================
ஓர் குட்டிக் கதை
காணாமல் போன செல்ஃபோன்!!!
===============
கடைக்கு வந்து என் சட்டைப்பையில் பார்த்தேன். என் செல்போன் காணாமல் போயிருந்தது.
நானே செல்போன் விற்பனை , பழுது நீக்கும் கடை தான் வைத்திருக்கிறேன்.
ஆனால் இந்த செல்போனை தவறவிட்டது மிகவும் அதிர்ச்சியாக இருந்தது. சுமார் 25 ஆயிரம் ருபாய் மதிப்பு.எப்படியோ கீழே விழுந்திருக்கிறது.
வேறு ஒரு போனில் இருந்து ,அந்த நம்பருக்கு கால் செய்தேன் முதலில் பதில் இல்லை. மூன்றாம் முறை எடுக்கப்பட்டது .
'' ஹலோ '' என்றது ஒரு சிறுவனின் குரல்.
'' இந்த போன் என்னோடது , மிஸ் பண்ணிட்டேன். எங்க இருக்கீங்கனு சொல்லுங்க. நானே வந்து வாங்கிக்கறேன். ''
'' கே.ஜெ ஸ்டோர் பக்கத்துல வந்துட்டு இருந்தேன் அங்கிள் , ரோட்ல ஒரு போன் ரிங் ஆயிட்டு இருந்துச்சு. அதான் எடுத்து பேசறேன் ''
''அங்கேயே இருங்க 2 நிமிசத்துல வந்துடறேன் ''
நான் உடனே கிளம்பி கே.ஜெ ஸ்டோர் அருகில் சென்றேன். சிறுவன் நின்று கொண்டிருந்தேன். கொரோனா காலம் என்பதால் மாஸ்க் அணிந்திருந்தான். நானும் அணிந்து இருந்தேன்.
'' நான் தான் தம்பி , போன் மிஸ் பண்ணது''
'' இந்தாங்க அங்கிள் ''
'' உன் பேர் என்ன தம்பி ''
'' இளங்கோ ''
'' என்ன க்ளாஸ் படிக்கிற தம்பி ?''
''செவென்த் போகணும் அங்கிள் ''
'' எந்த ஸ்கூல் ''
சொன்னான்.
'' தேங்க்ஸ்பா , போன் எடுத்து ஆஃப் பண்ணி வச்சுக்காம , என்கிட்ட கொடுத்தியே, பெரிய விஷயம் பா ''
'' போன் தொலைச்சவங்க பாவம் தானே, போன் இல்லமா எவ்ளோ கஷ்டப்படுவாங்கனு தான் நினைச்சேன் அங்கிள்.
போனை நானே எடுத்து வச்சிக்கணும்னு நான் நினைக்கவே இல்லை ''
நான் அவனிடம் 500 ருபாய் கொடுத்தேன்.
''காசெல்லாம் வேண்டாம் அங்கிள். ''
''என்னோட சந்தோஷத்துக்காக வாங்கிக்க இளங்கோ. அதுக்கு அப்புறம் இந்த பணத்துல என்ன வேணா பண்ணிக்கோ ''
அவன் சட்டைப்பையில் வைத்துவிட்டு கிளம்பி கடைக்கு வந்தேன் . நான் விற்பனையும், உதவியாளன் ராகுல் ரிப்பேரும் கவனிப்போம்.
ஒரு மணிக்கு நானும் , இரண்டு மணிக்கு மேல் அவனும் உணவு இடைவேளைக்கு செல்வது வழக்கம்.
நான் வீட்டிற்கு சென்று இரண்டு மணிக்கு திரும்ப வந்தபோது கடைவாசலில் அந்த சிறுவன் ,இளங்கோ நின்றிருந்தான்.
ராகுலும் இளங்கோவும் பேசிக்கொண்டு இருந்தார்கள்.
'' இந்த போன்ல டிஸ்பிளே உடைஞ்சு இருக்கு. மதர் போர்டும் போச்சு , இதை ரிப்பேர் பண்றது வேஸ்ட் . 4000 ருபாய் ஆகும். 4000 ரூபாய்க்கு இதே மாடல் புதுபோன் கிடைக்கும்''
'' 500 ரூபாய்க்கு இதை ரிப்பேர் பண்ண முடியாதா ?''
'' ம்ம்ஹூம் முடியாது ''
நான் கடைக்கு உள்ளே நுழையும்போது இளங்கோ சோகமாக வெளியேறினான். நான் கூப்பிட்டேன்.
'' என்ன தம்பி , போன் காட்டு ''
கொடுத்தான்.
''ராகுல் , இதுல எல்லா பார்ட்ஸும் மாத்திடு''
'' பத்து நிமிஷம் வெய்ட் பண்ணு தம்பி ''
''ஓகே அங்கிள் ''
''இந்த போன் யாரோடது , எப்படி உடைஞ்சிது ''
'' அப்பாவோட போன். ஒரு நாள் தெரியாம கீழ போட்டுட்டாரு ''
'' உங்க அப்பா என்ன பண்றாரு''
'' சினிமா தியேட்டர்ல வேலை பண்ணாரு. இப்போ தியேட்டர் எல்லாம் மூடிட்டாங்க. இப்போ 3 மாசமா வீட்ல தான் இருக்காரு. ஆன்லைன் க்ளாஸ் அட்டென்ட் பண்ண போன் வாங்கிதங்கப்பானு கேட்டேன். காசில்லைனு சொல்லிட்டாரு. இப்போ தான் உடைஞ்ச போன் ரிப்பேர் பண்ண பணம் கிடைச்சுது ''
அவனுடன் மேலும் பேசிக்கொண்டு இருந்தேன். ராகுல் போனை தயார் செய்து முடித்து இருந்தான்.
இளங்கோவிடம் கொடுத்தேன். சந்தோசமாக போனை வாங்கிப்பார்த்தான்.
'' எவ்வளவு ஆச்சு ,அங்கிள்''
'' இப்போ உன்கிட்ட எவ்வளவு இருக்கு''
''500 ருபாய் தான் இருக்கு , அதுவும் நீங்க கொடுத்தது தான் ''
அவனிடம் 500 ருபாய் வாங்கிக்கொண்டுமீதம் 400 ருபாய் கொடுத்தேன் .
''100 ருபாய் எடுத்துக்கிட்டேன்பா , போயிட்டுவா''
'' அங்கிள் , காலைல நான் உங்க கிட்ட போன் திரும்ப கொடுத்ததால தானே எனக்கு கம்மியா காசு வாங்கி ரிப்பேர் பண்ணீங்க '' என்றான் .
'' அதுமட்டும் இல்லப்பா , உங்க க்ளாஸ்ல பிரபு னு ஒரு பையன் படிக்கறானா ?''
'' ஆமா அங்கிள் ''
'' அவங்க அப்பா தான் நான் . காலைல நீ படிக்கிற ஸ்கூல் பேர் சொன்னேல, நான் சாப்பிட வீட்டுக்கு போனப்ப , பிரபு கிட்ட இளங்கோ பத்தி தெரியுமா னு கேட்டேன்.
தெரியும்பா ,அவன் தான் எப்பவும் க்ளாஸ்ல ஃபர்ஸ்ட் மார்க். ஆனா ஆன்லைன் க்ளாஸ் ஒரு நாள் கூட அவன் அட்டென்ட் பண்ணவே இல்ல . என்னாச்சுன்னு தெரியலனு சொன்னான் .
நீ ஆன்லைன் க்ளாஸ் அட்டென்ட் பண்ண முடியாம எவ்வளவு மனசு கஷ்டப்படுவேன்னு தெரியும் இளங்கோ. அதன் கம்மி விலைல ரிப்பேர் பண்ணி கொடுத்தேன். நல்லாப் படிக்கணும் ''
''ரொம்ப தேங்க்ஸ் அங்கிள்'' என்று சொல்லிவிட்டு தன் சட்டையில் கண்ணீரை துடைத்துக்கொண்டான்.
அந்த கண்ணீருக்கு பின்னால் சோகமோ , மகிழ்ச்சியோ , அல்லது இரண்டுமே இருக்கக்கூடும் .
என் அன்பு வாசகர்களே,
இன்றைய கதை முகநூல் மற்றும் அநேக சமூக வலைத்தளங்களில் பதிவேற்றப்பட்ட உண்மை சம்பவமாகும்.
பிள்ளைகளுக்கு கஷ்டத்தின் மத்தியிலும் உண்மையாய் வாழ கற்றுக்கொடுத்த அந்த பெற்றோர்கள் மிகவும் நல்லவர்களே. பிறர் மனம் அறிந்து செயல்படுதல் எளிதான விஷயமல்ல. அந்த சிறுவனுடைய சூழ்நிலையை பார்த்தால் அவன் அந்த செல்போனை தன்னுடைய தேவைக்கு பயன்படுத்தி இருக்கலாம் ஆனால் அவனோ தான் படும் வேதனை அந்த செல்போனை தொலைத்த நபர் பட்டுவிடக்கூடாது என்று நினைத்து அதை உரிமையாளரிடம் ஒப்படைத்தான்.
To get daily story contact +917904957814
இன்றைய காலகட்டத்தில் இருக்கின்ற சிறு பிள்ளைகள் பெற்றோர்களை விட மிகவும் ஞானம் படைத்தவர்கள். பெற்றோர்கள் கடினமாய் தோன்றி விட்டுவிட்ட காரியங்களை மிக எளிதாக செய்து முடிக்கும் ஆற்றல் பெற்றவர்கள். இப்படிப்பட்ட சூழ்நிலையில் அந்த செல்போனை ஒப்படைத்த அந்த சிறுவன் பாராட்டிக்குரியவனே.
அநேக பெற்றோரின் சிந்தனை இதுதான், நான் கஷ்டப்பட்டு விட்டேன் என் பிள்ளைகள் கஷ்டப்பட்டு விடக்கூடாது என்று. நல்லதுதான் ஆனால் ஒன்றை மட்டும் நினைவில் கொள்ளுங்கள். நீங்கள் கஷ்டப்பட்டதினால் தான் இந்த உலகத்தில் உங்களால் நிலைநிற்க முடிகிறது. உங்கள் பிள்ளைகளும் அவ்வாறு நிலைநிற்க வேண்டுமெனில் அவர்களும் அந்தந்த காலத்தின் கஷ்டங்களை அனுபவித்தால் மட்டுமே அது சாத்தியம். அவர்கள் அவ்வாறு கஷ்டப்படும் நேரத்தில் உங்கள் அனுபவங்களைகதறி அதிலிருந்து விடுபட அவர்கள் முயற்சி செய்ய வழிவகை செய்யுங்கள். அதுதான் அவர்களுக்கு நீங்கள் நன்மை.
சாலெமோன் ஞானி இவ்வாறு கூறுகிறார்,
நீதிமொழிகள் 22:6
பிள்ளையானவன் நடக்கவேண்டிய வழியிலே அவனை நடத்து: அவன் முதிர்வயதிலும் அதை விடாதிருப்பான்.
பிள்ளைகளை நல்ல வழியில் நடத்தவேண்டியது ஒவ்வொரு பெற்றோரின் கடைமை. அந்த கடைமையை தேவனுடைய துணையால் மட்டுமே சாத்தியம். எனவே நம்மையும் நமது பிள்ளைகளையும் தேவனுடைய கரத்தில் சமர்ப்பிப்போம் நல்ல வழியில் நடப்போம்.
நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்!!!!
==================
ஓர் குட்டிக் கதை
பிரச்சனைகளில்லாத வாழ்வு
=================
ஒரு ஊரில் ஒரு தச்சர் இருந்தார். காலையிலே அவருடைய தொழிலுக்கு தேவையான பொருட்களை எல்லாம் எடுத்துகொண்டு இரு சக்கர வாகனத்தில் வேலைக்கு கிளம்பினார்.
போகும் வழியில் அவருடைய வாகனம் பழுதடைந்து நின்றது. அதை தள்ளிக் கொண்டே பொய் மெக்கானிக் கடையில் பழுது பார்த்து, ஒரு மணி நேரம் தாமதமாக வேலைக்கு போய் சேர்ந்தார்.
முதலாளி கடுமையாக அவரை திட்டினார். மிகுந்த வேதனையுடன் அவர் வேலைகளை ஆரம்பித்தார்.
சுத்தியலால் அடிக்கும் போது கை தவறி அவர் விரலில் காயம் பட்டது. காயத்துக்கு துணியால் கட்டு போட்டுக் கொண்டு மீண்டும் வேலையை தொடர ஆரம்பித்தார்.
சிறிது நேரம் கழித்து அவருடைய உளி உடைந்து விட்டது. என்னடா இது காலையில் இருந்து நமக்கு நேரமே சரி இல்லையே" என்று முனுமுனுத்துக் கொண்டே மீதி வேலைகளையும் முடித்தார்.
முதலாளியிடம் சொல்லி விட்டு வீட்டுக்கு புறப்பட தயாரானார். வண்டியை கிளப்ப முயற்சித்தார். ஆனால் வண்டி கிளம்ப மறுத்து விட்டது.
இருட்டி போய் விட்டது, இனி உன் வண்டியை பழுது பார்த்து எப்படி எடுத்து போவாய், வா என் வண்டியில் உன்னை வீட்டில் விட்டுவிட்டு வருகிறேன்" என்று முதலாளி சொன்னதும் அவருடன் கிளம்பினார்.
போகும் வழியில்
பாவம்யா நீ காலையில் இருந்து உனக்கு எல்லாம் சோதனையாகவே இருக்கு" என்று ஆறுதல் சொல்லிக் கொண்டே கூட்டிகிட்டு போனார் முதலாளி.
தச்சர் வீடு வந்ததும் "தாகமா இருக்கு கொஞ்சம் தண்ணி எடுத்துட்டு வா" என்று முதலாளி சொன்னார்.
"வீட்டுக்குள் வாங்க முதலாளி" என்று அவரை உள்ளே அழைத்தார் தச்சர். முதலாளியும் அவர் பின்னாடியே சென்றார்.
தச்சர் வீட்டு வாசலில் இருக்கும் மரத்தின் மீது சிறிது நேரம் கை வைத்திருந்து விட்டு உள்ளே சென்றார். முதலாளிக்கு ஒன்றும் புரியவில்லை.
தச்சர் உள்ளே நுழைந்தவுடன் அவருடைய குழந்தை ஓடி வந்தது. குழந்தையை பார்த்தவுடன் தூக்கி அனைத்து முத்தம் கொடுத்தார்.
தன் மனைவியை பார்த்ததும் புன்முறுவலுடன் தன் முதலாளியை அறிமுகபடுத்தி விட்டு தண்ணீர் எடுத்து வரச் சொன்னார்.
காலையில் நடந்த எந்த பிரச்சனையையும் நினைத்து பார்க்காமல் எப்படி இவரால் சகஜமாக இருக்க முடிகிறது என்று முதலாளி வியந்தார்.
தச்சர் எந்த வித கவலையும் இல்லாமல் குழந்தையுடன் விளையாடிக் கொண்டு இருந்தார்.
தண்ணீர் குடித்து விட்டு முதலாளி கிளம்பத் தயாரானார். வீட்டிற்கு வெளியே வந்தவுடன் தச்சரிடம், "இந்த மரத்தை தொட்டுவிட்டு போனவுடன் காலையில் நடந்த எதை பற்றியும் கவலை படாமல் எப்படி உன்னால் இருக்க முடிந்தது" என்றார்.
அதுவா முதலாளி இது என்னுடைய சுமை தாங்கி மரம். ஒவ்வொரு நாளும் நான் வேலை முடித்து வந்தவுடன் இந்த மரத்தைத் தொட்டு கா்த்தாிடத்தில் என் பாரத்தை இறக்கி வைத்து விட்டு தான் செல்வேன்.
வேலை செய்யும் இடத்தில் ஏகப்பட்ட பிரச்சனைகள் நடக்கும். அதை எல்லாம் வீட்டிற்குள் எடுத்து கொண்டு போக கூடாது.
காலையில் வண்டி பழுதானதற்கும், நான் தாமதமாக வந்ததற்கும், என் கையில் காயம் ஆனதற்கும், உளி உடைந்து போனதற்கும் என் குடும்பத்தார் எப்படி பொறுப்பாக முடியும்?
நான் அவர்கள் மேல் கோபப்படுவது எந்த விதத்தில் நியாயம்? காலையில் நான் போகும்போது இந்த மரத்துக்கு அருகில் நின்று ஜெபம் செய்து பிரச்சளைகள் இல்லாமல் சமாதானமாய் போவேன்.
To get daily story contact +917904957814
ஆச்சரியம் என்னவென்றால் நான் மாலை கொண்டு வந்து ஜெபித்து விட்டு போன பிரச்சனைகள் அடுத்த நாள் காலை முழுவதுமாக தேவன் தீர்த்து வைத்திருப்பார்.
தச்சர் சொல்வதை கேட்டு முதலாளி ஆச்சரியப்பட்டு நின்றிருந்தார்.
என் அன்புக்குாியவா்களே,
நீங்களும் நாளையில் இருந்து இதை கடைபிடித்து பாருங்கள். பிரச்சனைகள் அஞ்சி ஓடும்.
பைபிள் சொல்கிறது..
கர்த்தர்மேல் உன் பாரத்தை வைத்துவிடு, அவர் உன்னை ஆதரிப்பார், நீதிமானை ஒருபோதும் தள்ளாடவொட்டார். (சங்கீதம் 55:22)
நீங்கள் ஒன்றுக்கும் கவலைப்படாமல், எல்லாவற்றையும் குறித்து உங்கள் விண்ணப்பங்களை ஸ்தோத்திரத்தோடே கூடிய ஜெபத்தினாலும் வேண்டுதலினாலும் தேவனுக்குத் தெரியப்படுத்துங்கள். அப்பொழுது,
எல்லாப் புத்திக்கும் மேலான தேவசமாதானம் உங்கள் இருதயங்களையும் உங்கள் சிந்தனைகளையும் கிறிஸ்து இயேசுவுக்குள்ளாகக் காத்துக்கொள்ளும்.
(பிலிப்பியர் 4:6,7)
1 பேதுரு 5:7
அவர் உங்களை விசாரிக்கிறவரானபடியால், உங்கள் கவலைகளையெல்லாம் அவர்மேல் வைத்துவிடுங்கள்.
பிரச்சனைகளில்லாமல் வாழச் செய்வாா்.
குறைவில்லாத வாழ்வு, குறைவில்லாத வாழ்வு
வியாதியும், நோய்களும் இல்லாத வாழ்வு, கடனில்லாத வாழ்வு பிரச்சனைகளில்லாத மனது ஆகியவற்றை தேவன் உங்களுக்குத் கென்று இரட்சிப்பில் ஏற்படுத்தி வைத்து இருக்கிறாா்.
விசுவாசத்தோடு ஜெபம் பண்ணுங்கள். விசுவாசித்து பெற்றுக்கொள்ளுங்கள்
நீங்கள் ஆசீா்வதிக்கப்பட்டவர்கள் !!!
========
ஓர் குட்டிக் கதை
கற்பித்தல்
========
ஒரு ஊர்ல விஷ்வா-ன்னு ஒருத்தர் இருந்தார், அவர் தன் ஊரில் உள்ள பள்ளியில் பயின்று , மேற்படிப்புகளை முடித்து ஆசிரியர் வேலை வாங்கியதும் அவருடைய பழைய பள்ளி ஆசிரியரை காண செல்கிறார். அவர் அந்த பள்ளியை அடைந்ததும் அய்யா வணக்கம், என்னை தெரிகிறதா? நான் உங்ககிட்ட தான் படிச்சேன் அய்யா என சொல்கிறார்.
ஆசிரியர், ஞாபகம் இல்லையப்பா....! நீ எந்த வருடத்தில் படித்தாய்? எந்த வகுப்பு? என கேட்க.... விஷ்வா சொல்கிறார் நான் இந்த வருடத்தில் படித்தேன் அய்யான்னு சொல்லிட்டு, நீங்க தான் சார் எனக்கு குரு , நீங்க தான் எனக்கு வழிகாட்டி, நீங்கதான் என் முன்மாதிரி ன்னு அடிக்கிட்டே போனார் . உங்களை மாதிரியே நன்கு படித்து நல்ல ஆசிரியரா வரணும்ன்னு அயராது படித்து இப்போது ஆசிரியரும் ஆகிவிட்டேன் அய்யா-ன்னு சொன்னார் விஷ்வா.
ஆசிரியருக்கு மிக பெரிய சந்தோசம், நாம கிட்ட படிச்ச பையன் நம்மளை போலவே ஆசிரியரா வந்து நிக்கிறான்னு மகிழ்ச்சியின் எல்லைக்கே சென்றுவிட்டார்.
எப்படிப்பா... எப்படி என்னை முன்மாதிரியா எடுத்துக்கிட்டு நீ ஆசிரியரானே... அப்படி என்ன விஷயம் என்கிட்டே பிடிச்சுது-ன்னு கேட்டார்.
விஷ்வா வகுப்பில் நடந்த ஒரு சம்பவத்தை கூறினான்...
அய்யா...! உங்களுக்கு ஞாபகம் இருக்கா இல்லையான்னு தெரியல.... நான் உங்களுக்கு விரிவா சொல்லுறேன்யா....!
உங்க வகுப்புல தான் நான் படிச்சேன், நான் ஒரு ஏழை மாணவன், எந்த பொருளை பார்த்தாலும் எனக்கு ஆசை வரும், ஒருநாள் செந்தில் ஒரு விலையுயர்ந்த கடிகாரத்தை கட்டி இருந்தான், அதை பார்த்ததும் எப்படியாவது நான் அதை எடுத்துறணும்-ன்னு பேராசைப்பட்டேன், அந்த கடிகாரத்தை வாங்கும் அளவுக்கு என் குடும்பத்துல வசதி கிடையாது.
மதிய உணவு இடைவேளையில் செந்தில் கடிகாரத்தை கழட்டி வச்சுட்டு கை கழுவ போய்ட்டான், அந்த நேரம் பார்த்து நான் அதை எடுத்து என் கால் சட்டை பையில் போட்டுகிட்டேன்..... செந்தில் அழுதுகிட்டே உங்ககிட்ட புகார் சொன்னான்.....
நீங்க அதுக்கு எந்த கோபமும் படமா... யாரையும் சந்தேக படாம.... எடுத்தவங்க கொடுத்துருன்னு சொன்னீங்க, ஆனா யாருமே கொண்டுவந்து வைக்கல......
கொஞ்ச நேரம் கழித்து நீங்க எல்லோரையும் வரிசையா நிற்க சொன்னீங்க... எல்லோரும் வரிசையில நின்னோம்.
எல்லாரோட கண்களையும் கட்டுனீங்க, அப்புறம் பொறுமையா ஒவ்வொருத்தருடைய கால் சட்டைப்பையிலும் கைய விட்டு பரிசோதனை பண்ணுனீங்க,. என்னோட சட்டைப்பையில் கடிகாரம் இருந்தது... எல்லோரும் அப்போது கண்ணை கட்டிதான் இருந்தாங்க, எந்த சத்தமும் இல்லாம செந்தில்-கிட்ட போயி அந்த கடிகாரத்தை கொடுத்துடீங்க...
எங்க இருந்து எடுத்தீங்கன்னு சொல்லல, எப்படி எடுத்தீங்கன்னு சொல்லல..... .
எங்கிட்டையும் எதுவும் கேட்கவும் இல்லை....., ஏன்டா இப்படி செய்தேன்னு என்னை எல்லோர் முன்னாடியும் அவமானமும் படுத்தவில்லை, எனக்கு திருட்டு பட்டமும் கட்டவில்லை....
என் மானத்தையும் காப்பாத்துனீங்க...! என்னோட சுய மரியாதையும் காப்பாத்துனீங்க...! அய்யா...!
அன்றைக்கு முடிவு பண்ணுனேன் அய்யா, கற்பித்தல் ஏவோல பெரிய விஷயம்ன்னு....!. அப்போது தான் முடிவு பண்ணுனேன் அய்யா, படிச்சா ஆசிரியரா தான் படிக்கனும்-ன்னு....! கற்பித்தலை தலையாய கடமைன்னு எடுத்துக்கனும்-ன்னு முடிவு பண்ணிட்டு உங்களை என் முன்மாதிரி எடுத்துக்கிட்டு படிச்சேன் அய்யா. உங்கலமாதிரி நல்ல ஆசிரியரா நான் வாழ்ந்து காண்பிக்கணுன்னு ஆசை அய்யா ன்னு சொன்ன விஷ்வா கண்களில் கண்ணீர் பெருகியது, செய்த தவறிலிருந்து பாடம் கற்பித்து கொண்ட ஆனந்தம் அதுதான்.
ஆசிரியருக்கு ரொம்ப சந்தோசம், அருமைடா.... அருமை ரொம்ப பெருமையை இருக்கு, நீ இன்னும் பெரிய ஆளா வருவேன்னு வாழ்த்துனாரு....
விஷ்வா ஆசிரியரிடம் கேட்டான், அய்யா இப்போதாவது சொல்லுங்க அய்யா, என்னோட முகம் உங்களுக்கு ஞாபகம் வருதான்னு..?
அப்பவும் அந்த ஆசிரியர் , இல்லையேப்பா எனக்கு ஞாபகம் வரல ன்னு - சொன்னார்
என்ன அய்யா இப்படி சொல்லிடீங்க...!? ஏவோல பெரிய ஆபத்துல இருந்து என்னை காப்பாத்துனீங்க, அப்படியும் என் முகம் மறந்து போனதா...?
இல்லப்பா எப்படி எனக்கு ஞாபகம் வரும்ன்னு நீ நினைக்கிறே....! அன்றைய தினம் உங்களையெல்லாம் பரிசோதனை செய்யும் போது நானும் என் கண்களை கட்டிக் கொண்டு அல்லவே பரிசோதனை செய்தேன்.....! அப்புறம் எப்படி உன் முகம் எனக்கு ஞாபகம் வரும்...? சொல்லு.....?
ஏவோல பெரிய விஷயம் அமைதியா முடிச்சிருக்கார் பாருங்க... அவரால் அவனுக்கு திருட்டு பட்டம் கட்டியிருக்க முடியும், தண்டித்திருக்க முடியும், ஆனா அவரு எதையுமே செய்யல....!
அந்த மாணவனையும் அடையாளம் கண்டிருக்க முடியும், அதையும் செய்யவில்லை.
ஏவலோ பொறுமையா இந்த விஷயத்தை கையாண்டுருக்கார் பாருங்களேன்...! எங்க அந்த மாணவனின் முகத்தை பார்த்துட்டா அந்த திருட்டு ஞாபகம் வந்துருமோன்னு, தன் கண்களையும் கட்டிக்கொண்டு கண்டு பிடித்தார் அல்லவா..... ஒரு விஷயத்தை அவர் நாசூக்கா சொல்லுறார்.... தண்டித்தலில் இல்ல, கற்பித்தலிலும், முன்மாதிரியாக இருப்பதிலும் தான் நல்ல நிகழ்வே நடக்கும்.
என்னா ஒரு அமைதியா அந்த மாணவனை ஆசிரியர் ஆக்கி இருக்கிறார் பார்த்தீர்களா..! இதே தான் நம்ம வாழ்க்கையிலும், ஒருத்தர தண்டித்தால் தான் திருந்துவாங்கன்னு நினைச்சா கண்டிப்பா மாறமாட்டாங்க, அதுக்கு பதிலா நாம முன்மாதிரியா இருந்தா.....!? நம்மல சுத்தி இருக்ககிறவங்களும் நல்லவர்களாக மாறுவார்கள்....!
வெறுமனே ஏட்டுக் கல்வியை மட்டும் மாணவர்களுக்குச் சொல்லிக்கொடுப்பது இல்லை. கற்பித்தல், கற்பிப்பது என்பது உணர்வுகளுடன் சம்பந்தப்பட்ட விசயம். ஓர் ஆசிரியர் இதயபூர்மாகப் படிப்பித்தால்தான் அது மாணவர்களைச் சென்றடையும். உள்ளத்துடன் படிப்பித்தால்தான் மாணவர் களால் உள்வாங்க முடியும். ஆகவே கண்டித்துக் கற்பிக்கச் செய்வதெல்லாம் உரிய பலனைத் தராது என்ற உன்னத கருத்தினையும் முன்வைக்கிறார் இங்கே.
உண்மையிலேயே கற்பித்தல் என்பது ஒரு கலை. அதனை எல்லோராலும் ஈடேற்றிவிட முடியாதுதான். மாணவர்கள் கற்றுத் தேர்ந்து வீட்டிற்கும் சமூகத்திற்கும் நற்பண்பு உள்ளவர்களாகத் திகழ்வதெல்லாம் ஆசிரியர்கள் கைகளில்தானே உள்ளது? அதை தான் அமைதியாக முடித்திருக்கிறார் அந்த ஆசிரியர்.
தாய் ஊட்டாத பாலை பசு ஊட்டும் என்பது போல இல்லம் புகட்டாத இயல்பை ஆசிரியர் புகட்டுவார் என்பதனை மனதில் கொள்வோம்.
எதிர்காலத்தின் தூண்களாகத் திகழும் மாணவர்களுக்குச் சீரிய சிந்தனையை விதைத்து, ஊக்க உரமிட்டு வளர்க்க இந்த ஆசிரியர்களே காரணம்.
முடிந்தவரை ஊருக்கு செல்லும் போதெல்லாம் உங்கள் ஆசிரியரை சந்தியுங்கள்....
முன்மாதிரியாய் நாமும் வாழ்ந்துதான் பார்ப்போமே கற்பித்தலில் களங்கமற்று கற்றுக்கொள்வோம்.
என் அன்பு வாசகர்களே,
கற்பித்தல் ஒரு கலை அதை சிறந்த முறையில் செய்தால் அநேக நற்குணசாலிகளை உருவாக்க முடியும் என்பதே இக்கதையின் கருத்து.
To get daily message +917904957814
ஆசிரியர்கள் மட்டுமல்ல பெற்றோர்களும், சபை ஊழியர்களும் சிறந்த கலைஞர்கள் தான். ஒருவருக்கு அறிவுரை வழங்குவது மிக எளிது அதை அறிவுரை வழங்கியவர்கள் கடைபிடிப்பார்களா என்றால் அது கேள்விக்குறியே. மேலும் அவர்களிடமிருந்து வரும் பதில் நான் அதை கடைபிடிக்கவில்லை அதனால் தான் எனக்கு இத்தனை துன்பம் என்று கூறுவர். ஒருமுறை அனுப்பப்பட்டு விட்டோம் மறுபடியும் அந்த தவறை செய்ய கூடாது என்று நினைப்பதில்லை அந்த தவறை திரும்பத்திரும்ப செய்துவிட்டு மற்றவர்களுக்கு அதீத அறிவுரைகளை வழங்குவார்கள். இதனால் எந்த பிரயோஜனமும் இல்லை. நம்முடைய வாக்கு அல்ல நம்முடைய நன்நடத்தையே மற்றவர்களை மாற்றும் வல்லமை கொண்டது.
இன்றைய கதையிலும் அந்த ஆசிரியரின் வார்த்தை அல்ல அவரின் நன்நடத்தையே அவரை ஒரு சிறந்த உதாரணமாக எடுக்க வழிவகுத்தது. அதன்மூலம் இந்த மாணவன் மட்டுமல்ல அநேக நல்லவர்களும் இந்த உலகத்தில் தோன்றுவர். நாமும் அவ்வண்ணமே நற்கிரியைகளை செய்யத்தான் சிருஷ்டிக்க பட்டிருக்கிறோம் என வேதம் இவ்வாறு கூறுகிறது
10 ஏனெனில், நற்கிரியைகளைச் செய்கிறதற்கு நாம் கிறிஸ்து இயேசுவுக்குள் சிருஷ்டிக்கப்பட்டு, தேவனுடைய செய்கையாயிருக்கிறோம். அவைகளில் நாம் நடக்கும்படி அவர் முன்னதாக அவைகளை ஆயத்தம்பண்ணியிருக்கிறார்.
எபேசியர் 2:10
நம்மை நற்கிரியைகள் செய்ய தேவன் ஏற்கனவே நம்மை தகுதிபடுத்தி ஆயத்தப்படுத்தியிருக்கிறார். எனவே நாம் தேவனுக்குள் நற்கிரியைகளை ஆயத்தப்படுவோம் அநேக நல்லவர்களை உருவாக்குவோம்.
நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்!!!!