பாடல் பிறந்த கதை
பாமாலை:
உம்மண்டை கர்த்தரே நான் சேரட்டும்
பாடலாசிரியர்:
Sarah Flower Adams (1805-1848)
இசை வல்லுநர்:
Lowell Mason (1792-1848)
வேதாகம பகுதிகள்:
ஆதியாகமம் 28: 10-15,
சங்கீதம் 119: 148-152,
யாக்கோபு 4: 8
தலைப்பு: அற்பணிப்பு, சேவை, மரணம்
பாமாலை பாடல்
1. உம்மண்டை, கர்த்தரே, நான் சேரட்டும்;
சிலுவை சுமந்து நடப்பினும்,
என் ஆவல் என்றுமே
உம்மண்டை, கர்த்தரே, நான் சேர்வதே.
2. தாசன் யாக்கோபைப் போல் ராக்காலத்தில்
திக்கற்றுக் கல்லின் மேல் தூங்குகையில்,
என்தன் கனாவிலே
உம்மண்டை, கர்த்தரே, இருப்பேனே.
3. நீர் என்னை நடத்தும் பாதை எல்லாம்
விண் எட்டும் ஏணிபோல் விளங்குமாம்.
தூதர் அழைப்பாரே
உம்மண்டை, கர்த்தரே, நான் சேரவே.
4. விழித்து உம்மையே நான் துதிப்பேன்.
என் துயர்க் கல்லை உம் வீடாக்குவேன்;
என் துன்பத்தாலுமே
உம்மண்டை, கர்த்தரே, நான் சேர்வேனே.
பாடல் பிறந்த கதை
சாரா இங்கிலாந்திலுள்ள ஹார்லோவில் 22/2/1805 ஆம் ஆண்டு பிறந்தார். சாரா இளம் வயதிலேயே அவள் பங்கு பெறும் திருச்சபையில் செய்தி மலரில் கட்டுரைகளும் கவிதைகளும் எழுதுவாள். பல தாலந்துகள் படைத்த சாரா நடிப்பதிலும் திறமை பெற்றதால் 1834 ஆம் ஆண்டு ஜான் ஆடம்ஸ் என்கிற பிரபல பொறியியல் வல்லுநரை திருமணம் செய்து கொண்டாள்.
சாராவுக்கு நடிப்பு திறமையும் அதிகமாக இருந்ததால் 1837 இல் லண்டனில் உள்ள ரிச்சர்ட் கலையரங்கத்தில் சேக்ஸ்பியர் நாடகத்ல் மாக்பெத் சீமாட்டியாக நடித்தாள். சாராவின் உடல்நிலை பலவீனமாக இருந்ததால் அவளால் அதில் தொடர்ந்து நடிப்பில் ஈடுபட முடியவில்லை. எனவே நடிப்பதை விட்டுவிட்டு எழுத்து பணியில் தனது கவனத்தைத் திருப்பி, சிறந்த எழுத்தாளராக மாறினாள்.
சாராவின் சகோதரி எலிசபெத், இசை அமைப்பதில் தாலந்து படைத்தவராக விளங்கினாள். எனவே திறமை வாய்ந்த இந்த சகோதரிகளிடம் அவர்கள் திருச்சபையின் போதகர் மறைதிரு வில்லியம் ஜான்சன் ஒரு புதிய பாடல் புத்தகம் தயாரிக்கும் பொறுப்பை கொடுத்தார். இந்த சகோதரிகள் பழைய பாடல்களுடன் 13 புதிய பாடல்களையும் 62 புதிய ராகங்களையும் இந்த பாடல் புத்தகத்தில் தங்கள் காணிக்கையாக சேர்த்தார்கள்.
ஒருநாள் போதகர் வில்யம்ஸ், ஆதியாகமத்தில் யாக்கோபின் பெத்தேல் அனுபவத்தை பற்றி ஒரு செய்தியை ஆயத்தம் செய்து இருந்தார். யாக்கோபு ஒரு கல்லை தலையனையாக வைத்து படுத்து நித்திரை செய்யும்போது, அவன் கண்ட தேவதூதர்களின் தரிசனம் அவனுக்கு தைரியத்தை கொடுத்தது. இதை சிறப்பாக போதிப்பதற்கு ஒரு பாடல் இருந்தால் நலமாக இருக்கும் என சகோதரிகளிடம் கூறினார். ஆகவே சாரா உம்மண்டை கர்த்தரே நான் சேரட்டும் என்ற பாடலை எழுத, அதற்கு எலிசபத் இராகம் அமைத்தார்.
அமெரிக்காவில் 1844 ஆம் ஆண்டு இப்பாடல் அறிமுகமானது, ஆயினும் பிரபலமாகவில்லை. ஆனால் 12 ஆண்டுகளுக்கு பின் அமெரிக்க ஆலய இசை தந்தை என்று அழைக்கப்படும் லோவல் மேசன், பெத்தனி என்ற அருமையான ராகத்தை இப்பாடலுக்கு அமைத்தார். இந்த ராகம் இப்பாடலை உலகப் புகழ் பெற்றதாக மாற்றிவிட்டது.
21/ 5 /1889 ம் ஆண்டு இங்கிலாந்தில் உள்ள ஜான்ஸ்டன் பட்டணம் மிகுந்த வெள்ளப்பெருக்கினால் சூழப்பட்டது. அங்கு ஒரு நான்கு சக்கர வாகனம் சுழல் நீரில் சிக்கி தண்ணீரில் மூழ்க ஆரம்பித்தது. வண்டியில் கவிழ்ந்து கிடந்த ஒரு பெட்டிக்குள் ஒரு இளம்பெண் சிக்கிக்கொண்டாள். இவள் தூர கிழக்கு நாடுகளுக்கு மிஷனெரியாக செல்ல தன்னை அர்ப்பணித்து பயணத்தை மேற்கொண்டவள். இந்நிலையில் கரையிலிருந்து யாரும் உதவி செய்ய முடியாமல் தவித்த மக்களை அமைதியாக பார்த்தாள்.
அப்போது இந்த பெண் மிஷனெரி ஒரு ஜெபம் பண்ணிவிட்டு, இந்த பாடலை எவ்வித கலக்கமும் இன்றி பாட ஆரம்பித்தாள். கரையிலிருந்து அனைவரும் கண்ணீர் மல்க அவளோடு பாடலில் இணைந்தனர். பாடிக் கொண்டிருக்கும் போதே அவள் ஆண்டவரின் சன்னதியை சென்றடைந்தாள்.
1912 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 14ஆம் நாள் இங்கிலாந்து தேசமெங்கும் ஒரே கோலாகலம். ஊரெங்கும் புதிதாக பயணத்தை துவக்க போகும் அந்த அதிநவீன சொகுசு கப்பலை பற்றிய பேச்சுதான்.
டைட்டானிக் என்ற அந்த உலகிலேயே மிகப்பெரிய பிரமாண்டமான சொகுசு கப்பல் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட பயணிகளை சுமந்து கொண்டு இங்கிலாந்தில் உள்ள சௌதாம்ப்டன் துறைமுகத்தில் இருந்து அமெரிக்கா செல்ல தயாராகி கம்பீரமாக நின்றது. அக்கப்பலை வடிவமைத்த பொறியியல் வல்லுனர்கள் இக்கப்பல் கடலில் மூழ்க சாத்தியமே இல்லை என்று பெருமையுடன் கூறினார்கள்.
ஆனால் நடந்தது என்ன? இந்த டைட்டானிக் கப்பல், தன் முதல் பயணத்திலேயே அட்லாண்டிக் சமுத்திரத்தின் பனிபாறைகளில் மோதி வேகமாக மூழ்க ஆரம்பித்தது.
இந்த டைட்டானிக் கப்பலில் உயிர்காக்கும் சாதனங்கள் போதுமான அளவு இல்லை. எனவே திகிலோடு மரணத்தை எதிர்நோக்கிய இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட பயணிகளின் மன அமைதியை காக்க, கப்பலின் இசைக்குழு இந்த பாடலை இசைக்க ஆரம்பித்தது. அப்போது அனைவரும் உள்ளத்தின் ஆழத்திலிருந்து உணர்ச்சி பொங்க இப் பாடலைப் பாடினார்கள்.
மூன்று மணி நேரத்திற்குள் இந்த கப்பலில் இருந்த 1,500 பேர் உறையவைக்கும் குளிர்ந்த சமுத்திர நீரில் மூழ்கி மரித்துப்போனார்கள்.
உள்ளத்தை உருகச்செய்யும் இப்பாடல் இங்கிலாந்து மகாராணியான விக்டோரியா மற்றும் ஏழாம் எட்வர்ட் அரசருக்கும் பிடித்தமான பாடல். அப்படியே அமெரிக்க ஜனாதிபதி வில்லியம் மெக்கின்லி இந்த பாடலை தமக்கு மிகவும் விருப்பமான பாடல் என்று கூறியிருந்தார். இந்நிலையில் 1901ஆம் ஆண்டு மெக்கின்லியை கொலைசெய்வதற்காக ஒருவர் துப்பாக்கியால் சுட்டபோது போது, உயிர் பிரியும் முன் அவர் முணுமுணுத்த வார்த்தைகள் இந்த பாடல்தான். தான் ஒருவேளை மரித்துவிட்டால், இந்த பாடலையே அடக்க ஆராதனையில் பாடும்படி கேட்டுக்கொண்டார். பின்னர் அவரது அடக்க ஆராதனையிலும், ஞாபகார்த்த ஆராதனையிலும் அமெரிக்கா முழுவதும் உம்மண்டை கர்த்தரே நான் சேரட்டும் என்ற இப்பாடல் பாடப்பட்டது.
இவ்வாறு மிகவும் துயரமான தருணங்களில் பலதரப்பட்ட மக்களும் ஆறுதல் பெற பாடிய புகழ்பெற்ற இப்பாடலை எழுதிய சாரா, நூற்றுக்கதிகமான பாடல்களை எழுதியுள்ளார். இவ்வுலக வாழ்க்கையில் வீசும் புயலில் நங்கூரமாக, வெற்றி அளிப்பவராக ஆண்டவர் விளங்குகிறார் என்பதை இப்பாடல் தெளிவாக காட்டுகிறது.
எலிசபெத் 1846 ஆம் ஆண்டு எலும்புருக்கி நோயால் மரித்தாள். அவளது வியாதி படுக்கையில் உதவி செய்த சாராவும் இரண்டு ஆண்டுகளுக்குள் தனது 43வது வயதிலேயே மரித்தாள். இவர் எழுதிய உம்மண்டை கர்த்தரே நான் சேரட்டும் என்ற ஒரே பாடல்தான் கிறிஸ்தவ உலகில் வெகுவாக பாடப்பட்டு வருகிறது.
இந்த பாடலின் செய்தியானது நம்முடைய வாழ்க்கை அனுபவத்தில் பாடுகள், வேதனைகள், போராட்டங்கள், மற்றும் மரண இருளின் பள்ளத்தாக்கில் நாம் நடகக்கும்போது கர்த்தரை நாம் கிட்டி சேரும்போது, அவர் ஆறுதலையும், சமாதானத்தையும், தைரியத்தையும் கொடுப்பார் என்பதாகும்.
கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே, தமிழ் கிறிஸ்தவர்களின் வாழ்க்கையில் பரிசுத்த வேதாகமம் எவ்வளவு முக்கியத்துவம் பெறுகிறதோ அதுபோல கிறிஸ்தவ பாமாலைகளும், கீர்த்தனைகளும் அதிக முக்கியத்துவம் பெற்று, திருச்சபையின் இதயதுடிப்பாக இருக்கிறது.ஆங்கிலம் மற்றும் ஜெர்மானியம் போன்ற மொழிகளில் மேல் நாட்டவரால் எழுதப்பட்டு, மேல்நாட்டு இசையுடன் திருச்சபையில் பாடி வந்த பக்தி பாடல்களை தமிழில் மொழிபெயர்த்து, பாமாலைகள் என்றும் கர்நாடக இராகம், தாளம் ஆகியவற்றை அடிப்படையாக கொண்டு, தமிழில் இயற்றப்பட்ட பக்தி பாடல்கள் கீர்த்தனைகள் என்று அழைக்கப்படுகிறது.
சங்கீதங்களினாலும், கீர்த்தனைகளினாலும், ஞான பாட்டுகளினாலும் ஒருவருக்கொருவர் போதித்து, புத்தி சொல்லிக்கொண்டு, உங்கள் இருதயத்திலே கர்த்தரை பக்தியுடன் பாடுங்கள் என்ற (எபேசியர் 5:9) வார்த்தையின்படி, நம்முடைய ஆலய ஆராதனைகளில் இந்த பாமாலைகள் மற்றும் கீர்த்தனைகளை அதன் பொருளை உணர்ந்து நாம் பாடும்போது நம்முடைய இதயங்கள் ஒருமுகப்படுத்தப்பட்டு உள்ளம் உருகுகிறது, பக்தி உணர்வு பெருகி ஆழ்ந்த இறை உணர்வு பெறுவதற்கும் துணை செய்கிறது. இந்த பாடல்கள் நம்முடைய ஆவிக்குறிய வாழ்க்கையில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதில் சந்தேகமில்லை.
Bible Verse Tamil |