===============
ஓர் குட்டிக் கதை
ஆன் லைன் வகுப்பு
==============
நரசிபுரம் என்னும் ஊரில் அமைந்துள்ள பள்ளியில் ஏழாம் வகுப்பு படித்துத் கொண்டிருக்கிறான் ராஜேந்திரன் என்னும் சிறுவன். அவன் தாய் தந்தை இருவருமே விவசாய கூலி வேலைக்கு செல்பவர்கள். மிகவும் ஏழ்மையான குடும்பம். இந்த நேரத்தில் உலகம் முழுவதும் கொரோனா என்னும் வைரஸ் பரவியதால் நிறைய பேருக்கு உடல் நிலை சரியில்லாமல் போனது. இந்த வைரஸ், காற்றின் மூலம் தான் பரவுகிறது என்பதை கண்டுணர்ந்த விஞ்ஞானிகள், அந்தந்த அரசாங்கங்களில் சொல்லி மக்களை வெளி இடங்களில் கூடா வண்ணம் தடை போட்டுட் விட்டார்கள்.
தமிழ் நாட்டிலும் அரசாங்கம் தடை போட்டுவிட்டது. இதனால் பள்ளி, கல்லூரி, மற்றும் அனைத்துத் அலுவலகங்கள்,தொழிற்சாலைகள் எல்லாம் அடைக்கப்பட்டு மக்கள் வீட்டுக்குள்ளே இருக்கும்படியான சூழ்நிலை வந்துவிட்டது.
ராஜேந்திரன் வீட்டிலும் அவனது பெற்றோருக்கு கூலி வேலை செய்ய போகமுடியாமல் ஓரிரு மாதங்கள் வீட்டில் இருக்க வேண்டிய சூழ்நிலை வந்து விட்டது. அதன் பின் அவர்கள் நிலைமையில் முன்னேற்றம் வந்து அவர்கள் விவசாய கூலிகளாக செல்லலாம் என அரசு
அறிவித்தது. அவர்கள் இருவரும் வேலைக்கு சென்றாலும் இந்த மூன்று மாதங்கள் வீட்டில்
இருந்து விட்டதால், கடன் சுமை அதிகமாகி ஏழ்மை நிலைக்கு போய் விட்டார்கள்.
ராஜேந்திரனுக்கோ பள்ளிகள் அடைக்கப்பட்டு “ஆன்லைன்” வகுப்புக்கள் நடைபெறும் என அறிவித்து விட்டது. இவர்கள் வீட்டில் சாப்பாட்டுக்கே சிரமமான நிலைமையில் எப்படி அவர்களால் “ஆன்லைன்” வகுப்புக்கு செல்போன் வாங்க முடியும். அதுவும் விலை
உயர்ந்த செல்போனில் மட்டுட்மே ஆன்லைன் வகுப்புகளை கவனிக்க முடியும் என்பதால் மூன்று மாதங்களாக அவனால் எதுவும் கற்க முடியாமல் போய் விட்டது.
இருந்தாலும் ராஜேந்திரன் வீட்டின் வறுமையை களையவும், அவர்களின் கடன் சுமை குறையவும் இவனும் அப்பா அம்மாவுடன் விவசாய கூலி வேலைக்கு சென்றான். இவர்கள் விவசாய கூலிகளாய் வேலை செய்யும் நிலத்துக்கு சொந்தக்கார் தினமும் இவர்கள் வேலை செய்வதை பார்வையிட வருவார். ராஜேந்திர்னையும், அவனைப்போல ஒத்த வயதுடைய சிறுவர்களும் தோட்டத்தில் வேலை செய்வதை பார்த்த இவருக்கு மனம் சங்கடப்படும்.
என்றாலும் என்ன செய்ய முடியும்? அவர்களை வேலை செய்ய வேண்டாம் என்று வீட்டிற்கு அனுப்ப முடியுமா? அவர்கள் உழைப்பில் கிடைக்கும் ஊதியத்தை பெற்றோரிடம் கொடுத்தால்தானே, அந்த குடும்பத்தின் கஷ்டங்கள் கொஞ்சமாவது குறையும். அதனால் அவர்களை அதிகம் விரட்டாமல், மேம்போக்கான வேலைகளை தருவார்.
ஒரு நாள் அந்த நிலத்தின் முதலாளி ராஜேந்திரனை அழைத்து வீடு வரை போய் அங்கு வைக்கப்பட்டிருக்கும் “உர மூட்டைகளை” வீட்டில் வேலை செய்து கொண்டிருக்கும் இரண்டு ஆட்களை வைத்து அங்கு இருக்கும் மாட்டு வண்டியில் ஏற்றிக்கொண்டு அதிலே நீயும் வந்து சேரு என்று அனுப்பி வைத்தார்.
ராஜேந்திரன் சிறுவனாகையால், விவசாய காடுகளின் வழியாக ஓட்டமாக ஓடி அரை மணி நேரத்துக்குள் முதலாளியின் வீட்டை அடைந்து விட்டான்.வீட்டுக் காம்பவுண்ட் கேட்டை திறந்து வீட்டை அடைவதற்கு கிட்டத்தட்ட இருநூறு அடிகளுக்கு மேல் செல்ல
வேண்டும். இரு பக்கங்களிலும் அடர்த்தியான செடிகள் நட்டப்பட்டிருக்கும். ராஜேந்திரன் உள்ளே நடந்து கொண்டிருந்த பொழுது, வலது புறத்தில் “டொம்” என்ற சத்தம், சன்னமாய் கேட்டது, அதன் பின் தண்ணீர் சல சலக்கும் சத்தமும் கேட்டது.
வலது புறம் அவனை விட உயரமாய் இருந்த செடிகளை விலக்கி பார்த்தான். சற்று தொலைவில் குளம்போல் தண்ணீர் நின்று கொண்டிருப்பதும், அதில் தளக்தளக்கென்று கையை ஆட்டிக்கொண்டிருப்பதையும் கண்டான். அந்த செடிகளை கஷ்டப்பட்டு விலக்கி அந்த குளத்தை நோக்கி ஓடினான். அந்த குளத்தில் குழந்தை ஒன்று விழுந்து தத்தளித்தபடி இருக்க, சட்டென்று அதில் குதித்துத் அந்த குழந்தையை, தூக்க முடியாமல் தூக்கி கொண்டு வெளியே வந்தான்.
அதற்குள் குழந்தை ஏராளமாய் தண்ணீரை குடித்துத் மயங்கிய நிலையில் இருந்தது, இவன் யாராவது ஓடி வாங்க ஓடி வா ங்க சத்தம் போட்டான். இவனின் சத்தம் கேட்டு அந்த வீட்டுபின் புற தோட்டத்தில் வேலை செய்து கொண்டிருந்தவர்கள் முன் புறம் ஓடி வர குழந்தை மயங்கிய நிலையில் பார்க்கவும் உடனடியாக குழந்தையிடம் இருந்து தண்ணீரை வெளியேற்ற முதலுதவிகள் செய்தனர்.
கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீர் வெளியே வர அந்த குழந்தைக்கு மூச்சு வந்தது, இருந்தாலும் பக்கத்தில் இருந்த ஹாஸ்பிடலுக்கு அந்த குழந்தையின் அம்மாவை அழைத்துத் கூட்டி கொண்டு போக சொன்னார்கள். ராஜேந்திரன் அதன் பின் மீண்டும் இந்த வழியாக வந்து அங்கிருந்தவர்களிடம் முதலாளி உரம் எடுத்துத் வர சொன்னதாக சொன்னான்.
மாட்டுட் வண்டி பிடித்துத் உரமூட்டைகளுடன் இவனும் ஏறி அங்கு சென்ற போது முதலாளி அவனை கோபித்துத் கொண்டார். ஒரு சில வார்த்தைகள் திட்டவும் செய்தார். விளையாட்டு புள்ளைங்கறது சரியா போச்சு பாரு, இப்ப இரண்டு மணி நேரம் லேட்டு , உரம் போட்டு முடியறதுக்கு பொழுது சாஞ்சிடும், எல்லாம் என்னைய சொல்லணும், உன்னை அனுப்பிச்சேன் பாரு.. புலம்பியபடியே இருந்தார். ராஜேந்திரனுக்கு கவலையாகி விட்டது. இவன் உண்மையை சொல்ல வந்த போதும் அதை காது கொடுத்து கேட்கவே இல்லை.
இரவு ஏழு மணிக்கு மேல் ஆகி விட்டது, நிலம் முழுக்க உரம் போட்டு முடிக்க, அதன் பின் தான் ராஜேந்திரனும் அவன் பெற்றோருமே வீட்டுக்கு வந்தனர். அவர்கள் கூட இவனை திட்டிக்கொண்டே வந்தனர். இரவு எல்லோரும் சாப்பிட்டு படுத்துத் விட்டனர். அப்பொழுது குடிசை யின் கதவு தட்டும் சத்தம், எழுந்து சென்று கதவை திறந்தார் ராஜேந்திரனின் தந்தை .
வெளியே முதலாளி நின்று கொண்டிருந்தார். ராஜேந்திரன் இருக்கானா? ராஜேந்திரனின் அப்பா நடுங்கி விட்டார், ஐயா அவன் ஏதாவது தப்பு பண்ணிட்டானா? நாந்தான் தப்பு பண்ணிட்டேன், அவன் ஒரு நல்ல காரியம் பண்ணிட்டு ஒண்ணுமே
சொல்லாம இருந்திருக்கான், வெளியே வந்த ராஜேந்திரனை அணைத்து கொண்டார். இன்னைக்கு ஒரு குழந்தைய காப்பாத்தி இருக்கே. உனக்கு என்ன வேணும் கேளு தோளை தட்டி கேட்டார்.
ஒண்ணும் வேணங்கய்யா… தலையாட்டினான், வேணாங்க, அவன் மறுக்க உனக்கு ஆன்லைன் கிளாசுக்கு ஏற்பாடு பண்ணட்டுமா? இதற்கு ராஜேந்திரன் புன்னகையுடன் சரியென்று தலையாட்டினான். அங்கிருந்து சென்ற முதலாளி, மறு நாள் தோட்டத்திற்கு கூலி வேலை செய்ய வந்த ராஜேந்திரன் வயசை ஒத்த மாணவர்களை அழைத்து உங்களுக்கு வகுப்பு எடுக்கற
நேரத்துல இங்க வந்து எல்லோரும் பாடம் கேட்கறதுக்கு நான் ஒரு ஏற்பாடு பண்ணியிருக்கேன் என்று கூரை போட்டு சிமிண்ட் தளமிட்ட இடத்தை காண்பித்தார்.
அங்கு உயர வகையில் நிறைய பிளாஸ்டிக் நாற்காலிகளும் போடப்பட்டிருந்தது. உங்க வயசுல ராஜேந்திரன் நேத்து அருமையான காரியம் பண்ணிட்டு வந்திருக்கான். அவன் அந்த காரியம் செஞ்சுட்டு அதை பத்தி பெருமைபடாம இருந்திருக்கான். அதை பாராட்டி
நான் உங்களுக்கு இந்த காரியம் செஞ்சிருக்கேன்.
நடுவில் பெரிய மேசை மேல் ஐந்தாறு செல்போன்கள் வைக்கப்பட்டிருந்தது.
உங்களுக்கு ஆசிரியர்கள் “ஆன் லைன் பாடம்” எடுக்கும்போது இங்க வந்து உட்கார்ந்து பாடத்தை
கவனிங்க. அதுக்கப்புறம் மதியத்துக்கு மேல வேலைக்கு வாங்க. செல்போன் எல்லாத்துலயும் சார்ஜ் போட்டு இன்டர்னெட்டு கனெக்க்ஷனும் கொடுத்திருக்குது.
அவரது தோட்டத்திலும், விவசாய நிலத்திலும் வேலை செய்து கொண்டிருந்த இராஜேந்திரனை போல பத்திருபது மாணவர்களுக்கும், மாணவிகளுக்கும் அவர்
சொன்னது மிகுந்த மகிழ்ச்சியை கொடுத்தது.
செல்போன் வாங்கி கொடுக்க முடியாமல் தவித்து அங்கு வேலை செய்து கொண்டிருந்த கூலி தொழிலாளிகளான பெற்றோர்களுக்கு மிக்க மகிழ்ச்சியாக இருந்தது.
என் அன்பு வாசகர்களே,
No child labour, குழந்தை தொழிலாளர்கள் பணியமர்த்தப்டவில்லை* இந்த பதாகைகள் இல்லாத தொழிற்சாலைகள், வணிக நிறுவனங்கள் இல்லை எனலாம். ஏனெனில் கல்வி அறிவு நிறைந்த இடங்களில் குழந்தைகளை வேலை செய்ய அனுமதிப்பதில்லை.
ஆயினும் இன்னும் அநேக கிராமங்களில், குழந்தைகள் வேலை செய்ய வற்புறுத்தப்படுகின்றனர். காரணம், ஒன்று குடும்ப சூழ்நிலை மற்றொன்று கல்வி அறிவு இல்லாமை. முந்தைய காலங்களில் கிராமங்கள் மட்டுமே நிறைந்திருந்தபோது, ஆத்தும பாரம் ஏற்று சுவிஷேசத்தை சுமந்து காடு, மேடு என்று பாராமல் சுவிஷேசத்தையும் கூடவே கல்வியையும் நமக்கு கொடுத்து சென்றனர் அன்றைய ஊழியக்காரர்கள்.
To Get Daily Story In What's App Contact +917904957814
அந்த கல்வியால் தான், இன்று இத்தனை தொழில்நுட்ப முன்னேற்றங்களும், வளர்ச்சிகளும். ஆனால் இன்றைய புதிய தலைமுறை ஊழியர்கள், பட்டணங்களில் ஊழியம் செய்ய காட்டும் ஆர்வத்தை, கிராமங்களில் ஊழியம் செய்ய விரும்பம் காட்டுவதில்லை. அதனால் தான் இன்றைய கிராமங்களில் அநேகம், படிப்பறிவு, கல்வியறிவு இல்லாததற்கு காரணம்.
ஒரு கிராமத்தில் கல்வியறிவு பெருக வேண்டுமென்றால், அங்கு சுவிஷேசம் பிரசங்கிக்கப்பட வேண்டும். சுவிஷேசம் பிரசங்கிக்கப்பட்டால், அங்கு ஆத்துமாக்கள் இரட்சிக்கப்படும். அநேக ஆத்துமாக்கள் இரட்சிக்கப்பட்டால் சபை ஸ்தாபிக்கப்படும். ஒரு சபை ஸ்தாபிக்கப்பட்டால் அந்த கிராமம் நல்ல வளர்ச்சியைக் காணும், முன்னேற்றமடையும்.
சுவிஷேசம் பிரசங்கிக்கப்பட வேண்டுமென்றால், சுவிஷேசகர்கள், ஊழியக்காரர்கள் எழும்ப வேண்டும். அநேகர் இன்று பகுதி நேர ஊழியர்களாய், முழு நேர ஊழியர்களாய் கிராமங்கள் தோறும் சுவிஷேசத்தை பிரசங்கிக்கின்றனர். இன்னும் அநேக ஊழியர்கள் ஆத்தும பாரத்தோடு எழும்ப வேண்டும் மாத்திரமல்ல, இந்த கதையை வாசிக்கிற ஒவ்வொருவரும் தங்களால் இயன்ற ஊழியத்தை, கிடைக்கிற சமயங்களில் செய்ய வேண்டும். வேதம் சொல்கிறது,
லூக்கா 4:18
கர்த்தருடைய ஆவியானவர் என்மேலிருக்கிறார்; தரித்திரருக்குச் சுவிசேஷத்தைப் பிரசங்கிக்கும்படி என்னை அபிஷேகம்பண்ணினார்; இருதயம் நருங்குண்டவர்களைக் குணமாக்கவும், சிறைப்பட்டவர்களுக்கு விடுதலையையும், குருடருக்குப் பார்வையையும் பிரசித்தப்படுத்தவும், நொறுங்குண்டவர்களை விடுதலையாக்கவும்,
லூக்கா 4:19
கர்த்தருடைய அநுக்கிரக வருஷத்தைப் பிரசித்தப்படுத்தவும், என்னை அனுப்பினார்.
எனவே நம்மால் இயன்ற ஊழியத்தை செய்வோம், பரலோக இராஜ்ஜியத்தை கட்டுவோம்.
நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்!!!!
==============
ஓர் குட்டிக் கதை
யாா் தலைவன்
=============
ஒரு ஊரில் நான்கு ஆண்டிகள்(Beggars) இருந்தனர். அவர்கள் பகல் பொழுதுகளில் ஊருக்குள் சென்று வீடுவீடாக யாசகம்(பிச்சை) பெற்று ஊரார் கொடுக்கும் உணவுகளை உண்பர்.
இரவில் ஊருக்கு வெளியே இருக்கும் ஆலமரத்தில் உள்ள மேடையில் தமது பைகளை தலையணைகளாக்கி துண்டுகளை விரிப்புகளாக்கி வானமே கூரையாக படுத்து உறங்குவர்.
அப்படி அவர்கள் தூங்கும்போது எப்பொழுதும் திசைக்கொருவராக தலைவைத்துப்படுப்பர். அதாவது மரத்தின் மீது தலைபடுமாறு மரத்தை சுற்றி படுப்பார்கள்.
ஒருநாள் மரத்தின் அடியில் படுத்திருக்கும்போது முதல் ஆண்டி “நாம இந்த மரத்தடியில இப்படித்தான் நம்மை வாழ்க்கையைக் கழிப்பதா?” என்று கேட்டான்.
அதற்கு இரண்டாமவன் “இதுக்கு மேல என்ன வேணும் உனக்கு?” என்றான். முதலாமவன் “ஏதோ ஊர் மக்களின் உதவியுடன் ஒருவிதமா நம்ம வயித்துப்பாட்ட கழிச்சுட்டு வாரோம். ஆனா நாம தங்குவதற்கு ஒரு இடம்தான் இல்லாமல் போச்சு” என்றான்.
மூன்றாமவன் “இந்த இடத்துக்கு என்ன குறைச்சல்?. இருக்குறத விட்டுட்டு பறக்குறதுக்கு ஆசப்படக்கூடாது.” என்றான். நான்காமவன் “இருங்க அவன் என்ன தான் சொல்றான்னு முழுசா கேட்போம். சரி நீ சொல்” என்றான்.
முதலாமவன் “இப்ப வெயில் காலம் நம்ம பாட்டுக்கு மரத்துல தலைய வச்சு கால நீட்டி படுத்துக்குவோம். ஆனா மழை பெஞ்சா எங்க போயும் ஒண்ட முடியாது” என்றான்.
அதற்கு இரண்டாமவன் “மழையில சிரமம்தான் அதுக்கு நாம் என்ன செய்ய முடியும்?” என்று கேட்டான்.
முதலாவது ஆண்டி “அதுக்குத்தான் நாம எல்லோரும் சேர்ந்து ஒரு மடம் கட்டினா என்ன?” என்று கேட்டான். இதனைக் கேட்டதும் நான்காமவன் “ஓ! அது தான் ஒன் திட்டமா?. மடம் கட்டுறது என்ன அவ்வளவு சுலபமா?” என்று எதிர்க்கேள்வி கேட்டான்.
அதற்கு முதலாமவன் “மடம் கட்ட நான் ஒரு யோசனை சொல்கிறேன் கேளுங்கள். நாம நாலு பேரு இருக்கோம். ஆளுக்கு ஒரு வாரத்துக்கு நாலனா சேத்தா ஒரு மாசத்துக்கு 1 ரூ. ஆகும். 100 மாசம் வந்தா 100 ரூபாய் கிடைக்குமில்ல அத வச்சு மடம் கட்டலாம்ல!.” என்றான்.
அதற்கு இரண்டாமவன் “அட. நல்ல யோசனைதான்.” என்றான். முதலாமவன் படுத்துத் தலையை மட்டும் ஆட்டிக் கொண்டே “அதோ அங்க வாசல் வைக்கணும்.” என்றான்.
இரண்டாமவன் “இதோ இந்தப் பக்கம் ஜன்னல் வைக்கணும் காத்து நல்லாவரும்.” என்று சைகை செய்தான். நான்காமவன் “இந்தா இப்படி போயி, அப்படி வந்து இப்படி திரும்பி அங்க பாக்க சுவர வைக்கணும்.” என்று சைகையில் கூறினான்.
முதலாமவன் “ஆனாமடம் கட்டின பிறகு நாந்தான் தலைவனா இருப்பேன்” என்றான்.
இரண்டாமவன் “அதெப்படி நாந்தான் இருப்பேன்” என்றான்.
நான்காமவன் “அதெப்படி உங்களவிட வயசுல மூத்தவன் நான். அதனால நான்தான் தலைவனாக இருப்பேன்” என்றான்.
முதலாமவன் “இந்த ஐடியா சொன்னதே நான்தான். நான்தான் தலைவனாக இருப்பேன்” என்றான்.
இப்படியாக மூவரும் சண்டையிடுவதை அமைதியாக கேட்ட மூன்றாமவன்
“ஊரு ரெண்டு பட்டா கூத்தாடிக்கு கொண்டாட்டம்பாங்க. இங்க கூத்தாடியே ரெண்டுபட்டா! அவ்ளோதான்..
பேசாம இருங்கப்பா தூக்கம் வருது. நீங்களாவது மடம் கட்டுறதவாவது?” என்று சலித்துக் கொண்டான். சிறிது நேரத்தில் அந்த இடம் அமைதியானது. இப்படியாக ஆண்டிகளின் மடம் நிறைவேறாத கனவாகவே இருந்தது....
என் அன்புக்குாியவா்களே,
பைபிளில் இயேசு தம் சீஷா்களுக்கு, தலைவனாக ,பொியவனாக இருப்பதைக் குறித்து போதிக்கும்போது கீழ்கண்டவாறுக் கூறினார்.
உங்களில் எவனாகிலும் பெரியவனாயிருக்க விரும்பினால், அவன் உங்களுக்குப் பணிவிடைக்காரனாயிருக்கக்கடவன்.
உங்களில் எவனாகிலும் முதன்மையானவனாயிருக்க விரும்பினால், அவன் உங்களுக்கு ஊழியக்காரனாய் இருக்கக்கடவன். அப்படியே, மனுஷகுமாரனும் ஊழியங்கொள்ளும்படி வராமல், ஊழியஞ் செய்யவும், அநேகரை மீட்கும்பொருளாகத் தம்முடைய ஜீவனைக் கொடுக்கவும் வந்தார் என்றார். (மத்தேயு 20:26-28)
வேலை செய்யும் இடத்தில், குடும்பத்தில், சபையில், சமுதாயத்தில், தலைவா்களாயிருக்க வேண்டுமென்று எல்லாரும் விரும்புகின்றனா்.
இயேசு கூறினதுபோல..
தலைவனாக இருக்க விரும்புகிறவர்கள் எல்லாருக்கும் பணிவிடை செய்கிறவா்களாய் இருக்க வேண்டும். எந்த இடத்தில் தலைவனாக இருக்க வேண்டுமென்று விரும்புகிறீா்களோ அந்த இடத்திலுள்ள வேலை அனைத்தும் உங்களுக்குத் தொிந்திருக்க வேண்டும். அதை செய்கிறவா்களாயும் இருக்க வேண்டும்.
அப்போதுதான் வேலையின் நுணுக்கம் தெரியும். அதுமட்டுமல்லாமல் வேலை செய்பவர்களின் கஷ்டம் அவா்களுக்குப் புாியும், வேலைக்காரா்களை தன்னைப் போலவே நினைத்து அனுசாித்துப் போவாா்கள். குடும்ப கஷ்டத்தை அறிந்து அவர்கள் கேட்கிற பணத்தை அட்வான்ஸாக கூட கொடுக்க முன் வருவார்கள்.
இப்படிப் பட்டவர்கள் கடினமுள்ள மனுஷனாக இல்லாமல் மென்மையான, அன்பான மனுஷனாக நல்ல தலைவராக இருப்பாா்.
அதனால் வேலை செய்கிறவர்கள் கூட சம்பளத்திற்கென்று வேலை செய்யாமல் அன்புடனும், கஷ்டமென்று பாராமல் முதலாளியின் மனதறிந்து வேலை செய்வார்கள்.
அதிகாரத்திக்கென்றும், பெருமைக்காகவும், புகழுக்காகவும், பணம் சம்பாதிப்பதற்காகவும் தலைவர் பதவி அல்ல என்பதையும் புாிந்து கொண்டாலே தேவசித்தபடி உங்கள் தலைவர் பதவி ஆசீா்வாதமானதாயிருக்கும்.
உதாரணமாக,
இஸ்ரவேல் ஜனங்கள் தங்களுக்கு ஒரு ராஜா வேண்டுமென்று கேட்டு கொண்டாா்கள்.
To get daily story in whats app contact +918148663456
தாவீதை அவர்களுக்கு ராஜாவாக ஏற்படுத்தி, ஈசாயின் குமாரனாகிய தாவீதை என் இருதயத்துக்கு ஏற்றவனாகக் கண்டேன்; எனக்குச் சித்தமானவைகளையெல்லாம் அவன் செய்வான் என்று அவனைக்குறித்துச் சாட்சியுங் கொடுத்தாா். (அப் 13 :21 -23)
ஆடுகளின் மேய்ப்பனாக கறவலாடுகளின் பின்னால் திாிந்த தாவீதை..தேவன் தொிந்து கொண்டாா். தேவன் தாவீதைக் குறித்து இவ்விதமாகக் கூறினார்.
என் தாசனாகிய தாவீதைக்கண்டு பிடித்தேன், என் பரிசுத்த தைலத்தினால் அவனை தலைவனாக அபிஷேகம்பண்ணினேன். சங்கீதம் 89:20
தேவனால் அபிஷேகம் பண்ணப்பட்ட நல்ல மக்கள் தலைவனாக ராஜாவாகிய தாவீதை இஸ்ரவேல் ஜனங்களுக்காக ஏற்படுத்தினாா். கடைசி வரைக்கும் பேருக்காகவோ, புகழுக்காகவோ பணம் சம்பாதிப்பதற்காகவோ வாழாமல் மக்களின் நல்ல தலைவனாகவே தாவீது ராஜா வாழ்ந்தாா்.
என் அன்புக்குாியவா்களே,
நீங்கள் நல்ல தலைவனாக வேண்டும் என்ற தேவசித்தம், தேவ தீர்மானம், தேவநோக்கம் உங்கள் மேல் இருக்குமென்றால் நீங்கள் செய்யவேண்டியதெல்லாம் ஒன்றே ஒன்றுதான் ஆவியானவாின் வழிநடத்துதலில் இருக்க வேண்டும் என்பதுதான்.
ஆவியானவா் உங்கள் எதிர்கால வாழ்க்கையில் ஆண்டிகள் மடம் கட்டியது போலில்லாமல் தாவீதுராஜாவைப் போல உங்களை நடத்துவாா்.
==============
ஓர் குட்டிக் கதை
தப்புக்கு தண்டனை!
===============
வராந்தாவில் அமர்ந்தபடி எல்லாவற்றையும் கவனித்துக்கொண்டிருந்தார் அம்பலவாணன். அன்று முதியோர் இல்லத்தில் பார்வையாளர்கள் நாள் என்பதால் அவரவர் பெற்றோரை பார்க்க தங்கள் மகன், மகள் பேரப்பிள்ளைகள் என எல்லாரும் வந்திருந்தனர். ஆனால் அம்பலவாணன் மட்டும் தனியாக அமர்ந்து வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தார். ஏனென்றால் அவருக்கு சொந்தம் என்று சொல்ல யாரும் இல்லை. அவர் முதியோர் இல்லத்தில் வந்து தஞ்சம் அடைந்து 5 வருடங்கள் கடந்து விட்டது. அப்போது அவருக்கு பழைய நினைவுகள் வர….
அன்று தன் மகன் சக்தி பத்தாம் வகுப்பு அரசாங்க பொது தேர்வுக்கு தயாராகி கொண்டிருந்தான்.
அம்பலவாணன் கோவிலுக்கு சென்று தன் மகன் பெயரில் அர்ச்சனை வைத்துவிட்டு வந்தார்.
டேய் சக்தி, இந்த பரீட்சையில நீ படித்தது எல்லாமே நினைவுக்கு வரவேண்டும் நல்லப்டியா பரீட்சை எழுதவேண்டு என்று உன் பெயரில் அர்ச்சனை பண்ணி பிரசாதம் கொண்டு வந்து இருக்கேன் எடுத்துக்கோ
சரிப்பா என்று விபூதியை எடுத்து நெற்றியில் இட்டான்.
அவசர அவசரமாக சாப்பிட்டு கிளம்பினான்.
அம்பலவாணன் அவனை பள்ளியில் விட்டு விட்டு வந்தார்.
அவன் ஆவரேஜ் லெவலில் தான் படிப்பான். அவன் 450 மதிப்பெண்களுக்கு மேலாக எடுத்தால் தான் அவன் நினைத்த கம்ப்யூட்டர் சயின்ஸ் குரூப் கிடைக்கும். ஆனால் அவன் அவ்வளவு மதிப்பெண்கள் எடுப்பது சாத்தியமல்ல. அவன் நன்றாக தான் படிப்பான் என்னவோ தெரியல பரீட்சை எழுதும் போது எல்லாம் மறந்து விடுகிறான் என்று அம்பலவாணன் அடிக்கடி தன் நண்பர்களிடமும் உறவினர்களிடமும் சொல்லிக்கொண்டே இருப்பார். அவர் ரோடு ட்ரான்ஸ்போர்ட் & ஹைவேஸ் ஆபிஸில் உயர் பதவியில் இருக்கும் சாதாரண நபர். மிகவும் நேர்மையானவர், சம்மளம் தவிர வேறு எந்த லஞ்சமும் வாங்கும் பழக்கமில்லாத மிடில் கிளாஸ் அதிகாரி. அவருக்கு சக்தி ஒரே மகன் என்பதால் அதிக செல்லம். அவர் மனைவி சாவித்திரியும் மகன் மீது ரொம்ப பாசம் கொண்டவள். தன் மகன் வேண்டும் என்று சொல்லி முடிப்பதறக்குள் அதனை சமைத்து எடுத்து வந்துவிடுவாள். சக்தியும் இருவரும் மீதும் அதிக அன்பு வைத்துள்ளான்.
அவர்கள் ஊரில் உயர் வகுப்பு படிப்பதற்கு இரண்டு பெரிய பள்ளிகள் உள்ளது. அதில் +1 க்கு சீட் கிடைப்பது என்பது பெரிய கஷ்டம். மெரிட் இருந்தால் மட்டுமே கிடைக்கும். 10-ம் வகுப்பு வரை படிப்பதற்கு எத்தனை பள்ளிகள் இருந்தாலும் உயர் வகுப்புக்குரிய பள்ளி என்றால் அந்த ஊரில் இந்த இரண்டு பள்ளிகள் தான். 100 சதவிகத தேர்ச்சி தான் எப்போதும். இந்த இரு பள்ளியில் ஒரு பள்ளி மாணவர்கள் அந்த மாவட்டத்தின் முதலிடம் வருவார்கள். சிறந்த பள்ளி மற்றும் சிறந்த கல்வி தரம் வாய்ந்த பள்ளி. அதில் தான் தன் மகனை சேர்க்க விரும்பினார் அம்பலவாணன்.
எப்படி சீட் வாங்கபோறோம் என்ற நினைப்பிலே அவரது வேலை போய்க்கொண்டிருந்தது.
அப்போது ஒருவர் வெள்ளை வேஷ்டி சட்டை அணிந்து, தடித்த மீசை, கையில் பெரிய மோதிரம், கழுத்தில் கனத்த செயின் அணிந்த ஒருவர் அம்பலவாணன் முன்பு வந்தமர்ந்தார். அவரிடம் உத்தரவு வாங்கிதான் உட்காரவேண்டும் என்ற சின்ன பொது அறிவு கூட இல்லை.
வணக்கம். நான் தான் இந்த ஏரியா கவுன்சிலர் பொன்னம்பலம். இவர் கவுன்சிலர் மட்டுமல்ல அந்த ஏரியா தாதாவும் கூட சொல்லுங்க உங்களுக்கு என்ன வேணும். நான் இங்க இருக்குற மக்களுக்கு நல்லது செய்யனும் பிறப்பு எடுத்து வந்திருக்கேன்னு அடிக்கடி நம்ம பசங்க சொல்லிகிட்டே இருப்பாங்க. அதெல்லாம் இப்போ எங்கிட்ட ஏன் சொல்றீங்க.
விசயம் இருக்கு கொஞ்சம் பொறுமையா இருங்க சார்.
ஏய் அந்த பைலை கொஞ்சம் குடுடா என தன்னுடன் வந்தவரிடம் கேட்டார்.
சார் இந்தாங்க இதுல நம்ம மெயின் ரோடு போடறதுக்குண்டான பட்ஜெட் போட்டு கொண்டுவந்துருக்கேன். நீங்க தான் அந்த ரோடு போடறது உரிய கான்ட்ராக்ட் எனக்கே ஒதுக்கனும்.
டெண்டர் விட்டுருக்கோம்ல, அதுல யாரோட டெண்டர் அரசாங்கத்துக்கு ஒத்துப்போகுதோ அவங்களுக்கு கொடுப்பாங்க.
உங்க டாக்குமெண்ட்டை குடுத்துட்டு போங்க சார்.
அப்படி பேசாதீங்க நீங்க எனக்கே இந்த டெண்டரை கொடுக்கனும்.
என்ன எனக்கு ஆர்டர் போடுறீங்க சார். நான் உங்களுக்கு வேலை பாக்கல, அரசாங்கத்துக்கு தான் வேலை பாக்குறேன். எது சட்டமோ அது படி நடக்கும். நீங்க கிளம்பலாம். என்று வணக்கம் போட்டார் அம்பலவாணன்.
என்ன சார் நீங்க உலகம் புரியாம இருக்கீங்க. எங்களுக்கு ஒரு பிரச்சினைன்னா நீங்க பாத்துக்கனும். உங்களுக்கு பிரச்சினைன்னா நாங்க பாத்துப்போம்ல
உங்க பையனை அந்த பெரிய பள்ளிகூடத்துல சேர்ப்பதற்கு யோசனை பண்ணி கவலைப்பட்டுட்டு இருக்கீங்க. அதை நான் வாங்கி தாரேன். நீங்க இந்த டெண்டரை எனக்கு குடுத்தா நல்லா இருக்கும். அப்புறம் நான் கிளம்புறேன் அம்பலவாணன் சார்.
ஒரு மாதம் கழித்து ரிசல்ட் தேதி.
சக்தி மொபைல் போனில் தன் மதிப்பெண் எவ்வளவு என்று பார்த்தான். 500 க்கு 392 மதிப்பெண்களே எடுத்திருந்தான்.
அம்பலவாணன் செய்வதறியாது திகைத்துக்கொண்டிருந்தார்.
அப்போது பொன்னம்பலம் வந்து ஒரு அப்ளிகேசன் பாரத்தை நீட்டினார்.
சார் இதுல உங்க பையனுக்கு வேண்டிய படிப்பை எழுதிக்கொடுங்க நீங்க நினைச்ச பள்ளிக்கூடத்திலேயே உங்க பையனை படிக்கவைங்க இந்தாங்க என்று கையில் திணித்துவிட்டு போனார்.
அந்த பாரத்தில் HM கையெழுத்துடன், recommended by Ponnambalam என்று இருந்தது.
என்ன செய்வதென்று தெரியாமல் அவரது இருக்கையில் அப்படியே அமர்ந்தார்.
உடன் பணிபுரியும் அவர் தோழன் வந்து…
அம்பலவாணா யோசிக்காதே, பேசாம அவனுக்கு டெண்டரை குடுத்துட்டு நீ சந்தோசமா உன் பையனை படிக்கவை. ஒன்றும் பிரச்சினை இல்லை.
இந்த பொன்னம்பலமும் ரொம்ப மோசமானவன் இல்லை. மக்களுக்கு நல்லதும் பண்ணுவான். அப்படியே அவனும் கொஞ்சம் லாபம் பார்த்துக்குவான். நம்பி அந்த டெண்டரில் கையெழுத்து போட்டு மேல தள்ளிவிடு என்றார்.
அம்பலவாணன் கொஞ்சம் குழப்பத்தில் இருந்தார். தன் நேர்மைக்கு வந்த சோதனையா என்று வருந்திக்கொண்டிருந்தார். இதுவரை நான் குறுக்கு வழியில் சென்று வேலை பார்த்தது இல்லையே, தற்போது தன் பையனுக்காக இதை ஒப்புக்கொள்ளவா? தன் மகனுக்கு இந்த படிப்பு கிடைத்தால் மேல் படிப்பு, வேலை என்று நல்லா வருவான் என்றெண்ணினார். ஒரு வழியாக அவர் முடிவுக்கு வந்தவர் பொன்னம்பலத்துக்கு போன் போட்டு வரச்சொன்னார்.
நான் உங்களுக்கே இந்த டெண்டர் விடுறேன். நல்லபடியா ரோடு போடனும். நீங்க செய்த உதவிக்காக நான் பண்றேன். இருந்தாலும் நீங்க உங்க பங்கை சரியா பண்ணனும்.
ரொம்ப நன்றி சார். என்று டெண்டரை வாங்கிகொண்டு கிளம்பினார் பொன்னம்பலம்.
மறுநாளே, தன் மகனை அழைத்துசென்று அவர் நினைத்த கம்ப்யூட்டர் சயின்ஸ் குரூப்பில் சேர்த்துவிட்டு பணத்தை கட்டிவிட்டு வந்தார்.
தன் மகனும் சந்தோசமாக பள்ளிக்கு சென்று வந்தான். அந்த பள்ளிக்கூடம் ஊரைவிட்டு தள்ளி இருப்பதால் பள்ளி பஸ்ஸில் தான் போகவேண்டும். அவனும் தினமும் பஸ்ஸில் போய் வந்தான். வீட்டின் அருகே பஸ் ஸ்டாப் என்பதால் பிரச்சினை இல்லை.
பொன்னம்பலும் தன் வேலையை செவ்வனே செய்து முடித்தார். அழகான ரோடு போட்டு தனது ப்ராஜெக்ட்டை முடித்தார்.
ஆறு – ஏழு மாதம் போய் இருக்கும், நல்ல மழை ஒரு வாரம் தொடர்ந்து விடாமல் பெய்து கொண்டே இருந்தது.
நீல சாயம் வெளுத்தது போல், புதியதாக போட்ட ரோடு குண்டும் குழியுமாக மாறியது.
பேருந்துகள் வாகனங்கள் சென்று வர சிரமப்பட்டன. எல்லாரும் ரோடு போட்டவனையும் அவனுக்கு அப்ரூவல் கொடுத்தவனையும் திட்டிக்கொண்டே அந்த சாலையை கடந்தனர்.
அன்று மாலையில் பள்ளி விட்டு ஸ்கூல் பஸ்ஸில் திரும்பி வந்துகொண்டிருந்தான் சக்தி.
ஸ்டாப் வருமுன்னே வாசலருகே வந்து தன் நண்பர்களிடம் போய் வருகிறேன் என்று சொல்லிகொண்டு, சைகையில் பேசி சிரித்துக்கொண்டிருந்தான்.
அப்போது பெரிய பள்ளம் ஒன்று வர டிரைவர் தடுமாறி திடீரென பிரேக் அடித்தார். வாசலில் நின்ற சக்தி நிலை தடுமாறி கீழே விழுந்தான். விழுந்த இடத்திலேயே அவன் தலையில் அடிபட்டு அப்படியே இறந்தான்.
சேதி கேட்ட அம்பலவாணனும் சாவித்திரியும் ஓடி வந்தனர். அவன் இறந்த சேதி கேட்டு ஆடிப்போய்விட்டார்கள். ஓ வென இருவரும் கதறி அழுதார்கள். அங்கிருந்தவர்கள் எல்லாம் புதியதாய் ரோடு போட்டு என்ன பிரயோசனம் அதற்குள் பல்லிழுத்து விட்டதே. டிரைவர் பள்ளம் பார்த்து போவானா எதிரில் வரும் வாகனம் பார்த்து போவானா என்று குறை பேச ஆரம்பித்தனர்.
அம்பலவாணன் அவர்கள் பேசுவதை கேட்டவுன், நானே என் மகனை கொன்றுவிட்டேனே என்று கதறி அழுதார்.
தனக்கு இருந்த ஒரே மகனை பறிகொடுத்த வேதனையில் சாவித்திரியும் உடல்நிலை சரியில்லாமல் சரியாக சாப்பிடாமல் அடுத்த ஒரிரு மாதத்திலேயே அவரும் இறந்துவிட்டார்.
ஏற்கனவே மனவேதனையில் இருந்த அம்பலவாணன் தன் மனைவியையும் பிரிந்து மிகவும் துக்கத்திற்கு உள்ளானார். தனக்கு மட்டும் ஏன் சாவு வரவில்லை என்று புலம்பியவாறு பித்து பிடித்தவர் போல் இருந்தார்.
அப்போது அருகில் உள்ளவர்கள் அவரை மருத்துவமனையில் சேர்த்தார்கள். அங்கே அவருக்கு கவுன்சிலிங் கொடுக்கப்பட்டு கொஞ்சம் தேறிய நிலையில் அவரை முதியோர் இல்லத்தில் சேர்த்துவிட்டார்கள்.
முதியோர் இல்லத்தில் தன்னால் முடிந்த உதவிகளை செய்து தன் காலத்தை ஓட்டி வந்தார் அம்பலவாணன். பழைய நினைவுகளிலிருந்து வெளிவந்தவர் தன் முன்னாடி குழந்தைகளுடன் ஆடிப்பாடி மகிழ்ந்து கொண்டிருக்கும் முதியோர்களை பார்த்து ரசிக்கலானார்.
பாவம் அவர் என்ன செய்வார் பொன்னம்பலம் நல்லபடியாக செய்வான் என்று நம்பி டெண்டரை அவனுக்கே கொடுத்தார். அவன் தரமில்லா ரோடு போட்டதற்கு அம்பலவாணனுக்கு தண்டனையா என கேட்கலாம். அதாவது நம் பேச்சு முதல் செயல் என எல்லாவற்றிற்கும் ஒவ்வொன்றுக்கும் தனித்தனி எதிர்வினை அல்லது கர்மா உண்டு. ஆகையால் தப்பு யார் செய்தாலும் தண்டனை கிடைத்துவிடும். அம்பலவாணன் தெரிந்தே தன் சுயலாபத்திற்காக குற்றம் புரிந்துள்ளார். அதுபோல் பொன்னம்பலத்துக்கும் தண்டனை காத்திருக்கும்.
வாழ்வில் நிறைய சோதனைகள் வரும், அதை தாண்டி ஜெயித்து வருவதே புத்திசாலித்தனம். அதில் நாம் தெரிந்தே தப்பு செய்யக்கூடாது. தெரியாமல் நடந்துவிட்டால் அது தவறு நாம தெரிந்தே குற்றம் செய்தால் அது மிக பெரிய தப்பு. அதை ஒருபோதும் நாம் செய்யக்கூடாது. முன்பெல்லாம் போன ஜென்மத்து பாவம் என்று சொல்லுவோம். ஆனால் தற்போது உடனே தண்டனை கிடைத்துவிடுகிறது. நாம் ஒருவருக்கு எதை செய்கிறோமோ அது மற்றொருவர் மூலமாக நமக்கே வந்து சேரும், அது உதவியாக இருந்தாலும் சரி குற்றமாக இருந்தாலும் சரி துரோகமாக இருந்தாலும் சரி.
என் அன்பு வாசகர்களே,
நாம் செய்த தவறுக்கு நிச்சயம் ஒருநாள் தண்டனை அனுபவித்து தீர வேண்டும். நல்லது செய்தால் நல்லதை அனுபவிக்கலாம்.
பழைய ஏற்பாட்டில் தேவன் இஸ்ரவேலருக்கு கொடுத்த கட்டளை என்னவென்றால்
To get daily message in whats app contact +917904957814
யாத்திராகமம் 20:5
நீ அவைகளை நமஸ்கரிக்கவும் சேவிக்கவும் வேண்டாம். உன் தேவனாகிய கர்த்தராயிருக்கிற நான் எரிச்சலுள்ள தேவனாயிருந்து, என்னைப் பகைக்கிறவர்களைக் குறித்துப் பிதாக்களுடைய அக்கிரமத்தைப் பிள்ளைகளிடத்தில் மூன்றாம் நான்காம் தலைமுறைமட்டும் விசாரிக்கிறவராயிருக்கிறேன்
ஒருவேளை நாம் பழைய ஏற்பாட்டு காலத்தில் வாழ வேண்டிய சூழ்நிலை ஏற்ப்பட்டால் நம் முன்னோர்களின் செய்த அக்கிரமத்தின் பலனை நாம் இப்போது அனுபவித்திருப்போம். ஆனால் தேவன் நம் ஒவ்வொருவரையும் தன் சொந்த குமாரனை அனுப்பி நம்மை மீட்டெடுத்ததால் நம் அக்கிரமங்கள், நமது முன்னோர்களின் அக்கிரமங்கள் என எல்லாவற்றையும் நம்மை விட்டு அகற்றி விட்டார். ஆனால் நாமோ அதை விட்டுஅகல மாட்டோம் என்று அந்த அக்கிரமத்திற்குள்ளாய் சிக்கி கொண்டிருக்கின்றோம்.
தேவன் நாம் திருந்துவதற்கென்று அநேக வாய்ப்புகளை தருகின்றார் அந்த வாய்ப்புகளை நாம் பயன்படுத்தி திருத்த வேண்டும் இல்லையேல் அவராய் நம்மை திருத்தும் பட்சத்தில் மிகுந்த வருத்தம், வியாகுலம் என் எல்லா வழிகளிலும் சென்று நம்மை திருத்துவார்.
நாம் நம்முடைய அக்கிரமத்தையும், பாவத்தையும் மறைக்காமல் தேவனிடத்தில் அறிக்கையிடும்போது நம்முடைய பாவம் சாபம் என எல்லாவற்றையும் மன்னித்து நம்மை அவருடைய சொந்த ஜனமாய் மாற்றி அவருக்கு உகந்தவர்களாய் நம்மை மாற்றுவார்.
சங்கீதம் 32:5
நான் என் அக்கிரமத்தை மறைக்காமல், என் பாவத்தை உமக்கு அறிவித்தேன், என் மீறுதல்களைக் கர்த்தருக்கு அறிக்கையிடுவேன் என்றேன், தேவரீர் என் பாவத்தின் தோஷத்தை மன்னித்தீர். (சேலா.)
நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்!!!