======================
திருச்சபையின் செல்ல மகள்கள்
Rev. Edith Pearl Morgon (1912 - 1997)
==================
குழந்தை பருவம்:
அமெரிக்கா தேசத்தில் மினியாபோலிஸ் நகரத்தில் 1912 ஜுன் 14 ஆம் நாள் ஆர்தர் மார்கன் மற்றும் ஐடா மார்கன் தம்பதியினருக்கு மகளாக ஈடித் மார்கன் பிறந்தார். கிறிஸ்வ குடும்பத்தில் பிறந்ததினால் பெற்றோர் தங்கள் அன்போடு இயேசுவின் அன்பையும் சேர்த்தே ஊட்டி வளர்த்தனர். சிறுவயது முதற்கொண்டே ஈடித் ஆலயத்திற்கு செல்வதில் அலாதி பிரியம் கொண்டாள். ஞாயிற்றுக்கிழமை வந்துவிட்டாலே முகமலர்ச்சி அடைந்துவிடுவாள் ஏனெனில் அங்கு நடைபெறும் ஓய்வுநாள் பள்ளியில் ஜார்ஜ் மாமா சொல்லும் கதைகள் தன்னம்பிக்கையையும் கிறிஸ்துவைப்பற்றிய விசுவாசத்தையும் வளர்த்தது. ஈடித் 8 வயதாக இருக்கும்போது குடும்பமாக அந்த நகரில் நடைபெற்ற ஒரு எழுப்புதல் கூட்டத்திற்குச் சென்றிருந்தனர். அன்றைக்கு தேவசெய்திகள், எழுப்புதல்நேரம், அர்ப்பணிப்பு நேரம் வித்தியாசமாக இருந்தது. அன்று இரவு கர்த்தர் ஈடித்தை ஊழியம் செய்ய அழைப்பதை உணர்ந்தாள். ஆகவே அடுத்தநாள் நடைபெற்ற கூட்டத்தில் முன்வரிசையில் நின்று ஈடித் தன்னை தேவனுக்கு அர்ப்பணித்துவாழ முடிவுசெய்தாள்.
நற்செய்தியில் ஆர்வம்:
ஈடித்க்கு இளமையில் ஏற்பட்ட பலவீனத்தின் நிமித்தம் அநேக இரவுகள் மூச்சுத் திணறலினால் கஷ்டப்பட்டாள். இந்த வியாதியினால் ஆரம்பப்பள்ளிக்கே அவளால் செல்லமுடியவில்லை. அவர்கள் ஊரில், கிறிஸ்தவ மிஷனெரி அலையன்ஸ் இயக்கத்தாரின் சுகமளிக்கும் கூட்டங்கள் நடந்தன, அதில் கர்த்தரின் குணமாகும் வல்லமை, ஈடித் மேல் வெளிப்பட்டது. அன்று முதல் வாழ்நாளெல்லாம் அவளுக்கு மூச்சுத்திணறலே இல்லை. இதனால் தான் பெற்ற மீட்பின் நற்செய்தியைச் சுவிசேஷமாய் அண்டை அயலாருக்குச் சொல்ல வேண்டும். மேரும் நாடுகளிலும், மலைகளிலும், கடல்கடந்தும் நாடுகடந்தும் கூட இதைச் சுமந்து சொல்ல வேண்டுமென்ற தணியாத தாகத்தை ஏற்படுத்தியது. ஆகவே நான் பெரியவளாகி மிஷனெரியாவேன் என்று ஈடித் கிளிப்பிள்ளைபோல் நாளும் பொழுதும் சொல்லிக்கொண்டே இருந்தாள்.
ஊழியத்தில் ஈடுபாடு:
ஈடித் பெற்றோர் கொடுக்கும் பணத்தை சேமித்து வைத்து மிஷனெரி சரித்திரங்களை வாங்கி படிக்க ஆரம்பித்தாள். ஈடித் 10 ஆம் வகுப்பு வடிக்கும்போது பாட்டுக்கும் தனக்கும் சம்பந்தம் இல்லாவிட்டாலும் பயிற்சியிலும் இசைக்குழுவிலும் சேருவதற்கு ஆர்வமாக இருந்தாள். பள்ளியில் படிக்கும் போதே ஓய்வுநாட்பள்ளி மாணவர்களுக்கு ஆசிரியராக இருந்தாள். கோடைவிடுமுறைவந்துவிட்டால் ஒரே கொண்டாட்டம் தான். கோடைமுகாம்களுக்கு தவறாமல் செல்வாள். அங்கு வேடிக்கை விளையாட்டு, சைக்கிள் பந்தயம், பாடல் இவைகளோடு சுவிசேஷச் செய்தியும் கிடைத்தது. அம்முகாமுக்கு வந்தவர்களெல்லோருக்கும் இயேசுவுடன் நெருக்கமான உறவு வைக்கக் கற்றுக்கொடுத்தாள். தன் சசுபள்ளிமாணவர்களுக்குப் பழகுவதற்கினிய சிநேகிதியாக இருருந்தாள். ஆகவே அதிக நண்பர்கள் இருந்தார்கள்.
இளமை பருவம்:
ஈடித் கல்லூரியில் படிக்கும்போது வில்பர் அவளுக்கு சிநேகிதன் ஆனார். ஈடித்தின் பரிசுத்தமான வாழ்க்கை, வில்பரை அதிகம் கவர்ந்தது. ஆகவே ஈடித்தை திருமணம் செய்துகொள்ள விரும்பினார். ஆனால் வில்பரைக் கைபிடித்து வாழ்க்கைத் துணையாக்க வேண்டும் என்ற எண்ணத்தைவிட அவரை கர்த்தரிடம் கிட்டிச்சேரவைக்க வேண்டும் என்ற ஆசை அவளுக்குள் தீயாய் எரிந்தது. நானல்வ கிறிஸ்துவே என்ற ஈடித்தின் வாழ்க்கையின் சாரமும், தன்னை விரும்பிய வில்பரைக் கல்வாரியண்டை கொண்டுவர ஏதுவாயிருந்தன. இவர்கள் ஒன்றாகவே கல்லூரியில் படித்த போதும், பரிசுத்த அன்பு அவர்கள் உறவை அலங்கரித்ததால் அவர்கள் பக்க வழியில் செல்லலில்லை.
மிஷனெரி தாகம்:
வாலிய வயதில் இருந்த ஈடித்திற்கு கோடை முகாம்கள், மிஷனெரி இயக்கங்கள் ஆகியவை தெய்வீகப்பாதையில் நடைபோட வைத்தன. இந்தியாவில் மிஷனெரிகளாய் பணியாற்றிக் கொண்டிருந்தவர்கள் அமெரிக்கா வரும்போது அவர்களிடம் இந்தியாவைப்பற்றி அதிகம் விசாரிப்பாள். இந்நிலையில் ஈடித் வெற்றிகரமாகப் தன்னுடைய கல்லூரி படிப்பை முடித்தாள். ஈடித்தின் தாயாருக்கு அமெரிக்காவில் Medford, Massachusetts பகுதியில் இருந்த புகழ்பெற்ற Fletcher கல்லூரியில் உயர்கல்வி படிக்கவைக்க அலாதி ஆசை. ஆனால் பணம் அதிகமாக செலவாகுமே என்ற கவலை ஈடித்தின் தந்தைக்கு இருந்தது. இந்நிலையில் ஈடித்தின் தந்தை, தன் சிநேகிதர்கள் கொடுத்த பணஉதவியோடு ப்ளெச்சர் கல்லூரியில் சேர்த்து படிக்கவைத்தார். முதலிரண்டு வருடங்களின் ஓய்வு நேரங்களில், ஈடித் படிக்கும்போதே வேலைபார்த்து சம்பாதிக்கும் வேலையில் சேர்ந்துகொண்டாள் கூச்சம் என்ற கூட்டுக்குள் புழுவாயிருந்த ஈடித், படபடக்கும் பட்டாம்பூச்சியானது இந்தக் சுல்லூரியில் தான். அவளது வசீகரிக்கும் பேச்ச வியக்கவைக்கும் ஆழ்ந்த கருத்துச் செரிவும் ஈடித்தை ஜொலிக்க வைத்தன. அவளது பேச்சு திறமை, எழுத்து திறமை மற்றும் நாடகத்திறமை அக்கல்லூரியில் உயர உயரக் கொண்டு சென்றது.
மிஷனெரியாக அர்பணிப்பு:
ஈடித் முதலாவது எழுதிய அமெரிக்க ஐக்கிய நாடுகளில் ஒரு சீன மாணவர் நாடகத்தில் அவள்தான் கதாநாயகியான சீனப்பெண். இவள் பன்னாட்டு உடையில் சில மாணவிகளோடு பகட்டாய் வர, அவளது தங்கை கிரேஸ் இசை இசைக்க, சீனப் பெண்ணாய் ஈடித் அவையினரைச் மெய் சிலிர்க்க வைத்துவிட்டாள். அவளது நடிப்பு அவளைப் புகழுலகில் பறக்க வைத்துவிட்டது. ஈடித் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்துக்கொண்டு இருக்கும்போது மாணவர்கள் மத்தியில் நடைபெற்ற கள்வென்ஷன் கூடுகையில் ஒரு மிஷனெரி என் பிதா என்னை அனுப்பினது போல் நானும் உங்களை அனுப்புகிறேன் என் யோவான் 2:21 வசனத்தை மையமாக கொண்டு இந்தியாவுக்கு மிஷனெரிகள் தேவை என்று அறைகூவல் விடுத்தார். இந்த நேரத்தில் ஈடித் இந்தியாவுக்கு மிஷனெரியாக செல்ல தன்னை அற்பணித்தாள்.
மிஷனெரி ஆயத்தம்:
அயல்நாடுகளுக்கு மிஷனெரியாக செல்ல வேண்டுமானால் வேதாகம கல்லூரியில் பயின்றிருக்க வேண்டும். ஆகவே 1935 ஆம் ஆண்டு ஈடித் வேதாகம கல்லூரியில் படிக்க ஆசைப்பட்ட நேரத்தில் படிக்க வைக்க வசதியில்லாததால் தந்தை மறுத்துவிட்டார். ஆகவே பொருளாதார தடைகளைத்தாண்டிச்செல்ல St. Paul Institute ல் சேர்ந்து கொண்டாள். இங்கு நற்செய்தி ஊழியத்திற்கு அதி உன்னத இடம் கொடுக்கப்பட்டது. ஈடித் தான் படிக்கும் செலவைச் சந்திப்பதற்காகவும், பட்டப்படிப்புச் செலவைத் திருப்பிக்கொடுக்கும் வண்ணமும், சொந்த ஊரிலேயே ஆசிரியப் பணி செய்தார். இந்தப்பணியில் கைநிறைய சம்பம் கிடைத்ததால், பட்டப் படிப்பின் உதவித் தொகைக் கடனை உடனடியாக தீர்த்துவிட்டார்கள். வெகுசுத்தமாக, நீடிய பொறுமையுடன், அன்புடன் பணிசெய்த ஈடித்தை நிரந்தரமாக இந்த பள்ளியில் ஆசிரியராக பணியில் அமர்த்திக் கொள்ளப்- பேச்சுவார்த்தை நடந்தது. ஆனால் ஈடித்தோ மிஷனெரியாக இந்தியா செல்லும் கனவு கலைந்துவிடுமோ என்ற எண்ணத்தில் அந்த வேலையை இராஜினாமா செய்தார்.
ஈடித் அமெரிக்க ஊழியம்:
1942 இல் அமெரிக்காவில் மினசோட்டா, கென்டக்கி, மற்றும் மினியாபோலிஸ் என்ற மாவட்டங்களில் ஈடித் பயணம் செய்து சிறுசிறு ஜெபக் குழுக்களை உருவாக்கினார். இந்நிலையில் உலக சுவிசேஷ ஊழியத்தின் (World Gospel Mission) மாநில அளவிலான ஜெபக்குழு தலைவியாக ஈடித் பொறுப்பேற்று தீவிரமாய்ச் செயல்பட்டார். ஈடித் மார்கன் அம்மையாரின் முழங்கால் போராட்டத்தில் முதல் மாநில முகாமிலேயே முதல் மிஷனெரியாகக் கென்யா செல்லவிருந்த அம்மையாரின் மாணவரைத் தாங்கும் நிதி திரட்டப்பட்டதை அறிந்து பேரானந்தம் கொண்டார்.
1944 ஏப்ரல் மாதம் அமெரிக்காவில் சின்சினாட் பகுதியில் உலக நற்செய்தி ஊழியத்தின் (World Gospel Ministry) வருடாந்தர முகாம் நடந்தது. அப்போது ஈடித் மார்கன் அம்மையாரின் உள்மனம் சொன்னது, "இந்த முகாமிலேயே நீ இந்தியாவுக்கான மிஷனெரி என்று அபிஷேகிக்கப்படுவாய்". ஆகவே வாழ்க்கையின் அந்த முக்கியமான கட்டத்தில் தன்னுடனிருக்குமாறு தன்னுடைய தாயையும் ஈடித் மார்கன் அழைத்துச் சென்றார். மாநில அளவிலான இந்த முகாமில் அமெரிக்காவில் பல ஜெபக்குழுக்களுக்கு தலைவியாக இருந்த ஈடித் மார்கன் அப்போது நடைபெற்ற செயற்குழு கூடுகையில் நான் ஒரு மிஷனெரியாக இந்தியா செல்ல அனுமதிக்க வேண்டும் என்று கூறினார். அப்போது அங்கிருந்த ஒரு செயற்குழு தலைவர் தற்சமயம் யாரையும் இந்தியா அனுப்புவதாக இல்லை, ஆகவே உன்னுடைய நீ பணியைத் தொடர்ந்து செய் என்று கட்டளை கொடுத்தார். இது ஈடித்க்கு மிகுந்த மனசோர்வை கொடுத்தது. இரண்டு நாட்களுக்கு பின் செயற்குழு நிறைவடையும் வேளை வந்தபோது, அதே தலைவர் ஈடித் மார்கனிடம் அவள் இந்தியாவுக்கு மிஷனரியாக அனுப்பப் போவதாகச் சொன்னார். இதைத்கேட்ட ஈடித் பெரு மகிழ்ச்சியுடன் தேவனுக்கு நன்றி செலுத்தினார்.
இந்திய பயணம்:
1944 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் 1945 வரை ஈடித் அமெரிக்காவில் இருந்த ஜெபக்குழுக்களை நேரில் சந்தித்துப் பிரியா விடை பெற்றார். அப்பொழுது இரண்டாம் உலக மகாயுத்தம் நடந்து கொண்டிருந்த சூழ்நிலையிலும் மேரி, எஸ்தர், வொஜீனியா, மற்றும் ஈடித் ஆகியோர் மிஷனெரிகளாக இந்தியா செல்வதற்காய் அமெரிக்காவிலிருந்து மத்திய தரைக்கடல் மார்க்கமாகச் செல்லும் முதல் போர்க் கப்பலில் ஏறினார்கள். ஈடித்தின் பெற்றோர் கண்ணீர் மல்க விடைகொடுத்தனர். கடற்பயணத்தில் 1945 ம் ஆண்டோ ஜூலை மாதம் முதலாம் நாள் இந்நியாவில் பம்பாய் துறைமுக கலங்கரை விளக்கு தெரியஆரம்பித்தது. இந்நால்ரும் மேல்தட்டில் நின்று பம்பாயைப் பார்த்துக் கொண்டிருந்தனர். பின்பு கரைக்கு வந்து சேர்ந்து வந்து அவர்களுக்கென்று ஒழுங்கு செய்யப்பட்ட இடத்தை வந்தடைந்தனர். அங்கு கட்டில்களைத் தவிர வேறொன்றுமில்லாத அந்த அறையில் இரவு படுத்து இணைப்பாறினார்கள். விடிந்ததும் விடியாததுமாக பம்பாயில் அடைமழை பெய்ய ஆரம்பித்தது. அப்படிப்பட்ட மழையை அவர்கள் பார்த்ததேயில்லை. பின்னர் நான்குபேரும் பேரும் இரண்டு நாட்கள் இரயில் பயணம் ரயிலில் மேற்கொண்டு சென்னை வந்தடைந்தார்கள்.
இந்திய மண்ணில் சந்தித்த சோதனைகள்:
சென்னை வந்து சேர்ந்த ஈடித் அம்மையாரும் மற்ற மூன்று மிஷனெரிகளும் பெங்களூருக்கு பயணம் மேற்கொண்டு பங்காரப்பேட்டை தென்னிந்திய வேதாகமப்பள்ளி (South Asian Bible School) வந்து சேர்ந்தார்கள். இந்தியாவில் இருந்த பருவ சீதோஷணம் ஈடித் மார்கன் அம்மையாருக்கு ஒத்துவராமல் போகவே மஞ்சள் காமாலை வியாதி தொற்றிக்கொள்ளவே பெங்களுரில் இருந்த மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்கள். அங்கு சுகம் பெற்று மீண்டும் பங்காரப்பேட்டை வந்தபோது மீண்டும் பலவீனம் தாக்கியது. ஈடித் மார்கனின் சுகவீனத்தை அறிந்த பெற்றோர் மகளை அமெரிக்காவுக்கு வந்துவிடுமாறு அழைத்தார்கள். ஈடித் மார்கனை ஆசீர்வதித்து வழி அனுப்பி வைத்த மிஷனெரி ஸ்தாபனமோ அவர்களை திருப்பியனுப்பிவிட முடிவு செய்தது. ஆனால் இந்தியாவில் மரித்தாலும் மரிப்பேனே தவிர, ஆத்துமா ஆதாயம் செய்யாமல் அமெரிக்கா திரும்பி செல்லமாட்டேன் என்பதில் உறுதியாய் இருந்தார். மூன்று மாத சிகிச்சைக்குப்பின் ஈடித் பூரண குணம் அடைந்தார்.
இந்திய மண்ணில் ஊழியம்:
பெங்களூருக்கு அருகே இருந்த பங்காரப்பேட்டையில் ஏறக்குறைய ஓராண்டு கழிந்த நிலையில் தென்னிந்திய வேதாகமப்பள்ளி நிறுவனத்தில் (SIBS) ஈடித் அம்மையார் வேதாகம கல்லூரி மாணவர்களுக்கு பவுலின் நிருபங்களை (Pauline Theology) கற்றுக் கொடுக்க ஆரம்பித்தார். இந்த வேதகம கல்லூரியில் சாம் கமலேசன் மற்றும் தியோடர் வில்லியம்ஸ் ஆகியோர் இறையியல் கல்வி பயின்றுகொண்டு இருந்தார்கள். கோடைவிடுமுறை நாட்களில் தெருக்களில் இருக்கும் குழந்தைகளின் மீது ஈடித் ஆழ்ந்த அக்கறை கொண்டிருந்தார், மேலும் அவர்களை கிறிஸ்துவுக்குளாக வழிநடத்த விரும்பினார். சில மாதங்கள் சென்ற நிலையில் 1952 ஆம் ஆண்டில் சிறுவர்கள் மத்தியில் ஊழியம் செய்துகொண்டிருந்த தற்காலத்தில் VBS அண்ணாச்சி என்று அழைக்கப்படும் திரு. P. சாமுவேல் அவர்கள் ஈடித் மார்கன் அம்மையாரின் மாணவராக சேர்ந்தார். தனது சிறுவர் ஊழிய அனுபவங்களும், கைவசம் இருந்த சிறுவர் ஊழிய உபகரணங்களும், பாடங்களும் கைவசம் இருந்த நிலையில் மாணவர் P. சாமுவேலின் வருகை ஈடித் அம்மையாருக்கு பேரானந்தமாக இருந்தது. அப்போது அமெரிக்காவில் சிறுவர்களுக்கு கோடைவிடுமுறை நாட்களில் VBS வகுப்புகள் நடத்துவதுபோல் இந்தியாவிலும் ஆரம்பிக்க வேண்டும் என்ற விருப்பத்தை P. சாமுவேலிடம் வெளிப்படுத்தினார்.
இந்தியாவில் VBS வகுப்புகள்:
ஈடித் அம்மையாரின் சிறுவர் ஊழிய அனுபவங்களும் அனுகூலங்களும் P. சாமுவேலின் ஊழிய ஆவலும் அவர்களை இந்திய மண்ணில் ஊழியத்தை உறுதிப்படுத்த வழிவகுத்தது. இருவரும் இணைந்து சிறுவர்களுக்கு விடுமுறை வேதாகம பள்ளி ஆரம்பிக்க திட்டமிட்டார்கள். ஆகவே 40 வயதான ஈடித் மார்கன் அம்மையார், P. சாமுவேல், சாம் கமலேசன், தியோடர் வில்லியம்ஸ், ஃபிரெட் கோகாவி (Fred Gokavi) அவர்களும் மற்றும் சில திறமையான இளைஞர்கள் எல்லோரும் சேர்ந்து 1952 ஆம் ஆண்டு கோவில்பட்டி மண்ணில் குருவானவராக இருந்த Rev. Duraisamy அவர்கள் ஜெபித்து விடுமுறை வேதாகம பள்ளி (VBS) ஊழியத்தை ஆரம்பித்தார்கள். இதில் 72 சிறுவர்கள் பங்குபெற்றார்கள். இவர்களுக்கு வேதாகமத்தில் இருந்து பல கதைகளை கற்றுக்கொடுத்து நீதிபோதனைகளை கற்பித்தார்கள். 1953 ஆம் ஆண்டில் ஈடித் அம்மையார் மூலமாக தூதத்துக்குடியில் விடுமுறை வேதாகம பள்ளி ஆரம்பிக்கப்பட்டதில் 800 மாணவர்கள் கலந்துகொண்டார்கள்.
திருநெல்வேலியில் VBS வகுப்புகள் ஆரம்பம்:
1954 இம் ஆண்டு திருநெல்வேலி திருமண்டலத்தில் பாளையம்கோட்டையில் VBS வகுப்புகள் அறிமுகம் செய்யப்பட்டது. இதில் 1500 மாணவர்கள் கிறிஸ்துவைப்பற்றி அறிந்துகொண்டார்கள். 1955 ஆம் ஆண்டு திருநெல்வேலி திருமண்டலத்தின் பேராயராக இருந்த ஜெபராஜ் அவர்கள் ஈடித் மார்கன் அம்மையாரை திருநெல்வேலியில் தங்கி இருந்து, சிறுவர்கள் மத்தியில் ஊழியம் செய்ய அன்பாய் பாளையங்கோட்டையில் சாராள் டக்கர் பள்ளியில் தங்கியிருக்க எல்லா வசதிகளையும் செய்து கொடுத்தார்கள். திருநெல்வேலி திருமண்டலத்தில் சிறுவர்கள் மத்தியில் விடுமுறை வேதாகம பள்ளி (VBS) நடத்திவந்த ஈடித் மார்கன் அம்மையாரின் ஆரம்ப நாட்களில் அவர்களுக்கு சகோதரி லீலாவும், சகோதரி பாக்கியத்தாயும் உறுதுணையாக இருந்தார்கள். இவர்கள் மூவரும் சேர்ந்து சிறுவர்களுக்கு கிறிஸ்துவைப்பற்றி அறிவிக்க திருநெல்வேலி பகுதியிலுள்ள கிராமங்களுக்கு கால்நடையாய் அலைந்து திரிந்து ஊழியம் செய்தார்கள்.
திருநெல்வேலி ஊழிய அனுபவங்கள்:
ஈடித் மார்கன் அம்மையார் பஸ் வசதி இல்லாத அக்காலத்தில் நடந்தும், மாட்டுவண்டியிலும் சென்று அவர்களுக்கு கதைகள் மற்றும் படங்கள் மூலமாக கிறிஸ்துவை அறிவித்து ஆத்தும ஆதாயம் செய்தார்கள். ஒரு சமயம் அம்மையார், சகோதரி லீலாவும், சகோதரி பாக்கியத்தாய் ஆகிய மூவரும் நாஞ்சான்குளம் போக மாட்டு வண்டியில் சென்றார்கள். வண்டி கரடி முரடான பாதையில் டக் டக் என மெள்ள நகர்ந்தது. உடளே மார்கன் அம்மையார் அந்த வண்டிக்காரரிடம், 'இப்படி மெதுவாக வண்டி போனால் எப்படிப் போய், நாங்கள் சேர்வோம். சீக்கிரம்...சீக்கிரம் ' என்றார்கள். பின்னர் சிறிது நேரம் கழித்து, உன்னுடன் மாட்டு வண்டியில் செல்வதைவிட நான் வேமாக நடந்துசென்று விடுவேன்' என்று இறங்கப்பனார்கள். ஆனால் வண்டிக்காரரோ, அம்மா வேண்டாம்... வேண்டாம்... இப்பொழுது வண்டி வேகமாகப் போகிறதைப் பாருங்கள் எனக் குடையை எடுத்து மாடுகளின் முன் காட்ட மாடுகள் துள்ளிக் குதித்து வேகமாக ஓட ஆரம்பித்தது. மாட்டு வண்டியானது மேடு பள்ளங்களில் ஏறி இறங்கி வேமாக ஓடவே மார்கன் அம்மையார் பயந்துபோய் போதும்... போதும்.... மெதுவாகவேப்போ என்று வண்டிக்காரனிடம் சிரித்துக்கொண்டே சொன்னார்கள்.
இந்திய கலாச்சாரத்தில் நற்செய்திப்பணி:
ஊழியத்தின் பாதையில் ஈடித் அம்மையார் பேரூந்தில் போகும் போதும் வரும்போதும் ரோட்டில் பல மணிநேரம் காத்திருந்ததும் உண்டு. அப்போது அங்கு இருக்கும் சிறுவர்களை அழைத்து அவர்களுக்கு கிறிஸ்துவின் நற்செய்தியை அறிவிப்பார்கள். ஈடித் மார்கன் அம்மையார் எங்கு சென்றாலும் இந்தியப் பெண்மணியைப்போல சேலை உடுத்திக்கொண்டு, தலையில் பூ சூடிக்கொண்டு மக்களோடு மக்களாக உணவு உட்கொண்டு, அவர்களோடு தரையில் அமர்ந்து, அவர்களோடு படுத்துறங்கி நற்செய்திபணி செய்தார்கள். சிறுவர்களை எப்படியும் இயேசுவிடம் வழி நடத்த வேண்டும் என்பதே அவர்களது நோக்கமாக இருந்தது. இந்திய கலாச்சாரமும் உணவும் உடையும் அவர்களுக்கு மிகவும் பிடித்திருந்தது.
திருநெல்வேலியில் VBS ஊழிய வளர்ச்சி:
ஈடித் அம்மையார் சிறுவர்கள் மத்தியில் ஊழியம் செய்ய ஓர் ஜீப் வாங்கி அவரே ஓட்டிச்சென்று நற்செய்திபணி செய்தார்கள். 1956 - 58 ஆம் ஆண்டுகளில் பாளையங்கோட்டை பகுதியில் 10 புதிய மையங்களில் VBS வகுப்புகள் நடத்தப்பட்டன. கோவில்பட்டி பகுதியில் VBS ஐக்கிய ஜெபக்குழுக்கள் எழும்பின. இதில் இருந்தவர்கள் 1959 ஆம் ஆண்டில் பின் தொடர் ஊழியமாக கோவில்பட்டியில் நண்பர் சுவிசேஷ ஜெபக்குழு ஐக்கியம் ஆரம்பமானது. 1960 ஆம் ஆண்டில் மட்டும் 51 இடங்களில் VBS வகுப்புகள் நடத்தப்பட்டதில் 4000 சிறுவர்கள் பங்கேற்றார்கள். இதைத்தொடர்ந்து அநேக கிராமங்களில் VBS வகுப்புகள் சிறப்பாக நடைபெற்றன. ஆயிரமாயிரம் பிள்ளைகள் உற்சாகமாக பங்கு கொண்டனர். விடுமுறை காலத்தில் வீணாகச் சுற்றிக்கொண்டிருக்கும் பிள்ளைகளுக்கு இது பயனுள்ளதாக அமைந்ததைக் கண்ட பெற்றோரும் மகிழ்ச்சி அடைந்து இதனை வரவேற்றார்கள்.
திருச்சபைக்கு முதுகெலும்பாக மாறிய VBS வகுப்புகள்:
1959 ம் ஆண்டு பல்வேறு கிராமங்களில் VBS வகுப்புகள் நடத்துவதற்கு தேவையான ஆசிரியர்களுக்குப் பயிற்சி கொடுப்பதற்காக முதல் முறையாக பயிற்சி முகாம் ஆரம்பிக்கப்பட்டது. இதில் 29 பெண்கள் இந்த ஊழியத்தில் தங்களை இணைந்துகொண்டார்கள். இவ்வாறு ஒவ்வொரு வருடமும் பயிற்சி முகாமில் பங்குபெறுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்தது. பின்னர் வாலிப சகோதரர்களுக்கும், சகோதரிகளுக்கும் சேர்த்து பயிற்சி முகாம் நடத்தப்பட்டது. இவர்கள் மூலம் அநேக கிராமங்களில் VBS வகுப்புகள் நடத்தப்பட்டது. 1961-66 ஆம் ஆண்டுகளில் VBS ஆசிரியர்களுக்கு 2 வருட பாடத்திட்டத்துடன் பயிற்சிபுத்தகத்தை ஈடித் அம்மையார் அறிமுகம் செய்தார்கள். திருச்சபை குருவானவர்களுக்கு என்று VBS பயிற்சி முகாம்கள் நடத்தப்பட்டன. இதில் 26 குருவானவர்கள் பங்கு பெற்றார்கள். இதைத்தொடர்ந்து ஆசிரியர் பயிற்சி பள்ளி மாணவர்ளுக்கும் VBS பயிற்சி முகாம்கள் நடத்தப்பட்டன. அவர்களுக்கு வேதத்தைப் படிப்பதிலும், தியானிப்பதிலும், வசனங்களை மனப்பாடம் செய்வதிலும் ,மற்றவர்களுக்காக ஊக்கமான ஜெபிப்பதிலும் கற்றுக்கொடுத்தார்.
VBS எல்கை விரிவாக்கம்:
சிறுவர்களை நேசித்த இயேசு, சிறுவர்பணி செய்த V.B.S. ஐ ஆசீர்வதித்தார். இதனால் திருநெவ்வேலியில் மட்டும் அல்லாமல், தென் இந்தியாவிலும், வட இந்தியாவிலும், மற்றும் பங்காரப் பேட்டை வேதாகமக் கல்லூரியின் மூலம் பெங்களுரை, தலைமையகமாகக் கொண்டு V.B,S செயல்பட ஆரம்பித்தது. 1952ல் 72 மாணவர்களுடன் ஆரம்பித்த VBS வகுப்புகள் 1962ல் 5000 க்கும் மேலான மாணவர்களுடன் நடத்தப்பட்டது. இந்தப்பணியின் மூலம் அநேகமான சிறுவர்கள் இயேசுவை ஏற்றுக் கொண்டார்கள். அநேகர் முழுநேரப்பணிக்கும் தங்களை அர்ப்பணித்தனர். அநேக வாலிப சகோதரிகள் ஏப்ரல், மே மாதங்களில் தன்னார்வ ஊழியர்களாக VBS ஊழியத்தில் இணைந்து சிறுவர்கள் மத்தியில் ஊழியம் செய்தார்கள். இந்தச் சமயத்தில் சகோதரி, பிரேமா வேதமணியும், சகோதரி பத்மினி சாமுவேலும் தன்னார்வ ஊழியர்களாக இணைந்தார்கள்.
கார் ஆச்சி:
ஈடித் மார்கன் அம்மையார் தன்னுடைய ஜீப் வாகனத்தைத் தானே ஒவ்வொரு ஊராக ஓட்டிச் சென்று அக்கார்டினை இசைத்து சிறு பிள்ளைகளையும் பெரியோரையும் கிறிஸ்துவுக்குள் வழிநடத்தினார்கள். 1967-72 ஆம் ஆண்டுகளில் VBS மாணவர்களின் எண்ணிக்கை 14,000 ஆக உயர்ந்தது. ஆகவே ஞாயிறு பள்ளி கைப்புத்தகங்கள் தயாரிக்கப்பட்டது. சிறுவர்கள் மனப்பாட வசனம் அறிமுகம் செய்யப்பட்டது. 1973 -76 ஆம் ஆண்டுகளில் VBS வகுப்புகளில் 20,000 சிறுவர்கள் கலந்துகொண்டார்கள். இக்கால கட்டத்தில் பெங்களூரில் VBS தலைமையகம் சொந்தமாக்கப்பட்டது. மார்கன் அம்மையார் இசைக்கருவியை வாசித்து, ஓர் வெண்ணங்கி ஓர் பொன் முடி என்று பாடியதும் சிறுவர்களும் உற்சாகமாகச் செய்கையுடன் இந்தப் பாட்டைப்பாடுவார்கள். இவர்கள் கார் ஓட்டுவதினால் *கார் ஆச்சி*' எனச் சிறுபிள்ளைகள் அன்புடன் அழைத்தார்கள். மார்கன் அம்மையாரும் தன் கூடப் பழகின பிள்ளைகளைத் தன் சொந்தப் பிள்ளையைப் போன்று நேசித்தார்கள்.
VBS வெள்ளிவிழா:
1973-76 ஆம் ஆண்டுகளில் VBS வெள்ளிவிழா கொண்டாடப்பட்டது. பெரோயா சிறுவர் இல்லம் ஆரம்பமாகியது. பெரோயா வீடு எப்பொழுதும் மகிழ்ச்சியின் வீடாக இருந்தது. அங்கு சிறுவர்களுக்கு வேதபாடம் ஒழுங்கான முறையில் கற்றுக்கொடுக்கப்பட்டது. மார்கன் அம்மையார் ஒழுங்கும் கண்டிப்பும் பெயர்பெற்றவர்கள். காலையில் ஐந்து மணிக்கே எழும்பி தேவனோடு நேரம் செவிடுவார்கள். உடன் ஊழியர்களையும் அப்படியே பழக்குவித்தார்கள், எப்போதும் சுறுசுறுப்புடன் செயல்படுவார்கள். கோடை காலத்திலும் விடுமுறைக்காகத் தாயகம் செல்லாமல் சிறுவர்களின் ஆத்தும அறுவடையே தனது நோக்கம் என கிராமம், கிராமமாகச் சென்று ஆண்டவருக்கு என்று நற்செய்திப்பணி செய்தார்கள்.
நாடு திரும்புதல்:
மார்கள் அம்மையார் 1972 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் அமெரிக்கா திரும்ப வேண்டியிருந்தது. ஆகவே சகோதரி, பாக்கியத்தாயுடன் V.B.S. பணியில் இணைந்து பணியாற்ற சகோதரி பிரேமா, சகோதரி திலகா மற்றும் சகோதரி செல்லமணி ஆகியோரையும் இணைத்தார்கள். பின்பு தனது சொந்த நாடான அமெரிக்கா சென்றபின்பு அங்கு வடக்கு கெரோலினா என்ற இடத்தில் மெத்தடிஸ்ட் திருச்சபையில் குருவானவர் பட்டம் கொடுக்கப்பட்டது. ஈடித் மார்கன் அம்மையார் 1979 ஆம் ஆண்டுவரை குருவானவராக பணியாற்றி ஓய்வு பெற்று மெத்தடிஸ்ட் வயோதிபர் ஓய்வு இல்லத்தில் தங்கினார்கள். உடடியாக காதுகேளாதோர் மத்தியில் பணி செய்ய ஆரம்பித்தார்கள். சைகை மொழியை கற்று காதுகேளாதோர் மத்தியில் தீவிரமாக ஊழியம் செய்தார்கள்.
இந்திய நினைவுகள்:
ஈடித் மார்கன் அம்மையார் அமெரிக்கா சென்றாலும் தான் நேசித்த இந்தியக் குடும்பத்தையும் சிறுவர்களையும் மறக்கவேயில்லை. ஒவ்வொருவருக்கும் தவறாது ஆலோசனை கூறி கடிதங்கள் எழுதினார்கள். இந்தியாவைவிட்டுப்போய் 12 ஆண்டுகள் கடந்துவிட்டாலும் அவருடைய நினைவெல்லாம் இந்தியாவில்தான் இருந்தது. அமெரிக்காவில் இருந்தவாறே தொடர்ந்து இந்தியாவில் VBS பணிக்காக பண உதவியும் பொருள் உதவியையும் செய்துவந்தார்கள். அம்மையாரின் இதயத்துடிப்பு எப்போதும் இந்தியா, இந்தியக்குடும்பம் மற்றும் இந்திய சிறுவர்கள்தான். 1985-88 ஆம் ஆண்டுகளில் சிறுவர்களுக்கு ஏற்றவாறு பாடல்கள் ஒலிநாடாவாக பதிவு செய்யப்பட்டது. தியாப்படங்கள் நகலாக்கம் செய்யப்பட்டது. 1989-95 ஆம் ஆண்டுகளில் VBS பள்ளியின் கிளை குஜராத்தில் ஆரம்பிக்கப்ட்டது. சகோதரி திலகா அவர்கள் குஜராத் இயக்குனராகவும் சகோதரி பிரேமா திருநெல்வேலி VBS இணை இயக்குனராகவும் நியமிக்கப்பட்டார்கள்.
இறுதிகாலங்கள்:
ஈடித் மார்கன் தனது அம்மையார் வயதுமுதிர்வு காரணமாக படிப்படியாக பெலவீனமடைந்தார்கள். தனது இறுதி நாட்கள் நெருங்கியதை உணர்ந்த அம்மையார் இந்தியாவில் VBS குடும்பத்தினரைத் தொலைபேசியில் அழைத்து நீங்கள் தொடர்ந்து VBS பணியில் முன்னேறிச் செல்லுங்கள். நான் எல்லாவற்றையும் சிறந்த முறையில் ஒழுங்கு செய்துவிட்டேன். எனக்காக நீங்கள் கவலைப்பட வேண்டாம்' என்று கண்ணீர் மல்கப் பேசினார்கள். போனில் பேசிய சகோதரிகளும் அவர்களை நேரில் காணாவிட்டாலும், அவர்களைப் பார்த்தது போல்கண்ணீர் விட்டனர். அவர்களைச் சந்திக்கப்போன மக்களுக்கும் ஆசீர்வாதமான வார்த்தைகளைக் கூறினார்கள்.
அணைந்த தீபம்:
1997 ம் ஆண்டு ஜனவரி 2 ம் தேதி தன்னுடைய பலவீனத்தின் மத்தியிலும் சகோதரி பாக்கியத்தாயுடன் தொலைபேசியில் பேச முடியாதவர்களாக மெதுவாக பாக்கியத்தாய் உங்களை நேசிக்கிறேன். கவலைப்பட வேண்டாம் அழவேண்டாம் நான் நன்றாக இருக்கிறேன் உங்களை நேசிக்கிறேன். என்றார்கள் இதுதான் அவர்களின் கடைசி பேச்சாகும். குருவானவரான ஈடித் மார்கன் அம்மையார் 1997 ஆண்டு ஜனவரி 20ம் தேதி அவர்களது 94வது வயதில் நித்திய வீட்டை அடைந்தார்கள். அவர்களது அடக்க ஆராதனையில் சேகரிக்கப்பட்ட காணிக்கையை இந்தியாவின் VBS பணிக்குக் கொடுக்கும்படி சொல்லியிருந்தார்கள். உயிர் பிரிகின்ற வேளையிலும் மார்கள் அம்மையாரின் மனம் உள்னதர் பணியையே எண்ணிப் பார்த்தது. ஈடித் மார்கன் அம்மையார் 57 வருடங்கள் இந்தியாவில் வாழ்ந்து போது, ஐந்து முறை மாத்திரமே தாயகப் பயணம் செய்துள்ளார்கள்.
பிரகாசிக்கும் தீவட்டிகள்:
1952ல் இந்தியாவில் கோவில்பட்டியில் ஆரம்பிக்கப்பட்ட V.B.S. ஊழியம் இன்று திருநெல்வேலி திருமண்டலத்தில் மட்டுமல்லாமல் அநேக இடங்களிலும் சிறப்பாக நடைபெற்று வருகின்றது. ஒவ்வொரு ஆண்டும் சுமார் 65,000 சிறுவர்களுக்கு மேலாக பங்கு கொள்கின்றார்கள். சகோதரி திலகாவின் தலைமையில் குஜராத் V.B.S ஊழியங்கள் மிகவும் சிறப்பாக செயல்பட்டுவருகிறது. அநேசு ஆயிரம் சிறுவர்கள் பயன் அடைந்து வருகிறார்கள். 2001 ஆம் ஆண்டில் 649 இயக்குநர்களின் உழைப்பினாலும் ஜெபத்தாலும் 63,000 சிறுவர்கள் இயேசுவை ஏற்றுக்கொண்டுள்ளார்கள். 2002 ஆம் ஆண்டு VBS தனது 50 ஆம் பொன்விழை ஆண்டை சிறப்பாக கொண்டாடி கர்த்தரை மகிமைடுத்தி தொடர்ந்து இந்தியா மீழுவதும் சிறுவர்கள் மத்தியில் ஊழியம் செய்துவருகிறது. இதற்கான அஸ்திபாரத்தை போட்டவர் ஈடித் மார்கன் அம்மையார். இவர்கள் மறைந்தாலும் இவர்கள் விட்டுச்சென்ற தீபங்கள் இன்று இந்தியா முழுவதும் எரிந்து பிரகாசித்துக்கொண்டு இருக்கின்றார்கள். இந்தியாவில் VBS வகுப்புகள் மூலமாக கோடை விடுமுறை நாட்களில் இலட்சக்கணக்கான சிறுவர்களுக்கு கிறிஸ்துவின் நற்செய்தி அறிவிக்கப்பட்டு ஆத்தும ஆதாயம் செய்யப்பட்டுக்கொண்டு இருக்கின்றார்கள்.
இதை வாசிக்கிற அன்பு சகோதரிகளே, நம்முடைய ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து சிலுவையில் தொங்கிக்கொண்டு இருந்தபோது, எல்லா ஆண்களும் அவரைவிட்டுவிட்டு ஓடிப்போனார்கள். ஆகவே உயித்தெழுந்த இயேசு கிறிஸ்து முதன் முதலில் ஆண்களுக்கு தன்னை வெளிப்படுத்தாமல், ஒரு பெண்ணுக்கு தம்மை வெளிப்படுத்தி, அவள் மூலமாக கிறிஸ்துவின் உயிர்த்தெழுதல் செய்தி ஆண்களுக்கும் மற்ற எல்லோருக்கும் அறிவிக்கப்பட்டது. இயேசுவானவர் தன்னை முதன் முதலில் மேசியா என்று ஒரு பெண்ணுக்குத்தான் வெளிப்படுத்தினார். ஆதி திருச்சபையில் முதல் 500 ஆண்டுகளுக்குள் பல பெண்கள் இறையியலாளர்களாக (Theologians), சுவிசேஷகர்களாக (Evangelists), அப்போஸ்தலர்களாக (Apostles), தீர்க்கதரிசிகளாக (Prophetess), உதவி ஆயர்களாக (Deaconess), ஆயர்களாக (Presbyters) மற்றும் பேராயர்களாக (Bishops) கிறிஸ்துவுக்கு சிறந்த சேனாதிபதிகளாக தங்களை அற்பணித்து எங்கோ ஒரு மூலையில் எருசலேமுக்குள் இருந்த கிறிஸ்தவத்தை உலக மதமாக மாற்றினார்கள். இதில் பெண்களின் பங்கு மகத்தானது, அளவிடப்பபட முடியாது.
பிற்காலத்தில் கிபி 5 ஆம் நூற்றாண்டில் கிறிஸ்தவம், ரோமானிய மதமாக அங்கிகரிக்கப்பட்டதால், ஆணாதிக்கம் நிறைந்த ரோம கலாச்சாரம் கிறிஸ் தவத்தில் ஊடுருவி, 1 கொரி 14:34-36, 1 தீமோ 2:11-15, 1 கொரி 11:3, எபே 5: 22-24 ஆகிய வசனங்களுக்கு தவறான வியாக்கியானங்களை கொடுத்து திருச்சபையில் 50% இருக்கும் பெண்களையும், பெண்களின் திறமைகளையும் வெளியே கொண்டுவரவிடாமல், பெண்களின் வாயை கடந்த 1500 ஆண்டுகளாக அடைத்துவிட்டது.
21 ம் நூற்றாண்டில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கும் இந்த உலகம் எவ்வளவோ மாறிக்கொண்டு இருக்கிறது. ஆனால் ஆணாதிக்கம் நிறைந்த இன்றைய கிறிஸ்தவ திருச்சபை தலைமைத்துவம் பெண்களை உதவி ஆயர்களாக, ஆயர்களாக மற்றும் பேராயர்களாக அங்கிகரிக்க மறுக்கிறது. கடவுளின் சாயலில் சமமாக படைக்கப்பட்ட பெண்களை ஏற்றுக்கொள்வை மறுக்கிறது. இது கடவுளுக்கு எதிர்த்து நிற்பதற்கு சமம் என்பதை உணராமல் இருக்கிறது.
ஆகவே பெண்களே, ஆண்கள் ஆதிக்கம் செலுத்தும் கட்டிடமாகிய திருச்சபை உங்களை அங்கிகரிக்க மறுக்கலாம். ஆனால் திருச்சபை என்பது கட்டிடம் அல்ல, இது விசுவாசிகளின் கூடுகை என்பதை மறந்து போகாதேயுங்கள். இதற்கு என்று தனி கட்டிடம் தேவையில்லை. ஆகவே உங்கள் வீடுகளே திருச்சபையாக மாறட்டும். நீங்கள் படிக்கிற பள்ளிகள் மற்றும் கல்லூரி நண்பர்களின் ஐக்கியமே திருச்சபையாக மாறட்டும். நீங்கள் வேலைசெய்யும் இடங்களில் இருக்கும் நண்பர்களின் ஐக்கியமே திருச்சபையாக மாறட்டும்.
இந்தியாவில் சுமார் 6,75,982 கிராமங்கள் உண்டு. இதில் சுமார் 1,12,345 கிராமங்களில் மாத்திரம் ஆலயங்கள் இருக்கிறது. தெபோராளாகிய நீ எழும்புமளவும், இந்திய கிராமங்கள் பாழாய் போய்க்கொண்டுதான் இருக்கபோகிறது (நியா 5:7) . ஆகவே பெண்களின் வாழ்கையை ஒளியேற்றுவதற்காக தன்னையே கொடுத்த இயேசு கிறிஸ்துவுக்கு ஏதாவது வகையில் நற்செய்திபணி செய். உன் மூலமாக இயேசு கிறிஸ்துவின் இராஜியம் நீ இருக்கும் இடத்தில் கட்டப்படுவதாக. ஆமென்.