கிறிஸ்தவர்களின் வாழ்க்கையில் பரிசுத்த வேதாகமம் எவ்வளவு முக்கியத்துவம் பெறுகிறதோ அதுபோல கிறிஸ்தவ பாமாலைகளும், கீர்த்தனைகளும் திருச்சபையின் இதயதுடிப்பாக இருக்கிறது. ஆங்கிலம் மற்றும் ஜெர்மானியம் போன்ற மொழிகளில் மேல் நாட்டவரால் எழுதப்பட்டு, மேல்நாட்டு இசையுடன் திருச்சபையில் பாடி வந்த பக்தி பாடல்களை தமிழில் மொழிபெயர்த்து, பாமாலைகள் என்றும் கர்நாடக இராகம், தாளம் ஆகியவற்றை அடிப்படையாக கொண்டு, தமிழில் இயற்றப்பட்ட பக்தி பாடல்கள் கீர்த்தனைகள் என்று அழைக்கப்படுகிறது.
பாடல் பிறந்த கதை:
பாமாலை பாடல்:
பாவ சஞ்சலத்தை நீக்க
ஆசிரியர்:
Joseph Scriven (1819-1886)
இசை:
Charles Crozat Converse (1868)
வேதாகம பகுதிகள்:
சங்கீதம் 55:2
1 பேதுரு 5:7
பாமாலை பாடல்
1. பாவ சஞ்சலத்தை நீக்க
பிராண நண்பர்தான் உண்டே!
பாவ பாரம் தீர்ந்து போக
மீட்பர் பாதம் தஞ்சமே;
சால துக்க துன்பத்தாலே
நெஞ்சம் நொந்து சோருங்கால்,
துன்பம் இன்பமாக மாறும்
ஊக்கமான ஜெபத்தால்.
2. கஷ்ட நஷ்டம் உண்டானாலும்
இயேசுவண்டை சேருவோம்;
மோச நாசம் நேரிட்டாலும்
ஜெப தூபம் காட்டுவோம்;
நீக்குவாரே நெஞ்சின் நோவை
பெலவீனம் தாங்குவார்;
நீக்குவாரே மனச் சோர்பை,
தீய குணம் மாற்றுவார்.
3. பெலவீனமான போதும்
கிருபாசனமுண்டே;
பந்து ஜனம் சாகும் போதும்
புகலிடம் இதுவே;
ஒப்பில்லாத பிராண நேசா!
உம்மை நம்பி நேசிப்போம்;
அளவற்ற அருள் நாதா!
உம்மை நோக்கிக் கெஞ்சுவோம்.
பாடல் பிறந்த கதை
ஜோசப் ஸ்கிரீவன் என்பவர் 1819 ம் ஆண்டில் அயர்லாந்தில் சீப்பாட்ரிக் என்னும் இடத்தில் பிறந்தார். இவருடைய தகப்பனார் இங்கிலாந்து கடற்படையின் மாலுமியாக பணியாற்றிக்கொண்டிருந்தார்.
இளமைக் கல்வியை முடித்த ஸ்கிரீவன் பின்னர் அயர்லாந்தில் உள்ள டப்ளின் நகரில் திரித்துவ கல்லூரியில் பயின்று தேறினார்.
இந்நிலையில் ஜோசப் ஸ்கிரீவன் மனதார விரும்பி, திருமணம் செய்ய விரும்பிய, நிச்சயிக்கப்பட்டிருந்த பெண், அவர்களின் திருமண நாளுக்கு முந்தின நாள் ஸ்கிரீவனை சந்திக்க இந்த மணப்பெண் குதிரையில் ஏறி, ஒரு ஆற்றை கடக்க முயன்ற பொழுது, குதிரையானது எதைப்பார்த்தோ மிரண்டு தறிக்கெட்டு ஓடினபோது, குதிரையானது இந்த பெண்ணை அந்த ஆற்றில் கரையில் தூக்கியெறிந்தது.
அப்பொழுது தலையில் ஏற்பட்ட காயத்தால் அந்த மணப்பெண் சுயநினைவிழந்து ஆற்று நீரில் மூழ்கினாள். இதை கரையின் அந்த பக்கத்தில் இருந்து பார்த்துக்கொண்டிருந்த ஸ்கிரீவன் செய்வதறியாமல் ஓடிவந்து பார்க்கும்போது அந்த பெண் ஏற்கணவே தண்ணீரில் மூழ்கி இறந்துபோனதை பார்த்து துடிதுடித்துப்போனதினால் இந்த காட்சியை நினைத்து நினைத்து இவரின் மனநிலையும் பாதிக்கப்பட்டது.
இந்த துயரமே ஸ்கிரீவனை இயேசு கிறிஸ்துவிடம் திசைதிருப்பியது.
ஸ்கிரீவன் தெய்வபக்தி நிறைந்தவராகவும், பிறருக்காக வாழ்பவராக விளங்க ஆரம்பித்தார். ஆகவே தன்னிடமிருந்த பணம், பொருள் அனைத்தையும் ஏழை எளியவர்களுக்கும் மற்றும் அனாதைகளுக்கும் செலவு செய்தார்.
அயர்லாந்திலேயே அதிக சொத்துக்களும் வீடுகளும் சுகமாக குடியிருக்கும் நிலை இருந்தாலும் தனது 25 ம் வயதில் கனடா நாட்டிற்கு குடிபெயர்ந்து அங்கே றைஸ்லேக் நகரில் ஒரு பள்ளியின் ஆசிரியராகி பிள்ளைகளுக்கு பாடம் கற்பித்து கொடுத்தார். பின்னர் ஹாமில்டான் நகரிலுள்ள பள்ளியில் ஆசிரியராய் பணியாற்றினார்.
இந்த சூழ்நிலையில் ஸ்கிரீவன் கனடா நாட்டில் இருந்த அயர்லாந்தில் தன்னுடன் இணைந்து கல்லூரியில் பயின்ற நண்பனின் உறவின எலிசா என்ற பெண்ணோடு பழக்கம் ஏற்பட்டு, நாளடைவில் அன்பாக மாறி இருவரும் 1854 ம் ஆண்டு திருமணம் செய்துகொள்ள முடிவு செய்திருந்தார்கள். இந்நிலையில்
23 வயதான எலிசா வுக்கு நிமோனியா காய்ச்சல் வந்தது. இதில் மிகவும் பெலவீனப்பட்டுப்போன நிலையில் எலிசாவும் மரித்துப்போனாள்.
ஸ்கிரீவனீன் வாழ்க்கையே தலைகீழாக மாறிப்போனது. மிகவும் மனம் நொந்துபோனார். இந்நிலையில் ஜோசப் ஸ்கிரீவன் கவிதைகள் எழுத ஆரம்பித்தார். இதில் தனது மனதின் வேதனைகளை வெளிப்படுத்த ஆரம்பித்தார்.
இந்நிலையில் ஸ்கிரீவன் இயேசுவின் அன்பினால் தொடப்பட்டு வேதத்தை வாசிக்கவும் தன்னுடைய நேரத்தை ஜெபத்தில் செலவழிக்கவும் ஆரம்பித்தார்.
ஒரு தெய்வீக சமாதானத்தையும் ஆறுதலையும் உணர ஆரம்பித்தார். இயேசுவின் மலைப்பிரசங்கம் அவரது வாழ்க்கையை மாற்ற ஆரம்பித்தது. தன்னுடைய ஆஸ்திகள் எல்லாவற்றையும் ஏழைககளுக்கும், அநாதைகளுக்கும் திக்கற்றவர்களுக்கும் செலவு செய்ய ஆரம்பித்தார். இதற்கு தாம் ஏழையாக வாழ்வது என்று உறுதியான முடிவு செய்திருந்ததினால் இவ்வாறு செயல்பட ஆரம்பித்தார். கிறிஸ்துவின் தியாகத்தை தன்னுடைய கவிதைகளில் வெளிப்படுத்த ஆரம்பித்தார். இப்படி கவிதை எழுதுவது அவரது நெருங்கிய நண்பர்களுக்கு கூட தெரியாது.
இப்படி எலிசா மரித்து 10 ஆண்டுகள் கடந்துபோனநிலையில் அயர்லாந்தில் ஸ்கிரீவனின் தாயார் மிகவும் பலவீனப்பட்டு தனிமையாய் இருப்பதை கடிதம் மூலம் ஸ்கிரீவனுக்கு தெரிவித்தார். இந்நிலையில் தன்னுடைய துயரமான வேளையிலும் தன் தாயாருக்கு ஆறுதல் அளிப்பதற்காக ஸ்கிரீவன் *பாவ சஞ்சலத்தை நீக்க பிராண நண்பர்தான் உண்டே* என்ற பாடலை எழுதி அனுப்பினார்.
இப்பாடலின் மூலம் இயேசுதான் நமக்கு நண்பர், அவர்தான் ஆறுதலும் சமாதானமும் தந்து நல்ல நண்பராக இருக்கிறார் என்பதை ததன்னுடைய வாழ்க்கை அனுபவத்தின் மூலம் வெளிப்படுத்தியிருந்தார். இப்பாடலை வெளியிடவோ, மற்றவர்களுக்கு கான்பிக்கவோ ஸ்கிரீவன் விரும்பவில்லை. ஸ்கிரீவன் தனது வாழ்க்கையின் சொந்த அனுபவத்தில் இருந்தே இப்பாடலை எழுதியுள்ளார்.
அனேக ஆண்டுகளுக்கு பின்னர் ஸ்கிரீவன் மரணப்படுக்கையில் இருக்கும் பொழுது இப்பாடலின் கைப்பிரதி, அவர் படுக்கை அறையில் இருந்து எடுக்கப்பட்டது. கவிதை திறமையே இல்லாத அவரால் இப்பாடலை எப்படி எழுத முடிந்தது? என்று வினவிய பொழுது, நானும் என ஆண்டவரும் சேர்ந்தே இப்பாடலை எழுதினோம் என்று பதிலளித்தார்.
ஜோசப் ஸ்கிரீவன் அவர்களின் கடைசிகாலத்தில் சுகவீனமடைந்தவராய், வருமையோடு போராடியவராய், மன வியாகுலம் நிறைந்ததாக இருந்தது. இறுதியில் 1886ஆம் ஆண்டு தனது 66 வயது வயதில் ஸ்கிரீவன் றைஸ்லேக் என்னும் ஊரில் ஒரு சிற்றாற்றில் தவறி விழுந்து, மூழ்கி, காலமானார். ஆயினும் இவர் எழுதிய இந்த ஒரே ஒரு பாடல், அநேக மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு, ஆயிரக்கணக்கான மக்களுக்கு, துன்பத்தில் மிகுந்த ஆறுதலை கொடுத்துக்கொண்டே இருக்கிறது.
இப்பாடலுக்கு ஜெர்மனியில் சங்கீத பயிற்சி பெற்று, அமெரிக்காவின் பென்சில்வேனியாவில் உள்ள ஈரி என்ற ஊரில் வாழ்ந்த வழக்கறிஞரான சார்லஸ் கான்வர்ஸ் அருமையான ராகம் அமைத்துக் கொடுத்தார்.
இந்த பாடல் உலக பிரசித்திபெற்ற அமெரிக்க சுவிசேஷகர் சாங்கி அவர்களின் முதல்தர நற்செய்தி பாடல் தொகுப்பில் இடம் பெற்று, உலகமெங்கும் பல உயிர் மீட்சி கூட்டங்களிலும் ஜெப கூட்டங்களிலும்,
இன்றும் பாடப்பட்டு வருகிறது.
படிப்பறிவில்லாத பாமர மக்களும் எளிதில் புரிந்து கொள்ளும் வகையில் எழுதப்பட்டிருந்த இப்பாடல் உலகில் உள்ள நான்கு லட்சம் கிறிஸ்தவ பாடல்களில் மிகவும் விரும்பி பாடப்படும் பாடலாக புகழ்பெற்றது.
பல மிஷனரிகள் தங்கள் பணித்தளங்களில் புதிய விசுவாசிகளுக்கு சொல்லிக்கொடுக்கும் முன்னோடி பாடலாகவும் இது விளங்குகிறது.
இந்த பாடலின் கருத்தை நீங்களும் உணர்ந்தவர்களாக பாடும்போது தெய்வீக சமாதானத்தையும் ஆறுதலையும் நம்பிக்கையையும் பெறுவீர்கள் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை. ஒருமுறை பாடித்தான் பாருங்களேன்.
இந்த பாமாலைகள் மற்றும் கீர்த்தனைகளை அதன் பொருளை உணர்ந்து நாம் பாடும்போது நம்முடைய இதயங்கள் ஒருமுகப்படுத்தப்பட்டு உள்ளம் உருகுகிறது, பக்தி உணர்வு பெருகி ஆழ்ந்த இறை உணர்வு பெறுவதற்கும் துணை செய்கிறது. இந்த பாடல்கள் நம்முடைய ஆவிக்குறிய வாழ்க்கையில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதில் சந்தேகமில்லை. ஆகவே இந்த குழுவின் இணைப்பை உங்கள் நண்பர்கள், உற்றார், உறவினர்கள் மற்றும் திருச்சபை மக்களுக்கும் அனுப்பி வையுங்கள். கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக.