின் வல்லமைகளோடு போராடிக் கொண்டே இருந்தான்..
தன் வாழ்நாளின் இறுதிக்கட்டத்திலும் "நல்ல போராட்டத்தைப் போராடினேன்" என்பது தான் அவனது பெருமிதம்!
இந்த வெற்றி முழக்கத்துக்குப் பிசாசுகளும் "ஆமென்"
சொல்லியிருக்கும்..
ஏனெனில் பவுல் அவைகளிடம் பட்டதை விட அவைகள் அவனிடம் பட்ட பாடுகள் தான் ஏராளம்!
ஆம்..பவுல் நரகத்திலும் நன்கு அறியப்பட்டவன்!
"நீங்கள் என்னிடத்தில் கற்றும் அடைந்தும் கேட்டும் கண்டும் இருக்கிறவைகள் எவைகளோ அவைகளையே செய்யுங்கள்" என்றானே..
(பிலிப்பியர் 4:9)
நகலிலிருந்து நகலெடுப்பது நல்லதல்ல..
ஆனால் பவுலைக் காப்பியடிப்பது தவறே அல்ல..காரணம்..
அவன் சமூலமாய்
சரணடைந்தவன்..
பரிபூரணமாய் பரிசுத்தப்படுத்தப்பட்டவன்
பூரண திருப்தி அடைந்தவன்..
ஆம்..கிறிஸ்துவில் முழுமையானவன் !
பொல்லாத ஆவி "பவுலையும் அறிவேன்"என்று சொன்னதைக் குறித்து ஆச்சரியப் படுகிறீர்களோ?
எனக்கென்னவோ இதில்
ஆச்சரியம் இல்லை..
மேலும் தொடர்கிறார் அவர்..
"பவுல்" - தேவ ராஜ்யத்தைக் கட்டினவன்
தமஸ்கு வீதியில் சவுல் ஒரு பிரசங்கியையோ அல்லது ஒரு பிரசங்கத்தை மட்டும் கேட்டிருப்பானேயானால்..
மீண்டும் அவனைப் பற்றி நாம் கேட்டிருக்கவே மாட்டோம்..
ஆனால் அவனோ சந்தித்தது.. கிறிஸ்துவை..
அனல் கக்கும் இந்த மார்க்கவாதி..அங்கே கண்டது அக்கினியால் அபிஷேகம் பண்ணும் அபிஷேக நாதனை..
விளைவு ?
சவுல் மாறினான்..
சமுதாயமே மாறிற்று !
- நன்மை நோக்கி..
(மீண்டும் ஒரு முறை இப்படிச் செய்ய மாட்டீரோ?)
நொறுங்குண்டவனாய்..இன்னும் ஒருபடி கீழிறங்கி
தேவனின் நேர்முகப் பரீட்சைக்கு அரேபியா பாலைவனம் சென்றான்..அவனது சுயம் எல்லாம் நொறுங்கியது அங்கே..
(இதைக் குறித்து விபரம் சொல்ல அவன் வாய் திறக்கவில்லை..)
பவுலின் வாழ்க்கை- அது விதிவிலக்கு வாழ்க்கை..
2 கொரிந்தியர் 11ஐ மீண்டும் படித்துப் பாருங்கள்..
தான் பட்ட பாடுகளை அங்கு அவன் பட்டியலிட வேண்டிய அவசியம் என்ன?
இரத்த சாட்சிகளோடு போட்டி போடவா?
அல்லது பரிசுத்தவான்களின் பெயரோடு தன் பெயரையும் தானே சேர்த்துக் கொள்ளவா?
கிஞ்சித்தும் இல்லை!
இவைகளின் அரிச்சுவடி அறியாதவன்..
கிறிஸ்துவுக்காக இவையெல்லாவற்றையும் குப்பையாய் எறிந்தவனாயிற்றே!
ஜெபத்திலும் அன் விதிவிலக்கு தான்..
ஜெபவீரன் துன்பம் கண்டு துவளாதவன்..
ஜெபிக்கிறவன் எலும்புகள் முறுக்கேறும்!
பெருமூச்சு வெளிப்படும்!
பலமும் பரிசுத்தமும் பெருகும்!
அக்கினிப் பிழம்பாய் எரிவான்-அசையாது நிற்பான்!
கிறிஸ்துவின் வாழ்க்கை வரலாற்றை அவன் எழுதவில்லை..ஆனால் அதை வாழ்ந்தே காட்டிவிட்டான்!
அவன் தன்னை தேவனுக்கு விற்றுவிட்டவன்..
இதயத்துடிப்பும் எண்ணமும் நடையும் வாஞ்சையும் இயேசு இயேசு இயேசு..
ஆத்துமாக்களை விடுதலையாக்க ஆலயங்களில் அக்கினியைப் பற்ற வைத்தான் ...
அது எழுப்புதலிலோ கலகத்திலோ போய் முடிந்தது..சில வேளைகளில் இரண்டும்..
(நமக்கோ இரண்டும் கிடையாது)
கிறிஸ்துவில் இணைந்த பவுலைப் போல செயல் வேகம் இல்லை என்றாலும் சேவைத் தியாகத்திலாவது அவனைப் போலாக அவனை நிரப்பிய ஆவியானவர் நம்மையும் நிரப்புவது நிச்சயம் என்பதை சவாலாகக் கொள்ளுவோம்!
பவுல் மகிமையாய் வாழ்ந்தான்..வெற்றியாய் மடிந்தான்!
தியாகத்திலும் பாடுகளிலும் தன்னைக் கிறிஸ்துவோடு இணைத்துக் கொண்டதே இதின் இரகசியம்..
நாமும் அப்படியே வாழ்ந்து மரிக்கலாம்-விரும்பினால்!
- LEONARD RAVENHILL
"பவுல்" - ரோம் நகர் காவல் கிடங்குகளில்..
"இந்த சுவிசேஷத்தினிமித்தம் நான் பாதகன் போலக் கட்டப்பட்டு துன்பத்தை அனுபவிக்கிறேன்.."
(2 தீமோத்தேயு 2:9)
------------------------------
எருசலேமில் கைது செய்யப்பட்ட பவுல்..கொண்டு போகப்பட்டது ரோம் நகருக்கு..ராயனுக்கு முன்பாக நிற்க..
ஆரம்பத்தில் சிறைக் கைதியாக இல்லாவிட்டாலும்..
விசாரணைக் கைதியாக வீட்டுக் காவலில் 2 வருடம் ஒரு ரோம சிப்பாயுடன் கட்டப்பட்டு 24×7
காவலில் இருந்த பவுல்..மற்றவர்களை சந்தித்துப் பேச அனுமதிக்கப் படுகிறார்..
விசாரணை முடிந்து விடுவிக்கப்பட்டவர்..
சென்றது..தான் மிகவும் விரும்பிய ஸ்பெயின் நாட்டுக்கு..நான்காவது மிஷினரிப் பயணமாக..
அங்கிருந்து துரோவாவுக்கு சென்று தீத்துவை சந்தித்தவர்..பிலமோன் மற்றும் ஒநேசிமுவுடன் சில நாட்கள் சந்தோஷமாய் இருந்துவிட்டு..எபேசுவுக்குச் சென்று தீமோத்தேயுவுடன் தங்குகிறார்..
இந்த விடுதலை அதிக நாட்கள் நீடிக்கவில்லை..
நீரோ காலத்தில் மறுபடியும் கைதுசெய்யப்பட்டு துரோவாவிலிருந்து ரோமுக்கு சங்கிலிகளால் கட்டி இழுத்து வரப்படுகிறார் பவுல்..
ரோமுக்குக் கொண்டு வரப்பட்ட பவுல் அடைக்கப்பட்டது மேமரின்ட்டைன் ஜெயில் என்ற பாதாளக் கிடங்கில்..
இன்று நம் காலத்து ஜெயில்களைப் போல் அல்ல அன்றைய ரோம சிறைச்சாலைகள்..
கேப்பிட்டோலின் குன்றுகள் என்ற மலை அடிவாரத்தில் கிமு 640-616 ல் அர்க்குஸ் மர்ஷியஸ் என்ற ரோம மன்னனால் கட்டப்பட்ட பாதாளக் கிடங்கு இது..
தரைக்குக் கீழே 12 அடி ஆழத்தில் தலைக்கு மேல் க்லோவா மேக்ஸிமா என்ற ரோம் நகரின் பாதாளச் சாக்கடை ஓட..அந்தப் பாதாளச் சாக்கடைக் குழாய்க்குக் கீழே 6.5 அடி உயரமும் 30×22 அடி அளவில் கட்டப்பட்ட இருண்ட..நாற்றம் எடுத்த..எப்போதும் ஈரமாகவே வைக்கப்பட்டிருக்கும் கோணல் மாணலான போனால் திரும்பி வர முடியாத மரணக் கிடங்கு..
தரையில் உள்ள சிறு துவாரம் மூலமாகக் கைதிகள் பாதாளச் சிறையில் தள்ளப்படுவார்கள்..
இங்கிருக்கும் இரும்புக் கதவு வழியாக டைபர் நதியில் செத்த கைதிகள் எறிந்து விடப்படுவதுண்டு..
பேதுருவும் பவுலும் இங்கே தான் வைக்கப்பட்டிருந்ததாக வரலாறு..
இங்கிருந்து தான் தன் கடைசி நிருபங்களை எழுதுகிறார் பவுல்..
கடைசியாக எழுதியது தீமோத்தேயுவுக்கு எழுதிய மிக அருமையான இரண்டாம் நிருபம்..
"நான் இப்பொழுதே பானபலியாக வார்க்கப்பட்டுப் போகிறேன்..நான் தேகத்தை விட்டுப் பிரியும் காலம் வந்தது.." (2 தீமோத்தேயு 4:6)
மரணத்துக்கு சில மாதங்களுக்கு முன் எழுதப்பட்ட வரிகள் இவை..
டஞ்சன் ஜெயிலில் நாட்கள் நகர்கின்றன..
ஒரு நாள்..
ஜூன் மாத ஆரம்பமாய் இருக்கலாம் என்று சொல்கிறார்கள்..
சிறைக்கதவு திறக்கப் படுகிறது..
வெளியே கொண்டு வரப்படுகிறார் பவுல்..
கொலையாளிகள் முன் செல்ல..வயதான தேவ மனிதன்..நகரத்துக்கு வெளியே சங்கிலிகள் பிணைக்கப்பட்ட நிலையில் கொண்டு செல்லப் படுகிறார்..கொலைக் களத்துக்கு..
நகரத்துக்கு பல மைல்கள் தள்ளி..ஆஸ்ட்டியன் ரோடு என்ற இடம்..
கழுத்துப் பலகை வைக்கப் படுகிறது..
"என் ஓட்டத்தை சந்தோஷமாய் முடிக்க விரும்புகிறேன்"என்றாரே..
பலகையில் தலையை சந்தோஷமாய் நீட்டிக் கொடுக்க..கோடரியோ..வாளோ ஓங்கப் படுகிறது..
"அவன் என் நாமத்தினிமித்தம் எவ்வளவாய்ப் பாடுபட வேண்டும் என்பதைக் காட்டுவேன்"என்று தமஸ்கு வீதியில் பிடிபட்ட போது சொன்னாரே..
இதோ..இந்த ஆஸ்டியன் வீதியில்.. தலை தரையில் உருண்டு விழ..
அப்போஸ்தலனின் போராட்டம் ஜெயமாய் முடிகிறது..
சரித்திரம் சொல்கிறது..
லூசினா என்ற ரோம விசுவாசி ஆஸ்டியன் ரோட்டுக்கு அருகிலுள்ள தன் நிலத்தில் அப்போஸ்தலனின் உடலை அடக்கம் பண்ணுகிறார்..
------------------------------
தகப்பனே..
என்ன சொல்லுவோம்!
எங்களுடைய இன்றைய சபைகளின் எந்த அளவு கோலாலும் அளக்கப்பட முடியாத ஒரு மனிதன்..
"எங்களுக்கோ கிறிஸ்துவின் சிந்தை உண்டாயிருக்கிறது..
என்னைப் போலாகுங்கள்"
என்று சொன்னாரே..
கிருபை தருவீராக!
எங்களுக்கு அன்பானவர்களின் கடைசி வார்த்தைகள் எங்களுக்கு எவ்வளவு அருமையாய் இருக்க..
"நல்ல போராட்டத்தைப் போராடினேன்..ஒட்டத்தை முடித்தேன்..விசுவாசத்தைக் காத்துக் கொண்டேன்.." என்ற அப்போஸ்தலருக்கெல்லாம் அப்போஸ்தலனான தேவ மனிதனின் கடைசி வார்த்தைகள் எங்களை அசைக்காதோ?
சபையை அதின் அஸ்திபார உபதேசங்களுக்குத் திருப்புவீராக!
செய்யும் ஐயா!
ஆமென்.
அடைபட்ட அக்கினி
Pr. S. Romilton
9810646981
=======================
ஆரம்ப கால இரத்தசாட்சிகள்
Chapter 17
ஓ தீமோத்தேயுவே
========================
ஒரு மனிதனைக் குறித்து கர்த்தர் தமது சொந்த வாயால்..
"என் ஜனங்களை உண்மையாய் விசாரிக்க என்னைப் போன்ற மனதுடைய ஒருவன் உன்னைத் தவிர வேறு யாரும் என்னிடம் இல்லை"
என்று சொல்வாரானால் அதை விட பெரிய சாட்சி வேறு என்ன இருந்து விட முடியும் ?
இப்படிப்பட்ட சாட்சியைத்தான் பவுலின் வாயால் தீமோத்தேயு பெற்றார்.. (பிலிப்பியர் 2:19,20)
எவ்வளவு மேன்மையான சாட்சி !
தகப்பன் புறஜாதி கிரேக்கனாய் இருந்தாலும் யூத குலமான தன் பாட்டி லோவிசாள் மூலமாகவும், தன் தாய் ஐனேக்கியா மூலமாகவும் வேத எழுத்துக்களை சிறு வயது முதலே அறிந்திருந்த தீமோத்தேயுவை...
தன் சொந்த ஊரான லீஸ்திராவுக்கு வந்த பவுல் பண்ணிய பிரசங்கமும் பிறவி சப்பாணியை கை தூக்கி எழுப்பிவிட்ட அற்புதமும் உலுக்கிவிட..பவுல் அவனுக்கு ஆதர்ஷ குருவாகி விட்டான்..
ஏழு வருஷம் சென்று மறுபடியும் தீமோத்தேயுவை சந்தித்த பவுல்..
அதற்குள் சரீரப்பிரகாரமாகவும் ஆவிக்குரிய வளர்ச்சியிலும் தேர்ந்துவிட்ட தீமோத்தேயுவை..உடன் ஊழியனாக மட்டுமல்ல..உத்தம குமாரனாகவும் பிரியமான குமாரனாகவும் தேவனுடைய மனுஷனாகவும் தன்னோடு சேர்த்துக் கொள்கிறான்..
நாட்கள் நகர்கின்றன..
எபேசுவிலே சபையைக் கண்காணிக்கும் முதல் மூப்பராக நியமிக்கப்படுகிறார்
இளம் ஊழியனான தீமோத்தேயு..
தேவனுடைய வீட்டில் நடக்க வேண்டிய வழியை அவனுக்குக் கற்றுத் தரும்படி இரண்டு நிருபங்களை..முதல் கடிதத்தை மக்கெதோனியாவில்
இருந்தும் இரண்டாவது கடிதத்தைத் தன் கடைசி நாட்களில் ரோம் நகரிலிருந்தும் எழுதிய பவுல்..
தன் மரணத்துக்கு முன்பு எப்படியாவது தன் பிரியமான குமாரனைப் பார்க்க விரும்புகிறார்..
பவுல் இரத்த சாட்சியாவதற்கு முன்பு தீமோத்தேயு அவரை சந்தித்திருப்பார் என்று குறிப்புகள் சொல்கின்றன..
பவுலின் மரணத்துக்குப் பின் பல வருடங்கள் எபேசுவிலே ஊழியம் செய்த தீமோத்தேயு எபேசுவின் தேவியாகிய தியானாளின் திருவிழாவில் பெரிய கூட்டத்துக்கு நடுவில் நின்று இயேசுவே மெய்யான தேவன் என்று வைராக்கியமாய் முழங்க..கூட்டம் அவரைக் கட்டையால் அடித்தே கொன்று விடுகிறது..
-----------------------------------
பரிசுத்த தகப்பனே..
உயிரோடு இருக்கும் காலத்தில்
"என்னைப் போன்ற மனதுள்ளவன் உன்னைத் தவிர வேறு ஒருவனும் என்னிடத்தில் இல்லை" என்று தன் மூத்த ஊழியனாலும் தேவனுடைய வாயாலும் சாட்சி பெற்று..
நல்ல போராட்டம் போராடி
ஓட்டத்தை சந்தோஷமாய் முடித்து..இரத்த சாட்சியின் கிரீடத்தோடு ஜீவ கிரீடத்தையும் பெறப் போகும் தீமோத்தேயுவை எங்களுக்கு முன் வைத்ததற்காக நன்றி செலுத்துகிறோம்..
இப்படித் திரளான இரத்த சாட்சிகள் எங்களை சூழ்ந்து கொண்டிருக்க..
விசுவாசத்தைத் துவக்குகிறவரும் முடிக்கிறவருமான உம்மை நோக்கி எங்கள் ஓட்டத்தை பொறுமையோடு ஓடி முடிக்க கிருபை தருவீராக..!
ஆமென்.
=======================
ஆரம்ப கால இரத்தசாட்சிகள்
Chapter 18
ஒநேசிமு
=====================
"கட்டப்பட்டிருக்கையில் நான் பெற்ற மகனாகிய ஒநேசிமு.."
"முன்னே அவன் பிரயோஜனமில்லாதவன்
இப்பொழுதோ..
பிரயோஜனமுள்ளவன்.."
(Paul to Philemon 1:10,11)
------------------------------
ஒநேசிமு என்றால் பிரயோஜனமானவன்..
கொலோசே பட்டணத்தின் கண்காணியும் மூப்பருமான பிலமோன் வீட்டில் அடிமையாயிருந்த ஒநேசிமு..
வர்த்தகரும் கனமுள்ள மனிதனுமாகிய பிலமோனிடமிருந்து பணமோ பொருளோ அபகரித்துவிட்டு ரோம் நகருக்கு ஓடிவிட்ட ஒநேசிமு..
அந்நாட்களில் ரோம் நகர் இப்படிப்பட்ட பேட்டை ரௌடிகளுக்குத் தஞ்சம் புகும் இடமாய் இருந்தது என்கிறார் சரித்திர ஆசிரியர் தாசித்துஸ்..
ரோம் நகரிலும் தன் கைவரிசையைக் காட்டினானோ என்னவோ தெரியாது..ஆனால் அதே நாட்களில் சுவிசேஷத்தினிமித்தம் கைதாகி ரோம் நகரில் காவலில் இருந்த பவுலை ஒநேசிமு சந்திக்க நேரிட..
அந்த நிலையிலும் ஒநேசிமுவை கர்த்தரின் அன்பால் அணைத்துக் கொண்ட பவுலின் மூலம் "மறுபடியும் பிறந்தான்" ஒநேசிமு..
கட்டுகளிலும் காவலிலும் இருந்த வயதான பவுலுக்கு மிகவும் ஆதரவாகவும் அனுசரணையாகவும் இருந்த ஒநேசிமுவைத் தன்னோடு வைத்துக் கொள்ளவே பவுல் விரும்பினாலும் ..
அதைவிட அவசியமாகக் கண்டது..அவனது முன்னாள் எஜமானிடம் அவனைத் திருப்பி அனுப்புவது..
அனுப்பினார் பவுல்..
அழகான ஒரு கடிதத்துடன்..
"அன்பின் பிலேமான்..
பிரயோஜனமுள்ளவன் என்று பெயர் பெற்ற ஒநேசிமு தான்..ஆனால்
பிரயோஜனம் இல்லாதவனாய் உம்மை விட்டு ஓடிவிட்டது உண்மை தான்..
இப்பொழுதோ அவன் உமக்கும் எனக்கும் பிரயோஜனம் உள்ளவன்..
அவனை நான் உம்மிடத்துக்கு அனுப்புகிறேன்..
என் உள்ளம் போல இருக்கிற அவனை நீர் அன்பாய் ஏற்றுக் கொள்ளும்..
இனிமேல் அடிமையாக அல்ல..பிரியமான சகோதரனாக..
என்னை உம்மோடு ஐக்கியமானவன் என்று எண்ணினால்..என்னை ஏற்றுக் கொள்வது போல அவனை ஏற்றுக் கொள்வீராக!
அவன் உம்மை ஏமாற்றி இருந்தாலோ..கடன் பட்டிருந்தாலோ..
என் கணக்கில் வைத்துக் கொள்ளும்..நான் அதை
செலுத்தித் தீர்ப்பேன்..
பவுலாகிய நான் இதை என் சொந்தக் கையால் எழுதுகிறேன்.."
இதை விட மேலான ஒரு பரிந்துரை வேண்டுமோ ?
அந்நாட்களில் தன் எஜமானை விட்டு ஓடிப்போகிற அடிமை பிடிபட்டால்
அவன் சிறிய தவறே செய்தவனாய் இருந்தாலும் கடும் சித்திரவதையும் சிலுவை மரணமும் நிச்சயம் என்கிறது ரோம வரலாறு..
ஆனால் இப்படிப்பட்ட கடிதத்துடன் வந்த ஒநேசிமுவைக் கண்ட கொலேசிய சபை அடைந்த மகிழ்ச்சிக்கு அளவில்லை..
பிலமோனுக்கு அடிமையாயிருந்த ஒநேசிமு இப்போது இயேசுவுக்கு அடிமையாய் மாற..
எபேசு சபையின் மூப்பராக தீமோத்தேயுவுக்குப் பின் ஊழியத்தைத் தொடர்கிறார் ஒநேசிமு..
காலங்கள் கடந்தன..
ரோம சாம்ராஜ்யத்தில்..
டொமிஷியன் ராயன் நாட்களில்..கிபி 95..
ரோம் நகர கவர்னராக இருந்த "த்ராஜன்" என்பவன் எபேசுவிலிருந்து ஒநேசிமுவைக் கட்டி ரோமுக்கு இழுத்து வருகிறான்..
இந்த Trajan காலத்தில் கிறிஸ்தவர்கள் பட்ட கொடுமைக்கு அளவே இல்லை..
ரோம் நகரின் காவல் கிடங்குகளில் 18 நாள் குரூரமாக சித்திரவதைப் படுத்தப்பட்ட ஒநேசிமுவின் இரண்டு கால்களும் தொடை எலும்புகளும் அடித்தே முறிக்கப்பட்டன..
அதன் பின்னும் நெஞ்சு கல்லால் நசுக்கப்பட..தான்
"மறுபடியும் பிறந்த"
இடத்திலேயே இறக்கிறார் ஒநேசிமு..
-----------------------
தகப்பனே..
என்ன சொல்லுவோம்?
சொல்ல வார்த்தை
இல்லை ஐயா..
எதற்கும் பிரயோஜனமில்லாமல் மிதிக்கப்படத்தக்க மண்ணாய்க் கிடந்த எங்களையும் உமது கைகளிலே எடுத்து..
திரிகையிலே வைத்துத் திருத்தமாய் செய்யும்படி, தண்ணீராலே அல்ல..உம்
கண்ணீராலே..உம்
இரத்தத்தாலே..உம்
வியர்வையாலே..
"பரிசுத்தமாக்கப்பட்டதும்..எஜமானுக்கு உபயோகமானதும்..
எந்த நற்கிரியைக்கும் ஆயத்தமாக்கப்பட்டதுமான..கனத்துக்குரிய பாத்திரமாய்" (2 தீமோத்தேயு 2:21)
எங்களைத் திரும்பவும் வனைந்து கொள்ளச் சித்தமானீரே..
கண்ணீராலே உம் பாதங்களை நனைக்கிறோம்..
தொடை எலும்புகள் முறிக்கப்பட்ட ஒநேசிமுவின் இரத்தம்..
பிரயோஜனமில்லாமல் இருக்கிறோமே என்ற தாழ்வு மனப்பான்மையை மாற்றி..எங்கள் சகோதரர் அநேகரைக் கிறிஸ்துவுக்காகப் பிரயோஜனப்பட உணர்வுள்ளவர்களாய் ஆக்குவதாக !
உற்சாகமூட்டி எழுப்பி விடுவதாக!
செய்வீராக தகப்பனே..
ஆமென்.
=======================
ஆரம்ப கால இரத்தசாட்சிகள்
Chapter 19
எப்பாப்பிரா
========================
பின்னும் நான் என்ன சொல்லுவேன்?
எப்பாப்பிரா..
அன்றோனீக்கு..
யூனியா..
சீலா என்ற சில்வானு..
யூதா என்ற பர்சபா..மற்றும்
ஒநேசிப்போரு என்பவர்களையும்..
இன்னும் இரத்த சாட்சிகளையும் குறித்து நான் விபரம் சொல்ல வேண்டுமானால் காலம் போதாது.. (எபிரெயர் 11:32)
------------------------------
எப்பாப்பிரா:
சபைகளுக்காய் மிகுந்த ஜக்கிரதையாய் இருந்து தன் ஜெபங்களில் எப்போதும் போராடும் இந்த கொலோசேயின் ஜெபவீரன்..
நீரோ காலத்தில் கொடூரமான முறையில் கொல்லப்பட்டவன்..
அன்றோனீக்கு & யூனியா:
பவுலுடன் காவலில் இருந்த இவர்கள் இருவரும் கற்பனைக்கு எட்டாத முறையில் வதைக்கப்பட்டு கொல்லப்பட்டவர்கள்..
சில்வானு என்ற சீலா:
பவுல் மற்றும் பர்னபாவுடன் ஊழியத்தில் தோளோடு தோள் நின்ற பிலிப்பி நகரைச் சேர்ந்த இவன்..
கசையால் அடிக்கப்பட்டு நீரோ மன்னன் காலத்தில் கொல்லப்பட்டவர்களில் ஒருவன்..
யூதா என்ற பர்சபா:
சிறையில் கால்கள் தொழுவத்தில் மாட்டப்பட்டு அடிக்கப்பட்டுக் கொல்லப்பட்டவன்..
ஒநேசிப்போரு:
எபேசுவைச் சேர்ந்த இவன் ரோம் நகருக்குச் செல்லும் போது வெகு ஜாக்கிரதையாய் பவுலைத் தேடிக் கண்டுபிடித்தவன்..
தானும் பிடிபடுகிறான்..
அட்ரியன் என்ற கவர்னரின் காலத்தில் ஒநேசிப்போரும் அவன் உடன் ஊழியன் போர்ப்பிரி என்பவனும் வாரினால் அடிக்கப்பட்டு..அடங்காக் குதிரைகள் வாலில் கட்டப்பட்டு உடல் நார் நாராய்க் கிழிந்து போகுமட்டும் தெருவெல்லாம் இழுத்துச் செல்லப்பட்டு..
கொல்லப்பட்டவன்..
-----------------------
தகப்பனே..
எங்கள் அன்பையும் கிரியைகளையும் மறவாத நீதியுள்ளவராய் நீர் இருக்கும் போது..
ஊழியத்தில் தன்னுடன் பிரயாசப்பட்ட ஒவ்வொருவரையும் பேர் பேராக நினைவில் வைத்து மறவாமல் வாழ்த்த ஒரு முழு அதிகாரமும்
(ரோமர் 16) எழுதி வைத்த பவுல் இருக்கும் போது..
நாங்கள் மட்டும் இந்த இரத்த சாட்சிகளான விசுவாச வீரர்களை மறப்பது எப்படி நியாயம் ?
தகப்பனே..அவர்கள் வரிசையில் நாங்களும் எண்ணப்பட எங்களையும் தகுதி உள்ளவர்களாக்கும்!
ஆமென்.
அடைபட்ட அக்கினி
Pr. S. Romilton
9810646981
=======================
ஆரம்ப கால இரத்தசாட்சிகள்
Chapter 20
தங்கள் கழுத்தைக் கொடுத்த ஆக்கில்லா பிரிஸ்கில்லா
==================================
"அவர்கள் இருவரும்"
என்று அடைமொழி இடப்பட்ட முன்று தம்பதிகள் வேதத்தில் உண்டு..
1.முதலாவது:
தேவனாகிய கர்த்தரால் ஒரே மாம்சமாயிருக்க உண்டாக்கப்பட்ட
"அவர்கள் இருவரும்"
ஆதாம் ஏவாள்..(மத்தேயு 19:5)
2.இரண்டாவது:
வயது சென்றவர்களாயும்
பிள்ளை இல்லாதவர்களாயும் இருந்தாலும் கர்த்தரிட்ட சகல கற்பனைகளின் படியும் நியமங்களின் படியும் குற்றமற்றவர்களாய் நடந்து..தேவனுக்கு முன்பாக நீதியுள்ளவர்களாய் இருந்த.."அவர்கள் இருவருமாகிய"
- சகரியா எலிசபெத்தும்..
(லூக்கா 1:4,5)
3.மூன்றாவது:
பவுலின் பிராணனுக்காக தங்கள் கழுத்தைக் கொடுத்த
"அவர்கள் இருவரும்"
ஆக்கில்லா பிரிஸ்கில்லா தம்பதியுமே..
தங்களில் தாங்கள் ஒரே மாம்சமாகவும் கர்த்தரோடு ஒரே ஆவியிலும் ஒரே மனதுடனும் இருக்க அழைக்கப்பட்டு..
வயதாகும் காலம் வரை கர்த்தருடைய கட்டளைகளைக் கடைப்பிடிப்பதில் மட்டுமல்ல..அவருக்குச் சித்தமானால் மரணத்திலும் ஒன்று போலக் கழுத்தைக் கொடுக்கவும்..ஆயத்தமாய் இருந்த முன் உதாரண முன்னோடித் தம்பதிகள்..
வேதம் சொல்கிறது..இந்த ஆக்கில்லா பிரிஸ்கில்லா
- கிலவுதியு ராயன் காலத்தில் ரோம் நகரை விட்டுத் துரத்தப்பட்ட யூதர்கள்..
- கொரிந்துவுக்கு வந்து சேர்ந்து பவுலை சந்தித்து அவனோடு ஒன்றரை வருடங்கள் கூடாரத் தொழில் செய்த நாட்களில் வசனத்தில் வளர்ந்தவர்கள்..
- பின்பு பவுல் அங்கிருந்து எபேசுவுக்குப் புறப்பட்ட போது தாங்களும் அவனோடு எபேசுவுக்குச் சென்று சபை ஸ்தாபித்து சபைக்குத் தூணாய் நின்றவர்கள்..
- அங்கிருந்து பவுல் செசரியாவுக்குச் சென்ற பின் எபேசுவில் சில காலம் சபையோடு இருந்த போது..அங்கு ஆவியிலே அனலாய் வந்த அப்பொல்லோவுக்கு
தேவனுடைய மார்க்கத்தை அதிகத் திட்டமாய் விவரித்துக் காண்பித்தவர்கள்..
- சபை நடத்தத் தங்கள் வீட்டைத் திறந்து கொடுத்தவர்கள்..
- சில காலத்துக்குப்பின் யூதர்கள் மீதிருந்த தடை நீங்கிய பின் ரோம் நகருக்குத் திரும்பியவர்கள்..
இந்தத் தம்பதி கடைசி வரை இணைந்திருந்தது ஒரே நோக்கத்துக்காகவே:
தங்கள் கழுத்தைக் கொடுத்தாகிலும் ஜீவனுள்ள சுவிசேஷத்தை சுவிசேஷமாய் அறிவிக்கவே..
ரோமுக்குத் திரும்பிய இவர்கள் சட்டத்துக்குப் புறம்பாகக் கைது செய்யப்பட்டனர்..
-சொத்துக்களும் உடைமைகளும் பறிமுதல் செய்யப்பட்டன..
-கண்மூடித்தனமாக அடித்து நொறுக்கப்பட்டனர்..
-முன்னொரு காலத்தில் தங்கள் ஆசான் பவுலின் ஜீவனுக்காகத் தங்கள் கழுத்தைக் கொடுக்க முற்பட்டவர்கள்..
இப்பொழுது தங்கள் இரட்சகருக்காகக் கழுத்து வெட்டப்பட்டு..தாங்கள் அறிவித்த சுவிசேஷத்துக்காகத் தங்கள் கழுத்தையே விலையாகக் கொடுத்தார்கள்..
------------------------------------
பரிசுத்த தகப்பனே..
"அவர்கள் இருவரும்" என்று பெயரிடப்பட்ட மூன்று தம்பதிகளில் ஒருவர் உம்முடைய கட்டளையை மீறியது உண்மையே..
ஆனால் உமது கட்டளையைக் கைக்கொள்ள மட்டுமல்ல..
தங்கள் இரட்சகருக்காகவும் அவரது சுவிசேஷத்துக்காகவும் தங்கள் கழுத்தையே கொடுக்க ஒருமனப்பட்ட இந்தத் தம்பதி இன்றைய சபையின் தம்பதிகளுக்கு முன் உதாரணமில்லையோ?
விவாகரத்துகளும் தற்கொலைகளும் பெருகி வரும் இன்றைய சபையின் தம்பதிகளுக்கு மத்தியில் ஆக்கில்லா பிரிஸ்கில்லாக்கள் எங்கே?
பெயரில்மட்டும் எலிசபெத்துக்களும் பிரிஸ்கில்லாக்களுமோ?
இவர்களின் சாட்சியான வாழ்வும் இரத்தசாட்சி மரணமும் இன்றைய தம்பதிகளுக்கு சவாலாவதாக!
எங்கள் குடும்பங்களுக்கு இரங்குவீராக!
ஆமென்.