===========
ஓர் குட்டிக் கதை
உழைப்பின் பெருமை
============
சிறுவூர் என்ற கிராமத்தில் முத்தப்பன், வேலப்பன் என்ற இரு நண்பர்கள் வசித்து வந்தனர். முத்தப்பன் நல்ல உழைப்பாளி! நிலத்தில் வியர்வை சிந்தி உழைப்பவன். ஆனால் வேலப்பன் ஒரு முழுச் சோம்பேறி! வேளாவேளைக்கு உண்டு உறங்கி வந்தான்.
இருவருக்கும் சிறிதளவு வயல்கள் இருந்தன. முத்தப்பன் தன் வயலில் நெல் விதைத்து நீர்பாய்ச்சி களை எடுத்து பாடுபட்டார். அவரது உழைப்பின் பயனாக வயலில் விளைச்சல் மிகுந்தது. முத்தப்பனின் வேலைக்காரர்களும் எஜமானனே வயலில் இறங்கி வேலை செய்கிறாரே நாமும் நன்றாக உழைக்க வேண்டும் ஏமாற்றக் கூடாது என்று சுறுசுறுப்பாக உற்சாகமுடன் வேலை செய்தனர். அதன் பயனாக நிறைய விளைச்சலை அறுவடை செய்தார் முத்தப்பன்.
நன்கு பாடுபட்ட முத்தப்பன் தன்னிடமிருந்த இரண்டு ஏக்கர் நிலத்தை ஐந்து ஏக்கராக மாற்றினான். அதே சமயம் வேலப்பன் தன்னிடமிருந்த சிறு நிலத்தையும் கொஞ்சம் கொஞ்சமாக இழந்து கொண்டிருந்தான். ஒரு நாள் வேலப்பன் இது பற்றி முத்தப்பனிடம் முறையிட்டான்.
நண்பா நீயும் நானும் ஒரே அளவு நிலத்தை தான் வைத்திருந்தோம் இன்றோ நீ ஐந்து ஏக்கர் நிலத்திற்கு சொந்த காரனாகி விட்டாய் நானோ இருந்த நிலத்தையும் இழந்து கடன் காரனாக நிற்கிறேன். உனக்கு அதிர்ஷ்டம் அதிகமாக உள்ளது. நானோ துரதிருஷ்டசாலி! என்று வருத்தமுடன் கூறினான்.
முத்தப்பனோ! நண்பா நான் ஐந்து ஏக்கர் நிலம் வாங்கியதற்கு காரணம் அதிருஷ்டம் இல்லை! உழைப்பு! நீ உன் நிலத்தில் இறங்கி ஒரு நாளேனும் வேலை செய்திருப்பாயா? மாட்டாய்! எல்லாவற்றிற்கும் வேலைக்காரர்கள் வைத்தாய்! சரி அவர்கள் ஒழுங்காக வேலை செய்கிறார்களா? என்று கண்காணிக்க கூட சோம்பல் பட்டாய்! நண்பா நாம் வியர்வை சிந்தி உழைத்தால் மண்ணும் பொன்னாகும். உரிமையாளன் சோம்பேறியாக இருந்தால் வேலைக்காரர்களுக்கு கொண்டாட்டம்தான்! அவர்கள் ஒழுங்காக வேலை செய்யாமல் வெட்டி அரட்டை பேசி களைந்து சென்று விட்டார்கள் உன் பயிர் கவனிப்பாரற்று ஆடு மாடுகள் மேய்ந்து விளையாமல் போயிற்று!
நானோ தினமும் வயலில் இறங்கி உழைத்தேன்! வேலைக்காரர்களோடு வேலைக்காரனாக உடன் வேலை செய்தேன். இதில் இன்னொரு லாபமும் இருக்கிறது ஒரு வேலைக்காரனுக்கு கொடுக்கும் கூலியும் மிச்சமாகும் உரிமையாளன் அருகில் இருக்கிறான் என்ற அச்சத்தில் வேலைக்காரர்களும் ஒழுங்காக பணியாற்றுவார்கள். இதனால்தான் என் நிலத்தில் விளைச்சல் மிகுந்தது.
நீ உன் சோம்பேறித் தனத்தை உதறி எறி! ஒழுங்காக இருக்கும் சிறு நிலத்தில் உன் உழைப்பை காண்பி! நீயும் விரைவில் என்னை போல மாறி விடுவாய் என்றான் முத்தப்பன்.
வேலப்பனுக்கு தன் தவறு புரிந்தது! உழைப்பின் பெருமையை உணர்ந்தான். வயலில் இறக்கி வேலை செய்தான் முத்தப்பனை போல் சந்தோசமாக வாழ்ந்தான்.
என் அன்பு வாசகர்களே,
உழைப்பு தான் உயர்வு தரும் அதுவே கடின உழைப்பாய் இருந்தால் அதை விட உயர்வு அதைவிட Smart work செய்தால் பன்மடங்கு லாபம் கிடைக்கும். எதுவாயினும் நிச்சயம் உழைத்தாக வேண்டும் இல்லையேல் எந்த பயனும் இல்லை.
இக்கதையில் வருவதுபோல் அநேக முதலாளிகள் தங்கள் சொந்த வேலையைக்கூட செய்யாமல் அதற்கும் ஆட்களை நியமித்து விடுகிறார்கள். நியமித்த ஆட்களை கண்காணிக்கவோ அவர்களுக்கு அறிவுரைகளை வழங்குவதோ இல்லை. விளைவு நஷ்டம் தான் மிஞ்சும். இப்படிபட்டவர்கள் தங்களிடம் வேலை செய்கிறவர்களை அடிமைகளாக தான் நடத்துவார்கள் மனிதர்களாக அல்ல.
To get daily message in whats app and pray for u contact +917904957814
ஆனால் வெகு சிலர் தன்னிடம் வேலை செய்கிறவர்களோடு சேர்ந்து வேலை செய்கிறார்கள். அதன்மூலம் அதிலிருக்கின்ற எல்லா காரியங்களையும் அறிந்து அவர்களுக்கு ஏற்றாற்போல் எல்லாவற்றையும் மாற்றுகின்றனர். இதன் விளைவு தங்கள் எஜமான் தங்களின் கஷ்டம் அறிந்து சலுகைகளை தருகிறார் என்றெண்ணி தங்களால் இயன்ற மட்டும் நன்றாய் உழைக்கிறார்கள் அதன்மூலம் நல்ல லாபம் கிடைக்கும்.
வேதத்தில் ஆபிரகாமின் வேலைக்காரன் தன் எஜமானின் வாக்குப்படி ஈசாக்கிற்கு பெண் தேட சென்றான். அவன் எஜமான் அவனை நல்ல முறையில் பார்த்துக்கொண்டதால் தனக்கு எஜமான் இட்ட ஆணைப்படி தேவ உதவியோடு நல்ல ஒரு மணப்பெண்ணை ஈசாக்கிற்கு தேடி கண்டுபிடித்தான். சற்று சிந்தித்துப் பாருங்கள் ஒருவேளை ஆபிரகாம் தன் ஊழியக்காரனை அடிமையாய் நடத்தி இருந்தால் தன் மனதார நல்ல பெண்ணை தேடி கண்டுபிடித்திருப்பானோ என்றால் இல்லை.
இப்படி யாருடைய மனமும் கோணாமல் நல்ல முறையில் பணி செய்யும்போது தான் இந்த ஆசீர்வாதம் கிடைக்கும்
சங்கீதம் 128:2
உன் கைகளின் பிரயாசத்தை நீ சாப்பிடுவாய், உனக்குப் பாக்கியமும் நன்மையும் உண்டாயிருக்கும்.
எனவே நம்மோடு வேலை செய்கிறவர்களை நன்றாய் பார்த்துக்கொள்வோம் பாக்கியமும், நன்மையும் அடைவோம்.
=========
ஓர் குட்டிக் கதை
முயற்சியே பெருமை
=========
"முயற்சி திருவினையாக்கும்" என்பதே உலக பழமொழி எனினும் அநேகர் முயற்சி செய்வதில்லை. காரணம் சோம்பல் அதன் விளைவு எல்லாவற்றிலும் தோல்வி மாத்திரம் தான்.
இன்றைய நவீன உலகில் தங்களால் இயன்ற அளவு முயற்சி செய்வதில்லை மாறாக ஒன்று இரண்டு முறை மட்டும் முயற்சி செய்து விட்டு அதில் ஒரு தீர்வு கிடைக்கவில்லை என்றால் மனமடிவாகி தங்கள் முயற்சியை நிறுத்தி விடுகின்றனர். அதற்கு காரணம் முறையான பயிற்சி மற்றும் அனுபவம் இல்லாததால் அவர்களுக்கு அப்படிப்பட்ட நிலைமை.
எப்படி குறுக்கு வழியில் நல்ல வாழ்க்கை வாழ்வது என்று தான் சிந்திக்கிறார்களே தவிர நேர்வழியில் வழிநடக்க விருப்பமில்லை. நேர்வழியில் வாழும்போதுதான் வாழ்க்கையின் சுவாரஸ்யத்தை அனுபவிக்க முடியும் மாறாக குறுக்கு வழியில் சென்றால் நிம்மதியான வாழ்க்கை வாழ முடியாது.
இக்கதையில் அதிர்ஷ்டம் கையில் இருந்த போதிலும் அதை வேண்டாம் என்று சொல்லி நேர்வழியை தெரிந்துகொண்ட சம்பவத்தை இக்கதை மூலம் காண்போம்.
அது ஒரு மாலைப் பொழுது. நான்கு சிறுவர்கள் வயலோரத்தில் விளையாடிக் கொண்டிருந்தனர். வரப்பு ஓரமாகச் சென்று ஒரு மூலையை அவர்கள் அணுகியபோது, பூமிக்கடியிலிருந்து ஒரு மெல்லிய குரல் கேட்டது.
“என்னைத் தோண்டி, வெளியில் எடுங்கள்… நான் நீங்கள் விரும்பியதை எல்லாம் தருவேன்!’ என்றது அந்தக் குரல்!
ஆச்சரியமடைந்து சிறுவர்கள் அனைவரும் உடனே வேலையில் இறங்கினர். சில நிமிடங்கள் பூமியைத் தோண்டிய பிறகு அங்கே ஒரு அழகிய சிறிய விளக்கு பளிச்சிட்டது!
அதை வெளியில் எடுத்தார்கள். அவர்கள் கைபட்டதும், அந்த விளக்கு பேச ஆரம்பித்தது!
“நான் அலாவுதீனுடைய அற்புத விளக்கு. நீங்கள் என்னைப் பற்றிக் கேள்விப்பட்டிருப்பீர்கள்! நான் நீங்கள் கேட்பதையெல்லாம் தர வல்லவன். வாருங்கள். ஒவ்வொருவராக என்ன வேண்டும் என்று கேளுங்கள். அனைவருக்கும் அவரவர்களுடைய தேவை நிறைவேற்றப்படும். தயங்காமல் கேட்டுப் பெற்றுங்கள்!’ என்று ஆசை காட்டிக் கூப்பிட்டது அந்த அற்புத விளக்கு.
முதலாவது சிறுவன், “எனக்கு விளையாடுவது மிகவும் பிடிக்கும்! அதனால் எனக்குக் கிரிக்கெட் மட்டையும் பந்தும் விக்கெட் கட்டைகளும் தாருங்கள்…அதுமட்டுமல்ல வீட்டுக்குள்ளேயே விளையாடுவதற்கு வேண்டிய சில விளையாட்டுப் பொருட்களும் எனக்கு வேண்டும்’ என்றான்.
இரண்டாமவன், “தினமும் என் பள்ளி ஆசிரியர் நிறைய வீட்டுப் பாடங்களைத் தருகிறார். எனக்கு மிகவும் கஷ்டமாக இருக்கிறது. அதனால் தினமும் நீ வந்து எனக்காக எனது வீட்டுப் பாடங்களைச் செய்து தர வேண்டும்!’ என்று கேட்டான்.
பிறகு, மூன்றாமவன், “தெருவில் பிச்சைக்காரர்கள் தொல்லை மிகுதியாகிவிட்டது. அவர்களுக்குப் போதுமான பணம் கொடுத்து, அவர்களைப் பிச்சை எடுக்காமல் இருக்கச் செய்ய நீ உதவி செய்ய வேண்டும்’ என்று கூறினான்.
தனது தோழர்களின் வேண்டுகோள்களையெல்லாம் கூர்ந்து கவனித்துக் கொண்டிருந்தான் நான்காவது சிறுவன்.
அவன் அந்த அற்புத விளக்கைப் பார்த்து, “ஓ..! மந்திர விளக்கே, நீ எங்களுக்கு எதுவும் தருவதற்கு முன்பு இங்கிருந்து மறைந்து போய்விடு! கடவுள் அன்புகூர்ந்து, எங்களுக்கு கண், காது, மூக்கு, நாக்கு, கை, கால்கள், மூளை எல்லாவற்றையும் நல்லவிதமாக படைத்துத் தந்திருக்கிறார். இவற்றைக் கொண்டு நாங்கள் அறிவார்ந்த பணிகள் பல ஆற்ற முடியும்! கடவுள் கொடுத்த கொடைகளை நாங்கள் முழுமையாகச் செவ்வனே பயன்படுத்தி நாங்களும் நன்றாக வாழ்ந்து மற்றவர்களையும் மகிழ்வுறச் செய்ய வேண்டும். மனிதனுடைய பெருமையே முயற்சி செய்வதில்தான் அடங்கியுள்ளது. இப்படியிருக்கையில், பிச்சைக்காரர் போல நாங்கள் ஏன் உன்னிடம் பொருள்களையும் செயல்களையும் யாசிக்க வேண்டும்? கடவுள் தந்துள்ள உயரிய பரிசுகளான கண், காது, மூக்கு, கை, கால்கள், மூளை முதலியவைகளை ஏன் புறக்கணித்து ஒதுக்க வேண்டும்? ஆகவே, நீ இங்கிருந்து தயவுசெய்து உடனடியாக மறைந்து விடு!’ என்று வேண்டினான்.
To get daily story In What's App+918148663456
அந்த அற்புத விளக்குக்கு நான்காவது சிறுவனின் கோரிக்கை மிகவும் பிடித்துப் போய்விட்டது. அவனுடைய உயர்ந்த உள்ளத்தையும் அறிவையும் பாராட்டி விட்டு அங்கிருந்து உடனே மறைந்து போனது!
என் அன்பு வாசகர்களே,
இந்த கதையில் நாம் இருந்திருந்தால் எதை தேர்வு செய்திருப்போம் என்று சற்றே சிந்தித்துப் பாருங்கள். நம்மை அனுதினமும் நேர்வழியில் நடத்துகிறவர் நமது தேவன். அவரிடத்தில் நம்மை முழுவதுமாய் சமர்ப்பிக்கும் போது நம்மை செவ்வையான வழியில் நடத்துவார்.
வேதத்தில் ஈசாக்குக்கு பெண் தேட ஆபிரகாமின் ஊழியக்காரன் சென்ற போது அந்த காரியத்தை வேலைக்காரன் முழுவதுமாய் தேவனிடத்தில் ஒப்புவித்தான். ஆகவே தேவன் அவன் செய்த காரியத்தை வாய்க்கப்பண்ணிணபோது இவ்வாறு கூறுகிறான்
48 தலைகுனிந்து, கர்த்தரைப் பணிந்துகொண்டு, நான் என் எஜமானுடைய சகோதரன் குமாரத்தியை அவர் குமாரனுக்குக் கொள்ள என்னை நேர்வழியாய் நடத்திவந்த என் எஜமானாகிய ஆபிரகாமின் தேவனாயிருக்கிற கர்த்தரை ஸ்தோத்திரித்தேன்.
ஆதியாகமம் 24:29
எனவே நமக்கு இருக்கிற காரியங்களை முழுவதும் கர்த்தரிடத்தில் ஒப்புவிப்போம் நம்மை செம்மையும் நன்மையுமான வழிகளில் தேவன் நடத்துவார்.
நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்!!!
===========
ஓர் குட்டிக் கதை
கலைமானும் கரடியும்
==========
கலைமான் ஒன்று தன் இரண்டு குட்டிகளுடன் அடர்ந்த காட்டுக்குள் இறை தேடி அலைந்து கொண்டிருந்தது. மாலை நேரத்த்தில் இருப்பிடம் திரும்பும் வேளை வந்ததும், குட்டிகளை அழைத்துக்கொண்டு புறப்பட்டது.
அப்போது கலைமான் குட்டிகளில் ஒன்று காட்டுக்குள் வழி தவறி விட்டது.அந்தக் காட்டுக்குள் சிறிது தூரம் தன் தாயை தேடியது. ஆனால் தாயையும், உடன் பிறந்த மற்றொரு குட்டியையும், அதனால் கண்டுபிடிக்க முடியவில்லை.
பின்னர் அது காட்டின் ஒரு ஓரமாக நின்று கண்களில் கண்ணீர் பொங்க அழுது கொண்டிருந்தது. அந்த நேரத்தில் அந்த வழியாக கரடிக் குட்டி ஒன்று அங்கு வந்தது. அது கலைமான் குட்டியிடம் எதற்காக அழுகிறாய், என்று கேட்டது .
கலைமான் குட்டியும் தன் சோகக் கதையைக் கூறியது. பரிதாபம் கொண்ட கரடிக்குட்டி, கலைமான் குட்டியை தன்னுடன் தன் இருப்பிடத்திற்கே அழைத்துச் சென்றது.
இரண்டும் நண்பர்களாக இருந்து தங்களின் சிறு வயது காலத்தை கரடிக்குட்டியும், கலைமான் குட்டியும் சந்தோஷமாக கழித்து வந்தன.
கலைமான் வளர வளர அதற்கு அழகிய கொம்பு முளைத்தது . அதன் காரணமாக அது பார்ப்பதற்கு மிகவும் அழகாக தோன்றியது. கலைமானைப் பார்த்த மற்ற விலங்குகள் அதன் அழகை பாராட்டிச் சென்றன. இதனால் கலைமானுக்கு கர்வம் உண்டானது.
அது மற்ற எந்த விலங்குகளையும் மதிக்காமல், ஏளனமாகப் பார்க்கத் தொடங்கியது. இன்று வரை தனக்கு அடைக்கலம் கொடுத்து , தன்னுடன் உயிருக்கு உயிராக பழகி வந்த கரடியிடமும் தன் அழகின் கர்வத்தைக் காட்ட ஆரம்பித்தது .
கரடியே! நீ என்னைப்போல் அழகாக இல்லை. உன் முகத்தைப் பார்க்கவே அசிங்கமாக இருக்கிறது. ஆனால் என்னைப் பார், இயற்கையிலேயே அழகான எனக்கு , இப்போது வளர்ந்துள்ள கொம்புகள் மேலும் அழகு சேர்க்கின்றன. இப்போது உன்னை என் நண்பன் என்று சொல்லிக்கொள்ளவே எனக்கு வெட்கமாக இருக்கிறது . எனக்கு நண்பனாக இருக்க, என்னைப் போல் அழகு படைத்தவறே தகுதியானவர்கள். உனக்கு அந்தத் தகுதி கொஞ்சமும் இல்லை, என்றது கலைமான்.
இதைக்கேட்ட கரடிக்கு முதலில் அதிர்ச்சியாகத்தான் இருந்தது. இருந்தாலும் அதனை வெளியேக் காட்டிக் கொள்ளாமால் 'கலைமானே! உனக்கு உன் கொம்புகள் மிகுந்த அழகுதான். அதை நானும் ஒப்புக்கொள்கிறேன் . அது மட்டுமல்லாது, என் நண்பன் மிகவும் அழகானவன் என்பதும் எனக்கும் தானே பெருமை ! என்றது பெருந்தன்மையுடன்.
ஆனால், உன்னை என் நண்பன் என்று சொல்லிக்கொள்வது எனக்கு அசிங்கமாக இருக்கிறது . நான் தனியாக வாழ முடிவு செய்துவிட்டேன், என்று கூறியபடி கலைமான் அங்கிருந்து புறப்பட்டு போய்விட்டது.
இது நாள் வரை தன்னோடு ஒருமையாக வாழ்ந்த மான், பிரிந்து போவதைக் கண்டு வேதனையில் துடித்தது கரடி. இருப்பினும் மனதை தேற்றிக்கொண்டது.
ஒரு நாள் கலைமான், இறை தேடுவதற்காக வெளியில் சென்றது . அப்போது மரம் ஒன்றில் இருந்த சிறுத்தை , கலைமானை வேட்டையாட துரத்தியது.
சிறுத்தைக்கு பயந்து தலைதெரிக்க ஓடிய கலைமானின் தலை ஒரு மரத்தின் கிளைகளுக்கு இடையில் வசமாக மாட்டிக்கொண்டது . எவ்வளவு முயன்றும் அதன் தலை வெளியே வரவில்லை தன் முழு பலத்தினை கொண்டு கலைமான் தலையை வெளியே எடுக்க முயன்றது . இறுதியில் அதன் கொம்புகள் முறிந்து தலை வெளியே வந்தது.
கொம்புகள் ஒடிந்து போனதால் கலைமான் பார்ப்பதற்கே அசிங்கமாக தோற்றம் அளித்தது. இதைப் பார்த்த மற்ற விலங்குகள் கேலிபேசி சிரித்தன.
கலைமான் அழகிழந்து பழைய படி கரடியிடமே சென்றது . கரடியோ , கலைமானுக்கு நடந்ததைக் கேட்டு வருந்தியது. மானே ! அழகு என்பது எப்போதும் நம்முடன் இருக்கப்போகிற சொத்தில்லை. வயதாக வயதாக அது நம்மை விட்டு விலகுவது உறுதி. உனக்கு கொஞ்சம் விரைவாக போய்விட்டது. இதற்காக வருந்தாதே என்று கலைமானை தேற்றியது கரடி. கரடியின் பெருந்தன்மையைக் கண்டு வெட்கத்தில் தலை குனிந்த கலைமான், அதனிடம் மன்னிப்பு கேட்டது. இருவரும் பழையபடி நண்பர்களாக வாழத்தொடங்கினர்.
என் அன்பு வாசகர்களே,
அழகு வெளிப்புறத்தில் காணப்படுவது மாத்திரமல்ல அது ஒவ்வொரு மனிதனின் உட்புறத்திலும் காணப்பட வேண்டும். வெளிப்புற அழகு வயதாக வயதாக குறைந்துக்கொண்டே வரும் ஆனால் உட்புறத்திலிருந்து புறப்படுகிற அழகு நாட்கள் செல்ல செல்ல கூடிக்கொண்டே போகும்.
"அகத்தின் அழகு முகத்தில் தெரியும்" என்பது பழமொழி. இன்று வெளித்தோற்றத்தில் மிகவும் அழகாக தெரிய வேண்டும் என்பதற்காக என்னவெல்லாம் செய்ய வேண்டுமோ அதை எல்லாவற்றையும் ஒன்று விடாமல் செய்கின்றனர். இந்த அழகை வேதம் இவ்வாறு கூறுகிறது,
நீதிமொழிகள் 31:30
30 சௌந்தரியம் வஞ்சனையுள்ளது, அழகும் வீண், கர்த்தருக்கு பயப்படுகிற ஸ்திரீயே புகழப்படுவாள்.
எத்தனை தான் உலக அழகிகள், ஆணழகன்கள் வந்தாலும் நம் இயேசுவின் அழகிற்கு ஈடாக முடியாது. அவர் வெளிப்புறம் மட்டுமல்ல உட்புறத்திலும் மிகுந்த அழகுள்ளவர். சரி உட்புற அழகு என்றால் என்னவென்று பார்ப்போம்.
நமக்கு தெரிந்த அல்லது தெரியாத ஒரு நபர் நம் கண் முன்னே கஷ்டப்படும் போது அவர்களை கண்டும் காணாதவர்களை போல அந்த இடத்தை விட்டு விலகி செல்வது. இன்றைய காலகட்டத்தில் தாங்கள் உட்புறம் அழகாக இருக்கிறது என்று மற்றவர்களுக்கு காண்பிக்க, அநேகருடைய கண்களுக்கு முன்பாக பலருக்கு உதவி செய்கிறார்கள். அதை வஞ்சனையோடு படம்பிடித்து சமூக வலைத்தளங்களில் பதிவேற்றி தங்கள் பெயரை பிரஸ்தாபப்படுத்துகிறார்கள். இதனால் எந்த பிரயோஜனமும் இல்லை என்பது தான் உண்மை.
To Get Daily Story and prayer requests in What's App Contact +917904957814
நம் வெளிப்புறம் அழகாக வேண்டும் என்றால் முதலாவது நம் உட்புறம் தூய்மையாக இருக்க வேண்டும் என்பதை இயேசுவும் தம் போதனையில் போதித்திருக்கிறார்.
மத்தேயு 23:25
25 மாயக்காரராகிய வேதபாரகரே! பரிசேயரே! உங்களுக்கு ஐயோ, போஜனபானபாத்திரங்களின் வெளிப்புறத்தைச் சுத்தமாக்குகிறீர்கள், உட்புறத்திலோ அவைகள் கொள்ளையினாலும் அநீதத்தினாலும் நிறைந்திருக்கிறது.
நம் உட்புறம் சுத்தமாகும் போது நம் வெளிப்புறமும் தானாகவே அழகாக மாறும். அழகை பற்றி சொல்ல வேண்டுமானால் இன்னும் அநேக காரியங்கள் உண்டு அவற்றை எழுதினால் குட்டிக்கதை மிகப்பெரிய கதையாகி விடும் எனவே இதோடு முடிக்கிறேன்.
எனவே நம் உட்புறத்தை தூய்மையாக்குவோம் நம் வெளிப்புறத்தை நாம் எதிர்ப்பார்ப்பை விட மென்மேலும் தேவன் அழகாக்குவார்.