==============
ஓர் குட்டிக் கதை
அவசரப்பட்டால் காரியம் ஆகாது
==============
”வேகமாக வெற்றி கிடைக்க எவ்வளவு உழைக்க வேண்டும்?” என்று கேட்ட இளைஞனை நிமிர்ந்துப் பார்த்தார் குரு.
“ஏன்? என்னாயிற்றூ?”
“நான் தொழில் துவங்கி ஒரு வருடம் ஆகிவிட்டது. ஆனால் இன்னும் என்னால் நான் நினைத்த இலக்கை அடைய முடியவில்லை” என்று படபடப்பாய் சொன்ன இளைஞனின் பிரச்சனை புரிந்தது. அவனுக்கு ஒரு கதையை சொல்லத் துவங்கினார்.
‘வண்டி நிறைய தேங்காய்களுடன் ஒருவன் பயணித்துக் கொண்டிருந்தான். வேறு ஊரிலிருக்கும் கடைக்கு தேங்காய்களை அவன் கொடுக்க வேண்டும். அவனுக்கு அந்த ஊருக்கு சரியான வழி தெரியாது. அதனால் விசாரித்து போய்க் கொண்டிருந்தான். அப்போது ஒரு இடத்தில் வண்டியை நிறுத்தி வழி கேட்டான். அவனுக்கு வழி சொன்னவர் ஒரு பெரியவர். ஒரு நேர் சாலையைக் காட்டி அந்த வழியாக போனால் முக்கால் மணி நேரத்தில் ஊரை அடைந்துவிடலாம் என்றார். உடனே வண்டியோட்டி நல்ல வேகமாக போனால் இன்னும் சீக்கிரமாக போய்விடலாமா என்று கேட்க, அந்தப் பெரியவர், ‘ இல்லை.வேகமாக போனால் ஒன்றரை மணி நேரமாக்கிவிடும்’ என்று பதில் சொன்னார். வண்டியோட்டிக்கு எரிச்சலாகிவிட்டது. பெரியவர் தன்னை கிண்டலடிக்கிறார் என்று நினைத்தான். வண்டியை வேகமாக கிள்ப்பினான். நல்ல வேகத்தில் வண்டியை ஓட்டினான்.
சாலை கரடு முரடாக இருந்தது. இருந்தாலும் பெரியவர் சொன்ன நேரத்துக்கு முன்பாக சென்று விட வேண்டும் என்று வேகமாக வண்டியை ஓட்டிச் சென்றான். ஒரு திருப்பத்தில் பள்ளம் ஒன்று இருக்க, இவனால் வண்டியை கட்டுப்படுத்த இயலவில்லை.வண்டியின் ஒரு சக்கரம் பள்ளத்தில் இறங்க வண்டி சாய்ந்தது. தேங்காய்கள் சாலையில் சிதறி ஓடின. வேறுவழியில்லாமல் வண்டியை நிறுத்தி சிதறிக்கிடந்த தேங்காய்களையெல்லாம் எடுத்து வண்டியில் போட்டான்.அத்தனையையும் எடுத்து அடுக்க அவனுக்கு அரை மணிநேரத்திற்கு மேல் ஆகிவிட்டது. அப்போது பெரியவர் எதை குறிப்பிட்டு நேரக் கணக்கு சொன்னார் என்பது அவனுக்கு உரைத்தது.
இந்தக் கதையை சொன்னதும் வந்தவனுக்கு தான் எப்படி வெற்றி இலக்கை நோக்கி பயணிக்க வேண்டும் என்பது புரிந்த்து.
அப்போது குரு அவனுக்கு சொன்ன பழமொழி: அவசரப்பட்டால் காரியம் ஆகாது.
என் அன்பு வாசகர்களே,
இன்றைய காலகட்டத்தில் எல்லோருக்கும் எல்லாவற்றிற்கும் அவசரம். படிக்கிற பிள்ளைகளுக்கு சீக்கிரத்தில் படித்து முடிக்க வேண்டும் என்றும், படித்து முடித்த பிள்ளைகளுக்கு சீக்கிரத்தில் வேலை கிடைக்க வேண்டும் என்றும், வேலை செய்பவர்களுக்கு சீக்கிரத்தில் நன்கு சம்பாத்தித்து வாழ்க்கையில் செட்டில் ஆக வேண்டும் என்றும் எல்லாரும் அவசரப்படுகின்றனர்.
ஊழியத்திலும் கூட பத்து இருபது ஆத்துமாக்களை கொண்ட சபை ஊழியர்கள் தாங்களும் பல இலட்சம் விசுவாசிகளின் போதகராய் பெரிய சபையின் கட்ட வேண்டும் என்று விரும்புகின்றனர். இவை அனைத்தையும் நினைப்பது தவறில்லை ஆனால் எல்லாம் சீக்கிரத்தில் கிடைக்க வேண்டும் என்று நினைப்பது தான் தவறு.
இவ்வளவு காரியங்களை சீக்கிரத்தில் பெற்று கொள்ள விரும்புகிற யாரும் தனக்கு சீக்கிரத்தில் வயதாக வேண்டும் என்று விரும்புவதில்லை காரணம் வயதாக வயதாக பெலன் குறைந்துவிடும் என்பதால்தான். எல்லாம் நாம் நினைப்பது போல சீக்கிரத்தில் நடந்துவிட்டால் எப்படி இருக்கும் என்று ஒரு வேதாகம உவமை இவ்வாறு கூறுகிறது,
To get daily message in whats app and pray for u contact +917904957814
தான் ஏதும் சொந்தமாய் கஷ்டப்பட்டு சம்பாதிக்காமல் தன் தகப்பனுடைய ஆஸ்தியில் தனது பங்கை பெற்றுக்கொண்டு தன் தகப்பனை விட்டு பிரிந்து தான் சீக்கிரத்தில் தன் தகப்பனை விட பெரியவனாய் வர வேண்டும் என்று விரும்பினார். ஆனால் நடந்ததோ தனக்கு போதிய அனுபவம் இல்லாத காரணத்தினால் தான் கொண்டு சென்ற பணம் முழுவதும் செலவழித்து விட்டது.
ஆம் நாட்கள் செல்ல செல்ல நம் அனுபவம் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமான நபர்களை, சூழ்நிலைகளை சந்திக்கும் போது நம் அனுபவம் அதிகரித்துக்கொண்டே இருக்கும் அதுவே சீக்கிரத்தில் எல்லாம் கிடைத்துவிட்டால் நமக்கு எந்த அனுபவமும் இல்லாத காரணத்தினால் எல்லாவற்றையும் இழக்கக் கூடிய நிலை ஏற்படும். எனவே எல்லாவற்றிற்கும் அனுபவம் மிக மிக முக்கியம். வேதம் சொல்கிறது
ஏசாயா 40:11
11 மேய்ப்பனைப்போலத் தமது மந்தையை மேய்ப்பார்; ஆட்டுக்குட்டிகளைத் தமது புயத்தினால் சேர்த்து, தமது மடியிலே சுமந்து கறவலாடுகளை மெதுவாய் நடத்துவார்.
நம்மை மெதுவாய் நடத்தி தமது சொந்த மந்தையைப் போல நடத்துகிற தேவனிடத்தில் நம்மை சமர்ப்பிப்போம் நல்ல மேய்ப்பனாகிய தேவன் நம்மை சுகமாய் தங்க பண்ணுவார்.
நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்!!!!
=============
ஓர் குட்டிக் கதை
மலைப்பாம்பும் மான் குட்டியும்
============
குறட்டி என்ற பெயர் கேட்டால் மஞ்சளாறு காட்டில் சிறுத்தைகளும், புலிகளும் கூட பயப்படும்.
இருபது அடிக்கும் நீளமாக மரங்களின் கிளைகளில் படர்ந்து இருக்கும் தனது அழகிய உடம்பும், கரும்புள்ளிகளும் அதற்கு பெருமையாக இருந்தது.
கரும்பழுப்பு, பழுப்பு என்று பல நிறங்களில் மலைப்பாம்புகள் இருக்குமே தவிர இப்படி லட்சணமான கரும்புள்ளிகளுடன் பார்ப்பது ரொம்பவும் அரிது.
மலைப்பாம்புகள் பொதுவாக பறவைகள், முயல் போன்ற சிறிய பிராணிகளைப் பிடித்து உண்ணும். சில சமயம் மான் போன்ற சற்றுப் பெரிய விலங்குகளைக் கூடத் தாக்கும்.
ஆனால் குறட்டி சற்று வித்தியாசமானது. காட்டெருமைக்கன்று, சிறுத்தை போன்றவற்றைக் கூட தனது குறட்டிப்பிடியில நொறுக்கி எடுத்துவிடும். அதனால் அதற்கு குறட்டி என்று பெயர் வழங்கி வந்தது.
குறட்டி தனது தலையை ஒரு கிளையின் மீது வைத்தபடி ஆற்றங்கரையையே பார்த்துக் கொண்டு இருந்தது.
மிரண்டு மிரண்டு ஆற்றங்கரையில் வரும் மிளா மான் குட்டி அதன் கண்ணில் பட்டது.
நீண்டு கிடந்த தனது உடலை வேகமாக தன்னை நோக்கி இழுத்தது.
அநேகமாக அந்த மான்குட்டி மிகவும் குறுகலாக ஓடும், அந்த ஆற்றைக் கடந்து வரலாம். அப்படிக் கடந்து வந்தால் குறட்டி இருக்கும் வழியாகத்தான் வரவேண்டும்.
அந்த மிளா மான் ஆற்றில் இறங்கியது. குறட்டியில் வாயில் நீர் சுரந்தது.
மீதமுள்ள குறட்டி தனது உடலை கிளையில் சுற்றி தனது தலையை மட்டும் தொங்க வைத்தபடி அசையாமல் இருந்தது. பார்வை மட்டும் ஆற்றில் இறங்கிய மான் மீது இருந்தது.
ஆற்றில் மான் நீந்தியது. இதே மரத்திலிருந்துதான் குறட்டி ஒரு நாள் ஒரு சிறுத்தையை மடக்கிப் பிடித்தது. ரப்பர் போன்ற தனது உடம்பை கயிறு போல் பாவித்து இறுக்கிய வேகத்தில் சிறுத்தையின் எலும்புகள் மடமடவென்று முறிந்தன.
மான் கரையேறி விட்டது. குறட்டி அசையாமல் இருந்தது. அந்த மரத்திற்கு அருகாமையில வந்த பாதையில் சுற்றிப் பார்த்தபடி நடந்து வந்தது அந்த மான்.
சொல்லி வைத்ததுபோல் அந்த மரத்தடியில் வந்து நின்றது. குறட்டி மான்குட்டியில் கழுத்தில் மாலையாய் விழுந்தது.
“அம்மா” என்று கதறியது மான்குட்டி. எதிர்பாராத தாக்குதலால் நிலைகுலைந்து போனது. அப்படி இப்படி கூட அசையாமல் நின்றது.
குறட்டிக்குக் கூட ரொம்ப ஆச்சரியமாக இருந்தது. குறட்டி அதன் முகத்தைப் பார்த்தது பாவமாக இருந்தது. அதற்குள் குறட்டி ரப்பர் போன்ற நீண்ட தனது உடலால் மானைச் சுற்றிது.
மான் தேம்பி அழுதது. அதன் கண்களில் கண்ணீர் வழிந்தது.
குறட்டி இப்படி திடீர் தாக்குதல் நடத்தும் போது எந்த ஒரு மிருகமும் இதனிடம் தப்பிக்க போராட்டம் நடத்துமே தவிர இப்படி அழுது ஆர்ப்பாட்டம் செய்யாது.
“ஆமாம்…. ஏன் அழுகிறாய்” என்றது குறட்டி.
மான் தனது அழுகையை நிறுத்திவிட்டு உறுதியான குரலில் சொன்னது.
“இப்போது சாவு என்பது நிச்சயமாகி விட்டது. சாகும் முன்னர் அம்மாவின் உயிரைக் காப்பாற்றிய பெருமையாவது என்னைச் சேரும். நீங்கள் மனது வைத்தால் எனக்கு உதவலாம்” என்றது.
“நான் எப்படி உதவ முடியும்?” என்றது.
“மொட்டச்சி அம்மன் பாறைக்குச் சென்று நாவல் பழங்களை எடுத்து என் அம்மாவிற்கு கொடுத்துவிட்டு மீண்டும் இங்கு வந்து சேருகிறேன். பின்னர் உன் இஷ்டப்படி என்னைக் கொன்று சாப்பிடு” என்றது மான்.
“நீ மீண்டும் என்னிடம் திரும்பி வருவாய் என்பதற்கு என்ன உத்திரவாதம்?”
“நான் சொல்வதில் உனக்கு நம்பிக்கை இல்லை என்றால் நீ என் கூடவே வா.. நாவல் பழங்களை என் தாயிடம் சேர்த்ததும் நீ என்னைக் கொன்று சாப்பிடு”
“உன்னை விட்டால் என்னால் பிடிக்கமுடியாது? உன் வேகம் என்ன, என் வேகம் என்ன?” என்றது குறட்டி.
“என் மீது நம்பிக்கை இல்லை என்றால் நீ என்ன சொல்கிறாயே அதற்கு நான் கட்டுப்படுகிறேன்”
“நான் உன் உடலை சுற்றியபடியே இருப்பேன். என்னை சுமந்த படியே செல்ல வேண்டும்” என்று சொன்னது குறட்டி. அது அதற்கு ஒத்துக் கொண்டது. குறட்டியை சுமந்தபடியே சென்றது மான்.
மொட்டச்சி அம்மன் பாறைக்குச் சென்றது. நாவல் பழங்களை சேகரித்துக் கொண்டது.
மலைப்பாம்பு தன் உடலைச் சுற்றியிருக்க உற்சாகத்துடன் நடந்தது.
தனது அம்மாவுக்காக தன்னுடைய உயிரைக் கொடுக்க ஒரு வாய்ப்பு கிடைத்தது அதற்கு சந்தோஷமாக இருந்தது.
மான் தன் இருப்பிடத்திற்கு அருகாமையில் வந்தது. தன் இருப்பிடத்தையும் படுத்துக்கிடக்கும் அம்மாவையும் காட்டியது. குறட்டி அதன் உடம்பிலிருந்து மெல்ல இறங்கியது.
“நாவல் பழங்களைக் கொடுத்துவிட்டு தப்பிக்கலாம் என்று நினைத்தால்…. அப்புறம் நோய் வாய்ப்பட்டிருக்கும் உனது அம்மா எனக்கு உணவாக நேரிடும்” என்றது குறட்டி.
“நீ செய்த உதவியை ஒரு நாளும் மறக்க மாட்டேன். என் வார்த்தையை மீறமாட்டேன்” என்று சொல்லிவிட்டு துள்ளி ஓடியது மான் குட்டி.
குறட்டி மெல்ல ஊர்ந்து மரங்களின் ஊடே மறைந்து கொண்டது.
அங்கு அதற்கு பெரிய அதிர்ச்சி காத்திருந்தது. அங்கு பதினைந்து இருபது மான்கள் உடல் நலம் விசாரித்தபடி இருந்தன.
அதில் இரண்டு மூன்று மான்கள் ஒன்று சேர்ந்தால் கூட அவற்றின் கொம்புகளால் தனது தலையைக் குத்திக் கிழித்து விட முடியும்.
இப்படித்தான் சென்ற வாரம் ஒரு மலைப்பாம்பை இரண்டு பெரிய மிளா மான்கள் கொம்பினால் நசுக்கி எடுத்துவிட்டன. அந்த மாலைப் பாம்பு அங்கேயே உயிரை விட்டது.
பயம் என்றால் என்னவென்று தெரியாத குறட்டிக்குக் கூட கொஞ்சம் நடுக்கமாக இருந்தது.
“கையில் கிடைத்ததை விட்டு விட்டோமோ?” என்று கூட ஆதங்கமாக இருந்தது.
எதற்கும் ஜாக்கிரதையாக இருப்பது நல்லது. குறட்டி பெரிய தனது உடலை வளைத்து நெளிந்தபடி மறைவிடம் நோக்கி நகர ஏதோ அரவம் கேட்டது.
அதே மான்குட்டி தனியாக வந்தது.
“என் கடமை முடிந்தது… எனது வார்த்தையை நான் காப்பாற்றி விட்டேன்…..உனக்கு எனது நன்றி” என்று சொன்னவாறு குறட்டியின் முன்னால் வந்து நின்றது மான்குட்டி.
குறட்டியின் முரட்டுத் தோலையும் மீறி அதன் உடல் புல்லரித்தது.
“என்னைப் பற்றியா சொன்னாய்” என்றது குறட்டி
“இல்லை எனக்கு உதவி செய்த உன்னை காட்டிக் கொடுக்க மாட்டேன்.”
“உன்னை கொன்று தின்னப் போகும் நான் எப்படி உனக்கு உதவியவன் ஆவேன்?”
“நீ சொன்னது சரிதான்.. ஆனால் நீ உதவாவிட்டால் என் அம்மாவைக் காப்பாற்ற முடியாது போயிருக்கும். பெற்றோருக்காக தனது உயிரைத் தருவதைவிட பெருமை தரக்கூடிய விஷயம் உலகத்தில் வேறு என்ன இருக்க முடியும்?”
குறட்டி தனது தலையை மெல்ல உயர்த்தி மான்குட்டியின் கண்களில் வழிந்த கண்ணீரைத் துடைத்தது.
“தாய்க்காக தனது உயிரை தரத்துணிந்த உன்னை வணங்கினாலே ….எனக்குப் பெருமை” என்று சொல்லியபடி குறட்டி அதனை உயிரோடு விட்டுச் சென்றது.
மான்குட்டி குறட்டியை ஆச்சரியமாகப் பார்த்தது.
மரக்கிளைகளில் தவழ அதன் உடம்பின் கரும்புள்ளிகள் வைரமாக மின்னின.
என் அன்பு வாசகர்களே:
"பாம்பு கண்டால் படையே நடுங்கும்" என்ற வாக்கியத்திற்கு ஏற்ப பாம்பிற்கு பயப்படாத மனிதர்கள் என்று எவரும் இலர். மாத்திரமல்ல அந்த பாம்பினுடைய விஷத்திலிருந்து தான் அநேக வியாதிகளுக்கு மருந்துகளை தயாரிக்கின்றனர்.
இன்றைய கதையிலும் அதிக நச்சுத்தன்மை கொண்ட அந்த மிருகத்திடம் இருந்துதான் அன்பும், பாசமும் வெளிப்பட்டது. அதுபோலவே, எத்தனை கொடூரமான மனிதர்களானாலும் அவர்களிடமும் அன்பும், பாசமும் நிறைந்துதான் காணப்படும். அதற்கான சந்தர்ப்பங்கள், சூழ்நிலைகள் வரும்போது தான் அவர்கள் அதை வெளிப்படுத்துவார்கள்.
To Get Daily Story In What's App Contact +917904957814
வேதாகமத்தில் யோசேப்புக்கு அவன் சகோதரர்கள் செய்த காரியம் நாம் யாவரும் நன்கு அறிந்ததே. அவன்மீது பொறாமை கொண்டு அவனை குழியில் போட்டு பின்னர் எகிப்தியருக்கு விற்றுப்போட்டார்கள். சில காலங்களுக்கு பிறகு தங்கள் நாட்டில் பஞ்சம் பெருகியபோது, எகிப்திற்கு சென்று தானியங்களை வாங்க சென்று இறுதியில் யோசேப்பு தன் குடும்பத்தாரோடு சேர்த்துக்கொண்டான்.
இந்த கதையில் எந்த சகோதரர்கள் ஒரு சகோதரனை (யோசேப்பு) கொல்ல வேண்டும் என்று வாஞ்சித்தார்களோ, அதே சகோதரர்கள் தான், தங்கள் மற்றுமொரு சகோதரனுக்காக (பென்யமீன்) தங்கள் ஜீவனையும் கொடுக்க துணிந்தார்கள். காலங்களும், சூழ்நிலைகளும் கல்லான இருதயம் கொண்ட ஒரு மனிதனை எப்படி மாற்றுகிறது என்று சிந்தித்து பாருங்கள்.
வேதம் சொல்கிறது,
எசேக்கியேல் 11:19
அவர்கள் என் கட்டளைகளின்படி நடந்து, என் நியாயங்களைக் கைக்கொண்டு, அவைகளின்படி செய்ய நான் அவர்களுக்கு ஏக இருதயத்தைத் தந்து, அவர்கள் உள்ளத்தில் புதிய ஆவியைக்கொடுத்து, கல்லான இருதயத்தை அவர்கள் மாம்சத்திலிருந்து எடுத்துப்போட்டு, சதையான இருதயத்தை அவர்களுக்கு அருளுவேன்.
எனவே ஒருவேளை கல்லான இருதயம் கொண்டவர்களாய் நாமோ, நமக்கு பழக்கமானவர்களோ இருந்தால், அவர்களுக்கு சதையான இருதயத்தை தேவன் அருளும் படி அவர்களுக்காக பிரார்த்திப்போம், நிச்சயம் ஒருநாள் கல் கரைந்து சதையான இருதயமாய் மாறும்.
நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்!
==============
ஓர் குட்டிக் கதை
காரணம் புரிந்தது
==============
நூலகத்துக்குப் போயிருந்த தாத்தா வீடு திரும்பியபோது. பாலுவின் முகத்தில் கோபம் கொப்பளித்துக் கொண்டிருந்தது. கண்கள் கலங்கியிருந்தன. பாலுவின் அம்மாவும் அப்பாவும் அவனுக்கு ஆறுதல் கூறிக் கொண்டிருந்தார்கள்.
“”என்ன நடந்தது?” கேட்டார் தாத்தா.
“”மாநில விளையாட்டு அணிக்கான தேர்விலே, பாலு எதிர்பார்த்தபடி அவனுக்கு இடம் கிடைக்கலே. அதற்காக வருந்துகிறான்…” என்றனர் பாலுவின் பெற்றோர்.
“”அப்படியா? காரணத்தைப் புரிந்துகொண்டால் சமாதானமாகி விடுவான்” என்றார் தாத்தா.
தாத்தா கூறியதைக் கேட்டதும். “”இதுல என்ன காரணம் இருக்கு? மாவட்ட அளவிலே நான்தான் முதலிடத்தில் இருக்கிறேன். நான்காவது இடத்திலே அவன் இருக்கிறான். இது எல்லோருக்கும் தெரியும்” என்ற பாலு, தொடர்ந்தான்…
“”நமக்குத்தான் நடக்க வேண்டிய எதுவும் நடப்பதில்லை. இரண்டு மாதங்களுக்கு முன்னால் அம்மாவும் கோடி வீட்டுச் சேகரின் அம்மாவும் யாரோ ஒருவர் அருள்வாக்கு சொல்றாருன்னு கேட்கப் போனாங்க. அவர் மச்சு வீடு கட்டுவீங்கன்னு சேகரின் அம்மாவுக்குச் சொன்னார். அம்மாவிடமும் விரைவில் மச்சு வீடு கட்டிக் குடி போவீங்கன்னு சொன்னார். அவர் சொல்லியபடிய் சேகரோடு குடும்பம் மச்சு வீடு கட்டிட்டாங்க. அம்மாவுக்குச் சொல்லியபடி நடக்கலையே..? நாம் இன்னும் இந்தக் குச்சி வீட்டுலேதானே இருக்கோம்…” என்றான் பாலு.
“”நீ நினைப்பதும் சரிதான். ஆனால் நடந்திடும் ஒவ்வொன்றுக்கும் காரணம் உண்டு. நீ இங்கேயே உட்கார்ந்து இருந்தால் இதே நினைப்பில் கோபம்தான் வரும். வா, வெளியில் போய் வருவோம்” என்று பாலுவின் கையைப் பிடித்தார் தாத்தா.
இருவரும் சாலையில் நடந்து கொண்டிருந்தார்கள். சாலையோரத்தில் ஒரு கோவில் இருந்தது. “”தாத்தா, இந்தக் கோவிலின் கோபுரம் அதிக உயரம்!” என்றான் பாலு.
“”உம்…” என்றார் தாத்தா.
அந்தக் கோவிலுக்கு அருகில் இருந்த அரச மரத்திலிருந்து பழுப்பானதும் காய்ந்து போனதுமான சில இலைகள் தரையில் விழுந்து கிடந்தன. பிய்ந்து போன சருகு ஒன்று தனியே கிடந்தது. ஒரு பழுப்பு இலையை எடுத்த பாலு, “”இந்த இலை மருந்துக்கு ஆகும் என்பார்களே..?” என்றான்.
“”ஆமா, அரச இலைச் சருகை நெருப்பில் கருக்கி, தேங்காய் எண்ணெயில் குழப்பி தீ பட்ட புண்ணுக்குப் போட்டால் புண் ஆறிவிடும்” என்றார் தாத்தா. அவர்கள் பேசிக் கொண்டிருக்கும்போது, எதிரில் சூறாவளிக் காற்று சுழன்று வந்து கொண்டிருந்தது.
“”தாத்தா! அந்தக் காற்றைப் பாருங்க…” என்றான் பாலு.
“”சூறாவளி, சுழன்று சுழன்று வீசிக் கொண்டே போகும். கீழே கிடக்கும் குப்பை, சிறுகுச்சி, வைக்கோல் போன்றவற்றைத் தூக்கி மேலே கொண்டு போகும்…”
“”கிழக்குப் பக்கமாக வீசிக் கொண்டிருந்த சூறாவளி, இப்போது வடக்குப் பக்கம் திரும்பிப் போகிறது…”
“”அது எப்போது, எந்தப் பக்கம் போகும் என்று சொல்ல முடியாது… அதோ, திரும்பி நம்மை நோக்கி வருகிறது பார்… விலகிக்கோ… நம் மீது புழுதியை வாரி வீசிவிடும்” என்று சொல்லிக் கொண்டே பாலுவின் கையைப் பிடித்துப் பின்னோக்கி இழுத்தார், தாத்தா.
அவர்கள் நின்று கொண்டிருக்கும் பக்கமாகச் சுழன்றுகொண்டே வந்த சூறாவளி, தனியே கிடந்த அந்தப் பிய்ந்து போனச் சருகின் பக்கமாகப் போய், அதையும் தூக்கிக் கொண்டு மேலெழுந்து சுழன்று கொண்டே போனது. மேலே சென்ற சூறாவளி, கோவிலின் கோபுரத்தைக் கடந்து போய் விட்டது. சூறாவளியால் தூக்கிச் செல்லப்பட்ட அந்தச் சருகு, கோவிலின் கோபுரத்தில் ஒட்டியிருந்தது. அதைப் பார்த்த பாலு, “”இங்கே கிடந்த காய்ந்த சருகு, கோபுரத்தின் உச்சிக்குப் போய்விட்டதே!” என்றான் வியப்புடன்.
“”வா, இன்னும் சற்று தூரம் போய் வரலாம்…” என்று அழைத்தார் தாத்தா.
சாலையோரத்தில் இருந்த ஒரு பனை மரத்தின் உச்சியில் தொங்கிய குலையில் பனம்பழங்கள் இருந்தன.
“”தாத்தா, பனம் பழம்…” என்றான் பாலு. பனங்குலையைப் பார்த்த தாத்தா, “”அந்தக் குலையில் உள்ள பழங்களில் ஒன்று மூட்டு விட்டு, விழும் நிலையில் இருக்கிறது. இப்போதோ சற்றுப் பின்னோ அது விழுந்து விடும்…” என்றார் தாத்தா.
அவர்கள் பேசிக் கொண்டிருக்கும்போது, பறந்து வந்த காகம் ஒன்று அந்தப் பனம்பழத்தின் மீது உட்கார்ந்தது. உடனே தொப்பென்று கீழே விழுந்தது அந்தப் பழம். காகம் தாவி, அடுத்த பழத்தின் மீது போய் உட்கார்ந்து கொண்டது.
“”இப்போது சொல், அந்தக் காகம்தான் பனம்பழத்தைத் தள்ளி விட்டதா?” தாத்தா கேட்டார்.
“”இல்லையில்லை…காகம் வருவதற்கு முன்பே, அந்தப் பழம் விழக்கூடிய நிலையில்தான் இருந்தது. காகம் உட்காரவும் பனம்பழம் விழவும் சரியாக இருந்தது…. அவ்வளவுதான்” என்றான் பாலு.
“”அதாவது, அருள்வாக்கு சொன்னது போல…”
“”புரியலே, தாத்தா…”
“”உன் அம்மாவுக்கும் சேகரின் அம்மாவுக்கும் அருள்வாக்கு கூறியது ஒருவர்தான்…”
“”சேகரின் அம்மாவுக்குப் பலித்ததே!”
“”அது எப்படி நடந்தது என்பது உனக்குத் தெரியாது” என்ற தாத்தா,
“”சேகரின் அம்மா பிறந்த வீட்டுச் சொத்தாக நகரை ஒட்டி சிறிது நிலம் இருந்தது. அதை இருபது லட்ச ரூபாய்க்கு விற்றார்கள். சேகரின் அம்மாவின் சகோதரர்கள் இருவரும் நல்ல பணியில் உள்ளவர்களாகவும் பணவசதி உடையவர்களாகவும் இருப்பதால், அந்தப் பணத்தை அப்படியே கஷ்டப்பட்டுக்கொண்டிருந்த தங்கள் சகோதரிக்காகக் கொடுத்துவிட்டார்கள். அதனால்தான் அவர்களால் மச்சு வீடு கட்ட முடிந்தது. உன் அம்மாவுக்கு அப்படிப் பணம் வர வாய்ப்பில்லை. அதனால் மச்சு வீடு கட்ட முடியவில்லை…” என்றார் தாத்தா.
“”தாத்தா, காரணம் விளங்கிவிட்டது. திரும்பிப் போவோம்…”
“”மாநில அணித் தேர்வு..?”
“”அந்தச் சூறாவளிக் காற்றுதான் புரிய வைத்துவிட்டதே..!”
“”அருள் வாக்கு? மச்சு வீடு?”
“”பனம்பழம் விழுந்த கதைதான்…”என்றான் பாலு.
“”ஒருவர் திறமையாகவும் ஊக்கமாகவும் செயல்பட்டாலும் முடிவு என்பது அவரது காலத்தைப் பொறுத்ததாகவே அமையும். ஆகவே, நியாயம் நம் பக்கம் இருந்தும் நடக்க வேண்டியது நடந்திடவில்லையே என்று கலங்கி இருந்துவிடக் கூடாது. ஆற்றில் நீர் வரலாம்; வற்றிப் போகலாம். ஆனால், ஆறு அதன் போக்கில் இருந்து கொண்டுதான் இருக்கிறது. அதுபோல காலம் வரலாம், போகலாம். அதையே எண்ணிக் கொண்டிருக்காமல், நமது திறமையில் நம்பிக்கை வைத்து, முயற்சியைக் கைவிடாமல் தொடர வேண்டும்…” என்றார் தாத்தா.
“”புரிந்து கொண்டேன் தாத்தா…” குழப்பம் நீங்கி, தெளிந்த மனத்துடன் நடந்தான் பாலு.
என் அன்பு வாசகர்களே,
எந்த ஒரு காரியத்தையும் தெளிவாக ஆராயாமல் அரைகுறை யாக கேட்ட விஷயங்களை மட்டும் வைத்து எதையும் தீர்மானித்து விட கூடாது என்பதே இக்கதையின் கருத்து.
அநேகர் வெளித்தோற்றத்தை மட்டும் வைத்து மதிப்பளிக்கின்றனர். அவர்களின் அந்தரங்க வாழ்வை உற்று நோக்குவதில்லை. இன்றைய காலகட்டத்தில் அநேக போதகர்கள் நல்ல செழிப்பான வாழ்க்கை வாழ்கின்றனர் இதை மட்டுமே பார்த்து நானும் போதகரமாய் மாறி அவரைப் போல வாழப்போகிறேன் என்று அநேகர் எண்ணுவதுண்டு. அவ்வாறு எண்ணி அநேக சிக்கல்களில் மாட்டிக்கொள்கின்றனர்.
இவன் இயேசுவை ஏற்றுக்கொண்டதிலிருந்து அநேக ஆசீர்வாதங்கள் கிடைத்திருக்கிறது எனவே நானும் கிறிஸ்தவனாய் மாற்றுகிறேன் என்று சிலர் இயேசுவை ஏற்றுக்கொள்கிறார்கள். அவ்வாறு அவர்கள் இயேசுவை ஏற்றுக்கொண்ட பிறகு அவனைப் போல ஆசீர்வாதம் கிடைக்கவில்லை. எனவே தேவன் பட்சபாதம் உள்ளவர் என்று தீர்மானித்து விடுகிறோம்.
To get daily messgae in whats app no +917904957814
ஆனால் அவ்வாறு ஆசீர்வாதம் கிடைக்க அவன் செய்த காரியத்தை நோக்குவதில்லை. மேலும் சிலர் இயேசுவை ஏற்றுக் கொள்வதற்கு முன்பே ஐசுவரிய சம்பண்ணர்களாய் இருந்திருப்பர். எனவே அவர்கள் இயேசுவை ஏற்றுக்கொண்ட பிறகு அவர்கள் ஆஸ்தியும் ஐசுவரியமும் கூடவே தான் வரும். அதை பார்த்து இயேசுவை ஏற்றுக்கொண்ட பிறகு தான் ஆசீர்வதிக்கப்பட்டான் என்று சபையில் உள்ளவர்கள் நம்புகின்றனர்.
அன்பர்களே நமக்கு என்று தேவன் காலத்தையும் நேரத்தையும் குறித்து வைத்திருக்கிறார். எனவே அதுவரை பொறுமையுடன் இருப்போம் ஆசீர்வாதத்தை பெற்றுக்கொள்வோம்.
பிரசங்கி 3:1
ஒவ்வொன்றிற்கும் ஒவ்வொரு காலமுண்டு, வானத்தின் கீழிருக்கிற ஒவ்வொரு காரியத்துக்கும் ஒவ்வொரு சமயமுண்டு.
நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்!!!!