===============
ஓர் குட்டிக் கதை
மாற்று கோணம் நமக்கு முக்கியம்
==============
ஒரு கிராமத்தில் ஒரு அறிஞர் இருந்தார். அவர் ஒரு பொருளாதார மேதையாயிருந்தார். பல மன்னர்கள் தங்கள்நாட்டுப் பொருளாதாரத்தைச் சீர்படுத்த அவர் ஆலோசனையை நாடினர்.
ஒருநாள் ஊர்த்தலைவர் அவர் முன் வந்து அவரைப் பார்த்துக் கிண்டலாகச் சொன்னார்” ஐயா! அறிஞரே! நீங்கள் பெரிய அறிஞர் என்று உலகமே பாராட்டுகிறது. ஆனால் உங்கள் பையன் ஒரு அடி முட்டாளாக இருக்கிறானே! தங்கம், வெள்ளி இவற்றுள் அதிகம் மதிப்பு வாய்ந்தது எது என்று அவனைக் கேட்டால் அவன் வெள்ளி என்று சொல்கிறான். வெட்கக்கேடு!”
அறிஞர் மிக வருத்தமடைந்தார். பையனை அழைத்தார். கேட்டார் ”தங்கம், வெள்ளி இவை இரண்டில் அதிகம் மதிப்பு வாய்ந்தது எது?”
பையன் சொன்னான்”தங்கம்” அவர் கேட்டார் ”பின் ஏன் ஊர்த்தலைவர் கேட்கும்போது வெள்ளி என்று சொன்னாய்?”
பையன் சொன்னான்” தினமும் நான் பள்ளி செல்லும்போது அவர் ஒரு கையில் தங்க நாணயமும், மறு கையில் வெள்ளி நாணயமும் வைத்துக் கொண்டு என்னை அறிஞரின் மகனே என அழைத்துச் சொல்வார் ”இவ்விரண்டில் மதிப்பு வாய்ந்ததை நீ எடுத்துக் கொள் ”.
”நான் உடனே வெள்ளியை எடுத்துக் கொள்வேன் .உடனே அவரும் சுற்றி இருப்பவர்களும் சிரித்துக் கிண்டல் செய்வார்கள்.நான் அந்த நாணயத்துடன் போய் விடுவேன்.
இது ஓராண்டாக நடக்கிறது. தினம் எனக்கு ஒரு வெள்ளி நாணயம் கிடைக்கிறது. நான் தங்கம் என்று சொல்லி எடுத்துக் கொண்டால் அன்றோடு இந்த விளையாட்டு நின்று விடும். எனக்கு நாணயம் கிடைப்பதும் நின்று போகும். எனவே தான்…” அறிஞர் திகைத்தார்!
வாழ்க்கையில் பல நேரங்களில் நாம் முட்டாள்களாக வேடம் அணிகிறோம், மற்றவர்கள் அதைப் பார்த்து மகிழ்வதற்கு. ஆனால் நாம் தோற்பதில்லை.அவர்கள் வெல்வதாக எண்ணிக் கொண்டிருப்பார்கள். ஆனால் வேறு கோணத்தில் பார்க்கும்போது நாம் வென்றிருப்போம்! எந்தக் கோணம் நமக்கு முக்கியம் என்பதை நாம்தான் தீர்மானிக்க வேண்டும்.
என் அன்பு வாசகர்களே, முட்டாளாய் இருக்க வேண்டிய இடத்தில் முட்டாளாய் தான் இருக்க வேண்டும் என்பதே இக்கதையின் கருத்து.
நாம் அறிவாளிகளாய் இருந்தாலும் ஒரு சில இடங்களில் முட்டாளாய் மாறினால் தான் நம்மால் நிலை நிற்க முடியும். அதுபோலவே பலசாலிகள் பலவீனர்களாகவும், ஞானிகள் பைத்தியமாகவும் மாறினால் தான் அவர்கள் மனம் மகிழும் நமக்கு தேவையானதும் கிடைக்கும்.
இக்கதையில் ஊர்த்தலைவர் அறிவாளியின் மகனை முட்டாளாக மட்டந்தட்டி அதை அந்த அறிவாளியிடமே கூறினார். இதனால் அந்த அறிவாளிக்கோ, அவரின் மகனுக்கோ எந்த குறைவும் ஏற்படவில்லை. ஆனால் அந்த ஊர்த்தலைவர்க்கோ தினமும் ஒரு வெள்ளிக்காசு என ஓராண்டாக நஷ்டம் தான். ஆனால் அந்த ஊர்த்தலைவர் அதை உணரவில்லை ஏதோ பெரிய காரியத்தை சாதித்ததைபோல் தன்னை தானே நஷ்டப்படுத்திக் கொண்டிருக்கிறார்.
வேதத்தில் யோசுவா ஒவ்வொரு பட்டணங்களாய் முறியடித்துக் கொண்டு வரும்போது கிபியோனின் குடிகளாகிய ஏவியர் தங்களை ஸ்தானாபதிகளை போல வேடமிட்டு யோசுவாவினிடத்தில் வந்து உடன்படிக்கை செய்து அவனுக்கு அடிமைகளானார்கள். உண்மையில் ஏவியர்கள் எண்ணிக்கையில் இஸ்ரவேலரை விட அதிகமானவர்கள். ஆனால் தேவன் இஸ்ரவேலோடு இருப்பதால் எளிதில் வீழ்த்திவிடுவார்கள் என்று நன்றாக அறிந்ததால் யோசுவாவோடு உடன்படிக்கை செய்து அடிமைகளானார்கள். அதனால் அவர்களும் அவர்கள் பட்டணமும் இஸ்ரவேலரின் கைக்கு தப்புவித்தது.
To get daily message in whats app and prayer requests contact +917904957814
இதை போன்று இந்திய வரலாற்றில் ஒரு சம்பவமும் உண்டு என்னவெனில் படை பலத்திலும், ஆயுத பலத்திலும், போர் பயிற்சியிலும் இந்தியாவை விட பன்மடங்கு அதிகமாக உள்ள சீனா இந்தியாவின் எல்லைகள் ஒவ்வொன்றாய் ஆக்கிரமித்து இந்தியாவிற்குள் ஊடுருவ ஆரம்பித்து. சீனாவின் தாக்குதல்களை இந்தியாவால் எதிர்க்கொள்ள முடியாமல் திணறியது. போதுமான பயிற்சி, ஆயுதம் என் எதுவும் இல்லாமல் என்ன செய்ய முடியும். எனவே ஒவ்வொரு பகுதியாக சீனா தன்வசப்படுத்தியது. உலக நாடுகள் எதிர்ப்பை தெரிவித்தும் சீனா பின்வாங்கவில்லை. எல்லைகளின் பெரும்பகுதி சீனா கைப்பற்றியது. யாரும் எதிர்பாராத விதமாக திடீரென சீனா போர் நிறுத்தம் செய்து சமாதான உடன்படிக்கை செய்து போரை முடிவுக்குக் கொண்டு வந்தது. காரணம் ஏராளம் இருந்தாலும் இயற்கை சூழ்நிலை காரணமாக சீனா தோற்று போக வேண்டிய நிலை ஏற்ப்படும் என்று உணர்ந்ததால் சமாதான உடன்படிக்கை செய்தது. அதனால் தன் படைகளையும், தன் தேசத்தையும் பெரிய சேதத்திலிருந்து பாதுகாத்தது.
பிரசங்கி இவ்வாறு கூறுகிறார்
பிரசங்கி 7:16
மிஞ்சின நீதிமானாயிராதே, உன்னை அதிக ஞானியுமாக்காதே, உன்னை நீ ஏன் கெடுத்துக்கொள்ளவேண்டும்?
நீதியில் மட்டுமல்ல, ஞானம், பலம் என எல்லாவற்றிலும் மிஞ்சாமல் எல்லைமீறாமல் இருக்கும் போது நமக்கும் நம் குடும்பத்திற்கும், நம் சுற்றுப்புறத்தாருக்கும் நம்மால் எந்த கெடுதலும் ஏற்ப்படாத வண்ணம் செயல்படுவோம் ஆசீர்வாதமாய் வாழ்வோம்.
==============
ஓர் குட்டிக் கதை
வீண் பழியும் இலவம் பஞ்சும்
==============
ஒரு ஊரில் வெட்டுபுலி என்ற ஒருவன் இருந்தான். அவன் ஒரு முறை தேவையில்லாமல் ஒரு கிராமவாசி மீது பழி சொல்லி பஞ்சாயத்தைக் கூட்டினான்.
பஞ்சாயத்திலும் கிராமவாசிக்குத் தண்டனை கிடைத்தது. பின், வீட்டிற்கு வந்த வெட்டுபுலியின்யின் மனசாட்சி அவனை உறுத்தியது. கிராமவாசி மீது தான் பழி சொன்னதை எண்ணி வருந்தினான். எனவே, தன் பாவத்திற்கு ஏதாவது பிராயச்சித்தம் உண்டா என்று தேடினான்.
என்ன பிராயச்சித்தம் செய்வதென்று அவனுக்குப் புரியவில்லை. எனவே, அந்த ஊரிலிருந்த ஒரு துறவியிடம் சென்றான். “துறவியாரே! நான் இந்தக் கிராமத்தில் வசிக்கும் ஒருவர் மீது வீண் பழி சொல்லிவிட்டேன். அது என் மனத்தை உறுத்துகிறது. அந்தப் பழி சொன்ன பாவத்தில் இருந்து தப்பிக்க எனக்கு வழி கூறுங்கள்!” என்று கேட்டான்.
துறவி சிறிது யோசித்துவிட்டு, “இன்று இரவு மூன்று கிலோ இலவம் பஞ்சை எடுத்துப் போய் அந்த கிராமவாசியின் வீட்டுக்கு முன்பு பரப்பிப் போட்டுவிட்டு வந்து விடு. நாளை வந்து என்னைப் பார்,” என்று கூறினார்.
வெட்டுபுலியிடம் பஞ்சைக் கொண்டு சென்று கிராமவாசியின் வீட்டின் முன் பரப்பி விட்டான். பின் மறுநாள் சென்று துறவியைப் பார்த்தான். “துறவியாரே! என் பாவம் போய் இருக்குமா இந்நேரம்?” என்று கேட்டான்.
உடனே துறவி, “வெட்டுபுலி! நீ இப்போது அந்த கிராமவாசியின் வீட்டிற்குச் செல். அவன் வீட்டு முன் நீ நேற்றிரவு பரப்பி வைத்த பஞ்சை மீண்டும் பொறுக்கிக்கொண்டு வா,” என்று கூறினார்.
வெட்டுபுலி மிகுந்த ஆவலுடன் ஓடினான். ஆனால், ஒரு விரல் அளவு பஞ்சு கூட அங்கு இல்லை. எல்லாம் காற்றில் பறந்துபோய் விட்டிருந்தது. அதனைக் கண்ட வெட்டுபுலி திடுக்கிட்டான். மீண்டும் துறவியிடம் ஓடி வந்தான்.
“துறவியாரே! நேற்றிரவு நான் கிராமவாசி வீட்டின் முன்னால் போட்டுவிட்டு வந்த பஞ்சில் ஒரு துளிப் பஞ்சாவது இப்போது அங்கு இல்லை. என்ன செய்வது?” என்று கேட்டான்.
துறவி சிரித்துவிட்டு, “வெட்டுபுலி! நீ விரித்துப் போட்டுவிட்டு வந்த பஞ்சை இப்போது மீண்டும் எப்படி அள்ள முடியாதோ, அதே போல, நீ ஒருவர் மீது கூறிய பழியையும் அதனால் உனக்கு ஏற்பட்ட பாவத்தையும் மாற்ற முடியாது. திருப்பி வார முடியாத பஞ்சைப் போன்றது தான் உன் பழிச் சொற்களும். அவற்றையும் இனித் திருப்பி வார முடியாது. இறைவனிடும் உன் தவறுக்காக மன்னிப்பு கேள்,” என்று கூறினார்.
வெட்டுபுலிக்கு உண்மை புரிந்தது. அன்று முதல் மற்றவர்கள் மீது பழி சொல்லும் குணத்தையே விட்டுவிட்டான். பிறர் மீது வீண் பழி சுமத்துவதால் பலன் ஏதும் கிடைக்கப்போவதில்லை என்பதை உணர்ந்தான் வெட்டுபுலி.
என் அன்பு வாசகர்களே,
செய்தபின் வருந்தி எந்த பிரயோஜனமும் இல்லை என்பதே இக்கதையின் கருத்து.
To get daily message In whats app contact +917904957814
பிறருக்கு ஏதேனும் மனதரிந்து ஒரு பழியை சுமத்தும்போது ஒருவேளை பாதிக்கப்பட்டவர்கள் மறந்தாலும் அந்த மனிதரை காணும்போது பாதிப்பு ஏற்ப்படுத்திய மனிதனுக்கு நிச்சயம் மனது உறுத்தும் என்பதே உண்மை.
வேதத்தில் அற்பமான திராட்சை தோட்டத்திற்காக தான் ராஜாவாய் இருந்தும் தன் மனைவி முகாந்திரம் நாபோத்தின் திராட்சைத் தோட்டத்தை அபகரிக்க அவன் மேல் வீண் பழி சுமத்தி அவனை கல்லெறிந்து கொலை செய்து விட்டு அந்த திராட்சை தோட்டத்தை தன் புருஷனுக்கு பரிசளித்தாள் அவன் மனைவியாகிய யேசபேல். அதனால் கிடைத்த வெகுமதியோ மிகவும் கொடூரமானது அதை 1 இராஜாக்கள் 21 ஆம் அதிகாரத்தில் தெளிவாய் கொடுக்கப்பட்டுள்ளது.
ஆம் அன்பானவர்களே, ஒரு சிலர் நான் தேவனுக்காக தான் அப்படி செய்தேன், மற்றவர்கள் நன்றாக இருக்க வேண்டும் என்பதற்காக தான் இப்படி செய்தேன் என்று தாங்கள் செய்த அநியாயத்தை நியாயப்படுத்துவார்கள். இவ்வாறு தன் நாவை அடக்காமல் மற்றவர்கள் மேல் வீண்பழி சுமத்தி அதனால் தன் தங்களை தாங்களே வஞ்சித்துக்கொள்கிறவர்களை வேதம் இவ்வாறு கூறுகிறது,
யாக்கோபு 1:26
உங்களில் ஒருவன் தன் நாவை அடக்காமல், தன் இருதயத்தை வஞ்சித்து, தன்னைத் தேவபக்தியுள்ளவனென்று எண்ணினால் அவனுடைய தேவபக்தி வீணாயிருக்கும்.
எனவே நம் தேவ பக்தி ஒருபோதும் வீணாய் போகாதபடிக்கு நம் நாவை அடக்கி, நம் இருதயத்தை வஞ்சிக்காமல் நம்மை நாமே நிதானித்து அறிந்து தேவபக்திக்கேற்ற காரியங்களை நடப்பிப்போம் தேவ பக்தியுள்ளவர்களாய் வாழ்வோம்.
நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்!!!
=============
ஓர் குட்டிக் கதை
வழி மாறிய சிந்தனை
=============
“வாட் யூ வாண்ட்? வரவேற்பறையில் அமர்ந்திருந்த பெண்ணின் கேள்வியை கவனிக்கமல் அவள் போட்டிருந்த, உடை அலங்காரத்தைக்கண்டே மிரண்டு விட்டான் கார்த்திகேயன், பதிலை ஆங்கிலத்தில் சொல்லவே மனதுக்குள் வார்த்தைகளை கோர்த்து சொல்ல யோசித்தான். மறூபடி அவள் அந்த கேள்வியை கேட்கவும், திடுக்கிட்டு, “இண்டர்வியூ”வுக்கு கூபிட்டிருக்காங்க, என்று தமிழிலிலேயே சொன்னான்.நீங்கள் இடது பக்கமாய் போய் வலது புறம் உள்ள அறையில் உட்காருங்கள். இதை ஆங்கிலத்தில்தான் சொன்னாள். அந்த மொழியை உச்சரித்த அழகை இரசித்தவன், “தேங்க்யூ” இதை ஆங்கிலத்தில் தைரியமாக சொல்லிவிட்டு அவள் சொன்ன இடத்துக்கு சென்றான்.
அங்கு இவனைப்போல பத்திருபது பேர் உட்கார்ந்திருந்தனர். ஆண்களானாலும், பெண்களானாலும் அவர்கள் அணிந்திருந்த உடைகளும். அமர்ந்திருந்த தோரணைகளும் இவன் மனதுக்குள் தாழ்வு உணர்ச்சியை கொண்டு வந்தன. அவர்களும் இவன் வந்த்தை கண்டு அவ்வளவு சந்தோசப்பட்டதாக தெரியவில்லை. நட்புக்கு கூட புன்னகையை சிந்த விட வில்லை.இவன் மெல்ல பக்கத்திலிருந்த குஷன் நாற்காலியில் உட்கார்ந்தான். தன்னுடைய உடைகளை பார்த்துக்கொண்டான். ஊரிலிருந்து அவன் கொண்டு வந்த அந்த ஒற்றை செட்
உடைகளை முதல் நாள் தங்கையிடம் கெஞ்சி கூத்தாடி தேய்த்து வைக்க சொன்னான்.
அவள் சிணுங்கிக்கொண்டே அந்த வேலையை செய்து விட்டு அவசர அவசரமாய் பள்ளிக்கு கிளம்பினாள். பதினோரு மணிக்கு பேருந்து நிலையத்திற்கு போகும் வழியில் டீக்கடை நடத்தி கொண்டிருக்கும் அப்பா அம்மாவிடம் சொல்லிவிட்டு கிளம்பலாம் என்று வந்தான்.
வெளியே “டீ” கேட்டவர்களுக்கு கொடுப்பதற்காக இரண்டு பக்க குவளைகளை உயர தூக்கி பிடித்தி விளாவிக்கொண்டிருந்த அப்பா இவன் வருவதை பார்த்து “வாடா என்றதோடு சரி, தன்னுடைய வேலையில் கண்ணும் கருத்துமாக இருந்தார்.கொஞ்சம் தள்ளி அம்மா கண்ணில் நீர் வழிய வேகமாக வெங்காயத்தை நறுக்கிக்கொண்டிருந்தாள். இவனை பார்த்தவள் நிமிர்ந்து தன் முந்தனையால் வழியும் கண்ணீரை துடைத்துக்கொண்டு அப்படியே பையனுக்கு “டீ”யை போடுய்யா ! சொலிவிட்டு கார்த்தி அஞ்சு நிமிசம் இருடா வெங்காய பஞ்சி ரெடியாயிடும் சாப்பிட்டு போவியாம்.
வேணாம்மா எனக்கு நேரமாகுது, அதற்குள் அப்பா கொண்டு வந்து கொடுத்த டீயை ஊதி குடிக்க ஆரம்பித்தான். இவன் குடித்து முடிக்கும் வரை மெளனமாக பார்த்துக கொண்டிருந்த அம்மா இவன் டம்ளரை வைத்தவுடன் தன் சுருக்கு பையை அவிழ்த்து சுருட்டி வைத்திருந்த பணத்தை கையில் கொடுத்தாள். இவன் அவள் கையில் இருந்து வாங்கிக கொண்டாலும் மனசு முழுக்க வருத்ததுடன்தான் வாங்கினான்.
“சே” எத்தனை முறை அம்மாவிடம் பணம் வாங்கி விட்டோம். ஒரு பட்டப்படிப்பாவது படிக்கவைக்கணும் என்ற இவர்களின் வைராக்கியத்திற்காகவேதான் படித்தான். எப்படியோ பி.ஏ என்னும் பட்டத்தை வாங்கி விட்டான். வெளி வந்த பின்னால்தான் தெரிந்தது, இந்த படிப்பு எல்லாம் வெளி உலகத்துக்கு ஒரு பத்து பைசாவிற்கு மதிப்பு இல்லை என்று. விடாமல் எழுதி போட்டான்.ஆசையுடன்தான் கிளம்புவான், எப்படியும் ஒரு இடத்தில் உட்கார்ந்து விடலாம் என்று, அங்கு போன பின் தான் தெரியும், நேர்முகத்திற்கு வந்திருப்பவர்களில் தன்னுடைய தகுதி மிக மிக சாதாரணம் என்று, அது மட்டுமல்ல என்னதான் படித்தவர்களால் நடத்தி கொண்டிருப்பதாக தெரிந்தாலும் “இனம்””ஜாதி” இவைகள் தான் தகுதியில் முக்கிய பங்கு வகிக்கிறது என்பது.
ஒவ்வொரு முறையும் இவன் ஊரிலிருந்து நகரங்களுக்கு செல்ல ஐம்பது ரூபாயாவது தேவைப்படுகிறது. பக்கத்திலிருக்கும் நகரம் என்றால் கொஞ்சம் செலவுகள் குறையும்.
தூரம் என்றால், தங்கும் செலவும் வந்து சேர்ந்து கொள்கிறது.இருக்கும் உடைகளையே மாற்றி மாற்றி ஒப்பேற்றிக்கொள்கிறான்.இப்பொழுது கோயமுத்தூருக்கு வர இவன் ஊரிலிருந்து பொள்ளாச்சி வந்து அங்கிருந்து கோவைக்கு வர்வேண்டியிருந்தது. “இண்டர்வியூ” ஒன்பது மணி என்று போட்டிருந்ததால், காலை நேரமாகி விடும் என்று நேற்று இரவே வந்து ஒரு வசதி குறைவான லாட்ஜில்” தங்கிக்கொண்டு, காலையில் அந்த ஒரு செட் உடையை போட்டு வந்திருந்தான். அதை போட்டுக்கொள்ளும்போதே அவன் உணர்ச்சிகள் அவனை ஒரு நவ நாகரித்தவனாக எண்ணிக்கொள்ள வைத்தது. ஆனால் இங்கு வந்த பின்னால் மற்றவர்கள் போட்டிருந்த உடைகளை பார்த்தபோது தான் போட்டிருந்தது அந்த கம்பெனி கீழ் மட்ட ஊழியர்களுதை விட தாழ்வாக இருப்பதாக மனதுக்கு பட்டது.
“க்ளக்” மென்மையாய் கதவு திறக்கும் சத்தம் கேட்டவுடன் அங்கு உட்கார்ந்திருந்த அனைவரும் பரபரப்பானார்கள். பெண்கள் தன்னுடைய ஒப்பனைகளை சரி செய்து கொண்டனர்.
ஆண்கள் தன்னுடைய உடைகளை ஒரு தரம் பார்த்துக்கொண்டனர். எங்காவது மடிப்பு கலைந்து போயுள்ளதா என்று?
இவர்களின் பரபரப்பை எல்லாம் கண்டு கொள்ளாமல் வெளியே வந்த உள்ளிருக்கும் மேலாளருக்கு அலுவலக உதவியாளனாய் இருக்க வேண்டும் தனக்குள் முணங்கிக்கொண்டே சென்றான் “கம்பெனிதான் பெரிசு” “டீ வாங்கறதுனாலும்,வெளியே போய்தான் வாங்க வேண்டி இருக்கு” அப்படி புலம்பிக்கொண்டே சென்றவனை ஒரு வித அசூயையுடன் அங்கு உட்கார்ந்திருந்தவர்கள் பார்த்துக்கொண்டிருந்தனர்.
கார்த்திகேயன் மட்டும் இதை உன்னிப்பாக கவனித்தான். ஏன் அப்படி கவனித்தான் என்று அவனுக்கே தெரியவில்லை. இருந்தாலும் அந்த வாக்கியம் அவன் மனதை இலேசாக அசைத்தது போல் இருந்தது. இப்பொழுது தன் மனம் இலேசாக இருப்பதாக உணர்ந்தான். அவனது பார்வை அங்குள்ளவர்கள் மீது படிந்தது. சற்று முன் இருந்த தாழ்வு மனப்பான்பை குறைந்தது போல் இருந்தது. கொஞ்சம் காலை நீட்டி உட்கார்ந்தை அங்குள்ளவர்கள் கொஞ்சம் வியப்புடன் பார்த்தனர்.
“இண்டர்வியூ” விறு விறுப்பாய் நடந்து கொண்டிருந்தது. வரிசையாக ஒவ்வொருவரும் உள்ளே சென்று வெளியே வர வெளியிலிருப்பவர்கள் அவர்கள் முகத்தை பார்த்து பரபரப்பானார்கள்.கடைசி ஆளாக கார்த்திகேயன் அழைக்கப்பட்டான்.
உள்ளே வந்தவன் தன்னுடைய சான்றிதழ்களை வாங்கி பார்த்த மேலாளரையும், அங்கு உட்கார்ந்து கோண்டிருந்த மூவரையும் உன்னிப்பாக கவனித்தான். வேறு எதுவும் குறிப்பிட்டு சொல்லமுடியாத இவன் சான்றிதழ்களை ஒரு சம்பிரதாயமாக பார்த்த மேலாளர் அதை அவனிடமே திருப்பிக்கொடுத்தார்.சரி நாங்க பதில் போடறோம் என்று வழக்கமான பதிலை சொன்னார்.
இவன் சட்டென்று நான் வேலைக்காக இப்ப உங்க முன்னாடி நிக்கலை” சொன்னவனை சட்டென அங்கிருந்த நால்வரும் ஏறிட்டு பார்த்தனர். சார் முதல்ல நான் இங்க வேலைக்குத்தான் வந்து வெளியில உட்கார்ந்திருந்தேன், அப்ப உங்க ஆபிஸ் அஸிஸ்டெண்ட் சொல்லிட்டு போறதை கேட்டேன், ஒரு டீ வாங்கணும்னா கூட வெளியில போய் வாங்க வேண்டியிருக்குன்னு. நான் நாளையில இருந்து காலைக்கும், மதியத்துக்கும் மாலைக்கும் உங்க ஆபிசுக்கு டீ கொண்டு வந்து கொடுக்கறேன். இதுக்கு மட்டும் அனுமதி கொடுங்க” சார் இவர்களுக்கு ஆச்சர்யமாகி விட்டது. இதுவரை இப்படி ஒரு கோரிக்கை வைத்து எந்த இளைஞனும் அணுகியதில்லை. சரிப்பா எப்படி கொண்டு வருவே? பண வசதி, கொண்டு வர்றதுக்கு சாமான்கள் இது எல்லாம் வேண்டாமா? சார் முதல்ல உங்க அனுமதி கிடைக்கட்டும் சார், அடுத்த வேலைகளை உற்சாகமா தொடங்க ஆரம்பிச்சுடுவேன்.
தங்களுக்குள் பேசிக்கொண்ட அவர்கள் சரிப்பா நீ எப்படி இதை செய்யறேன்னு பார்த்துட்டுத்தான் சொல்லுவோம்.
வெளியே வந்த கார்த்திகேயன் தன்னிடம் எவ்வளவு பணம் இருக்கிறது என பார்த்தான்.
அருகில் எங்கு பேக்கரி இருக்கிறது என தேடினான்.அரை பர்லாங்கு தள்ளி ஒரு பேக்கரி இருப்பது கண்ணுக்கு தெரிந்தது. அங்கு நடக்க ஆரம்பித்தான்.
பேக்கரி முதலாளியிடம் தன்னை ஒரு “டீ” கடைக்காரரின் மகன் என்று அறிமுகப்படுத்திக்கொண்டான். அவரிடம் தன்னை அந்த கம்பெனி தினமும் டீ கொண்டு வந்து.
கொடுக்கும் வேலையை கொடுத்திருப்பதாகவும், உங்கள் கடையிலேயே நான் கொண்டு போக விரும்புகிறேன், சொன்னவன் அங்கேயே தன்னிடம் இருந்த பணத்தில் டீ சாப்பிட்டான். மதியம் வரை காத்திருந்தான். மதியம் சாப்பிட கிளம்பியவனை பேக்கரிக்காரர் விட வில்லை. சாப்பாடு இங்கேயே ரெடியாகும் சாப்பிடு என்று சொன்னார்.
அன்று மாலையில் அந்த அலுவலகத்தில் பணி புரிந்துகொண்டிருந்த பதினைந்து பேருக்கும் டீ அவர்கள் மேசைக்கே வந்தது. அந்த ரிசப்சனில் இருந்த பெண்ணுக்கும் இவனே கொண்டு போய் கொடுத்தான்.
அன்று மாலையே அந்த மேலாளர் அவனுடைய எண்ணங்களை பாராட்டி தன்னுடைய சொந்த பணத்திலிருந்து ஆயிரம் ரூபாயை கையில் கொடுத்து உன் தொழிலை தொடங்கு என்றார்.அவன் அதை கையில் வாங்கி மிக்க நன்றி என்றான்.
நான்கைந்து மாதங்கள் ஓடியிருந்தன.இப்பொழுது உடைகள் இவனை உறுத்தவில்லை. அது மட்டுமல்ல, அவர்களின் ஆங்கிலம் கூட பயமுறுத்தவில்லை, இன்னும் நான்கைந்து அலுவலகங்களுக்கும் இவன்தான் “டீ” சப்ளை செய்கிறான். .இன்னும் ஒரு வருடத்தில் அருகில் எங்காவது சொந்தமாய் ஒரு கடை போட்டு விடவேண்டும் என்று வைராக்கியமாய் இருக்கிறான்.
என் அன்பு வாசகர்களே,
சிந்தனை ஒரு மனிதனை நல்லவனும் அதே நேரத்தில் கெட்டவனாகவும் மாற்றும் வல்லமை கொண்டது. சிந்திக்கக் கூடிய சிந்தனை மற்றவர்களை பார்க்கிலும் வேறு விதமாய் காணப்பட்டு அது அங்கிகரிக்கப்படுமாயின் உயர்வு நிச்சயம்.
சிந்திக்கும் சிந்தனை நம் மூளையிலிருந்து தான் ஆரம்பமாகிறது. நம் சிந்தை நேர்மறையாக (Positive thoughts) இருக்கும் பட்சத்தில்நாம் முன்னேறிக்கொண்டே இருப்போம். அதுவே நம் சிந்தை எதிர்மறையாக (Negative thoughts) இருக்கும் போது என்னத்தான் பாடுபட்டாலும் நம்மால் ஒரு அடி கூட முன்னேற முடியாது.
சிறந்த ஞானியென்று பெயர்பெற்ற சாலெமோன் தான் நேர்மறை சிந்தை கொண்டதால்தான் தேவனிடத்தில் தனக்கு இஸ்ரவேல் ஜனங்களை ஆளும் ஞானத்தை கேட்டான். எதற்காக பின்வரும் நாட்களை அவன் திட்டமிட்டபடியால் அவன் இவ்வாறு சிந்தித்தான். அதனால் தான் அவனை விட சிறந்த ஞானி சாலெமோனுக்கு முன்னும் பின்னும் இருந்ததில்லை என்று வேதம் கூறுகிறது.
To get daily message in whats app and prayer contact +917904957814
ஆனால் இயேசு கிறிஸ்துவின் இரத்தத்தால் மீட்கப்பட்ட நாம் சாலெமோனைவிட ஞானிகளா?? இல்லையா??. ஆம் சாலெமோனைவிட நாம் ஞானிகள் தான் எப்படி??? வேதம் இவ்வாறு கூறுகிறது,
லூக்கா 11:31
தென்தேசத்து ராஜஸ்திரீ சாலொமோனுடைய ஞானத்தைக் கேட்கப் பூமியின் எல்லைகளிலிருந்து வந்தாள், இதோ, சாலொமோனிலும் பெரியவர் இங்கே இருக்கிறார்,
அவ்வளவு பெரியவரை தான் நம் சொந்த இரட்சகராக ஏற்றுக்கொண்டு அவரை சார்ந்து வாழ்ந்து வருகின்றோம். எனவே நம் முழு சிந்தையோடு தேவனிடத்தில் அன்பு கூறுவோம் தேவ கற்பனையை நிறைவேற்றுவோம்.
லூக்கா 10:27
அவன் பிரதியுத்தரமாக: உன் தேவனாகிய கர்த்தரிடத்தில் உன் முழு இருதயத்தோடும் உன் முழு ஆத்துமாவோடும் உன் முழுப் பலத்தோடும் உன் முழுச்சிந்தையோடும் அன்புகூர்ந்து, உன்னிடத்தில் அன்புகூருவதுபோலப் பிறனிடத்திலும் அன்புகூருவாயாக என்று எழுதியிருக்கிறது என்றான்.
நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்!!!